உலக சினிமா சினிமா

ஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பேசும் ‘தீபன்’ …

சமீபத்தில் நடந்துமுடிந்த 2015 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்படவிழாவில், சிறந்த படத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான “தங்கப்பனை” விருதை வென்றிருக்கிறது “தீபன்” என்கிற பிரெஞ்சுத் திரைப்படம். பிரான்சின் புகழ்பெற்ற இயக்குனரான ஜாக் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பிரெஞ்சுத் திரைப்படமாக இருப்பினும், 90% த்திற்கும் மேலான உரையாடல்கள் தமிழிலேயே இருப்பதால், தமிழ்ப்படம் என்றே சொல்லத்தோன்றுகிறது.
Dheepan poster.jpg

தீபன் திரைப்படத்தின் மையக்கதை மிக எளிமையானதுதான். சிலப்பல காரணங்களுக்காக தங்களது சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து புதிதாக வாழ்க்கையைத்தொடங்க புதிய ஊருக்கு செல்கிற குடும்பம், அங்கே எப்படிப்பட்ட இன்னல்களைச் சந்திக்கிறது என்பதுதான் கதை. ஆனால், இத்திரைப்படத்தின் சில அம்சங்கள், சிறிய கதையை கவனிக்கவைக்கிற கதையாக மாற்றிவிடுகின்றன. அக்குடும்பத்தினர் ஈழத்திலிருந்து வந்தவர்கள் என்பதும், இலங்கையின் பேரினவாதப் போரினால் அவர்கள் துரத்தப்படுகிறார்கள் என்பதும், அவர்கள் உண்மையில் ஒரே குடும்பமே இல்லை என்பதும், புலம்பெயர்வதற்காகவே குடும்பமாக நடிக்கிறார்கள் என்பதும், அவர்கள் புலம்பெயரும் ஐரோப்பிய நாடான பிரான்சில் அவர்கள் எதிர்கொள்கிற பிரச்சனைகளும், இத்திரைப்படத்தின் கதையை சுவாரசியமான திரைக்கதையாக்குகிறது.

2009 இல் இலங்கையில் நடந்த இறுதிப்போரிலிருந்து கதை துவங்குகிறது. அப்போரில், தன்னுடைய குடும்பம் மற்றும் சகபோராளிகளைப் பலிகொடுத்த விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளியான தீபன், ஈழத்தைவிட்டே வெளியேறத் தயாராகிறார். இறுதிப்போரின்போது  இனவாத ராணுவம் அரங்கேற்றிய இலட்சக்கணக்கான இனப்படுகொலைகள் பலரை இவ்வாறு வெளியேறச் செய்கின்றன.

குடும்பமாகத் தஞ்சம் கோரினால் சில நாடுகளில் எளிதாக அகதியாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதாலோ என்னவோ, ஒரு தற்காலிகக் குடும்பத்தை உருவாக்க முயல்கிறார். யாழினி என்கிற 26 பெண்ணை மனைவியாகவும், பெற்றோரை இழந்து நின்ற இளையாளை மகளாகவும் சேர்த்துக்கொண்டு, இலங்கையிலிருந்து சென்னை வழியாக பிரான்சு வந்து சேர்கிறார் தீபன்.

யாழினியின் உறவினர்கள் இங்கிலாந்தில் இருப்பதால், இங்கிலாந்துக்கு செல்வதுதான் யாழினியின் நோக்கம். அதற்கான சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் யாழினி. இளையாளுக்கென்று இவ்வுலகில் யாருமில்லை என்பதால், தீபன் மற்றும் யாழினியொடு வேறு வழியின்றி வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

தீபன், யாழினி மற்றும் இளையாள் மூவரும் ஒரு குடும்பமாக பிரான்சு வந்துசேர்கின்றனர். அதன்பிறகு, திரைப்படம் இரண்டு தளத்தில் ஒருசேர பயணிக்கிறது. ஒன்று, அறிமுகமில்லாத மூவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக இணைந்திருப்பதால், அவர்களுக்குள்ளான உணர்வுப்போராட்டம். மற்றொன்று, அவர்களது வீட்டிற்கு வெளியே அம்மூவரும் பிரான்சு நாட்டில் சந்திக்கிற மனிதர்கள், சூழல்கள், எதிர்கொள்கிற பிரச்சனைகள் போன்றவற்றாலான வாழ்க்கைப்போராட்டம்.

