அரசியல் சமூகம்

திராவிடர் – ஆரியர் முரண்பாடு இன்றும் முடியவில்லை … பேராசிரியர் அருணன்

“தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இருநூற்றாண்டு வரலாறு. மூடநம்பிக்கைகளில் இருந்து விடுதலை, தமிழரின் தத்துவ மரபு, பெரியாரின் பெண்ணியம், காலந்தோரும் பிராமணியம் 8 தொகுதிகள் உள்ளிட்டு ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள தோழர் அருணனை சந்தித்தோம். அவர் பெரியாரின் 135 வது பிறந்த தினத்தை முன்னிட்டு  மாற்று இணையத்துக்கு அளித்த சிறப்பு நேர்காணல் …

arunan_left

பேராசிரியர் அருணன்

பெரியார் பிறந்து 135 ஆண்டுகள் கடந்துவிட்டன… வரலாற்றின் தனி நபரின் பாத்திரம் என்ற வகையில் – பெரியாரை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?

 

ஏகாதிபத்திய எதிர்ப்போடு, சமூக நீதிக்காக போராட்டம் காலத்தின் தேவையாக இருந்தது. இதனை அன்றைய காங்கிரஸ் புரிந்துகொள்ளவில்லை. ஒரேமுழக்கம் சுதந்திரம்தான் என்கிற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகு யார் எங்களை ஆள்வார்கள்? என்ற கேள்வியை பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்வைத்தார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அடித்தட்டு மக்களை தயார்ப்படுத்தவே சமூக நீதிப் போராட்டமும் தேவைப்பட்டது.

சில பிற்படுத்தப்பட்ட சாதியினர் வெள்ளைக்காரன் அன்னியன் என்றாலும் அவன் உயர் சாதி அல்ல என்றும் கூட நினைத்தனர்.
“வெள்ளைக்காரன் இருக்கும்போதே சாதிப் பிரச்சனையெல்லாம் தீர்த்துக்கொள்ள வேண்டும்”

என்று சிலர் வெளிப்படையாகவும் பேசினர்.

இப்படிப்பட்ட தருணத்தில் பெரியார், சமூக நீதிப் போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் இணைக்க காங்கிரசின் உள்ளாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். 1922 முதல் 1925 வரை அவரது போராட்டம் தொடர்ந்தது. வகுப்புவாரி ஆணை வேண்டும் என்றதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டிருந்தால். பெரியார் காங்கிரசிலேயே தொடர்ந்திருக்க முடியும்.

காங்கிரசிலிருந்து வெளியேறியதும் பெரியார் சமூக நீதிப் போராட்டங்களில் அதிக கவனம் செலுத்தினார். காலத்தின் தேவையை எதிரொலித்ததில்தான் பெரியார் தனித்து தெரிகிறார்.

சென்னை மாகாணத்தில் மட்டும், சமூக நீதிக்கான தேவை அந்த அளவு இருந்ததா?

தமிழர்கள் ஒரு வகையில் பெருமைப்படணும். சமூக நீதிக் கோரிக்கைகளை சென்னை மாகாணத்தில் பிராமணர் அல்லாத உயர்சாதியினர்தான் எழுப்பினார்கள். அந்த கோரிக்கையில் முற்போக்குத் தன்மை இருந்தது. பிராமணர்கள் தங்கள் எண்ணிக்கைக்கும் கூடுதலாக ஆதிக்கம் செலுத்தும்போது. அதிலும் குறிப்பாக கல்வியிலும், உயர் பதவிகளிலும்  80 சதவீதம் பிராமணர்களை எதிர்த்த கோரிக்கை (அவற்றின் உள்ளடக்கமாக சாதி உணர்வே இருந்தபோதும்) முற்போக்கானதுதான். (நேரம் கருதி இதை நாம் பின்னர் விரிவாகப் பேசலாம்).

மாகாராஷ்ராவில் கூட ஜோதிபாபூலே பேசினார். இருப்பினும், அன்றைய சூழலில் 20 ஆம் நூற்றாண்டில் 1925 இல் அவர் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்திற்கு நிகராக மற்றொரு இயக்கம், இந்தியாவில் இல்லை.

சுயமரியாதை முழக்கங்களுக்கான தேவை இன்றைக்கும் இருக்கிறதல்லவா?

