அரசியல்

வைரஸ் விவகாரங்களை மறைத்ததா சீனா?

‘சயின்ஸ்’ எனும் சர்வதேச இதழுக்கு டாக்டர் ஜார்ஜ் காவோ (சீன நோய் தடுப்பு மையத்தின் முதன்மை விஞ்ஞானி) அளித்த பேட்டி.
டாக்டர் ஜார்ஜ் காவோ, அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பகுதி ஊழியர்களை கொண்டுள்ள சீன நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தலைமை மையத்தின் தலைவர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள் இதில் பணியாற்றுகிறார்கள். 2020 ஜனவரியில் சீனாவில் கோவிட் 19 பரவத் துவங்கிய காலத்தில் முதலில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி அவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவின் தலைவர் இவர். பிரபல மருத்துவ பத்திரிகையான தி லான்செட் மற்றும் இங்கிலாந்து மருத்துவ ஏட்டிலும் கோவிட் 19 தொடர்பாக சமீபத்தில் 2 விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். கோவிட் 19 தொடர்பாக சீன ஆராய்ச்சியாளர்களுக்கும், சர்வதேச விஞ்ஞானிகளுக்கும் இவர் வழிகாட்டி வருகிறார். கால்நடை மருத்துவராக பணியை துவங்கிய இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், பின்னர் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் உயிரி வேதியியல், நோய் எதிர்ப்பியல், நுண் கிருமியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்த ஆராய்ச்சியாளராக மிளிர்ந்தார். இவருடன் சயின்ஸ் ஏடு, நடத்திய உரையாடல் இது. நேர்காணல்: ஜான் கோகன்.

►கோவிட் 19 வைரஸை தனிமைப்படுத்தியதில் சீனாவின் அணுகுமுறையிலிருந்து மற்ற நாடுகள் எதனை கற்றுக் கொள்ள முடியும்?


எந்த தொற்று நோயை கட்டுப்படுத்துவதிலும், குறிப்பாக நுரையீரல் மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான தொற்றுகளுக்கு சமூக இடைவெளி என்பது மிக மிக அவசியம். நாங்கள் கீழ்கண்ட ஐந்து நடைமுறைகளை அமலாக்கினோம்:

  1. மருந்துகள் அற்ற அணுகுமுறையை உருவாக்கினோம்; ஏனெனில் இந்த நோய்க்கு மருந்துகளோ அல்லது தடுப்பூசிகளோ இல்லை.
  2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விசேட மருத்துவ சிகிச்சையில் வைப்பது அவசியம்.
  3. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துவது. இவ்வாறு தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிக்க நாங்கள் மிக அதிகமான முயற்சிகளையும் நேரத்தையும் செலவிட்டோம்.
  4. பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுத்தோம்.
  5. மக்கள் நடமாட்டத்தை வெகுவாக கட்டுப்படுத்தினோம். இதனையே லாக் டவுன் என அழைக்கின்றனர்.

►லாக் டவுன் என்பது சீனாவில் வுஹான் பகுதியில் ஜனவரி 23ம் தேதி தொடங்கியது. பின்னர் ஹுபெய் மாநிலத்தின் ஏனைய பகுதிகளுக்கு விரிவாக்கப்பட்டது. சீனாவின் மற்ற பகுதிகளில் குறைவான நடவடிக்கைகள்தான் அமல்படுத்தப்பட்டன. எப்படி இது ஒருங்கிணைக்கப்பட்டது?

அந்தந்த பகுதிகளில் அல்லது குடியிருப்புகளில் இதனை கண்காணிக்கும் ஊழியர்களின் முக்கியத்துவம் என்ன?
இதற்கு மக்களின் ஒப்புதலும் சரியான புரிதலும் தேவை. அத்தகைய புரிதலை உருவாக்கும் வல்லமை படைத்த வலுவான தலைமை தேவை. இந்த தலைமை என்பது தேசிய அளவில் மட்டுமல்ல; உள்ளூர் மட்டத்திலும் இருப்பது அவசியம். பொது மக்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் ஊழியர்கள் தேவை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் யார்? என்பதை அறியும் இடத்தில் ஊழியர்கள் இருக்க வேண்டும். சமூகத்தில் இந்த மேற்பார்வை ஊழியர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். அவர்களின் பணியும் திறமையும்தான் இந்த ‘நோய் கண்டறியும்’ சங்கிலியில் மிக முக்கியமான கண்ணி.

► மற்ற தேசங்கள் என்ன தவறுகளை செய்கின்றனர்?


அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடக்கும் மிகப்பெரிய தவறு, என் கருத்தில் என்னெவென்றால், மக்கள் முக கவசத்தை அணிவதில்லை என்பதுதான்! இந்த வைரஸ் நீர் திவலைகள் மூலமும் நெருங்கிய தொடர்பு மூலமும்தான் பரவுகிறது. நீங்கள் பேசும்பொழுது கூட உங்கள் வாயிலிருந்து நீர் திவலைகள் வெளியில் வரும். எனவே முகக்கவசம் என்பது மிக மிக அவசியம். வைரஸை கொண்டுள்ள பெரும்பான்மையானவர்கள் அந்த நோயின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை. எனவே அவர்களை அறியாமலே வைரஸை மற்றவர்களுக்கு பரப்புகின்றனர். இதனை தடுக்க வேண்டும் எனில் முகக்கவசம் அணிவது என்பதுதான் ஒரே வழி.

► மற்ற தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

உதாரணத்திற்கு வணிக வளாகங்கள், பொது போக்குவரத்து,மற்றும் அலுவலகங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சீனா மிகப்பெரிய அளவிற்கு தெர்மா மீட்டர்களை பயன்படுத்தியுள்ளது.
ஆம்! சீனாவில் நீங்கள் எங்கு சென்றாலும் அங்கு தெர்மா மீட்டர்கள் இருக்கும். மக்களிம் உடல் வெப்ப நிலையை அடிக்கடி எடுக்கப்படுவதை நீங்கள் உத்தரவாதம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் அதிக காய்ச்சல் உள்ளவர்களை நீங்கள் கண்டறிந்து தனிமைப்படுத்த முடியும். உண்மையிலேயே மிக முக்கியமான கேள்வி என்னவெனில் இந்த வைரஸ் இயற்கை சூழலில் எவ்வளவு காலத்திற்கு உயிரோடு இருக்கிறது என்பதை நிலைநாட்டுவது அவசியம் ஆகும். இந்த வைரஸ் வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்காது என சிலர் எண்ணுகின்றனர். இந்த வைரஸ் தன்னைத் தானே பாதுகாப்பாக கேடயத்தை உருவாக்கி கொண்டுள்ள வைரஸ் ஆகும். அமெரிக்க ஆய்வுகள் மற்றும் சீனாவின் ஆய்வுகளை பார்க்கும்பொழுது இந்த வைரஸ் புறச்சூழலில் தன்னை அழிக்கும் சக்திகளிலிருந்து காத்துகொள்கிறது என தெரிகிறது. பல இயற்கை சூழல்களில் உயிர்ப்புடன் இருப்பது போல தெரிகிறது. எனவே இது குறித்து அறிவியல் அடிப்படையிலான பதில்கள் நமக்கு தேவைப்படுகிறது.

►வுஹான் பகுதியில் மருத்துவ பரிசோதனையின் பொழுது மிக குறைவான அளவிற்கு நோய் இருந்தவர்களும் கூட மிகப்பெரிய மருத்துவ வசதிகள் கொண்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குடும்பத்தினர் கூட பார்க்க அனும்திக்கப்படவில்லை. மற்ற தேசங்களும் இதனை கடைபிடிக்க வேண்டுமா?


தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். எந்த தேசமாக இருந்தாலும் அதனை செய்தே ஆக வேண்டும். எங்கே தோன்றியதோ அதன் மூலாதாரத்தை அகற்றுவதன் மூலம்தான் கோவிட் 19 வைரஸை நீங்கள் கட்டுப்படுத்தமுடியும். அதனால்தான் நாங்கள் மிகப்பெரிய விளையாட்டு மைதானங்களை விசேட மருத்துவமனைகளாக மாற்றினோம்.

►எப்பொழுது இந்த நோய் தொடங்கியது என்பது குறித்து பல கேள்விகள் உள்ளன. முதல் நோயாளி டிசம்பர் முதல் நாளே கண்டுபிடிக்கப்பட்டார் என சில சீன ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சவுத் சைனா மார்னிங்க் போஸ்ட் எனும் ஹாங்காங் இதழ்( சீனாவை விமர்சிக்கும் பத்திரிக்கை இது) நவம்பர் மாதமே நோய் உருவாகிவிட்டது என கூறுகிறது. உங்களது கருத்து என்ன?


நவம்பர் மாதமே நோய்களை உருவாக்கிய குவி மையங்கள் இருந்தன என கூறுவதற்கு எந்த உறுதியான தகவல் அல்லது தரவுகள் இல்லை. நாங்கள் இதன் தோற்றம் குறித்த பல விவரங்களை புரிந்து கொள்ள முயன்று கொண்டு இருக்கிறோம்.