உணர்வுப்போராட்டம்:

Dheepan_Poster

தன்னுடைய உறவினர்கள் பலரும் இங்கிலாந்தில் இருப்பதால் லண்டன் சென்றுவிடவேண்டும் என்று சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியிருக்கும் யாழினி, இனி இழப்பதற்கும் அடைவதற்கும் ஒன்றுமில்லை என்பதைப்போல போகிறபோக்கில் போய்க்கொண்டிருக்கும் தீபன், ஆதரவுக்கு யாருமில்லாமல் யாழினியையும் தீபனையும் மட்டுமே நம்பியிருக்கும் இளையாள். இவர்கள் மூவரின் உணர்வுப்போராட்டம் மிக அழகாக சித்திரிக்கப்பட்டிருக்கிறது. அம்மூவரின் இயல்பான நடிப்பால், திரைப்படத்தின் இப்பகுதிகள் இரசிக்கும்படியாக அமைந்திருக்கின்றன.

“என்ன முயற்சி பண்ணாலும் உனக்குத்தான் சிரிப்பே வராதே! அதெல்லாம் நகைச்சுவை உணர்வு சம்பந்தப்பட்டது.” என்று தீபனைக் கிண்டல் செய்யுமிடத்தில் அவனோடு நெருக்கமாகும் யாழினியாகட்டும்,

“எனக்கு எப்படியும் அம்மா இல்ல. அவ செத்துட்டா. நீயாவது என்கிட்டே அன்பா இருக்கலாம்ல? உன்னோட தம்பி தங்கைகள்கிட்ட அன்பாதான் இருப்ப? அதே மாதிரி என்னையும் நினைச்சிக்கலாம்ல?”

என்று கெஞ்சுகிற இளையாளாக இருக்கட்டும், “நம்ம குடும்பத்த என்னோட சம்பாத்தியத்த மட்டும் வெச்சு ஓட்ட முடியாது. நீயும் ஏதாவது வேலைக்கு போயேன்” என்று உரிமையோடு சொல்லும் தீபனாக இருக்கட்டும், ஒருவருக்கொருவர் மெல்லமெல்ல நெருக்கமாவதை பார்க்க நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.

நாட்டைவிட்டு வந்தாலும் ஈழம் தொடர்பான செய்திகளையும், அங்கே நடப்பவற்றையும் அவ்வப்போது இணையத்தின் உதவியோடு கவனித்தே வருகிறார் தீபன். ஒருமுறை இளையாளும் அச்செய்திகளை பார்க்க முற்படுகையில், அவளை தடுக்கிறார்.மற்றொருமுறை, புதிய சூழலில் பள்ளிக்குச் செல்லவே பிடிக்காமல் பள்ளியிலிருந்து ஓடிவரும் இளையாளைப் பார்த்து, “நீ படிக்கணும். நல்லா பிரெஞ்சு கதைக்கனும். பிரச்சனையில்லாம வாழனும்” என்று ஆதரவாகவும் பொறுப்பாகவும் பேசும் தீபனை நம் எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். போரால் இழந்தது போதும், இனியாவது அவளுக்காவது பிரான்சிலாவது ஏதாவது நல்லது நடக்கட்டுமே என்கிற தொனியில் சொன்னதைப்போல இருக்கும் அக்காட்சி.

வாழ்க்கைப்போராட்டம் – புதிய நாடு, புதிய மொழி, புதிய கலாச்சாரம், புதிய பிரச்சனைகள்:

ஐரோப்பாவின் எந்த நகருக்குச் சென்றாலும், அங்கே நகரின் மையத்தெருக்களில் சிறிய பொம்மைகளையும், எல்.இ.டி. விளக்குகள் மின்னும் சின்னஞ்சிறிய எலெக்ட்ரானிக் பொருட்களையும் விற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மக்களைக் காணலாம். பாரிஸ் நகரில், ஈபில் டவரின் சிறிய மாதிரிகளை விற்றுக்கொண்டிருக்கும் ஆப்பிரிக்க-கிழக்குஐரோப்பிய-ஈழத்து இளைஞர்களைப் பார்க்கலாம். காவல்துறை வாகனத்தின் ஒலி கேட்டால், நாலாப்பக்கமும் அவர்கள் தெறித்து ஓடுவதைப்பார்க்கும்போதே பதட்டம் நம்மையும் தொற்றிக்கொள்ளும்.

