சமூகம்

இயலாமையைப் புறந்தள்ளும் நம்பிக்கை உலகை நோக்கி.

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு முகமலர்ந்த பெண்மணியைப் பார்த்து இரு கரம் குவித்து வணங்கும் அந்தப் புகைப்படம் என்னை என்னவோ செய்தது. அவர் அணிவித்த சால்வைக்குள் இயற்கை தனக்கு அளித்த சாபத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மொகலம்மா மிகப் பெரிய சாதனைப் பெண் என்பதை அருகிலுள்ள கட்டுரையில் ஹிந்து பத்திரிகையின் ஞாயிறு பத்தியாளர் ஹர்ஷ் மந்தர் விரிவாக எழுதியிருந்தார்.

மாற்றுத் திறனாளி என்ற சொல், ஊனமுற்றோரை சிறப்பிக்கிறதா, அவர்களது பிரச்சனைகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறதா என்கிற விவாதம் ஒரு பக்கம் தொடர்கிறது. இன்னொரு பக்கம், தங்களுக்கு மறுக்கப் பட்ட வாசல்களை உடைத்துக் கொண்டு தாவிப் பாய்ந்து பயணம் தொடர்கிற மனிதர்கள் சமூகத்தைத் தொடர்ந்து வியப்புக்குள்ளாக்கவே செய்கின்றனர். ஊனம் ஒரு தடையே இல்லை என்பது எத்தனை எளிய வாக்கியம். அதைச் சொல்லும் இடத்தில் வந்து சேர மொகலம்மா எத்தனை பாடு எடுத்திருப்பார்?

பிறவி ஊனம் எதுவும் இல்லாதிருந்த மொகலம்மாவுக்கு ஒன்பது மாதக் குழந்தையாக இருக்கையில் காய்ச்சல் கண்டது. காய்ச்சல் குணமானாலும், அது அவரை நிற்கவோ, உட்காரவோ இயலாது செய்து சென்றுவிட்டது. தாய் ராமுலம்மா பார்க்காத வைத்தியரில்லை. செய்யாத வைத்தியம் இல்லை. மொகலம்மாவின் இயலாமை நிரந்தர ஊனம் என்று தெளிவான ஒரு தருணத்தில், அவரது தாய் மகத்தான ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.

எப்பாடுபட்டாவது மொகலம்மாவைப் படிக்க வைத்துவிடுவது என்ற அவரது விடா முயற்சி, போராட்டம் மொகலம்மாவை முதன்முதலில் தொடக்கப் பள்ளிக்குள்ளே விடவே யோசித்த ஆசிரியரின் தயக்கத்திலிருந்து அடுத்தடுத்த பல தடைகளையும் முறியடித்து கல்லூரி படிப்பு வரை கொண்டு சேர்த்துவிட்டது. கல்லூரி இறுதியாண்டு முடிக்கும் தறுவாயில், வாழ்க்கை அவருக்கான அடுத்த கதவையும் திறந்து கொடுத்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் பட்டறையில் பங்கேற்ற அவர், இனி தன வாழ்நாள் வேலை, ஊனமுற்றோரைத் திரட்டுவது, அவர்களது உரிமைகளை எடுத்துச் சொல்வது, நம்பிக்கை ஊட்டுவது…என ஊனமுற்றோர் இயக்க நாயகியாக மலர்ந்திருக்கிறார் அவர். திருமணம் பற்றிய சிந்தனைகள் அவரிடம் கிஞ்சிற்றும் இல்லை. அவரது நோக்கம், பாதை எல்லாமே தெளிவாகிவிட்டிருக்கிறது அவருக்கு.

தன்னை அவநம்பிக்கையோடு சேர்த்துக் கொண்ட பள்ளிக்கு அவர் ஒரு நாள் கூட போகாது நின்றதில்லை.  கொளுத்தும் வெயிலோ, கொட்டும் மழையோ தரையில் கைகளை ஊன்றி ஊன்றி கரடுமுரடான சாலையினோரம் உடலை இழுத்து இழுத்துக் கடந்து பள்ளிக்கூடத்தை எட்டும் அவருக்காக, படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் காத்திருந்தனர். ஏனென்றால், வகுப்பில் சூட்டிகையான மாணவி அவர்தான். மற்றவர்களுக்குச் சொல்லித் தருவது அவளுக்குப் பிடித்தமான விஷயமாக இருந்திருக்கிறது.

