அரசியல்

தீபாவளி “பண்பாடும் பொருளாயதக் கட்டுமானமும்” . . . . . . !

தீபாவளி – தீபம்+ஆவளி,  தீபங்களின் வரிசை. இருளை விலக்கி, ஒளியை வரவேற்கும் விழா. அனைத்து தரப்பினரும் ஏதோ ஒருவகையில் பங்கேற்கும் பண்டிகை. எத்தனை விமரிசனங்கள், எத்தனை எதிர் அரசியல்கள், எத்தனை மாறுதல்கள், எத்தனை சமய அடையாளங்கள், அத்தனையையும் தாண்டி பெருஞ்செல்வாக்குடன் வருடந்தோறும் கழிகிறது தீபாவளி நாள். மிகமுக்கியமாகக் கவனிக்கப்படவேண்டிய செய்தி தீபாவளி நாட்களின் வர்த்தகம். அரிவாள்மனையிலிருந்து, ஆடை ஆபரணங்கள் வரையிலும் விற்பனையில் சக்கைபோடும் விழா தீபாவளி. குதூகலம், உற்சாகம் தொற்றிக்கொள்ளும் வகையில் காலந்தோறும் மாற்றம் பெற்று,  தன்னை நிறுத்திக்கொண்ட தீபாவளியை விரிவாகப் பேசவேண்டும். பார்ப்பனீய எதிர்ப்பு, இனவகை ஒடுக்குமுறை அதனைத் தொடர்ந்த அடையாளமீட்பு போன்றவை எதிர்நடவடிக்கைகளே. அவை ஆளும் முதலாளிய வர்க்கங்களை அசைக்கப் போதுமானவை அல்ல.

தீபாவளிக்கான காரணங்களாக, இந்திய நிலப்பரப்பு முழுவதிலும் பலவேறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. வைதீக அறுபெருஞ்சமயங்களான, ‘சைவம், வைணவம், சாக்தம், காணபத்தியம், கௌமாரம்,சௌரம்’ மற்றும் அவைதிகச் சமயங்களான ‘பௌத்தம், சமணம்’ என எல்லாமும், இந்த விழாவோடு தங்களை இணைத்து, புராணங்களையும், தத்துவங்களையும், கொள்கைகளையும் முன்வைக்கின்றன.  இன்று இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் கூட சிறிய அளவில் இவ்விழாவில் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். வறட்டு, அசல் நாத்திகம் பேசுவோரும், இடதுசாரிகள் பலரும் கமுக்கமாகவோ, வெளிப்படையாகவோ இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்றாக வேண்டிய சூழல் நிர்பந்தம் இருக்கின்றது. ஆக எவரும் சாதாரணமாகக் கடக்கமுடியாத இவ்விழாவின் மையச்சரடு என்ன? ஏன் இவ்வளவும், இன்றளவும்  மாற்றத்துடன் தொடர்கின்றன?

‘எள்ளிலிருந்து எண்ணெய் எடுக்க, கண்டுபிடித்த நாள்’, என்கிறார் பண்டிதர் அயோத்தி தாசர்.இது பூர்வ பௌத்த விழா என்கிறார். இருபத்து நான்காவது அமணத் தீர்த்தங்கரரான ‘வர்த்தமானா’  மகாவீரர் ‘கேவல நிலையை’ (பரிநிர்வாணம் எனப்படும் முக்தி) அடைந்த நாள் இந்த அமாவாசை நாள், என்கிறது சமணம். இன்னும், இராவணவதம் முடித்து இராமன் அயோத்தி அரசனாக முடிசூட்டிய நாள்; தாருகாசுரனை அன்னை காளி வதம் செய்த நாள்; மதுசூதனன் கிருஷ்ணன் தன் ஏழாவது மனைவி சத்யபாமாவின் மூலம் நரகாசுரனைக் கொன்றழித்த நாள்  என சமயவாரியாகக் கதைகள் சுவாரஸ்யமாக இன்றும் விரிகின்றன. பூவுலக மாலவன் விஷ்ணுவின் நான்கு மனைவியருள் ஒருத்தியான பூதேவி நரகாசுர வதத்தில் தொடர்புபடுத்தப்படுகிறாள். பூமகள் தசாவதாரத்தில், வராக அவதாரத்திலும்(பூமகள்)  இராமவதாரத்திலும்(சீதையின் தாய்) , கிருஷ்ணாவதாரத்திலும்(சத்யபாமா)  பேசப்படுகிறாள்.

