மாற்று‍ சினிமா

பரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . ?

பரியனைத் தெரியுமா உங்களுக்கு? எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா?

எதையோ கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வத்தோடு அரசுப்பள்ளியில் சேர,  வகுப்பறைகளில் வரிசையாக எழுந்திருக்க சொல்லி, சாதிப்பெயரை கேட்கும் போது, எல்லோரும் சத்தமாக தங்கள் சாதிப்பெயரை சொல்லி அமர, சக மாணவ மாணவிகள் & ஆசிரியர் முன்னால் தன் சாதிப் பெயரை மென்று முழுங்கி சொல்லி விட்டு, புழுவைப்போல் கூனிக்குறுகி ஒருவன் அமர்ந்திருப்பான்.

”அப்பா என்ன பண்றாங்க” எனும் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல், செருப்பு தைத்தோ, மலம் அள்ளியோ, சாக்கடை அள்ளியோ அன்றாடம் வாழ்க்கையை கடத்தும் தன் தந்தையின் தொழிலை மாற்றி சொல்லி தற்காலிகமாக தப்பித்திருப்பான்.

ஆசையோடு அழைத்து சென்ற சக தோழன் வீட்டிலுள்ளோர் ”தம்பி என்ன ஆளுக” என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் தலையை கவிழ்ந்திருப்பான்.

தான் சென்ற பிறகு நண்பன் வீட்டில், தான் உட்கார்ந்த இருக்கை தண்ணீரால் கழுவப்பட்டதை தெரிந்து விரக்தியின் உச்சத்திற்கே போயிருப்பான்.

எதிர்கொள்ளும் அநேகம் பேரின் தேடல், பெயர் தாண்டி ஊரையும் கும்பிடும் சாமியையும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்திலேயே இருப்பதை கண்டு நொந்திருப்பான்.

எப்படியேனும் ஒரு டிகிரி முடித்து, தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகி விட வேண்டுமென கனவோடு கல்லூரி செல்லுமிடத்தில், அங்கும் சாதியக் குழுக்களாக மாணவர்கள் பிரிந்திருப்பதைக் கண்டு வெம்பியிருப்பான்.

30 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்த சாதிய சமூகத்தால் வன்முறையை எதிர்கொள்பவன் அவன். சாதிய ஆணவக் கொலையாகி தண்டவாளத்திலோ இல்லை வேறு எங்குமோ உடல் சிதறி பலியானவர்களில் ஒருவன் அவன். 60 நிமிடங்களுக்கு ஒரு முறை பாலியல் வன்முறையை எதிர்கொள்ளும் பெண்களின் அப்பா, அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என ஏதோ ஒரு உறவு அவன்.

உங்கள் பார்வைக்கு அவன் அவ்வளவு துல்லியமாக தெரிந்திருக்க கூடியவன் அல்ல. எழுதப்பட்ட வரலாறுகளில், புனைவுகளில், இலக்கியங்களில், நாடகங்கள், சினிமாக்கள் என எதிலும் அவன் கவனத்திற்குரியவன் இல்லை. 1200 ஆண்டுகளாய் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட சேரியின் இளைஞன் அவன்.

அதில் ஒருவன்தான் பரியேறும் பெருமாள். அந்த பரியனை திரையில் கதாநாயகனாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இயக்குநர் ரஞ்சித் இன்றி இது சாத்தியமாகியிருக்காது. ”தாமிரபரணியில் கொல்லப்படாத” மாரி செல்வராஜ் இன்றி இதை இத்தனை துல்லியமாக பதிவு செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே.

“இந்தியா இருவேறு இந்தியாக்களாக இருக்கிறது” என்பார் அறிவாசான் அம்பேத்கர். ஊர் என்றும் சேரி என்றும் இருக்கும் இந்த கட்டமைப்பு குறித்தும், அதில் வெளிப்படும் தீண்டாமை குறித்தும், இத்தனை ஆண்டுகள் ஆகியும், முற்போக்கு சக்திகள் தவிர்த்த பொது சமூகம் ஒரு உரையாடலை தொடங்கவில்லை. அல்லது தொடங்க விருப்பமின்றி கள்ள மெளனம் காத்து வருகிறது. ”அந்த சமூகத்தின் செவிட்டில் அறைந்து, வா பேசுவோம்” என்று அழைக்கிறான் பரியன்.

