உலக சினிமா சினிமா

DUNKIRK REVIEW | டன்கிர்க் விமர்சனம்

என் வாழ்நாளில் நான் பார்த்த படங்களில் என்னால் மறக்கவே முடியாத படங்களில் ஒன்று இன்டர்ஸ்டெல்லர் Interstellar. இன்டர்ஸ்டெல்லர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் படமும் உலக அளவில் சினிமா ரசிகர்களாலும், சினிமாத்துறையினராலும் வியந்த பார்க்கப்படும், பாராட்டப்படும் படங்களில் ஒன்று.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம், டன்கிர்க் (Dunkirk).

டன்கிர்க் என்பது பிரான்ஸில் உள்ள ஒரு துறைமுகத்தின் பெயர். பெல்ஜிய நாட்டு எல்லைக்கு மிக அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டன்கிர்க் துறைமுகத்தில் 1940ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது நடைபெற்ற ஒரு போர் நிகழ்வின் ஒரு பகுதியே டன்கிர்க் திரைப்படம்.

ஜெர்மனிக்கும் நேசநாட்டுப்படைகளுக்கும் நடந்த சண்டையில், இந்த டன்கிர்க் துறைமுகத்தையும் அங்கே இருந்த நேச நாட்டுப்படையின் வீரர்களையும் வான் வழியாகவும், நீர் (கடல்) வழியாகவும் சுற்றி வளைத்தது ஜெர்மானியப்படை. சுற்றி வளைத்தது மட்டுமில்லாமல் அவர்களை தொடர்ந்து வான் வழியாக தாக்கி அழிக்கும் வேலையையும் செய்தது.

பிரான்சுப்படை உள்ளிட்ட நேசநாடுகளின் படையை ஜெர்மானியப்படை முறியடித்த இந்த நிகழ்வில் டன்கிர்க் துறைமுகத்தில் மாட்டிக்கொண்ட 4 இலட்சம்(4,00,000) நேசநாட்டுப் படைவீர்கள் பட்ட பாடும், அவர்கள் எப்படி மீண்டனர் என்பதும் தான் டன்கிர்க்கின் கதை. 3 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இங்கிலாத்திற்கு தப்பி மீட்கப்பட்டனர்.

கப்பலோ, படகோ எது கிடைத்தாலும் பயன்படுத்தி அவர்களை மீட்க முயற்சி செய்யுங்கள் என்று அப்போதைய இங்கிலாந்து பிரதம மந்திரி வின்சென்ட் சர்ச்சிலின் உத்தரவின் பேரில் 1 இலட்சத்திற்கும் அதிகமான பிரான்சுப்படை வீர்ர்கள் நேசநாட்டுப்படை வீரர்கள் ஆங்கிலக்கால்வாய் வழியாக மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை படமாக்கி இருக்கிறார், கிறிஸ்டோபர் நோலன். படம் பார்க்கும் உணர்வைத்தாண்டி நிஜமாகவே போர்க்களத்தை நேரடியாக பார்ப்பது போலவே இருக்கிறது. வழக்கமான திரைப்படங்கள் போன்று நிமிடத்திற்கு நிமிடம் மாறும் திரைக்கதை, ட்விஸ்ட் என்றில்லாமல்… போர்க்களம் அதன் நிகழ்வுகள்… தந்திரங்கள், தொழில்நுட்பங்கள்… என்று நமக்குத் தெரியாத தகவல்கள் நிறைந்து இருக்கிறது, டன்கிர்க். போர் விமானிகள் எப்படி செயல்படுவார்கள், எதிரியின் விமானப்படையை முறியடித்து தங்கள் படைகளுக்கு சாதகமாக இருப்பதிலும், தங்கள் படைகளை காப்பாற்றுவதிலும் எப்படி முக்கிய பங்காற்றுகிறார்கள்… எரிபொருள் தீரும் வரை கடைசிநொடி வரை போரிட்டு அதன் பின் எப்படி தப்பிக்க முயற்சி செய்கிறார்கள்… இப்படி நேரடி போர்க்களக்காட்சிகள்…

அப்போதே, கிட்டத்தட்ட 76 வருடங்களுக்கு முந்தைய இரண்டாம் உலகப்போரே இப்படி என்றால், இன்று எல்லா துறைகளும் தொழில்நுட்பங்களும் நவீனமாக உச்சத்தில் இருக்கும்… இந்த காலத்தில் உலகப்போர் வந்தால் என்னாகுமோ என்ற பேரச்சமே எழுகிறது.
நம்மூரில் அண்டை நாடு மீது பகைமை வெறி ஊட்டி, நம் நாட்டு இராணுவ வீர்ர்களை கொண்டாடச்சொல்லி வகுப்பெடுப்பார்கள். அப்போது கடுப்பாகவோ காமெடியாகவோ தான் இருக்கும். ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற சென்னை மெரினா நிகழ்வின் போது… இராணுவ வீர்ர்களை முன்வைத்து தேசப்பற்று ஊட்டப்படுவதை கிண்டலடித்து நிறைய மீம்ஸ்கள் பறந்ததையும் நாம் பார்த்தோம்.

ஆனால், டன்கிர்க் பார்க்கும்போது போர் என்றால்…. போரில் எங்கேனும் சிக்கிக்கொண்டால்… நம் நாட்டு இராணுவ வீரர்கள் மட்டுமல்ல எல்லா நாட்டு இராணுவ வீரர்களுமே… இப்படித்தானே உயிரை கையில் பிடித்துக்கொண்டு… எந்த நொடியில் சாகடிக்கப்படுவோமோ… அல்லது சாகடிப்போமோ… என்ற நிலையில் இருந்திருப்பார்கள்… என்று யோசித்தால்… அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் ஒரு சேர எழுகிறது.

கம்பீரமாக யுத்தக்களங்கில் போரிடுகிற இராணுவ வீரர்களை மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு, இலட்சக்கணக்கில் இராணுவ வீரர்கள் அடுத்தநொடி உயிர்வாழ்வது நிச்சயமில்லாத நிலையிலும்… எப்படியாவது தப்பித்து வீட்டுக்கு போகவேண்டும்…. என்று பரிதவித்து நிற்கிற நிலை… யுத்தங்கள் மீதான பேரச்சத்தையும் பெரும் வெறுப்பையும் உருவாக்குகிறது.

டன்கிர்க் திரைப்படம் வெளியான 3 நாட்களிலேயே 700 கோடி வசூலித்திருக்கிறதாம்.

– முருகன் மந்திரம்

Related Posts