இலக்கியம்

டெங் ஷியோ பிங்.. தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள்……….. தமிழில் மிலிட்டரி பொன்னுசாமி.

1949ல் வெற்றி வாகை சூடிய சீனப் புரட்சியில் தோழர் மாவோவுடன் பங்கேற்றவர். ஏற்ற இறக்கங்களுடன் கூடிய தனது வாழ்வில் எழுபது ஆண்டுகள் நாட்டிற்காக உழைத்து, பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். சீன மக்கள் குடியரசின் முதல் தலைமுறை, முக்கியத் தலைவர். வயதின் காரணமாக பொறுப்பிலிருந்து தானாக விலகி தனது கருத்துக்கு நியாயம் செய்தவர். அவர் தான் தோழர் டெங் ஷியோ பிங் !

1950 முதல்1990 வரையிலான அவரின் எழுத்து மற்றும் உரைகளில் இருந்து தெரிவு செய்து மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் குறிக்கோளும் சோசலிஸம் கம்யூனிசம் இரண்டையும் அடைவது தான். கட்சி உறுப்பினர் முன்னேறிய ஒரு சாமானிய மனிதர். கட்சி மாநாடுகளில் விவாதிக்கப்பட்டு விடை காணப் படுபவை அமுலாவதற்கு, கட்சி உறுப்பினர்களிடம் அதைப் பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும். மார்க்சிய லெனினியம் ஒரு நாட்டின் திட்டவட்ட நடைமுறையுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

மார்க்சிய லெனினிய சொல்லாடல்களை மட்டும் அறிந்து கொண்டு திட்டவட்டமான நிலைகளுக்கு பொருத்தத் தெரியாமல் இருப்பது வறட்டு வாதம்! மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளைப் புறந்தள்ளி, குறிப்பிட்ட காலத்தின் அல்லது நாட்டின், நடைமுறை அல்லது அனுபவத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துவது அனுபவ வாதம்! இவை இரண்டும் தவிர்க்க வேண்டியவை!

தவறுகள் செய்யாத மனிதன் இல்லை. ஆனால் ஒரு அரசியல் கட்சி தன் தவறுகளை இடை விடாமல் திருத்திக் கொள்ள வேண்டும்.

அதிகாரம் அளவுக்கு மீறி குவிக்கப்படுவது நல்லதல்ல. அது கூட்டுத் தலைமையை புறந்தள்ளி விட்டு தனிமனிதர்களின் எதேச்சதிகாரத்திற்கு வழி செய்யும். எவருடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் சக்திக்கும் ஒரு வரம்புண்டு. இதை உணராது போனால் கூடுதல் பொருத்தமுள்ள மற்ற தோழர்களின் வழியை அடைத்து விடுவர்.

அதே போல் முதிய தோழர்கள் முன்வரிசைப் பதவிகளை விட்டுத் தந்து, கட்சிக்கு புதிய தலைமை உருவாக வழி வகுப்பது மேன்மையான கடமையாகும்.

அனைத்து மட்டங்களிலும் கட்சிக் கமிட்டிகள் கூட்டுத் தலைமை, தனிநபர் பொறுப்புடன் கூடிய உழைப்புப் பிரிவினையை உளப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும். மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் சொல்வதைக் கேட்டு அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அரசியல் உணர்வும் கட்டுப்பாடும் மிக்க உறுப்பினர்கள் உள்ள கட்சி இல்லாமல், மக்களை ஒன்றுபடுத்தி சிந்தனையில் ஒருமைப்பாடு காண்பதும் சோசலிஸம் நோக்கி பயணிப்பதும் முடியாது.

இவை கம்யூனிஸ்ட் கட்சிக்கு பொருத்தி கூறப்பட்ட கருத்துகள் தான் ! ஆனாலும் இவைகளை கோர்வையாக வாசிக்கும் போது நமது மக்களுக்கும் பொருந்துவதை உணரலாம் ! இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தால் நிலவுடமை சமூக நுகத்தடியில் இருந்து இன்னமும் முழுமையாய் விடுபடாமல் இறுகிக் கிடக்கும் நமது நாட்டின், குடும்ப நிறுவனம் உள்ளிட்ட அனைத்து நிறுவனங் களையும் ஜனநாயகப் படுத்தி விடுவிக்கவும் கூட நிச்சயம் உதவும்.

மாவோவின் கருத்துகளை முழுமையாக, உண்மையாக, உள் வாங்குவதும் ஆழமாகப் புரிந்து கொள்வதும் அவசியம். அவருடைய பங்களிப்புகள் காரணமாக தவறுகளைக் குறிப்பிடாமல் தவிர்ப்பதும் , தவறுகள் காரணமாக பங்களிப்புகளை மறுப்பதும் பொருள்முதல்வாத அணுகுமுறை அல்ல.