நிலைமைகளில் சில முன்னேற்றங்கள் உள்ளன. 1930 களின் நிலைமைதான் இப்போதும் இருக்கிறதெனக் கருதக்கூடாது, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சில உரிமைகள் கிடைத்துள்ளன. கல்வி, மாநில அரசு வேலைவாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டோர் உள்ளனர். அரசியலிலும் பிற்படுத்தப்பட்டவர்கள் முன்னுக்கு வந்துள்ளனர். ஆனால், அது ஒவ்வொரு சாதிக்கும் ஒரு கட்சி என்கிற அளவுக்குப் போனது.

அடிப்படையில் சுயமரியாதை என்பது அற்புதமான வாக்கியம். பெரியாருக்கு முன்பே ‘அயோத்திதாசர்’ இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். நாம் எல்லோரும் மனிதர்கள்தான். உன்னைப் போலவே என்னையும் நடத்த வேண்டும் என எதிர்பார்த்தால் தப்பா?

ஆணாதிக்கம், பெண்ணுடைய சுய மரியாதையை பாதிக்கிறது – சாதி அடிப்படையிலும் மிகப்பெரிய அவமரியாதைக்கு ஆட்படுத்தப்படுகிறது.

இப்போதும் பலபேர் பேசுவது என்னவென்றால் – தீண்டாமை ஒழிந்துவிட்டது. எல்லாம் நல்லபடியாக இருக்கிறார்கள் என்கிறார்கள். நாங்கள் விளம்பரம் குறித்து ஆய்வு செய்தோம். “தொலைக்காட்சியில், இணையத்தில் வெளியாகும் திருமண விளம்பரங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் – சொந்த சாதிக்குள் மணமகள்/மணமகன் கேட்கின்றனர்.” உட்சாதிக்குள் கூட தனியாக இப்படியான பத்திரிக்கைகள் வந்துவிட்டன. அகமண முறைதான் சாதியும் தீண்டாமையும் நீடிப்பதற்கு காரணம். 21 ஆம் நூற்றாண்டிலும் சாதி இருப்பது அவமரியாதைதான்.

பெண்கள் நிலையும், முன்புபோல இல்லை. வட மாநிலங்களில், குறிப்பாக குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்கள் இதில் பின் தங்கியுள்ளதை பலரும் பேசுவதில்லை. அவர்களைவிட கேரளமும் தமிழ்நாடும் பெண் கல்வியில் முன்னணியில் உள்ளன. நாடு முழுவதும் பெண்களுக்கான சொத்துரிமை சட்ட உரிமையாக இருந்தாலும், அதனை முதலில் அமலாக்கியது தமிழகத்தில்தான்.

அதே நேரத்தில், அண்மையில் வந்துள்ள 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள்தான் உள்ளனர் என்பதையும் காட்டுகிறது. இது இயற்கைக்கே விரோதம், ஏன் பெண் குழதைகள் கொல்லப்படுகின்றன? கருவிலேயே பெண்  குழந்தைகள் கொல்லப்படுகின்றனர். சரியான உணவு கொடுக்காமல், ஊட்டச்சத்து கிடைக்காமல் உயிரோடு கொல்லப்படுகிறார்கள். மக்கள் மத்தயில் பெண்களுக்கு செய்யும் கல்விச் செலவு, இதர செலவுகளெல்லாம் விரயம் என்ற மனநிலை உள்ளது. கிராமப்புறத்தில் அதிகமாகவும்,  நகர்ப்புறங்களிலும் கூட இந்த மனநிலை உள்ளது. அதுபோலவே, பொது வாழ்க்கையில் பெண்களுக்கான இடம் எங்கே உள்ளது? “வரும் ஆனா வராது …” என்பதற்கான உண்மையான உதாரணம், பெண்களுக்கான இட ஒதுக்கீடுதான். எல்லோரும் இடஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். ஆனாலும் அது இதுவரை கிட்டவில்லை.

பெண் விடுதலையும், பெரியாரும் …

பாலியல் வல்லுறவு என்ற கொடுமை இன்றைக்கும் தொடர்கிறது. காமுகர்கள், தண்டிக்கப்பட வேண்டும் என்பது ஒருபக்கம் இருந்தாலும். பெண்ணை கவர்ச்சிப் பொருளாகக் காட்டும் நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். நடிகைகளெல்லாம் காபரே டேன்சர்கள் போல பயன்படுத்தப்படுகிறார்கள். சினிமா அதனைச் செய்கிறது, சின்னத்திரை அதனை அப்படியே பிரதியெடுக்கிறது. வீட்டில் அனைவரும் அமர்ந்து, இக்காட்சிகளைப் பார்க்கிறோம்.

