அரசியல்

அதிமுக இணைப்பு நாடகம் – அம்பலக்கூத்து . . . . . . !

 

தமிழக அரசியல் களம் தன் வெற்றிடத்தை, அரசியல் சூதாட்டங்களால் நிரப்பியபடி நகர்கிறது என்றாலும் மாற்றரசியலுக்கான வாசலை அகலத் திறந்துவிட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக் கழக ஆட்சிகளின் மிக முக்கியமான காலகட்டம் இது. அண்ணாதுரை மறைவு, எம்ஜிஆர் மறைவு போல மற்றுமோர் மறைவு இல்லை ஜெயலலிதாவின் மறைவு.

உலகமயச் சூழலில், தமிழக அரசியல் களத்தின் போக்கு, இருபது ஆண்டுகளாகவே அதன் திசைவழியில் முக்கியத்துவம் உடையது. முன்னேறிய மாநிலமான தமிழகத்தின் அரசியல், இந்தியக் கூட்டாட்சித் தனத்துக்கு பெரும் சவாலாகவும், அதன் வல்லாதிக்கத்துக்கு எதிராகவும் இருக்கிறது.

இயற்கை வளங்களும், பெரும் உழைப்புச் சக்திகளையும் உடைய தமிழகம் பன்னாட்டு நிதிமூலத்திற்கான களமுமாகும். சமூக நீதி போராட்ட வெற்றி களமான இங்கு, தேசிய அரசியல் கட்சிகள் செல்வாக்கை நிறுவமுடியவில்லை. திராவிட இயக்கச் சிந்தனை, அதன் ஓட்டரசியல் வெற்றி ஆகியன தமிழக முன்னேற்றத்திற்கு பெரும்பங்காற்றின.

இந்த அரசியல் களத்தை மாற்ற வலதுசாரிகளின் திட்டம்  எம்ஜிஆர், வைகோ போன்றோரைத் தொடர்ந்து, அவர்களுக்கு “வராது வந்த மாமணி போல ” கிடைத்தவர் தான் ஜெயலலிதா. இவரின் ஆளுமை, அரசியல் வலதுசாரித் தன்மையுடன் இருந்தாலும், தன் அரசியல் எதிர்ப்போக்குகளால் அம்முத்திரை வெளிப்படாத வண்ணம் கவனமாக இருந்தார். தேர்தல்களில் அவரது வெற்றிக்கூட்டணி பெரும்பாலும் ஜனநாயக, இடதுசாரி, தலித் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் தான்.

2009 க்குப் பிறகு அவரது அரசியல் நிலைப்பாடுகள் நிறையவே மாறின. ஈழ ஆதரவு நிலைப்பாடு, காவிரி, முல்லைப் பெரியார் பிரச்சினைகளில் சட்டப் போராட்ட வெற்றி, விஷன் 2025 என ஜெயலலிதா இந்திய முதலாளிய அரசுக்கு எதிர்க்குரலாகவே இருந்தார். அவர் பெயரளவில் செயல்படுவதைக் கூட இம்முதலாளியம் விரும்பவில்லை. உணவுப் பாதுகாப்பு மசோதா, ஜிஎஸ்டி, நீட் போன்றவற்றை,  தன் இறுதிவரை எதிர்த்தார். ஜெயலலிதாவின் இந்த அரசியல் இந்திய முதலாளிய வர்க்கத்துக்குப் பிரச்சனையாக இருந்தது. தமிழக முதலாளிகளின், தேசிய விஸ்தரிப்பும் நகர்கிறது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி இல்லாமல், லேடியா? மோடியா? என்று முழங்கி 37 எம்பிகளை, அதிமுக பெற்றதை, பாஜக எதிர்பார்க்கவில்லை.

2014 செப்டம்பர் 27! குன்ஹா தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு வைக்கப்பட்ட செக். அவர் ஊழல்வாதி என்றாலும், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 100 கோடி அபராதம், ஐந்தாண்டு சிறை தண்டனை என்பது, ஊழலை ஒழிக்கும் நடவடிக்கை மட்டுமல்ல.  நிலவுகிற அமைப்பு முறை அப்படியானதும் அல்ல.

இந்தியச் சட்டவாத முறைகள் அதன் ஓட்டைகள் எட்டே மாதங்களில் ஜெயலலிதாவை விடுவித்தன. குமாரசாமியின் 10% கணக்கும் கூட வேண்டுமென்றே இருக்கக்கூடும். நீதிபதிகள் கணக்கில் இவ்வளவு வீக் இல்லை. 2015 டிசம்பர் பெருவெள்ளத்தில், ஜெயலலிதாவின் மௌனம் அப்போதே அவரது உடல்நலம் குறித்த சந்தேகம் கொள்ளவைத்தது.  ஆக, அவரைச் சுற்றி ஏதோ ஒரு சதிவளையம் பின்னப்பட்டிருந்ததாக. ஊகிக்க முடியும்.

