பிற

டெங்கு அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமானிய குடிமகளின் கடிதம் . . . . . . !

கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் ஒழியாமல் டெங்கு செய்திகளாகவே இருந்தன. தீபஒளித் திருநாளின் மகிழ்வு கூட பல குடும்பங்களில் துயர்தரும் நாளாக மாறி துக்க இருள் சூழ்ந்ததாக இருந்ததையும் காண நேர்ந்தது.

கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் டெங்கு பற்றிய செய்திகளாகவே இருந்தன.

அதில் காய்ச்சலால் அனுமதிக்கப் பட்டவர்கள் , அதற்கு பலியானவர்கள் என அன்றாடம் பெரும்பட்டியல் ஒருபுறம்.

இதில் தவமிருந்து பெற்ற பச்சைக் குழந்தைகள் முதல் பள்ளி மாணவ மாணவிகளான சிறுவர் சிறுமியர் , இளம்பெண்கள் என மரண ஓலம் காணச் சகிக்கவில்லை. தீப ஒளித் திருநாள் கூட பல வீடுகளில் துக்க இருள் படிந்து கிடந்தது.

மறுபுறம் அதை மறுக்கும் சுகாதார துறை அமைச்சரின் அறிக்கைகள், தலைமை சுகாதார செயலரின் ஆய்வுகள் பற்றிய காட்சிகள் , அரசு சார்பில் அமைச்சர்களின் பேட்டிகள் என தொலைக் காட்சியை நிறைத்தன.

இவை இரண்டிற்கும் இடையில்தான் சாமானியர்களின் அச்சமும் பதைபதைப்பும் நிறைந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. ஆட்சியாளர்களின் குற்றச்சாட்டுகளும் அவர்களை நோக்கியே வீசப்பட்டன. ஏராளமான அறிவுரைகளும் அவர்களின் காதுகளையே நிறைத்தன.

அதனுடன் டெங்கு ஒழிப்பிற்காக எனக் கூறி வாரத்தில் இரு முறையாவது மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக ஏற்பாட்டில் பெண்கள் குழு வீடுகளின் கதவுகளைத் தட்டினர். தட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் கைகளில் தவறாமல் மண்ணெண்ணெய் அல்லது பினாயில் வாடை வீசும் நீர்க்கப்பட்ட திரவம் கொண்ட பாட்டில் இருக்கும். பல நேரம் வீட்டாரின் கடும் ஆட்சேபத்தை வாக்குவாதங்களால் முறியடித்து உள்ளே நுழைவார்கள்.

15 நாட்களுக்கு ஒரு முறை  1 அல்லது 1 1/2 மணி நேரம் குடிநீர் விநியோகம் வரும் நிலையில் அதை சேமித்து பயன்படுத்தும் நிலையில் மக்கள். அதேபோல் வெளிப் புழக்கத்திற்கும் வீதிக் குழாய்களிலிருந்து தண்ணீர் சுமந்து வந்து சேமித்தாக வேண்டும். ஆளில்லாத நிலையில் வீடுகளை இப்பெண்கள் பார்வையிட நேர்ந்தால் அவர்கள் மட்டுமே அறிந்த காரணம் கொண்டு சேமித்த தண்ணீர் கீழே கொட்டப்பட்டிருக்கும். விசயமறிந்த வீட்டுப் பெண்கள் அடுத்த முறை அவர்களுடன் இடும் சண்ட்சியில் சில சமரசங்கள் நடக்கும்.

அதே போல் அவர்கள் கொண்டு வந்த வாடை திரவியத்தை நிலத்தொட்டி , பெரிய டிரம் என எதில் நீர் சேகரிக்கப் பட்டிருந்தாலும் அதில் அப்படியே கொட்டுவர். வாய் கொப்பளிக்க , முகம் கழுவ என சேமித்த தண்ணீர் பயன்பாட்டின் போது நம்மை பாடாய் படுத்தும். அவர்களுடன் மீண்டும் நடக்கும் ஒரு யுத்த களத்திற்கு பின் ‘ அதிகாரிகளுக்கு எங்களால் பதில் கூற இயலாது. எனவே நீங்களே ஏதோ ஓர் பாத்திர தண்ணீரில் இம்மருந்தை ஊற்றிவிடுங்கள் ‘ எனக் கூறி சமரசம் நடக்கும்.