►வுஹான் மருத்துவ அதிகாரிகள் வைரஸின் மையம் ஒரு கடல் உணவு விற்கும் சந்தை என மதிப்பிட்டு அந்த சந்தையை ஜனவரி 1ம் தேதி மூடினர். அதன் ஊகம் என்னவெனில் அந்த சந்தையில் விற்கப்பட்ட ஒரு விலங்கின் மாமிசத்திலிருந்து மனிதனுக்கு இந்த வைரஸ் பரவியிருக்கும் என்பது! ஆனால் உங்களது ஆய்வு அறிக்கையில் நோய் தொற்றிய முதல் ஐந்து பேரில் நான்கு பேருக்கு அந்த கடல் மாமிச உணவு சந்தையுடன் தொடர்பு இல்லை என கூறினீர்கள். கடல் உணவு விற்பனையகம் தோற்றுவாயா அல்லது வேறு இடத்தில் தோன்றி அந்த விற்பனையகத்தில் வைரஸ் பெருகியதா?
இது ஒரு நல்ல கேள்வி. தொடக்கத்திலிருந்தே ஒவ்வொருவரும் அந்த விற்பனையகம்தான் வைரஸின் பிறப்பிடம் என எண்ணுகின்றனர். என்னைப் பொறுத்த வரை அந்த இடம் வைரசின் பிறப்பிடமாக இருக்கலாம். அல்லது அந்த இடத்தில் வைரஸ் பெருகியிருக்கலாம். இரண்டு சாத்தியக் கூறுகளும் உள்ளன.


வால் ஸ்ட்ரீட் இதழின் ஊகம் மிக நன்று எனக் கூறலாமா? அந்த கட்டுரை வெளியிடப்பட்டதற்கும் வைரஸின் விவரங்கள் உலக சுகாதார அமைப்புக்கு சீனாவால் அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டதற்கும் இடையே இருந்த கால அளவு சில மணி நேரங்கள்தான்! அது ஒரு நாளுக்கு மிகாது என நான் நினைக்கிறேன்.

►இந்த வைரஸின் உட்கூறுகள் குறித்த விவரங்களை மற்றவர்களுடன் உடனடியாக பகிர்ந்து கொள்ளவில்லை எனும் விமர்சனம் சீனா மீது உள்ளது. ஜனவரி 8ம் தேதி இந்த வைரஸின் விவரங்களை வால்ஸ்ட்ரீட் ஜர்னல்தான் வெளியிட்டது. ஏன் சீன அரசாங்கம் அல்லது விஞ்ஞானிகள் வெளியிடவில்லை?

►சீன ஆய்வாளர்கள் ஜனவரி 5ம் தேதியே வைரஸ் குறித்த விவரங்களை சமர்ப்பித்துவிட்டனர். உலக சுகாதார அமைப்புக்கு 8ம் தேதி தெரிவிக்கப்படுகிறது. இந்த 3 நாட்கள் இந்த தொற்று நோய் பரவலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவது இல்லை. எனினும் ஏன் இந்த 3 நாள் தாமதம்?
இது பெரிய தாமதம் என நான் நினைக்கவில்லை. இந்த தகவல்களை உடனடியாக மற்ற அறிவியல் நிபுணர்களுக்கு பகிரப்பட்டது. அவர்களது கருத்துகளையும் அறிய வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் இது பொது மக்களின் உடல் ஆரோக்கியம் குறித்த ஒன்று. எனவே எடுத்தேன் கவிழ்த்தேன் என அவசர கதியில் செயல்பட இயலாது. மக்களை திடீரென பீதியில் ஆழ்த்த முடியாது. மேலும் இது குறித்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு பின்னர் அதனை பகிரங்கமாக அறிவிக்க வேண்டியிருந்தது.
எந்த ஒரு தேசத்திலும் அந்த கட்டத்தில் இது உலகம் முழுதும் பெரும் தொற்றை உருவாக்கும் வைரஸ் என மதிப்பிட்டிருக்க இயலாது. உலகம் கண்ட குளிர் காய்ச்சல் அற்ற பெரும் தொற்று உருவாக்கும் முதல் வைரஸ் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

►ஜனவரி 20ம் தேதி வரை இது மனிதர்களுக்கு இடையே பரவும் தன்மை கொண்டது என சீன விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. இதனை உணர்வதில் அப்படி என்ன முட்டுக்கட்டைகள் இருந்தன?


