அரசியல்

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 3

முதல் பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-1/
இரண்டாவது பகுதி: https://maattru.com/demonetisation-for-whom-2/

பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி…

5.   ஆசியாவின் பெரிய சந்தையான புர்ராபஜாரின் தள்ளாட்டம்:

ஆசியாவின் மிகப்பெரிய மொத்தவியாபார சந்தையான புர்ராபஜாரின் நிலையும் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் ஆட்டம் கண்டது. புர்ராபஜாரில் ஒட்டுமொத்தமாக 25 துணை சந்தைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்துதான் கிழக்கிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பல்வேறு பொருட்கள் செல்கின்றனர். 50 முதல் 90% வரையிலான வியாபாரம் புர்ராபஜாரின் சந்தைகளில் குறைந்தது. கடந்த நவம்பர் 8 லிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், ஜிஎஸ்டி யின் தாக்கத்தால் மேலும் அடிவாங்கியிருக்கிறது வியாபாரம். ஏராளமான கடைகள் கடந்த ஓராண்டில் மட்டும் மூடப்பட்டிருக்கின்றன.

“சிறுவணிகர்கள் எங்களிடம் வாங்குவதில்லை. மற்ற மாநிலங்களிலிருந்து பொருள் வரத்தும் 50% அளவிற்கு குறைந்திருக்கிறது (விவசாய/தொழில் உற்பத்திக் குறைவால்). சிறுவணிகள் மத்தியில் ஒருவித பயம் தொற்றிக்கொண்டுவிட்டது” என்கிறார் இராஜகத்ர பியாப்சயி சமிதி என்கிற வியாபாரிகள் சங்கத் தலைவரான பிஸ்வஜித் சகா.

போஸ்டா பஜார் என்கிற மொத்தவிற்பனைச் சந்தையிலும் 40% அளவிற்கு விற்பனை குறைந்திருப்பதாக 450 வியாபாரிகளை உறுப்பினர்களாகக் கொண்ட       போஸ்டா பஜார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவரான ஷ்யாம் சுந்தர் அகர்வால் கூறுகிறார்.

ஜிஎஸ்டி வந்தபிறகு புர்ராபஜாரின் வியாபாரம் 30-40% வரை மேலும் குறைந்திருப்பதாக வியாபாரிகளும் வியாபாரிகள் சங்கப் பொருப்பாளர்களும் தெரிவிக்கின்றனர்.

6. ஆடை தயாரிப்பு நகரமான லுதியானாவும் ஆடித்தான் போயிருக்கு:

இந்தியாவின் ஏற்றுமதி ஆடைத்தயாரிப்புத் துறையில் ஆண்டொன்றுக்கு 25000-30000 கோடியளவுக்கு வியாபாரம் செய்யப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதில் 10% அளவிற்கு குளிர்காலத்திற்கு பயன்படுத்தப்படும் கம்பளித்துணிகளின் வியாபாரமும் உள்ளடங்கியிருக்கிறது. அவற்றில் 90% அளவிற்கு பஞ்சாபிலிருக்கும் லுதியானாவில்தான் தயாரிக்கப்படுகின்றனவாம்.

குளிர்கால ஆடைத்தயாரிப்பில் மிகப்பிரபலமான நகரமான லுதியானாவும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. வழக்கமாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில்தான் குளிர்கால ஆடைகள் விற்பனை அதிகமாக நடக்கும். பணமதிப்பிழப்பிற்கு பின்னர் முதன்முதலாக துவங்கியிருக்கும் இந்த ஆண்டின் விற்பனை மிகமோசமாகவே துவங்கியிருக்கிறது. ஜிஎஸ்டி உடன்சேர்ந்து வாட்டிவதைப்பதாக லுதியாவின் வியாபாரிகள் கூறுகின்றனர். லுதியானாவில் பெருமளவு பணப்பரிவர்த்தனையில் தான் வியாபாரம் நடந்துவந்திருக்கிறது. இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் நேரடியாக அந்நகரம் பாதிக்கப்பட்டு, ஏராளமானோர் வேலையிழக்க வேண்டிய நிலையும், மிகக்குறைந்த அல்லது நஷ்டத்தில் வியாபாரம் நடத்தவேண்டிய சூழலும், முதலீடு குறைந்தபோனதும் நடந்திருப்பதால், ஒட்டுமொத்த வியாபாரமும் அடிபட்டுப் போயிருக்கிறது.