மொகலம்மா ஓர் உற்சாகம் தரும் அண்மைக்காலக் குறியீட்டுப் பெயர். காலம் தோறும் தங்களது இயலாமையை முறியடித்துத் தங்களை நிரூபித்துக் காட்டிய மனிதர்கள் நிறைய உண்டு. பொதுவுடைமை இயக்கத் தலைவர்களில் பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம். பி ராமமூர்த்தி, தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர். கால் ஊனம் அவரைக் கொஞ்சமும் கட்டிப் போடவில்லை. இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்களுக்கு திக்கு வாய் என்று சொல்லப்படும் சரளமாகப் பேச இயலாத குறைபாடு இருந்தது. பேசுகையில் நீ படும் அவஸ்தை பார்க்கும்போது, வெட்டியாய்க் கிடக்கும் எமது நாவை அறுத்துத் தர வாய்ப்பில்லையே என்று நாங்கள் தவித்தோம் என்று எழுதினர் கந்தர்வன். பிரபல சொற்பொழிவாளராகத் திகழ்ந்த கீரன் அவர்களும் கால் ஊனத்தை மதியாது சாதனை நிகழ்த்தியவர் தான்.

விழி இழந்தோர்க்குக் கால காலமான நம்பிக்கை ஊற்று ஹெலன் கெல்லர். எவ்லின் க்ளென்னி (தற்போது 48 வயது) என்னும் மிகச் சிறந்த இசைக் கலைஞர் 8வது வயதில் செவிப்புலனை முற்றிலுமாக இழந்தவர். ஆனால் அவருக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று கண்டுகொண்ட அவரது பெற்றோர் அவருக்கு இசைப் பயிற்சி அளிக்கத் தொடங்கினர். தாள வாத்தியக் கருவிகளை இசைப்பதில் அவர் அடைந்த தேர்ச்சி இசை ரசிகர்களை அசத்தியது. காது கேளாமல் போனால் என்ன, உடலின் மற்ற பாகங்களால் அதிர்வுகளை உணர முடியும் என்று வெளிப்படுத்திய அவர், அற்புத இசை பொழிந்து வருகிறார்.

புகழ் பெற்ற பாடகர் பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் பாட்டு பயின்ற கரிமெல்லா சுப்பிரமணியன், பிறவியிலேயே கண் பார்வை அற்றவர். ஆனால் தமது இடைவிடாத ஊக்கத்தின் காரணமாக லண்டன் வரை சென்று படித்தவர். கணினியில் பார்வையற்றோரும் பயன்படுத்தும் வண்ணம் பேசும் மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனைத் தாம் பயின்ற கல்வி நிறுவனத்தில் பொருத்துமாறு செய்து அதைப் பயன்படுத்துவதிலும் தேர்ச்சி பெற்றவர். ஹிந்து நாளிதழின் மூத்த உதவி ஆசிரியரான கரிமெல்லா ஜனநாயக உணர்வுமிக்க சமூக செயல்பாட்டாளரும் கூட.

அறிவியலில் ஆர்வமுள்ள யாவருக்கும் தெரிந்திருக்கக் கூடிய பெயர், ஸ்டீபன் ஹாகிங். இயல்பியல் அறிவியலாளரான அவர் நோபல் பரிசு பெற்றிருப்பவர். தமது கண்களின் அசைவை வைத்து எழுத்துக்களை உணர்த்தி அதன் மூலம் வேகமாகத் தாம் பேச விரும்பும் செய்திகளையும், தமது சிந்தனையின் தடங்களையும் உலகுக்கு வழங்கிக் கொண்டே இருப்பவர். இருக்கும் இடத்தை விட்டு நகர இயலாத தனது உடலின் செயல்பாடற்ற தன்மை, ஓயாது அவர் உள்ளத்தில் எழும் தேடலின் சீற்றமிக்க அலைகளின் முன்னே பொருளற்று நிற்கிறது.