ஒரு முறை பாரிஸ் நகருக்குச் சென்றிருந்தபோது, அங்கே ஒரு ஆப்பிரிக்க இளைஞனிடம் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட ஈஃபிள் டவரின் மாதிரியினை வாங்குவதற்கு விலை கேட்டுக்கொண்டிருந்தேன். திடீரென எங்கிருந்தோ வந்த காவல்துறையினரைக் கண்டதும், அந்த இளைஞன் ஓட்டமெடுத்தார். அவர் ஓடிய வேகத்தில், கையில் விற்பதற்காக வைத்திருந்த சில பொருட்கள் கீழேவிழுந்துவிட்டன. சிறிது தூரம் ஓடிய இளைஞன், தள்ளிநின்றபடியே அந்தப்பொருட்களை எடுத்துக்கொள்ளட்டுமா என காவல்துறையினரிடம் மன்றாடிக்கேட்டார். ‘தைரியம் இருந்தால், இங்கே வந்து எடுத்துக்கொள்’ என்பதுபோல சைகை காட்டினர் காவல்துறையினர். வந்தால் என்னவாகும் என்பது அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கும் தானே. அந்த இளைஞர் இடையிடையே திரும்பிப்பார்த்துக்கொண்டே வெகுதூரம் ஓடி இருட்டுக்குள் மறைந்தார். அவர் விட்டுச்சென்ற எல்ஈடி விளக்குகள் மட்டும் வெளிச்சம் தந்து மின்னிக்கொண்டிருந்தது.

‘இதெல்லாம் மிகச் சாதாரணமாக தினமும் நடக்கும்’ என்று அங்கிருந்த  உள்ளூர்க்காரர்கள் சொல்லக்கேட்டேன். ஒரு யூரோ, இரண்டு யூரோவுக்கு சிறிய பொருட்களை விற்றுக்கூட பிழைக்கமுடியாத இவர்கள் எப்படி அங்கே வாழ்கிறார்கள்? எங்கே தங்குகிறார்கள்? ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவு அவர்களுக்குக் கிடைக்குமா? அவர்களது குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் பள்ளிக்குப் போவார்களா? என்கிற எண்ணற்ற கேள்விகள் அப்போது எழுந்தது.

பிரான்சுக்குள் நுழைந்த தீபனும், திரைப்படத்தில் தெருவோரத்தில் சின்னச்சின்னப் பொருட்களை நேர்மையாக விற்கிறார்; காவல்துறை வருகிறது; தலைதெறித்து ஓடுகிறார்; மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான் என்பதை அவரது முகம் நமக்கு உணர்த்திவிடுகிறது; இறுதியில், வீடென்று சொல்லப்படுகிற கட்டிடத்திற்குள் செல்கிறார். வளர்ந்த நாடாக சொல்லப்படுகிற பிரான்சில், மிகவும் மோசமான சூழலில் மிகச்சிறிய இடத்தில் ஏராளமான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் தீபனின் குடும்பமும் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள்.

ஒருநாள் பிரான்சு குடியேற்ற அலுவலகத்தில் விசாரணை நடக்கிறது. அதில், தீபன்-யாழினி-இளையாள் குடும்பத்துக்கு பிரான்சில் தங்க அனுமதி கொடுக்கிறார்கள். அதோடு, அவர்களுக்கு ஊருக்கு வெளியே தங்குவதற்கு வீடும் ஒதுக்கி, அவ்வீட்டின் அருகாமைக் குடியிருப்பைக் கூட்டி, சுத்தப்படுத்தி, கவனித்துக்கொள்கிற காப்பாளர் வேலையும் தீபனுக்கு வழங்குகிறார்கள்.