ஏனெனில் மக்கள் திரள் மீது முழு நம்பிக்கை கொண்டு அதற்குப் பொருந்தாத எந்தவொரு செயலையும் மாவோ எதிர்த்தார். வரலாற்றை முன்னோக்கி உந்தித் தள்ளுவது மக்களின் சக்திதான் என்பதை முரண் இன்றி உணர்ந்து, மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை நாட்டின் திட்ட வட்ட நடைமுறைக்கு பொருத்தி புரட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆனால் அவரின் அந்திப் பொழுதில், ஆரோக்கியமற்ற சிந்தனைப் போக்குகள் அவரைத் தழுவின. நிலப்பிரபுத்துவ மேலாதிக்க வழிமுறை களைக் கடை பிடித்தார். கலாச்சாரப் புரட்சியின் போது தவறிழைத்தார். என்று மாவோ குறித்து கூறும் டெங்ஷியோபிங் விருப்பு வெறுப்பின்றி மாவோவின் தவறுகளைக் காண்பதும், கட்சி நாடு இரண்டிற்கும் அடித்தளம் இட்டவர் என்பதை இதயத்தில் ஏந்தவும் வலியுறுத்துகிறார்.

உலகம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டிருக்கிறது. புதிய விசயங்கள் இடைவிடாமல் தோன்றிக் கொண்டிருக்கின்றன். புதிய சிக்கல்கள் தொடர்ந்து எழுகின்றன. நம் கதவுகளை மூடி, மூளையைப் பயன்படுத்த மறுப்பதும், பின் தங்கிய நிலையில் நீடித்திருப்பதும் ஒத்து வராது. சோசலிசத்திற்கு அறிவியலும் கல்வியும் முக்கியமானது. நடப்பு களில் இருந்து உண்மையைத் தேடும் அணுகுமுறை தேவை என டெங் ஷியோ பிங் சீனாவிற்கு வழிகாட்டுகிறார்.

விவசாயத் துறை, தொழில்துறை, அந்நிய நிதி பயன்பாடு, தொழில் நுட்பப் பயன்பாடு, ஏற்றுமதி இறக்குமதி, அறிவியல் ஆராய்ச்சி, உலக சந்தையில் போட்டியிட பொருள்களின் தரம், ஊதியக் கொள்கை, அயல் துறைக் கொள்கை, போன்ற பல விசயங்கள் குறித்தும் விவாதிக்க ஆழமான கருத்துகளை முன் வைக்கிறார். அத்துடன் சோசலிசக் கட்டுமானம் காத்து, மக்கள் வாழ்வின் தரம் மேம்பட உதவும் வகையிலும் பல்வேறு விசயங்கள் இதில் உள்ளன.

”இன்றைய சர்வதேச அரங்கில் அரசியல், ராணுவம், பொருளாதாரம், நாட்டுறவுகள், விளையாட்டு என பல் துறைகளிலும் மக்கள் சீனக் குடியரசு தலையாய இடத்தில் உள்ளது. 1949ம் ஆண்டு நடந்த புரட்சியும் சோசலிஸக் கட்டுமானமும் தான் இதற்குக் காரணம். இதை சர்வதேச ஊடகங்கள் , மறைக்க நினைத்தாலும் முடியாத நிலை உள்ளது என 2016ல் வெளிவந்த இந்நூலின் முன்னுரை கூறுகிறது.

இப்படிப்பட்ட நாட்டின் முக்கிய தலைவரான டெங்சியோபிங் மதிக்கப் படும் அளவு விமர்சிக்கவும் படுகிறார். அவரின் கருத்துகளை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். ஆனால் அவை தவிர்க்க முடியாத முக்கியத்துவம் கொண்டவை எனவும் அம்முன்னுரை கூறுகிறது! ”

இவைகளின் அடிப்படையில் மக்கள் சீனக் குடியரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஆற்றியுள்ள சாதனைகளை நிதானமாகவும் பொறுப்போடும் கற்றறிய உதவும் எழுத்துகள் இவை. டெங் ஷியோ பிங், லியூ சோசி போன்ற பல ஆளுமைகள் தங்கள் நாட்டிற்கும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் உலக சூழலை உணர்ந்து கவனமுடன் சிந்தித்து வழிகாட்டி உள்ளனர்!

இந்நூலின் விரிவான எழுத்துகள் சமூக மாற்றப் போராளிகளாக இங்கு செயல்படுபவர்க்கும் வழிகாட்டுகின்றன!

  • செம்மலர்.

Related Posts