பூமியாகிய நிலமகளை அசுரன் ஒருவன் சுருட்டிக்கொண்டு கடலினுள் ஒளித்துவைக்க, மகாவிஷ்ணு பிரமாண்டமான பன்றியென உருவெடுத்து நிலமகளை மீட்கிறான். அப்போது பூமகளுடன் கலந்ததால்,  நரகாசுரன் பிறப்பெடுக்கிறான். இந்தப் புராணக்கதையில், சைவம்,  தன்னை இணைத்துக்கொள்கிறது. ருத்ரன் எனப்படும் சிவனின் முடியைக் காண பிரம்மன் பருந்தாகவும் அடியைக் காண விஷ்ணு வராகமாகவும் உருவெடுக்க,  அண்ணாமலை சோதியனாக சிவனே பெரியவன் என, சிவபுராணம்  நிறுவுகிறது. சப்த மாமர்களுள் வராகியும் இருக்கிறாள்.

இவ்வாறு ஒவ்வொரு சமயமும், அரச செல்வாக்கோடும், வெகுசன ஆதரவும் பெற்றிருக்கும்போது தமது ஆதிக்கத்தை, புராணம் வழியாக, பண்பாட்டின் வழியாக நிறுவிக்கொள்கின்றன. ஊடாடி உருக்கொள்கின்றன.

அசுரவதங்களை நிகழ்த்திய ‘சக்திகள்’ மேலே சொன்ன ஆறு சமயங்களிலும் முதன்மை தேவதைகளாக இருக்கின்றன. இவை தத்துவ மோதல்களை, சமய சமூகத் தளங்களில் நிகழ்த்தின.

என்ன வகையான தத்துவம்?

சைவம், வைணவம், சாக்தம் உள்ளிட்ட சமயங்கள் ஆறும் தனிப்பெரும் தெய்வங்களை முன்வைத்த போதிலும், முரண்பட்ட போதிலும் தங்களுக்குள் சமரசத்தை, சுவீகாரமாக, கபளீகரமாகச் செய்துகொண்டன. இந்த அளவில் இல்லையென்றாலும்,  தத்துவத்தளத்திலும், சமயத்தளத்திலும், சமண பௌத்த சமயங்களும் முரண்பட்டே வளர்ந்திருக்கின்றன.

நிலவுடைமைக்கு முந்திய ஆதி இனக்குழுவின் தாய்வழிச் சமூக சாக்தமும், வேட்டுவ இனக்குழுவின் முருகு(கௌமாரம்)  வழிபாடும் நிலவுடைமை சமயங்களான, சைவ வைணவத்தால் உள்ளிழுக்கப்பட்டன. உதாரணமாக, சிவன் ‘செம்படவக்’ குல கங்கையையும், திருமால் ‘பரதவச்’ சமூக மகாலெட்சுமியையும், திருமணம் செய்த புராணங்களை அதேபோல, வேடனை, கொற்றவை மகனாக்கி, கொற்றவையை பரமன் மனைவியாக்கியதையும் சொல்லலாம். சத்ரிய சித்தார்த்தனை, புத்தனான பின்னர் வைதீகம், விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்றது. இதேபோல,  வணிக சமயங்களான சமண பௌத்தமும் இனக்குழுக்களின் வரலாறுகளைத் தங்கள் வழியில் எழுதி, அரசு செல்வாக்கைப் பெறத் தவறவில்லை.

தீபாவளியின் பிற புராணங்களை விலக்கிவிட்டு, தமிழ்ப்பரப்பில் சொல்லப்படும் நரகாசுரக் கதையை விவாதிக்கலாம்.

பூமகளை மீட்க வந்த வராகம், பூதேவியைக் கூடி நரகாசுரனை உண்டாக்குகிறது. அவதாரங்களுள் மூன்றாவது வராகவதாரம். அதாவது திரேதாயுகத்தில். கடும் தவத்தால் நரகாசுரன் தன் தாயால் மரணிக்க வேண்டுமே அன்றியும், வேறெப்படியும் மரணிக்கக் கூடாதெனப் பிரம்மனிடம் வரம்பெறுகிறான். திக்கெட்டிலும் செல்வாக்குடன் இருக்கிறான். வானவரும், மறையோரும், வேதியரும், விற்பன்னர்களும் சொல்லொணாத் துயரங்களில் யுகம் கடந்து உழல்கின்றனர். தேவர்கோன் இந்திரனின் வஜ்ராயுதமும் நரகாசுரனிடத்தில் பணியவே, இந்திரன் பூமகளை அருகி, நரகாசுர வதத்தை யாசிக்கிறான். பூதேவி மறுக்கவே, விஷ்ணுவை  அணுகி முறையிடவே அவன் அபயமளிக்கிறான்.

