சமூகம்

ஊரடங்கில் அதிகரிக்கும் குடும்ப வன்முறைகள்

பிப்ரவரி மாதம் துவங்கி உலகின் பல நாடுகளிலும் கொரோனா தொற்றின் பாதிப்பைப் பொறுத்து ஊரடங்கு காலம் அறிவிக்கப் பட்டு வருகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகச் செய்திகளின் சார்புத் தன்மை மக்களை உண்மையின் அருகில் நெருங்க விடாமல் குழப்புகின்றன.


இந்த நிலையில் தான், நம் நாட்டில் ஊர்த் தலைவரின் தண்டோரா போல செல்லா நோட்டால் மனித உழைப்பை செல்லாக் காசாக்கிய, ஜிஎஸ்டி மூலம் சிறுதொழிலின் கதவுகளை இழுத்து சாத்திய பிரதமர் மீண்டும் டிவி அறிவிப்பில் எந்த முன்னேற்பாடும் இன்றி ஊரடங்க உத்தரவிட்டுள்ளார் .

வீட்டிலிருந்தவாறே அலுவலக பணிகளை மேற்கொள்பவர்கள் வீட்டில் உறவுகளுடன் இருக்கும் மகிழ்வையும் அனுபவிக்க இயலாமல் அலுவலகப் பணியில் இயந்திரத்தனமாய் ஈடுபடவும் முடியாமல் உருவாகும் மன அழுத்தம் குழந்தைகள் மீதான வன்முறையாய் வெடிக்கின்றது. மதுக்கடைகளுடன் நூலகங்களும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு முடிந்ததும் பள்ளி, கல்லூரி தேர்வுகளை எழுதியாக வேண்டும் என்ற நிலையில் ஒரு பகுதி குழந்தைகளும், இன்னொரு பகுதியினர் இந்தக் கல்வியாண்டு முடிந்து விடுமுறை விடப்பட்ட நிலையிலும் உள்ளனர்.

விடுமுறை மனநிலையில் உள்ள குழந்தைகள் தங்கள் இயல்பில் இருக்க முடியாமல் ஊரடங்கின் சூழல்கள் தடுப்பதால் குழந்தைகளின் மன அழுத்த அதிகரிப்பு காரணமாக அவர்களுக்குள் முரட்டுத்தனம் அதிகரித்து வன்முறைக்கு வித்திடுகின்றன.


நோய்த்தொற்றும், பரவலும் ,பாதிப்பும், குணமடைதலும் ,இறப்பும் தரும் மன அழுத்தத்துடன் ,ஊரடங்கின் காரணமான வேலையின்மையும் , வருமான இழப்பும் ,செலவுகள் அதிகரிப்பும் ,எங்கும் செல்ல இயலாத நிலைமையும், காவலர்களிடம் படும் அவமானங்களும்,போடப்படும் வழக்குகளும் இணைந்து வரும் மன அழுத்தங்கள் குடும்பங்களில் அமைதியின்மை அதிகரிக்க காரணமாகியுள்ளது .


அரசின் வேலை இல்லா கால நிவாரண தொகை போதுமானதாக இல்லாததும்,பெட்ரோல் விலை உயர்வும் ,பொருள்களின் பற்றாக்குறை தாறுமாறான விலை என்பதும் அன்றாடக் குடும்பத்தேவைகள் மற்றும் விடுப்பில் உள்ள குழந்தைகளின் விருப்பங்கள் என எதையும் நிறைவேற்ற இயலாமல் வெகு விரைவில் ஆத்திரப்படும் நிலை மற்ற சமயங்களை விட இக்காலத்தில் மிக அடிக்கடி உருவாகிறது.