இதை எதிர்த்தே மிகப்பெரிய இயக்கங்கள் நடக்க வேண்டும். நாசூக்காக பெண்ணை இரண்டாம்பட்சமாக முன்நிறுத்தும் வசனங்களை தணிக்கை செய்ய வேண்டும். இந்த எதிர்ப்பை மாதர் சங்கங்கள் செய்கின்றபோதும். ஆண்களும் இணைகிறபோதுதான் பெண்ணுரிமைகள் நடைமுறை சாத்தியமாகும். அப்படிப் பார்க்கும்போது 1930 களிலேயே, பெண்ணுரிமைக்காக பேசிய ஆண்மகன் பெரியார் என்பது என் கணிப்பு.

பெரியாரின் பெண்ணியம் என்ற எனது புத்தகத்தில் இதனைக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது, ஒரிசா மாநில அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டிருந்தது. “பெண்கள் அரசாங்க உத்தியோகத்திற்கு விண்ணப்பிக்கலாம், போலீஸ் உத்தியோகம் தவிர” என இருந்த அந்த விளம்பரத்தைக் குறித்து பெரியார் … போலீசை பார்த்தால் குற்றவாளி அச்சப்படுவது அவன் ஆண் என்பதால் அல்ல, துப்பாக்கி அவனிடம் இருப்பதால்தான். துப்பாக்கியை பெண் கிட்ட குடு … என்று எழுதினார். கொண்டை போட்டுக்கொண்டிருந்த ஆண்கள், வசதியாக கிராப்பு வெட்டிக்கொண்டனர். பெண்களும் கிராப் வெட்டிக்கொள்ள வேண்டும் என்றும், குப்பாயம் போடுங்க என்றும் – தாலி சடங்குகளற்ற திருமணம் என புதுமையான காரியங்களை அன்றே பெரியார் பேசினார். பெரியாரின் பெண்ணியம் நிலவுபோன்று வளர்ந்ததல்ல … அது முழுமையாக உடனே தோன்றிய சூரியன் என நான் அடிக்கடி குறிப்பிடுவேன்.

திராவிடர் – ஆரியர் என்று இரண்டு இனங்கள் இல்லை என மரபணு ஆய்வுகள் தெரிவிக்கின்றன – இந்த சூழலில் ‘திராவிட’ அரசியல் என்பதை எப்படிப் பார்க்கலாம்??

பாமக, சீமான் குழுவினர் திராவிட எதிர்ப்பு என்பதை முன்வைக்கும் விதம் வேறு. மலையாளி ஆந்திர, கர்நாட எதிர்ப்புக்கு இடையூறாக இருப்பதால் திராவிடத்தை எதிர்க்கின்றனர்.

பிராமணர் ஆதிக்கம் இருந்தபோது – பெரியார் பிராமணர் அல்லாதார் இயக்கத்தை தொடங்குகிறார். அல்லாதார் என்பது எதிர்மறைச் சொல்லாக இருப்பதால் – ‘திராவிடர்’ என்ற சொல்லை பிராமணர் அல்லாத பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பதாகவே பயன்படுத்தினார். பின்னர் தாழ்த்தப்பட்டோரைக் குறிக்க ‘ஆதிதிராவிடர்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பிராமணிய தர்ம சாஸ்திரத்தில், ஆரியர் – திராவிடர் என்பது பிராமணர் – பிராமணர் அல்லாதாரைக் குறிக்கிறது.

சென்னை மாகாணத்தை திராவிட நாடு என்று சொல்லி பிரித்துக் கொடுக்க கேட்டபோதுதான், குழப்பம் எழுந்தது. பிராமணர் அல்லாதோரே திராவிடர் எனும்போது முழு இந்தியாவும் திராவிடர் தானே?