இளையாளைப்பொருத்தவரையில் விவரிக்கமுடியாத மனநிலையில் தான் இருக்கிறாள். பெற்றோர் இல்லை; அடுத்தது என்ன என்று கூட யோசிக்கமுடியாத வயது; தற்காலிகமாக கிடைத்திருக்கிற பெற்றோரும் நிலைப்பார்களா என்கிற அச்சம்; எல்லாமும் சேர்ந்த குழப்பமான காலகட்டத்தில் பிரெஞ்சுப் பள்ளியில் சேர்க்கப்படுகிறாள்.
“உங்கள் நாட்டில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தாயா?”என்று பள்ளியில் சேர்க்கும்போது ஆசிரியை கேட்கிறார்.
“இல்லை! அங்கே பள்ளிகூடத்தில் குண்டு போடுகிறார்கள்” என்கிறாள்
“யார்?” – ஆசிரியை
“அரசாங்கம்” என்கிறாள்.
“அரசாங்கமேவா?” என்று ஆசிரியை அதிர்ச்சியடைகிறார்.
பள்ளியில் சேர்ந்ததும் மொழி தெரியாதது ஒரு குறையென்றாலும், அங்குள்ள மற்ற குழந்தைகளின் கலாச்சாரம் புரியாமல் தடுமாறுவது அதனைவிடவும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது அவளுக்கு.
தீபனுக்கு பிரெஞ்சு தெரியாததால், யார் என்னகேட்டாலும் தெரிந்ததைப் போலவும் தெரியாததைப்போலவும் ‘ஒருவிதமாக’த் தலையாட்டுவதைப் பார்க்க சிரிப்பாகவும் , அதே வேளையில் பரிதாபமாகவும் இருக்கும். ஐரோப்பாவில் பெல்ஜியம், பிரான்சு, ஹாலந்து, ஜெர்மனி, சுவிசர்லாந்து உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, மொழி என்பது மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்துவருகிறது. ஈழத்தில் இருந்தவரையில், போரில் பங்கேற்றோ அல்லது போர் நடந்த காரணத்தாலோ, பெரியளவு படிக்கமுடியாமல் போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்கள் புலம் பெயர்ந்து ஐரோப்பா வருகிறபோது, கல்வித்தகுதியோ மற்ற மொழிகளின் அறிவோ இல்லாமல் தவிக்கிறார்கள். அதனாலேயே அவர்களால், ஐரோப்பிய சூழலோடும், அம்மக்களோடும், அவர்களது கலாச்சாரத்தோடும் பெரிதளவு ஒருங்கிணைய முடியாமல் போகிறது. இதில் மிகமுக்கியமாக, வேலை கிடைப்பது தான் அரிதினும் அரிதான காரியமாக இருக்கிறது. நல்லவேலை கிடைக்கும்வரை ஆங்காங்கே இரவு நேர உணவகங்களில் வேலைக்கு சேர்வதும் பின்னர் அதுவே தொடர்வதுமாக ஐரோப்பாவில் ஏராளமான ஈழத்தமிழர்களைக் காணலாம். அப்படியான நிலையிலேயே தீபனும் இருப்பதாகக் காண்பிப்பார்கள்.

அவர்களின் வீடு இருக்கும் பகுதியில், உள்ளூர் இரவுடிக்கும்பலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதில் ஒரு இரவுடிக்கும்பல் தினமும் குடித்துவிட்டு கும்மாளமிடும் கூடத்தை சுத்தம் செய்யும் பணியும் தீபனுடையதுதான். அவர்கள் அடாவடியாக பேசினாலும் நடந்துகொண்டாலும் முடிந்தவரை அமைதியாகவே நிலைமையைக் கையாள்கிறார் தீபன். ஒரு கட்டத்தில் தெருவில் மிக சாதாரணமாகவும், அவரது வீடு வரையிலும் துப்பாக்கிச்சூடெல்லாம் அந்த இரவுடிக்கும்பல்களால் நடப்பதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை அவரால்.

“இது No Fire Zone” என்று தன் வீட்டைச்சுற்றி ஒரு பெரிய கோடு போட்டு, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரை அடித்து உதைக்கிறார். இதனால், ஒரு இரவுடிக்கும்பலின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார்.