“தனது இஷ்ட பத்தினி சத்யபாமாவுடன், கானகம் ஏகிய துவாபரயுகக் கிருஷ்ணன், நரகாசுரனுடன் சமர் புரிகிறான். சமரில் நரகாசுரன் வெல்கிறான். சத்யபாமா வெஞ்சினத்துடன் வாளெடுத்து, நரகாசுரனுடன் போரிடுகிறாள்.  சத்யபாமா , நரகாசுரனை வீழ்த்துகிறாள்.  வீழ்த்திய கணத்தில், சத்யபாமா தான்தான் பூமகளென உணர்கிறாள். நரகாசுரன் வீழ்ந்தான். வீழும் தருவாயில் என் இறப்பை மக்கள் தீபங்கள் ஏற்றி உவகையுடன் கொண்டாட வரம் யாசிக்கிறான். அதுவே தீபாவளி” என்ற  கதையே தமிழகத்தில் இன்று நம்பப்பட்டு, தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. இதே நாள் தான் வர்த்தமான மகாவீரர் மரித்த நாள்.

முக்தி (அ) மோட்சத்தை தமிழக அற இலக்கியங்கள் தனியாகப் பேசவில்லை. ‘அறம் பொருள் இன்பம்’ என்றே பேசுகின்றன.

‘உடலே பிரதானம்’ என்கிறது திருமந்திரம் உள்ளிட்ட சித்தரியலும், புறநானூறும். இன்றும் நம் சமூகத்தில்,  இறந்துபடுதலைத் ‘தவறிவிட்டார்’ எனச் சொல்லும் வழக்கத்தோடு, சாவை, ஆடிப்பாடி, இசையோடு, அலங்காரமாக, ஒய்யாரமாகக் கொண்டாடும் வழக்கமும் இருக்கிறது. உடலோடு வாழ்க்கை முடிந்துவிடுகிறது; மறுமை என்பதெல்லாம் இல்லவே இல்லை என்கிற பார்வையாக இதனைக் கருதமுடியும். நீத்தார் பெருமையை எண்ணெய்த் தேய்த்துக் குளிர்த்து, இறைச்சி விருந்துடன் நினைவுகூரும் மரபு தமிழர் மரபு.

ஆருகதம் எனப்படும் சமணம், ஆசிவகத்தைச் செரித்து, பௌத்தத்துடன் தத்துவச் சமருடன், சமூகத் தளத்திலும் முரண்பட்டு, வைதீகச் சமயங்களுடன் பெரும்போர் நடத்தி, வெகுசனச் செல்வாக்குடன் அரச சமயமாகவும் இங்கே கோலோச்சியது. ஐம்பெரு, சிறு காப்பியங்களில் ஆறு காப்பியங்கள் சமணக் காப்பியங்கள். கண்ணகி, நீலகேசி போன்ற அணங்கு பாத்திரங்கள் சமூக, தத்துவத் தளங்களில் இன்றும் தவிர்க்கவியலாதவை. மதுரையைச் சுற்றியுள்ள என்பெருங்குன்றங்கள் உள்ளிட்ட பல கோயில்கள் சமணப்பள்ளிகளே. நடுகல் வழிபாட்டை முன்னகர்த்தி, அனைத்துக்கும் உயிர் உண்டு ;’அத்தி நாத்தி’ என்கிற உண்மை பன்மைத்தன்மை வாய்ந்தது என்கிற தத்துவத்தோடு வெகுமக்களிடம் செல்வாக்குடன் இருந்த சமணத்தை, ‘அரச சூதினாலும்’, ‘அரண்மனைச் சதியினாலும்’,  பக்தி இலக்கியம் வழியும், சைவமும், வைணவமும் துடைத்தெரிந்தன.

நரகாசுர வதத்தில், அவன் பிறந்தது திரேதாயுகத்தில் என்பது அவனின் தொன்மத்தையும், பூமகள் புதல்வன் என்பதை வெகுமக்கள் செல்வாக்கு எனவும், பெற்ற தாயே, சத்யபாமாவாக அவதரித்து வதம் செய்ததை, வைதீக சமயத்தின் சூதாகவும் கருதினால் நரகாசுரன் என்பவன் வர்த்தமான மகாவீரரே எனத் துணியலாம். சமணம், தத்துவத்தளத்தில் அதன் தத்துவத்தாலேயே வீழ்ந்தது கெடுவாய்ப்பானது. ‘அனைத்துக்கும் ஆன்மா உண்டு, அனைத்தும் உண்மை, கர்மவினை, மறுபிறப்பு’ போன்ற சமணக் கோட்பாடுகள் அத்தனையும் நரகாசுரன் கதைக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகின்றன. இதேபோல, ‘அனாத்மவாதமான’ பௌத்தத்தின் தாராதேவியை , ‘காமாட்சி ஆக்கி’, வைதீகம் ‘பண்டாசுரவதத்தைச்’ செய்துமுடித்தது.