ஒரு பாஜக பிரமுகர் என்னிடம் ‘ஆரிய – திராவிட சண்டையெல்லாம் முடிந்துவிட்டது’ என்று சொன்னார். அப்படியென்றால் ‘மண்டல் கமிசனை எதிர்த்து அத்வானி ஏன் ரத யாத்திரை நடத்தினார்?’ என்று கேட்டேன். அவரிடம் பதில் இல்லை. வார்த்தை அல்ல பிரச்சனை வர்ணாசிரமம்தான் பிரச்சனை.

திராவிட இயக்கங்களுக்கும் – மார்க்சிய இயக்கங்களுக்கும் இடையே ஒரு இடைவெளி தென்படுகிறதே?

பெரியாரிய சிந்தனைகளில் – சாதி எதிர்ப்பு, பெண்ணியம் ஆகியவற்றோடு மார்க்சிஸ்டுகளுக்கு உடன்பாடு உண்டு. ஜனநாயக மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற இயக்கங்களில் மார்க்சிஸ்டுகள் முன் நி ன்று செயல்படுகின்றனர். இதுபோன்ற விசயங்களில் பெரியார் உடன்பட்டு நிற்கிறார். திராவிடர் கழகத்தின் இதுபோன்ற முழக்கத்தோடு உடன்பட்டு நிற்கிறோம்.

ஆனால், இந்தக் கேடுகள் எல்லாவற்றுக்கும் பார்ப்பனீயம் என்ற சமுதாயக் கட்டமைப்பு ‘சாதியமும்’ ‘ஆணாதிக்கமும்’ மையமாகக் கொண்டது. பிராமணர்கள் மட்டுமல்ல ஷத்ரியர்கள், வைஷியர்கள் ஆகியோர் தான் ஆளும் வர்க்கமாக இருந்தனர்.

உயர் சாதியினர் உயர் வர்க்கத்தினர் சாதீயம் நீடிக்க வேண்டுமென்று கருதியும், பேசியும் வந்தனர். இன்றைய நிலைமைகள் பல சாதிகளில் இருந்து ஆணாதிக்க, சாதீயக் குரல்கள் வெளிப்படுகின்றன. ராமதாசே பளிச்சென்று வந்துவிட்டார் அல்லவா? காடுவெட்டி குரு ‘ சாதி மாறி பெண் எடுத்தால், காலை வெட்டுவேன்’ என பொது மேடையில் பேசுகிறார். எனவே, சமூக நீதிக்கு எதிரானது குறிப்பிட்ட சாதியல்ல, சமூகக் கட்டமைப்பு என்று புரிந்துகொள்ள வேண்டும். பார்ப்பனீய எதிர்ப்பு சாதி எதிர்ப்பாக சுருங்கும்போது திராவிட இயக்கங்களில் இருந்து, மார்க்சியவாதிகள் வேறுபடுகிறோம்.

திமுக, அதிமுக – பெரியாரிய கொள்கைகளுக்கு எந்த அளவு உடன்பட்டு வருகின்றனவா? திமுகவில் கலைஞர் அவ்வப்போது பேசுவார். இரண்டாம்கட்ட தலைவர்களே பெரியாரைப் பேசுவதில்லை.

பிராமணிய எதிர்ப்பும் – பிராமணியமும் முதலாளித்துவமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால், திராவிட இயக்கங்கள் முதலாளித்துவ எதிர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உலகமயம் எதிர்ப்பில் அவர்களோடு வேறுபடுகிறோம்.

இந்திய அளவில் பிராமணியத்தை உயர்த்திப்பிடிக்கும் பாஜகவுடன் திமுக கூட்டு சேர்ந்தது. ஆட்சியிலும் தொடர்ந்தனர். அதிமுகவின் பாரம்பரியமும் அப்படித்தான். பார்ப்பனீய எதிர்ப்பு என்பது அதன் அரசியல் வடிவமாகிய பாஜக எதிர்ப்பாகவும் தொடர வேண்டும். ஆர்.எஸ்.எஸ். இன் அரசியல் பிரிவுதான் பாஜக என்ற மார்க்சிஸ்டுகளின் நிலைப்பாட்டோடு திராவிட இயக்கங்கள் கூர்மையாக வேறுபடுகின்றனர்.

முதலாளித்துவத்திற்கும், பார்ப்பனீயத்துக்கும் மாற்றான கொள்கையுள்ள   அரசியல் அணி – என்ற பார்வையுடன் செயல்பட வேண்டும்.
(பேட்டி: இரா.சிந்தன்)

Related Posts