யாழினிக்கு வீட்டுப்பக்கத்தில் ஒரு வயாதான முதியவரைப் பார்த்துக்கொண்டு, அவருக்கு சமைத்துப் போடும் வேலையும் கணிசமான ஊதியமும் கிடைக்கிறது. அந்த முதியவரோடு அவள் எப்போதும் தமிழிலேயே பேசுவது அழகாக காட்சியாக்கப்பட்டிருக்கிறது. “உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சாப்பாடு கொண்டுவரட்டுமா? வேண்டாமா?” என்றெல்லாம் அவரோடு தமிழிலேயே கேள்விகேட்பதும், அதற்கு அவளே தமிழில் பதில்சொல்லிக்கொள்வதும் அழகு. அம்முதியவரின் அக்காள் மகனான பிரஹீம் என்பவனும் ஒரு இரவுடிக்கூட்டத்தின் தலைவனாக இருக்கிறான். அந்த வீட்டின் ஒரு அறையை, அவனும் அவனது நண்பர்களும் சமூகவிரோதச் செயல்களைத் திட்டமிடவே பயன்படுத்துகின்றனர். பிரஹீமின் மீதும், யாழினிக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்படுகிறது. அவனோடு நிறைய நேரம் பேசிக்கொண்டிருக்கவும் விரும்புகிறாள். இதற்கிடையே தீபனுக்கு பிரஹீமின் கும்பலோடுதான் விரோதம் வளர்கிறது. இதனால், யாழினியால் அங்கே தொடர்ந்து வேலை செய்யவும் முடியாமற்போகிறது. பிரஹீமின் மீது அவளுக்கு ஈர்ப்பு இருந்தபோதிலும், தீபனோடு இருப்பதைத்தான் அவள் விரும்புகிறாள். பிரஹீமின் சமூகவிரோதக் கும்பலுக்கும் தீபனுக்கு இடையிலான பிரச்சனையில், அவர்களது குடும்பத்தில் மெதுமெதுவாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்த நிம்மதியான வாழ்க்கை மீண்டும் அமைதியில்லாமல் போகிறது. ஒரு கட்டத்தில், இங்கிலாந்துக்கு தப்பித்து ஓட முயற்சிக்கிறாள் யாழினி.
ஆனால், அவளது பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு அவளை போகவிடாமல் தடுக்கிறார் தீபன்.

“எதற்காக என்னை தடுக்கிறாய்? நீ என்னோட புருஷனும் இல்ல. இளையாள் என்னோட உண்மையான மகளும் இல்ல. நீ என்ன இதெல்லாம் உண்மை என்று நினைத்தாயா? இதெல்லாம் வெறும் பொய்தானே?”

என்கிறாள் யாழினி.

தன்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பொறுத்தவரையில் எதுவுமே மிச்சமில்லாமல் போனவேளையில், யாழினியும் இளையாளும் தான் புதியதோர் வாழ்க்கையின் நம்பிக்கை என நினைத்திருந்த தீபனுக்கு அது ஏமாற்றமாகத்தான் இருந்தது. அதனால் வீட்டுக்கு வருவதையே தவிர்கிறான் தீபன். அவனைப்பார்க்காமல் இருக்கிற ஒவ்வொருநொடியிலும் அவன்மீதான அன்பை உணர்கிறாள் யாழினி. மீண்டும் இயல்புவாழ்க்கைக்கு திரும்ப நினைத்து, பிரஹீமின் வீட்டிற்கே சென்று முதியவரை கவனிக்கத்துவங்குகிறாள். ஆனால், பிரஹீமின் வீட்டில் நடக்கிற கலவரத்தில் மாட்டிக்கொள்கிறாள். அதன்பின்னர், தீபனின் நாயக சாகசங்களோடு பயணித்து, இறுதியில் நல்ல முடிவை எட்டுகிறது படம்.

திரைப்படத்தின் அரசியல்:

இலங்கை, இனவாதம், ஈழம், இனப்படுகொலை, போர், விடுதலைப்புலிகள், போராளிகள் என ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் அங்கமாகிப்போயிருக்கிற அரசியல் வார்த்தைகளை முடிந்தவரை தவிர்த்தே தீபன் திரைப்படம் பயணிக்கிறது. ஓரிரண்டு காட்சிகளில் மட்டும், எந்தச்சார்பையும் எடுக்காமல் தப்பிக்க முயற்சித்து சில வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒரு காட்சியில்: உள்ளூர் சமூக விரோதிகளோடு சண்டைக்கு இறங்கிவிட்ட தீபனைவிட்டுவிலகி, இங்கிலாந்து செல்ல தயாராவாள் யாழினி.
அவளைத் தடுக்கமுயலும் தீபனிடம்,
“நம்ம ஊர்ல நீங்க செஞ்சது போதாதா! இங்கேயுமா?”
என்று சொன்னதும், பளார் என அவளது கன்னத்தில் அறைகிறான் தீபன். ஆயுதக் குழுக்களை ஏதோ வீம்புக்கு துப்பாக்கியைத் தூக்கியவர்கள் என்பது போன்ற எண்ணத்தை தீபனால் பொறுத்துக்கொள்ள முடியாமையால் ஏற்பட்ட கோபமது என்பதை புரிந்துகொள்ளமுடியும் அக்காட்சியில்.

