அரசியல் சமூகம்

என் கல்வி.. என் உரிமை..

ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை. அறிவு என்பது ஒரு குழுவுக்கோ ஒரு சமூகத்திற்கோ சொந்தமானது அல்ல.அது அனைவருக்குமானது.ஆனால் அதை அடைய இன்று வரை பல குழந்தைகள் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் இந்தியா போன்ற பொருளாதாரத்தில் மூன்றாம் கட்ட நாடுகளாக இருக்கும் ஒரு நாட்டில் அது இன்னமும் எட்டாக் கனவாகவே உள்ளது.

கல்வி என்பது என்ன?

இந்த உலகம் எப்படி இயங்குறது என்று சொல்லித் தருவது, நம் வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்று சொல்வது, இந்த சமூகத்தை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வது என்று சொல்லித் தருவது. இன்றைய கல்வி அப்படித் தான் இருக்கிறதா ? என்று கேள்வி எழுப்பினால் ‘இல்லை’ என்கிற பதிலை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கல்வி கூட எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது தான் பெருங்கொடுமை.

ஆகஸ்டு நான்காம் தேதி 2009 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டு ஏப்ரல் ஒன்று 2010 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது, அந்தச் சட்டத்தின் பெயர் சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் . ஆம் நண்பர்களே .. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்கிற சட்டமே அமலுக்கு வந்தது.

தாமதமாக வந்தாலும் இது ஒரு நல்ல சட்டம் என்றே அனைவரும் வரவேற்றார்கள்.
இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் இந்த சட்டம் கல்வியை 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி ஒரு அடிப்படை உரிமை என்று வழிவகுத்தது. இது அனைத்து தனியார் பள்ளிகளும் ஏழை குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளுக்கு 25% இடங்களில் முன்பதிவு செய்ய வேண்டும் (பொது தனியார் கூட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, கட்டணத்தை அரசு, பள்ளிகளுக்கு செலுத்த வேண்டும்) என்று அவசியமாக்கியது.

நடைமுறையில் இருந்த அனைத்து அங்கீகரிக்கப்படாத பள்ளிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியது.  முதல் தொகை மற்றும் குழந்தையை சேர்க்கும் போது  பெற்றோருக்கு எந்த நேர்காணலும் வைக்க கூடாது என்று கூறுகிறது. இந்த சட்டம் குழந்தைகள் தங்களது தொடக்க கல்வி முடிக்கும்  வரை பின்தங்கவைக்கவோ, வெளியேற்றவோ அல்லது தேர்வில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்றோ செய்யக்கூடாது. வெளியேறிய மாணவர்களுக்கு, சம வயது மாணவர்களை போல் திறமை பெற சிறப்பு பயிற்சிகள் நடத்த வேண்டும்.

ஆனால் இதில் எதுவுமே நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பது இந்தியாவில் இருக்கும் முழு மனவளர்ச்சி அடையாதவர் கூட சொல்லிவிடுவார். ஏன் இவற்றை செய்ய முடியவில்லை?.

கல்வி என்ன அவ்வளவு கடினமா?

ஒரு விஷயம் செய்ய முடியாமல் போவதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று அந்த விஷயத்தை செய்து முடிக்க திறன் இல்லாமை. இரண்டு அந்த விஷயம் செய்வதில் அக்கறை காட்டாமை. உலகிலேயே அதிக மனித சக்தி கொண்ட இந்தியா போன்ற ஒரு நாட்டில் திறமை இல்லை என்றால் நம்புவது மிகக் கடினம்.

அப்படி என்றால் நமக்கு நமது குழந்தைகளின் கல்வி மேல் அக்கறை இல்லையா?. ஆம் கசப்பாக இருந்தாலும் அது தான் உண்மை. அதை சில புள்ளி விவரங்கள் சொல்லி விடும். கல்விக்காக நமது அரசாங்கம் இந்த ஆண்டுக்காக ஒதுக்கியது. நமது மொத்த உற்பத்தியில் வெறும் 4.25 சதவிதம் மட்டுமே(சுதந்திரம் வாங்கியதில் இருந்து அதிகமான சதவிதம் ஒதுக்கப்பட்டது இந்த ஆண்டில் தான்! குறைந்தது ஆறு சதவிதமாவது ஒதுக்க வேண்டும்). உலக நாடுகளின் வரிசையில் கல்விக்காக பணம் செலவிடுவதில் நமது இடம் 141.

நம்மை விட சிறிய நாடுகளான கியூபா ,லெசோத்தோ கூட அதிக சதவிதம் செலவு செய்கிறார்கள். எப்போதும் பஞ்சத்தில் வாடும் நாடு என்று சொல்லப் படும் சூடான் கூட நமக்கு முன் இருக்கிறது  என்றால் நமது அரசாங்கத்தின் அக்கறை எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரிந்து இருக்கும்.