2016-ல் மீண்டும் அதிமுக வெல்லும் என்பதை ஜெயலலிதாவே அவ்வளவு எளிதில் நம்பியிருக்க மாட்டார். மொத்த ஊடகங்களின் நிர்பந்த ஆதரவு கட்டமைப்பு உள்ளிட்டு அன்றைய சூழலின் பல்வேறு காரணிகள் அவரது வெற்றிக்கு உதவின. வராது வந்த மாமணி எப்போது போனாரென்று வரலாற்றுக்கு இனியும் பூடகம்தான். ஆனால் அதனை அறிந்திருக்கும் வாய்ப்பு முகாமுக்கும் பாஜக முகாமுக்கும் இருக்கிறது. யாரையும் பார்க்க அனுமதிக்காத அதிகாரமும் உரிமையும் சசிகலாவிற்கு இருந்தாலும், ஆளுநர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகளை அனுமதிக்காதது சசிகலாவிற்கு சாத்தியமில்லாத ஒன்று. இங்குதான் இருக்கிறது கூட்டுச்சதி. முடித்து வைக்கப்பட்ட அப்பல்லோ நாடகம், எரிக்கப்படவேண்டிய ஜெயலலிதாவின் உடல் புதைப்பு, பன்னீர் செல்வத்தின் பதவியேற்பு, சேகர் ரெட்டி வீடு மற்றும் தமிழக உள்துறை அமைச்சகத்தின் ரெய்டுகள், ஜல்லிக்கட்டு பேரெழுச்சி, சசிகலா முதல்வராக முயற்சி, பன்னீர் செல்வம் தியானம் நீக்கம், சசிகலா சிறை தண்டனை, தினகரன் துணைப் பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வர், இப்போது நடக்கிற இணைப்பு நாடகம் எல்லாவற்றுக்கும் பின்னணியில் இருப்பது ஆளும் பாஜக.

திராவிட இயக்க அரசியல் போக்குகளை அழிப்பது, மாநில உரிமைகள் மாநில சுய பொருளாதார நடவடிக்கைகளை கட்டுக்குள் வைத்து ஏக இந்தியாவை நிறுவுவது, இந்தியப் பெருமுதலாளிகள் பன்னாட்டு முதலாளிகளுக்கு இடையேயான சந்தைப்போட்டி, தமிழக சாதிய ஆதிக்கத்தை நிறுவி அதன் வழியே இந்துத்துவ போக்குகளை நிறுவுவது, தமிழக வளங்களை சூறையாடுவது, அதற்கான பொம்மை அரசை நிறுவுவது ஆகியவைதான் தமிழக அரசியல் நாடகங்களுக்கு பின்னான இந்துத்துவ அரசியல் சதி.

சசிகலாவோ, தினகரனோ ஏன் ஜெயலலிதா வோ கூட முதலாளிய போக்குகளுக்கு எதிரானவர்கள் இல்லை. முதலாளிகள் தங்கள் ஆட்டத்தைப் பிசிறில்லாமல், வெற்றிகரமாக ஆட மிகத்தோதாக ஆட, களத்தை இப்பொழுது சரியாகக் கட்டியிருக்கிறார்கள். பாஜக தன் அரசியல் ஆட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாகவே தொடங்கியிருக்கிறது. இந்த இணைப்பு கூத்து முற்றிலும் பாஜக நலன் சார்ந்தது. வாக்களித்த மக்களை முட்டாள்கள் என நினைத்து, ஜனநாயகம் என்று அவர்கள் நம்பும் மாண்புகளைக் குழிதோண்டிப் புதைத்து இப்படி ஓர் அற்ப நாடகத்தை அம்பலத்தில் அரங்கேற்றி இருக்கிறார்கள். இதனை ஊடகங்கள் தான் ஊதிப் பெருக்கிக் காட்டுகின்றனவே தவிர, மக்கள் இதனை உன்னிப்பாகவே கவனித்து வருகிறார்கள். இந்த நாடகத்தை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

சாதி அதிகாரமும், மத அதிகாரமும் கைகோர்த்துள்ள நிலையில் இனி அடாவடி அரசியல் இன்னும் மூர்க்கமாகும்.

எதிர்க்குரலில் வீரியமான தமிழகம் இந்தியச் சிறைக்கூடத்தின் சிம்மசொப்பனமாக அரசியல் பழகிக்கொண்டிருக்கிறது. பன்னீரையோ, பழனிச்சாமியையோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தினகரனை, சசிகலாவை ஏற்கமாட்டார்கள். பின்னிருந்து இயக்கும் பாஜக வை மக்கள் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த எதிர்ப்பு திமுக காங்கிரசுக்கும் சாதகமாக இல்லை என்பது அரசியலுக்குப் புதுசு.

சாதிக்கூட்டணி கணக்கு, கைப்பாவை அரசு, ஆளுமையற்ற அரசியல் தலைமைகள் என்ற பாஜகவின் திரைமறைவு வேலைகளில் அது வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால் இதுவரை இல்லாத போராட்டக்களமான தமிழகம் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிராது.

இவர்கள் உடைப்பும், இணைப்பும் மக்களை இன்னும் அரசியல்படுத்தி இருக்கிறது. தொடரும் நெடுவாசல், காவிரி, நீட் விவகாரங்களை இந்த நாடகங்கள் இன்னும் கூர்மையாக்குகின்றன.

மற்றபடி இந்த நாடகம் முன்திட்டத்தோடு நல்ல ஒத்திகையுடன் நடத்தப்பட்டிருக்கிறது. கல்லெறிய மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

– ரபீக் ராஜா.

 

Related Posts