“நான் இரண்டு கடைகளை லுதியானாவிலும் மூன்று கடைகளை டெல்லியிலும் நடத்திவந்தேன். 2015-2016இல் என்னுடைய கடைகளின் மொத்த வியாபாரம் 11 கோடியாக இருந்தது. அதுவே பணமதிப்பிழப்பினால் 2016-2017இல் 8 கோடியாக குறைந்தது. தற்போது டெல்லியிலிருக்கும் மூன்று கடைகளை மூடப்போகிறேன். சுத்தமாக வியாபாரமே இல்லை.”

என்கிறார் பூனம் டெக்ஸ்டைல்சின் உரிமையாளரான ஹரிந்தர் பால் சிங்.

அக்டோபர்-பிப்ரவரி மாதங்களில் தான் அதிகமான திருமணங்களும் நடக்கும். அப்படியிருந்தும், வியாபாரம் சூடுபிடிக்காமலே இருக்கிறது என்கின்றனர் வியாபாரிகள். 2011-2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,06,000 பேர் லுதியானா மாவட்டத்தின் சிறு, குறு ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரிந்துவந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் 2016 பணமதிப்பிழப்பினால் வேலையிழந்திருக்கின்றனர்.

7.   சைக்கிள் தயாரிப்பும் நிலைகொள்ளாமல் தடுமாறியது:

பஞ்சாபின் லுதியானா மாவட்டம்தான் ஆசியாவின் சைக்கிள் தயாரிப்பு தலைநகரமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 50%த்திற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் லுதியானாவில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டொன்றிற்கு 1.45 கோடி சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டு ஆசியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 10,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூலமாக 60க்கும் மேற்பட்ட சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு, சுமார் 100 நிறுவனங்களில் அவற்றை ஒண்றினைத்து சைக்கிளாக்கும் பணியும் செய்யப்படுகிறது. பணமதிப்பிழப்புக்குப் பின்னர், 70% அளவிற்கு சைக்கிள் விற்பனையும், அதனைத் தொடர்ந்து உற்பத்தியும், அதனால் வேலைவாய்ப்பும் குறைந்துவிட்டது.

“என்னுடைய தொழிற்சாலையில் சராசரியாக 10000 பிரேக் உதிரிபாகம் செய்வோம். ஆனால் பணமதிப்பிழப்புக்குப் பின்னர் அது 5000 ஆக குறைந்துவிட்டது.”

என்கிறார் ஐக்கிய சைக்கிள் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவரான சரண்ஜித் சிங் விஷ்வகர்மா.

“நான் சைக்கிளுக்கான கம்பிகள் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை வைத்திருக்கிறேன். சைக்கிள் விற்பனை குறைந்ததால், ஏற்கனவே நான் தயாரித்துக் கொடுத்திருந்த பொருட்களுக்கே இன்னும் பணம் வந்துசேரவில்லை. புதிதாக உற்பத்தி செய்யவும் யாரும் கேட்பதில்லை. அதனால் உற்பத்தியை 30% ஆக குறைத்துவிட்டேன்”

என்கிறார் சிறுதொழில் கூட்டமைப்பின் தலைவரான ஜிண்டால்.

“நான் நட்டு மற்றும் போல்ட் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். சைக்கிள் தயாரிப்பின் மற்ற அனைத்து பொருட்களின் உற்பத்தியும் குறையும்போது, தானாகவே நான் தயாரிக்கும் பொருளில் தேவையும் உற்பத்தியும் குறைந்துவிட்டிருக்கிறது.”

என்கிறார் ஜஸ்விந்தர் துக்ரல்.

“நாங்களாவது வியாபாரத்தைதான் இழந்தோம். ஆனால் எங்களிடம் வேலைபார்த்த ஏழைகள் தான் எல்லாவற்றையும் இழந்து வருமானமே இல்லாமல் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்கின்றனர்.”