சாதியம் தனது இறுக்கத்தை மிகக் கொடூரமாக உயிர்ப்பித்து வைத்திருக்கும் இடமாக இன்றளவும் உள்ளது கிராமங்களே. ஊர் என்றும் சேரி என்றும், அதிலும் வீசும் காற்று கூட சேரியை தழுவி ஊரைத் தழுவிடக்கூடாது என்று கிழக்கு பக்கமாக ஒதுக்கி வைத்திருக்கும் கொடூரமும், கீழத்தெருவா என்கிற ஒற்றைக் கேள்வியிலேயே சாதியை கண்டறிந்து ஒதுக்கி வைக்கும் வழக்கமிருப்பதும் கிராமத்திலேதான்.

அதிலும் தென் தமிழகம் குறிப்பாக திருநெல்வேலி பகுதி இந்த சாதிய கட்டமைப்பின் இறுக்கத்திற்கு பெயர் போனது. 90-களின் பாதியில் மிகக்கோரமான சாதியக் கலவரத்தை எதிர்கொண்ட பூமி இது. ஆனால் இதையெல்லாம் பேசாமல் இல்லை இதையே மிகைப்படுத்தி பேசிய படங்களே இது நாள் வரையிலும் பார்த்து வந்துள்ளோம். இதன் ஆணி வேர் என்ன? இதற்கான தீர்வென்ன என்று அலசியப் படங்கள்  என்று எதுவுமில்லை என்றே சொல்லலாம்.

உன் பிரச்சனையை சொல்கிறேன் பேர்வழி என்று கிளம்பி தாலியறுத்த இலக்கியவாதிகள், சினிமாக்காரர்கள் மத்தியில், என் பிரச்சனையை நான் சொல்கிறேன் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் மாரி செல்வராஜ்.

இந்தப் புள்ளியில்தான் பரியேறும் பெருமாள் பி.ஏ. பி.எல்., தமிழ் சினிமா வின் 100 ஆண்டு கால வரலாற்றில் தவிர்க்க முடியாத சினிமாவாக பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கிறது. இந்த படத்தில் சாதிய ஒடுக்குமுறை துல்லியமாக, அழுத்தமாக பேசப்படுகிறது. காலம் காலமாக அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டவன் பெருங்குரலெடுத்து பேசத் தொடங்கினால், எப்படி செவிப்பறை கிழியுமோ அப்படி சாதிய சமூகத்தின் செவிப்பறையை கிழித்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டவனின் வலியை உணர்ந்து பார்த்திருப்பதால் மட்டுமே இத்தனை யதார்த்தமாக மாரி செல்வராஜால் இந்த கதாப்பாத்திரங்களை வடிவமைக்க முடிந்திருக்கிறது.

இந்த உலகமெங்கும் யதார்த்த சினிமாக்களாக கொண்டாடப்படுபவை, அந்த மண் சார்ந்த பிரச்சனைகளை பேசியப் படங்களே. அதை மாறாமல் பதிவு செய்திருக்கிறார். எந்த இடத்திலும், எந்த காட்சிகளும் மிகைப்படுத்துதல் இல்லாமல் இருக்கிறது. இது சாதிய சமூகம், ஆகவே நீங்கள் எல்லோரும் சாதியவாதிகள் என்று பொதுமைப்படுத்தாமல், ஒரு தந்தையாக சாதிய சமூகத்தால் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கலையும், சாதி பார்த்தெல்லாம் பழகாத நண்பன் பாத்திரத்தையும் அழகாக வடிவமைத்திருக்கிறார்.  கதாப்பாத்திரங்களின் தேர்வும், வடிவமைப்பும், கதை சொல்லும் பாங்கும் இது தமிழ் சினிமா வரலாற்றின் மிக முக்கிய சினிமா என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொண்டே இருக்கிறது.

நிலவுடமை சமூகம் எனும் அடிக்கட்டுமானமே சாதிய சமூகம் எனும் மேல் கட்டுமானத்தின் அடிப்படை, அது தகராமல் சாதியமைப்பு முறையை வீழ்த்த முடியாது என்பதை முதல் காட்சியிலேயே உணர்த்தி விடுகிறார்.

கல்விதான் தன் சமூகம் முன்னேற்றத்திற்கான முதல் படி என்று அழுத்தம் திருத்தமாக பதிவு செய்து, சினிமா எனும் மாபெரும் ஊடகத்தின் வழி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியிலிறங்கி, ”மனித மாண்பை மீட்டெடுப்போம் வாருங்கள் உரையாடலாம்” என்று இறுதிக்காட்சியில் சாதிய சமூகத்திற்கு அழைப்பு விடுக்கும் பரியேறும் பெருமாளை பி.ஏ. பி.எல்., ஐ நாம் கொண்டாடா விட்டால் வேறு யார் கொண்டாடப்போகிறார்கள்.

– முத்தழகன்.

 

 

 

Related Posts