தத்துவங்களைப் பெருங்கதைகளாக்கி, சமயத் தளத்தில், வெகுமக்கள் தளத்தில் வைதீக சமயங்கள் வென்றன. சமயங்கள் ஆளும்வர்க்கத்தின் கருவிகள். நிலவுடைமை சமூகத்தில் சமயமும், அரசும் பிரிக்கமுடியாத அளவுக்கு இருந்தன. இன்றும் கூட பாஜக அரசு அதற்கு முயன்று ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது

சமணத்தை உண்டு செரித்த வைதீகம் ஆளும்வர்க்க ஆதரவோடு அரசைப் பேரசசாக விரிவுபடுத்த சிரமேற்றுப் புறப்பட்டது. வென்றது. ஆனால் சமூகத் தளத்தில் வெகுமக்கள் செல்வாக்கு பெற்ற சமணத்தின் பண்பாட்டு மிச்சங்களை, உணர்வுகளை எளிதில் அப்புறப்படுத்த முடியாது. அதனை ஆளும்வர்க்கம் விரும்பவும் செய்யாது. அந்த உணர்வுகளைக் காசாக்கும். இன்றுவரை அது தொடர்கிறது.

தீப விழா என்பது, விளைச்சலைக் காப்பாற்றும் நோக்கில் கார்த்திகை பெருநிலவு அன்றும் அதையொட்டிய சொக்கப்பனை கொளுத்துவதுமாக தமிழர் நாளாய் வழக்கத்தில் இருக்கிறது. புரட்டாசி அமாவாசை ‘சாங்கிய விழவான’ நவராத்திரி, அடுத்த அமாவாசையான ஐப்பசி அமாவாசை ‘தீபாவளி’, கார்த்திகை ‘முழுநிலவு ஒளிவரிசை’ என இவை நிகழ்த்தப்படும் கால இடைவெளியைக் கருதினால்  ஒரு தொடர்பு சரடைக் கண்டடைய முடியும். அது விவசாய உற்பத்தி,  அது தொடர்பான நடவடிக்கைகளாக இருப்பதை அறியமுடியும். இனக்குழுக்களின் உற்பத்தி தொடர்பான நடவடிக்கைகள், நிலவுடைமை வளர்ச்சியில் கருவிமாற்றத்தோடு, பிற்கால வளர்ச்சியில் ‘நிகழ்த்து சடங்குகளாக’ மாற்றம் பெறுகின்றன.

தீபாவளி இப்படியாக, விவசாய உற்பத்தி தொடர்பான நிகழ்த்துச் சடங்குகளின் எச்சம். சமய அதிகார மாற்றங்களில், இத்தகைய விழாக்களும் அதே சமய மாற்றங்களுக்கு உள்ளாகும். சமயங்கள் ஆளும்வர்க்கங்களின் கருவிகள் ஆதலால், மூலதனம் குவிக்கும் விழாக்களை தங்கள் பொருளாயதக் கட்டமைப்பாகத் தக்கவைக்கும்.

தீபாவளி, இன்று எழுந்திருக்கும் ‘தமிழர் பேரரசன்’ என்கிற முழக்கமும், ‘அசுரவதங்கள்,  ‘இனவகைமைப்பட்ட ஒடுக்கம்’ என்கிற வாதமும் தேசிய இன விடுதலை கோரிக்கைகளுக்கு வலுசேர்க்கும் நகர்வுகள் தான். வறட்டு நாத்திகவாதமும், தேர்த்தெடுத்த சீர்திருத்தவாதமும் வெகுசன செல்வாக்குடன் இருக்கும் எதனையும் அசைத்துவிடமுடியாது. ஏனென்றால் அதன் பொருளாயதக் கட்டுமானம் அவர்களுக்கு நம்பிக்கை உத்திரவாதத்தை அளிக்கிறது.

ஆகவே, தீபாவளி போன்ற விழாக்கள், இன, மொழி வகைமைப்பட்ட ஒடுக்குமுறைகள் மட்டுமல்ல. இவை இப்படியாக நிலைத்திருக்க முடிவது, அவற்றின் பொருளாயதக் கட்டுமானமே  என்ற புரிதலில் விவாதத்தை நகர்த்த வேண்டும்.

இல்லையென்றால், நரகாசுரன் போல நிறைய அசுரர்களுக்கு வீரவணக்கம் மட்டுமே செய்யும் எதிராட்டத்தை நாம் தொடரலாம். அதை முதலாளியம் கம்பளம் விரித்து வரவேற்று, தன்னை நிறுவிக்கொள்ளும்.

– ரபீக் ராஜா.

 

Related Posts