அரசியல்

Demonetisation – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? – 1

சொல்லப்பட்ட நோக்கங்களும், டமாலான செயல்பாடுகளும்:

2016 நவம்பர் 8ஆம் தேதியன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமதிப்பில் 86% அளவிற்கு இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தார். அதற்கு மூன்று காரணங்களையும் கூறினார்.

  1. கருப்புப்பணத்தை ஒழிப்பது
  2. கள்ளநோட்டுக்களை செல்லாமல் ஆக்குவது
  3. தீவிரவாதத்தை ஒழிப்பது

இம்மூன்றைத்தான் ஆரம்பத்தில் காரணங்களாக மோடி அறிவித்தார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காக, யாருக்காக, எந்த நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டது என்பதை காலப்போக்கில்தான் நாம் புரிந்துகொள்ளமுடிந்தது.

திட்டம் அமல்படுத்தியவுடனேயே, ‘கண்ணாடியைத் திருப்பினா, எப்படி ஜீவா வண்டி ஓடும்?’ என்றுதான் கேட்கத்தோன்றியது. ஆனால் ஆதாரத்தோடும் நேர்மையான பார்வையோடும் விமர்சித்தால்தானே எதுவொன்றும் சரியாக இருக்கும். அப்பணியினை மோடியரசே எளிமையாக்கியது.

கோடிக்கணக்கான மக்களை நடுத்தெருவில் அலைவைத்தது, நூற்றுக்கணக்கானோர் இறந்தபின்னும் அதுபற்றி வாயே திறக்காதது, எல்லையிலே இராணுவவீரர்கள் தியாகம் செய்யும்போது, இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாதா என்று நாட்டின் குடிமக்களை அசிங்கப்படுத்தியது, புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்காமல் விட்டது, திடீர் திடீரென புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்தது, 50 நாட்களில் அச்சே தின் வரும் என்று சொல்லிவிட்டு எந்த முயற்சியையும் எதிலும் எடுக்காதது, முறைசாரா தொழிலாளர்களும் விவசாயக்கூலித்தொழிலாளர்களும் தங்களை வேலையை இழந்து தவித்ததையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டது, அரசு வங்கிளைக்காட்டிலும் தனியார் வங்கிகளுக்கு சற்று அதிகமான பணத்தை வழங்கியது, ரிலயன்ஸ் நிறுவனத்திற்கெல்லாம் பணத்தைக் கையாளும் அதிகாரத்தை வழங்கியது, பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் சொன்னதையெல்லாம் புறந்தள்ளியது – என அரசின் ஒவ்வொரு அசைவிலும் மக்கள்விரோத திமிர்த்தனம் வெளிப்படையாகவே தெரிந்தது….

அந்த நவம்பர், டிசம்பர் காலகட்டத்தில் ஏராளமானோரிடம் சமூகவலைத்தளங்களில் நடத்திய விவாதங்களையெல்லாம் தொகுத்தாலே தனியாக நூலே வெளியிடலாம். அளவிலாத வதந்திகளையும் பொய்பரப்புகளையும் பாஜகவினர் பரப்பிக்கொண்டே இருந்தனர். அவற்றை ஒவ்வொன்றாகத் தகர்த்து, உண்மைகளை உரக்கப் பேசவேண்டியிருந்தது.

இதற்கிடையில், பணமில்லாப் பரிவர்த்தனைக்கு மாறுவதற்காகத்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று புதிய கண்டுபிடிப்பை பாஜக அரசு வெளியிட்டது. உடனே பாஜக அடிமைகள் அனைத்தும் அதையொட்டியே கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடத்துவங்கிவிட்டனர். மின்சார வசதியே இல்லாத பல்லாயிரக்கணக்கான கிராமங்களை வைத்துக்கொண்டு இவர்கள் டிஜிட்டல் இந்தியா என்று பேசுவதிலிருந்தே இவர்களின் நேர்மையை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

Demonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு? யாருக்கோ…

ஒராண்டு முடிந்திருக்கிற இவ்வேளையில், இது மிகப்பெரிய தோல்வியடைந்த திட்டமென்று மத்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டுவிட்டது, பல பொருளாதா அறிஞர்களும் ஆதாரங்களோடு நிரூபித்துவிட்டனர், மக்களும் நேரடியாக உணர்ந்தும்விட்டனர். ஆனால் உண்மையில் இத்திட்டம் தோல்வியில் முடிந்த திட்டமல்ல. எதற்காக, யாருக்காக, என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அதில் வெற்றிபெற்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இந்திய வங்கிகளிலிருந்து இலட்சக்கணக்கான கோடிகளை கடனாகப் பெற்றுவிட்டு, அதனை வழக்கம்போல் திருப்பித்தராத பெருமுதலாளிகளினால், இந்திய வங்கிகள் திவாலாகும் நிலையில் இருந்தன. வங்கிகள் திவாலாவதைவிடவும், அந்த பணத்திருடர்களுக்கு திருடுவதற்கும் வங்கிகளில் பணமில்லையே என்கிற ஏக்கம்தான் அதிகமாக இருந்திருக்கும்.

‘ஆலம்பனா! நான் உங்கள் அடிமை. இந்த விளக்கை நீங்கள் தேய்த்ததால் நான் வந்திருக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டுமென்று சொல்லுங்கள். அதை செய்யக் காத்திருக்கிறேன்’

என்று அலாவுதீனும் அற்புதவிளக்கும் அசோகன் மாதிரி அம்பானி, அதானி போன்ற கொள்ளைக்காரர்களின் அடிமையான மோடி சலாம்போட்டு காத்திருந்திருப்பார். அவர்களின் ஆணைப்படியே, ஒவ்வொரு குடிமகனின் வீட்டிலிருந்தும் அவர்களது அரிசிப்பானையிலிருக்கும் சில்லரைகளை திட்டமிட்ட திருடிக்கொண்டுவந்து வங்கிகளில் போட்டு, பின்னர் அதனையே மீண்டும் கடனாக ஓசியில் அம்பானிகளும் அதானிகளும் எடுத்துக்கொள்ளும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டமே ‘பணமதிப்பிழப்பு திட்டம்’ (Demonetization). இது தான் உண்மையான நோக்கம் என்பதை ஒராண்டுக்கு முன்னர் சொன்னபோது, எவரும் நம்பத்தயாராக இல்லை. ஆனால் இன்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் வகையில்தான் மோடியரசு நடந்துகொண்டிருக்கிறது.

வங்கிகளுக்கு மேலும் அதிகமான பணத்தை உள்ளீடு செய்தது, பெருமுதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்தது, சுவிஸ் வங்கி, ஜெர்மன் வங்கி, என உலகின் பலநாட்டில் ஒளிந்துகொண்டிருந்து இந்தியாவின் கருப்புப் பணத்தைக் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்காதது என மோடியரசின் செயல்பாடுகள் அனைத்தும், பணமதிப்பிழப்பு திட்டத்திற்கான காரணங்களாக அவர்கள் சொன்னது பொய்யானவை என்றும் அவர்களுக்கு வேறு உள்நோக்கங்கள் இருந்திக்கின்றன என்றும் அவைவெற்றிபெற்றிருக்கின்றன என்றும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

(எந்தெந்த துறைகளின் என்னென்ன மாதிரியான இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை இனிவரும் பகுதிகளில் பார்ப்போம்)

தொடரும்…

-இ.பா.சிந்தன்

Related Posts