இத்தனைக்குப் பிறகும் கொசு ஜம்மெனப் பறந்து காதில் இனிமையாய் ரீங்காரம் பாடும். கைகளில் கால்களில் இலவசமாய் ஊசி போடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்மக்காய்ச்சலால் அவதிப்படுவர்.

தொடர்ந்து வந்து கொண்டிருந்ததில் அறிமுகமும் பழக்கமும் ஆனதில் சகஜமாய் அவர்களுடன் உரையாட முடிந்ததை பயன்படுத்தி முகநூல் செய்தி சிலவற்றை ஆதாரமாய்க் கொண்டு பேசியபோது ” பையினுள் பாட்டிலில் சக்தியான மருந்து உள்ளது. அதிகாரிகள் அதையும் தந்து அதை பயன்படுத்தக் கூடாதென உத்தரவும் போட்டுள்ளனர். எங்களுக்கு முறையான சம்பளமும் தரப்படுவதில்லை ” எனக் கூறினர். நடைமுறை உண்மையை இதில் அறிய முடிந்தது.

இதற்கிடையில் ஏசி பஸ்களின் சீட்டுகளில் கொசு பயணித்து வருகிறது. ரயிலில் வருகிறது எனும் அறிவிப்புகளின் மூலம் ஆட்சியாளர்களின் விதவிதமான அரிய கண்டுபிடிப்புகளையும் கேட்க முடிந்தது.

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவர்களுக்கு அபராதம் என அறிவித்த பிறகு வந்த செய்திகளில் ( அச்சு + காட்சி ஊடகங்களில் ) பெரும் மருத்துவமனைகளின் பின்புறம் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல அரசு கட்டிடங்களின் அருகாமை நிலங்கள் போன்ற பல பொது இடங்களில் கொசு உற்பத்தி மையங்கள் எவ்வளவு சக்திசாலியாக உள்ளன என்பதை அறிய முடிந்தது.

கொசுமருந்து மற்றும் கொசு ஒழிப்பு சுருள் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் லாபவிகிதங்களின் கூடுதலையும் அறிய முடிந்தது.

டெங்குவை எதிரி நாட்டை அழிக்கும் யுக்திபோல கியூபாவில் அமெரிக்கா கையாண்டபோது அதை கியூப அதிபர் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ கையாண்டு சமாளித்து மக்களை காப்பாற்றிய அனுபவம் முதல் நமது அண்டை மாநிலமான கேரளா இப்பிரச்னையை கையாள முதலமைச்சர் பினாராய் முதல் கடைக்கோடி தொண்டன் வரை ஒரு மாத காலம் உண்மையாய் தூய்மைப் பணி மேற்கொண்டு அடியோடு ஒழித்த அனுபவம் வரை நம்முன் அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

டெங்கு ஒழிப்பில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் கடுமையாகப் பொழிகின்ற பருவமழை நின்ற பிறகாவது தேங்கி நிற்கும் நீர் வடிந்து நிலம் காய்வதற்கும் பொது இடங்களின் தூய்மைக்கும் சாக்கடை மற்றும் குப்பைக் கூளங்களை அகற்றுவதற்கும் உரிய ஏற்பாடு செய்து கொசு உற்பத்தியை கட்டுக்குள் கொண்டு வர அக்கறை செலுத்துங்கள்.

மருந்து அடித்தலை சம்பிரதாயமாக செய்யாமல் தீவிரமான செயலாற்றல் கொண்ட வீர்யமான மருந்துகளை பயன்படுத்தி மக்களின் அச்சம் போக்கும் வகையில் செயல்படுங்கள்.

இறுதியாக துப்புரவுத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் ஊதியம் மற்றும் உயிர் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருவதும் , உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்யும் விதத்தில் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதை உறுதி செய்யுங்கள். மாநில வரி வருவாயில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யுங்கள். மக்களிடம் உண்மையான நம்பிக்கையை உருவாக்குங்கள்.

– செம்மலர்.

 

Related Posts