மிக விவரமான உறுதியான நோய் பரவல் தரவுகள் உடனடியாக கிடைக்கவில்லை. தொடக்கத்தில் இதுவும் பல வைரஸ்கள் போல ஒரு வழக்கமான வைரஸ்தான் என அனைவரும் நினைத்தனர். நாங்கள் ஒரு கொடூரமான, கணிக்க இயலாத, மறைந்திருந்து தாக்கும் வல்லமை கொண்ட ஒரு வைரசுக்கு எதிராக போராடிக் கொண்டு இருந்தோம். இதுதான் இத்தாலி அல்லது அமெரிக்கா அல்லது ஐரோப்பாவிலும் நிலைமை.

►சீனாவில் இந்த தொற்று அனேகமாக குறைந்துவிட்டது. தற்பொழுது உருவாகும் புதிய தொற்றுகள் என்பது வெளிநாடுகளிலிருந்து வரும் மக்களிடம்தான் என்பது சரியா?
ஆம்! இந்த தருணத்தில் உள்ளூர் மக்களிடம் தொற்று பரவல் இல்லை. இப்பொழுது தொற்று என்பது வெளியிலிருந்து வரும் பயணிகளிடமிருந்துதான்! தொற்று உள்ள பலர் சீனாவிற்குள் வந்து கொண்டுள்ளனர்.

►சீனா வழக்கமான நிலைக்கு திரும்பும் பொழுது என்ன நிகழும்? மீண்டும் வைரஸ் தாக்க இயலாத அளவிற்கு போதுமான மக்களிடம் இந்த வைரஸ் தொற்று உருவாகி குணப்படுத்தப்பட்டுள்ளதா? சமூக கூட்டு எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது என நினைக்கிரீர்களா?


இன்னமும் சமூக கூட்டு எதிர்ப்பு சக்தி உருவாகிவிடவில்லை. பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடந்துள்ளன. வைரஸ் தாக்கியிருந்தாலும் அதன் அறிகுறிகள் வெளியே தெரியாமல் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்தும் பல சோதனைகள் நடந்துள்ளன. அவற்றின் முடிவுகளுக்காக காத்து கொண்டு உள்ளோம். அந்த முடிவுகள்தான் எத்தனை பேருக்கு உண்மையிலேயே இந்த வைரஸ் தாக்குதல் இருந்தது என்பதை சொல்ல முடியும்.

►இப்பொழுது அணுகுமுறை என்ன? இந்த கால இடைவெளியை புதிய மருந்துகள் கண்டுபிடிக்க பயன்படுத்திகொள்ளப்படுமா?


ஆம்! எங்களது விஞ்ஞானிகள் புதிய மருந்துகள் மற்றும் புதிய தடுப்பூசிகள் இரண்டையுமே கண்டுபிடிப்பதில் முனைப்பாக உள்ளனர்.

►பல விஞ்ஞானிகள் ‘ரெம்டெசிவிர்’ எனும் மருந்து மிகவும் பயனுள்ளதாக தெரிவிக்கின்றனர். சீனாவில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின் விவரங்கள் எப்பொழுது கிடைக்கும்?


ஏப்ரல் மாதத்தில்!

►சீன விஞ்ஞானிகள் பிராணிகளிடம் பரிசோதனைகளை செய்துள்ளனரா? அதன் அடிப்படையில் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்டும் வாய்ப்பு உள்ளதா?


தற்பொழுது குரங்குகள் மற்றும் சில விசேட எலிகளிடம் பரிசோதித்துக் கொண்டுள்ளோம். எலிகளிடம் செய்யும் பரிசோதனைகள் சீனாவில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. குரங்குகளிடம் செய்யப்பட்ட பரிசோதனைகள் குறித்து சில ஆய்வுக் கட்டுரைகள் விரைவில் வெளியிடப்படும். குரங்குகளிடம்செய்யப்பட்ட சோதனைகள் பலனுள்ளதாக இருக்கும் என்பதை நான் கூறமுடியும்.

►இந்த வைரசை “சீன வைரஸ்” என டொனால்டு டிரம்ப் குறிப்பிடுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


அப்படி குறிப்பிடுவது நல்லது அல்ல. இந்த வைரஸ் பூமிக்கு சொந்தமானது. எல்லா வைரஸ்களும் பூமிக்குத்தான் சொந்தமானவை. கோவிட் 19 எனும் இந்த வைரஸ் ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் விரோதாமானது. எந்த ஒரு தனி மனிதனுக்கும் அல்லது தேசத்துக்கு மட்டுமே எதிரி அல்ல.

தமிழில்: அ.அன்வர் உசேன்

Related Posts