மதுக்கடைகள் மூடியிருப்பது அனைவரும் வரவேற்கும் விசயம் தான். குடிமகன்களே கூட அது நல்லது என்றும் நினைத்திருக்கலாம் .மகிழ்வோ கவலையோ நட்போ எதாக இருந்தாலும் மதுதான் வடிகால் என தமிழகம் அடிமைப்பட்டுக் கிடக்க பழக்கியுள்ள அரசாங்கம் அவர்கள் அதிலிருந்து மீள எந்த முன்னேற்பாடும் இல்லாமல் கடைகளை மூடியுள்ளது .

கடைமூடும் முதல் நாளே உள்ள பணம் முழுவதையும் மதுவிற்கே செலவழித்தவர்கள் உண்டு. இதன் பின்விளைவு ஒரு புறம் ! மறுபுறம் எந்த மருத்துவ உதவியும் இன்றி சட்டென மது கிடைக்காத நிலையில் உடல் ஏற்றுக் கொள்ளாத கள்ள சாராயம் ,சொல்யூசன்ஸ் என்று கிடைப்பவற்றை எல்லாம் போதைக்கு பயன்படுத்தத் தயாராகிறார்கள். அதன் வெறியில் கண்மூடித்தனமாக குடும்பத்தினரை தாக்குவதை அன்றாட செய்திகளில் காணலாம் .

சாதாரண காலத்தில் குடிக்க காசு கிடைக்கவில்லை என்றாலே வெறியில் அடித்து உதைத்து துன்புறுத்தும் மனநிலையில் இருப்பவர்கள் பலவேறு அழுத்தங்களுடன் இதன் வெறியும் இணைய இவையனைத்தின் பலனும் வீட்டை விட்டு எங்கும் செல்ல வழியற்ற நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது கடுமையான வன்முறையாக வெடிக்கிறது.

வாங்கிய கடனை கட்ட வழியின்றி , புதிதாக கடன் வாங்கவும் வழியின்றி, சேமிப்பும் ஏதுமற்று, அன்றாட உழைப்புக்கும் வழியற்றுப் போன நிலையின் கையாலாகாதனம் அதன் எதிர்மறையாக சாதாரண காலங்களை விட அதிக அளவில் கொடூரமான ஆதிக்கமாக தலை தூக்குகிறது.

இதுவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை அதிகரிக்க அடிப்படை காரணமாகவும் உள்ளது . ஜிஎஸ்டி பிரச்சனை வந்து கம்பெனிகள் இயங்க இயலாத நிலையில் நானறிந்த ஒரு குடும்பத்தில் வேலையும் வருமானமும் இன்றி செய்வதறியாது கணவன் கையில் கிடைத்த இரும்புத் தடிகொண்டு மனைவியை தொடையில் அடித்ததை நேரில் காணநேர்ந்தது .

இத்தகைய சூழலில் தான் உலக நல ( UN ) ஆணய பொது செயலர் ஆண்டிரியா கட்டர் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் உலக அளவில் குடும்ப வன்முறைகள் அதிகரித்தி ருப்பதாக அறிக்கை வெளியிட்டு கொரோனா நிவாரண திட்டங்களில் குடும்ப வன்முறைகள் அதிகரிக்காமல் தடுக்கவும், வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ,பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் தேவையான அம்சங்களை இணைக்குமாறு அறிவித்துள்ளார்.
இந்த வன்முறைகள் நம் நாட்டிலும், தமிழகத்திலும் கூட அதிகரித்து வருகிறது என்பதால் தான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில குழு இது பற்றிய புகார்கள் அளிக்க வசதியாக உதவி எண்களைத் தந்துள்ளது.

இந்நிலையில் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் பல்வேறு அமைப்புகள், இது போன்ற குடும்ப வன்முறை நிகழ்வுகளை உரிய முறையில் காவல்துறை கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்க வைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடியான காலகட்டத்தில் வீடுகளுக்குள் வன்முறைகளை குறைக்க உதவலாம்.

மத்திய மாநில அரசுகளும் இதில் முக்கிய கவனம் செலுத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் குடும்ப வன்முறைகளைத் தடுக்க வேண்டும் !

-செம்மலர்.

Related Posts