மற்றொரு காட்சியில்: விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்த தீபன் போர் முடிவுறும்போது பிரான்சு வருகிறார். அங்கே விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த ஒருவர்,

“எப்படியாவது நிறைய பணம் சேர்க்கவேண்டும். ஆயுதங்கள் வாங்கி, ஈழத்திற்கு அனுப்பி போராட்டத்தைத் தொடரவேண்டும்”

என்கிறார்.

அதற்கு தீபன்,

“என்னைப்பொறுத்தவரை அங்கே ஆயுதப்போர் முடிந்துவிட்டது. அங்கே எல்லாம் இழந்து நிற்கிறார்கள்”

என்று எதார்த்த நிலையினை விளக்குகிறார். அதனை ஏற்றுக்கொள்ளமுடியாத அந்த நபர், தீபனை அடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இனியும் அடிவாங்குவதற்கு அம்மக்களிடம் தெம்புஇல்லை என்று தீபன் சொல்லவருகிறாரா அல்லது, அம்மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை தேடவேண்டிய அவசியத்தை கோடிட்டுக் காட்டவிரும்புகிறாரா என்பதையெல்லாம் பார்வையாளர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று விட்டிருக்கிறார் இயக்குனர்.

பிரான்சின் புறநகர்ப்பகுதியில் வாழும் அகதிகள்தான் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்கிற தவறான கருத்தை தெரிந்தோ தெரியாமலோ திரைப்படம் சொல்லிவிடுகிறது. ‘நல்ல அகதிகளாக’ தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்ளும் சிலர், சிரியாவிலிருந்து ஐரோப்பா வரும் அகதிகளை ஏற்கனவே வெறுத்துப்பேசுவதை காணமுடிகிறது. நல்ல அகதிகளுக்கும் கெட்ட அகதிகளுக்கும் இடையிலான வாழ்க்கைப்போரில் நல்ல அகதிகள் வெல்கிறார்கள் என்பதுபோன்ற தோற்றத்தை இத்திரைப்படம் உருவாக்குவது ஆபத்தானதும் கூட.

உலகெங்கிலும் அகதிகளாக இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் வாழ்ந்துவந்தாலும், இலங்கையிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் அம்மக்களுடைய பிரச்சனைகளை பேசிய சர்வதேசத் திரைப்படங்கள் எதுவுமில்லை. சமீபத்தில் வெளியான சானல்-4 தொலைக்காட்சியின் ஆவணப்படங்கள் தான் ஈழத்தமிழர்களின் குரலை ஓரளவிற்கு ஒலிக்கச்செய்தன. அந்தவகையில், சர்வதேச மக்களுக்கு ஈழத்தமிழர்களின் பிரச்சனையையும் அவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் கோடிட்டுக்காட்ட இத்திரைப்படம் உதவலாம்.

இந்தியத்தமிழர்களுக்கு ஓரளவு பரிச்சயமான புள்ளியிலிருந்து இத்திரைப்படம் துவங்கி, அதன்பின்னர் பிரான்சிற்கு கதை பயணிக்கிறது. ஐரோப்பாவில் அகதி வாழ்க்கை என்பது மிகவும் சொகுசான வாழ்க்கை என்கிற பொதுப்புத்தியினை இத்திரைப்படம் இலேசாக உடைத்திருக்கிறது. மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிற மூன்று கதாபாத்திரங்களான தீபன், யாழினி மற்றும் இளையாள் ஆகியோரின் நடிப்பும் அவர்களுக்குள்ளான உணர்வுப்போராட்டமும் திரைப்படத்தை இரசிக்கவைக்கின்றன. ஆனால், ஐரோப்பாவில் ஈழத்தமிழர்கள் (உள்ளிட்ட அகதிகள்) சந்திக்கிற ஏராளமான முக்கியமான பிரச்சனைகள் இருக்க, அவற்றில் கவனம் செலுத்தாமல் படத்தின் இரண்டாம் பாதி தடம்மாறி வெறுமனே ஒரு அதிரடித்திரைப்படமாக முடிந்துவிடுவது, பெரிய ஏமாற்றம்தான்.

சிறப்பாக துவங்கிய கதைக்காகவும், அற்புதமாக பாதிவரை பயணித்த திரைக்கதைக்காகவும், தீபன்-யாழினி-இளையாளின் பிரமாதமான நடிப்புக்காகவும், ஈழத்தமிழர்களின் அகதிவாழ்க்கையின் சிறுதுளியை சர்வதேசத் தரத்தில் உருவாக்கியதற்காகவும் இத்திரைப்படத்தை பாராட்டலாம்…

Related Posts