 பஞ்சாபி எழுத்தாளரான டாக்டர் டார்செம் பார்வையற்றவர். அவரது சாதனை வரலாற்றை புதிய ஆசிரியன் வாசகர்கள் அறிவர். (ஏப்ரல் 2011 உலக புத்தக தின சிறப்புக் கட்டுரையைக் காண்க). சோவியத் இலக்கியங்களில் முக்கியமானதான வீரம் விளைந்தது என்ற நாவலின் வாசிப்பிலிருந்து அவருள் சுடர் விட்ட நம்பிக்கை வெளிச்சம் அவரை இந்த உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.

சென்னை பெருநகரத் தொழிற்சங்க வரலாறு என்ற அரிய ஆவணத்தை நமக்கு வழங்கிச் சென்றிருக்கும் திலீப் வீரராகவன் பார்வையற்றவர் என்பது எத்தனை சிலிர்க்க வைக்கும் செய்தி. அவரைப் போன்றோர் பலரை உருவாக்கியது, சென்னையில்  கார்ல் மார்க்ஸ் நூலகம் நடத்தி வரும் எளிமையான மனிதர் எஸ் எஸ் கண்ணன் அவர்களாவார். அவரும், அவரது சகோதரி மறைந்த பத்மாவதி அவர்களும் பார்வையற்றோரது கல்விக்காக மாபெரும் தொண்டாற்றியவர்கள்.

சின்னச் சின்ன வலிகள், வேதனைகள், இடர்ப்பாடுகள் நமது வாழ்வில் குறுக்கிடும் போது நடுத்தர வர்க்க மனிதர்கள் எளிதில் உடைந்து போகிறோம். நமது செயல்பாடுகளை ஒத்திப் போடுகிறோம். இயலாது என்று ஒதுங்கிவிடுகிறோம். சாத்தியமா என்று கலங்கி நிற்கிறோம். வாய்ப்பு இல்லை என்று மறுத்துக் கொள்கிறோம். அவ்வளவு தான் என்று சமாதானம் அடைகிறோம்.

ஆனால், மிகப் பெரும் உடலியல் பிரச்சனைகளை மீறி பலர் செய்யும் சாதனைகள் பெருத்த நம்பிக்கை ஊட்டுபவை. சிங்கராயன் அவர்கள் தொகுத்திருக்கும் உங்களைப் போல் (பாரதி புத்தகாலயம்) என்னும் புத்தகம், உலகளாவிய அளவில் உடல் ஊனம் தடையல்ல என்று நிரூபித்திருக்கும் சாதனையாளர்களின் கதைகளை இரத்தின சுருக்கமாக அறிமுகப்படுத்தி வியப்பூட்டுகிறது.  சேலம் நகரில் சகோதரிகள் இருவர் – வானவன் மாதேவி, இயலிசை வல்லபி, தசை சிதைவு என்னும் தீராத நோய்க்கு ஆட்பட்டிருப்பவர்கள். அசையக் கூட இயலாத அளவு தீவிரமான நோய். பெற்றோரின் அரவணைப்பில் நாற்காலியிலேயே அமர்ந்திருக்கும் அவர்கள், தம்மைப் போன்ற பாதிப்புற்றோருக்கு வாழும் வரை மன அமைதியோடு வாழும் பயிற்சிகளை அளித்து வருபவர்கள். மகத்தான வாசகர்கள். திறமையாக எழுதவும் கூடியவர்கள். நம்பிக்கை பூ பூத்திருக்கும் அவர்களது கண்களின் மின்னல் உலகின் எந்த சாதனையாளரது பெருமிதத்திற்கும் குறைவற்றது.

அமர்ந்த நிலையில், உலகின் பெரிய நாட்டு இளவரசரைப் பார்த்து கள்ளம் கபடமற்ற புன்னகையைச் செய்யும் மொகலம்மாவை, சார்லஸ் இரு கரம் குவித்து வணங்குவதில் என்ன வியப்பு இருக்க முடியும் ? அது நம்பிக்கை உலகை நோக்கிய வணக்கம். இயலாமையைப் புறந்தள்ளி நிமிரும் வெற்றிக் களிப்புக்கு அங்கீகாரம்.

நன்றி புதிய ஆசிரியன்

Related Posts