என்கிறார் ஐக்கிய சைக்கிள் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரான வரிந்தர் கபூர்.

“சைக்கிள் உற்பத்திக்கு முக்கியத்தேவையான இரும்பு, மாதமொன்றுக்கு சராசரியாக 4000 டன் விற்பனையாகும். ஆனால் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் 300 டன் விற்பதே அதிகமாக் இருக்கிறது”

என்கிறார் லுதியானாவின் இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தியாளர் சங்கத்தலைவரான ஆர்.எல்.சிங்கா.

8.   பின்னலாடைத் திருப்பூரும் பணமதிப்பிழப்பில் தப்பவில்லை:

சுமார் 1200 தொழிற்சாலைகள் முலமாக ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வியாபரத்தை நடத்திக்கொண்டு, 8 இலட்சம் தொழிலாளர்களுக்கும் மேலாக வேலைதந்துகொண்டிருந்தது திருப்பூர் பின்னலாடை நகரம். இந்தியாவின் ஒட்டுமொத்த பருத்தி பின்னலாடையில் 90%த்தை திருப்பூர்தான் உற்பத்திசெய்துவருகிறது. பணமதிப்பிழப்புக்குப் பின்னர், பழைய உற்பத்தியளவில் 40%த்திற்கும் குறைவாகத்தான் உற்பத்தி நடக்கிறதாம் திருப்பூரால். ஏற்றுமதி ஆடைத் தயாரிப்பில் பணம் தான் பிராதனம். ஒரு துணியை செய்துமுடிப்பதற்கு முன்னர், தனித்தனியாக பட்டன் தைப்பதும், காலர் தைப்பதும், அச்சடிப்பதும், அட்டைப்பெட்டி செய்வதும், அதில் துணியை மடிப்பதுமாக வேலைகளை பல்வேறு சிறிய நிறுவனங்கள் செய்துமுடிப்பார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் பணத்தின் மூலமாகத்தான் தங்களது செயல்பாடுகளை ஒருங்கிணைக்க முடிந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், அந்த பந்தம் அறுந்துபோய் யாரிடமும் பணமில்லாத நிலையில் ஒட்டுமொத்த உற்பத்தியே பாதிக்கப்பட்டுவிட்டது.

“எங்கள் சங்கத்தின் கீழ் 2000 நிறுவனங்கள் இருந்தன. அதில் 60,000 முதல் 80,000 பேர்வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெற்றிருந்தனர்.  பணமதிப்பிழப்புக்குப் பின்னர், 2000 நிறுவனங்களில் 30-40% வரை மூடப்பட்டுவிட்டன”

என்கிறார் தென்னிந்திய சட்டைக்காலர்கள் மற்றும் உள்ளாடை தயாரிக்கும் சிறுதொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (SISMA) பொதுச் செயலாளரான கே.எஸ்.பாபுஜி.

கடந்த ஆண்டு தீபாவளியைக் காட்டிலும் இந்த ஆண்டு தீபாவளிக்கு 30% அளவிற்கு திருப்பூரில் ஆடை விற்பனை குறைந்திருக்கிறது. எப்போதும் இல்லாதபடி, குழந்தைகளின் ஆடைகளிலும் 25% விற்பனை குறைந்திருக்கிறது. தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் கூலி, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கொடுக்கும் பணம் என அனைத்தும் நேரடிப்பணத்தால் சுழன்றுகொண்டிருந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி, ஒரேநாளில் சுழலாமல் அப்படியே நின்றது. பீகார், உபி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏறத்தாழ 1 இலட்சம் பேர்வரை திருப்பூரில் இருக்கிறார். அவர்கள் பணமதிப்பிழப்பில் பெருமளவிலி பாதிக்கப்பட்டனர். ஒரு வங்கிக்கணக்கை கூட துவங்கமுடியாத அளவிற்கு சொந்த நாட்டிலேயே அடையாளமற்றுப் போன அந்த மக்களின் துயரம் வார்த்தைகளில் அடங்காது.

(மேலும் சில துறைகளில் என்னென்ன மாதிரியான இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்)

தொடரும்…

-இ.பா.சிந்தன்

Related Posts