இந்தியாவின் மக்கள் தொகையில் எழுத்தறிவு இருக்கிறவர்கள் (கவனிக்க படிப்பு அறிவு இல்லை அதாவது வெறும் கையெழுத்துப் போடத் தெரிந்தவர்கள்) மொத்தம் 74.4 சதவிதம். இது அதிகம் தானே என்று எண்ணவேண்டாம். நம்மை விட பின் தங்கிய நாடு என்று கருதப்படும் இலங்கையில் 90.8 சதவீதமும் பர்மாவில் 89.9 சதவிதமும் இருக்கிறது . இப்போது சொல்லுங்கள் இது அதிகமா?.

இன்னும் சற்று விளக்கமாக 2011 ஆம் ஆண்டு அரசு வெளியிட்ட அறிக்கையையே பார்ப்போம். மொத்த மக்கள் தொகை சுமார் நூற்றி இரண்டு கோடி, பள்ளிக்கே செல்லாமல் வெறும் கை எழுத்து மட்டும் போடத் தெரிந்தவர்கள் சுமார் இரண்டு கோடி பேர் . தொடக்கப் பள்ளியே தாண்டாதவர்கள் சுமார் பதினான்கு கோடி பேர். தொடக்கப் பள்ளி மட்டும் முடித்தவர்கள் சுமார் பதினான்கு கோடி பேர்.

நடு நிலைப் பள்ளியை மட்டும் கடந்தவர்கள் சுமார் ஒன்பது கோடி பேர் , மேல் நிலைப் பள்ளி மட்டும் கடந்தவர்கள் சுமார் எட்டு கோடி பேர் , உயர்நிலைப் பள்ளி மட்டும் கடந்தவர்கள் சுமார் மூன்று கோடி பேர். தொழில் நுட்பம் இல்லாத பட்டயப் படிப்பு மட்டும் படித்தோரின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் பேர். தொழில் நுட்ப பட்டயப் படிப்பு படித்தோரின் எண்ணிக்கை மூன்று கோடி பேர். பட்டப் படிப்பும் அதற்கு மேல் படித்தவர்கள் மூன்று கோடி பேர். ஒன்பது லட்சம் பேரை எந்த வகையிலும் சேர்க்க முடியவில்லை என்று அறிவித்திருக்கிறது.

இந்த கணக்கை மட்டும் வைத்துப் பார்த்தால் சுமார் ஐம்பத்தி எட்டு சதவிதம் தான் வருகிறது. “அரசாங்கத்தின் புள்ளி விவரங்கள் என்பது கவர்ச்சி நடிகை போல் வெளிப்படையாக இருப்பது போல் இருக்கும் ஆனால் முக்கியமான பாகங்களை எல்லாம் மறைத்து விடும்” என்று ஒரு சொலவடை உண்டு. அதன் படி பார்த்தால் இந்த ஐம்பத்தி எட்டும் உறுதியானதா என்று சொல்ல முடியவில்லை.

இது எல்லாம் மத்திய அரசு தவறியவை. மத்திய அரசைத் தாண்டி மாநில அரசுகளால் சில விசயங்களைச் செய்ய முடியும்.இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகம் கற்றவர்கள் இருக்கிறார்கள் என்று பார்த்தால் முதலிடத்தில் கேரளா இருக்கிறது. இங்கு 93.91 சதவிதம் பேர் கல்வி அறிவுடன் இருக்கிறார்கள்.இரண்டாவது இடத்தில் மிசோரம் 91.6 சதவிதத்துடன் இருக்கிறது. ஆச்சரியப்படும் வகையில் அதிக மலைவாழ் மக்களும் பழங்குடியினரும் வாழும் திரிபுரா மாநிலம் 87.8 சதவிதத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.அதிகம் கவனிக்கப்படாத ஒரு மாநிலத்தில் இது ஒரு பெரும் சாதனை.

எட்டாவது இடத்தில் உள்ள நமது தமிழகத்தின் சதவிதம் 80.3 சதவிதம்.கடைசி இடத்தில் பிகார் 63.8 சதவிதத்துடன்  இடத்தில் உள்ளது. தீர்வுகள் எப்போதும் நமது முன்னே தான் இருக்கின்றன. நாம் தான் கண்களைத் திறந்து பார்க்கவேண்டும் .

கல்வி விற்பனைச் சரக்கு இல்லை என்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.அனைத்து பள்ளிகளும் அரசுடமை ஆக்கப்படவேண்டும். இந்தியர் அனைவருக்கும் ஓரே அளவிலான சமச்சீர் கல்வியைக் கொண்டு வரவேண்டும் . மக்கள் கல்வி என்பது அறிவை அடைந்து கொள்வது தானே அன்றி சம்பாரிப்பதர்கான கருவி இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி இல்லாத சமூகம் காட்டுமிராண்டி சமூகம் என்பதை புரிந்து மகாகவி பாரதியின் கவிதையை உணர்ந்து அரசும் மக்களும் இணைந்து செயல் படவேண்டும்.
“அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,

பின்னருள்ள தருமங்கள் யாவும்,

பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,

அன்னயாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்.”

(செப்.8 உலக கல்வி தினம்)

Related Posts