அரசியல்

பண மதிப்பிழப்பு நடவடிக்கை “ஒரு இந்துத்துவ புரிதலில் இருந்து”….!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு  அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது.

இந்தளவுக்கு மிகப்பெரிய பேரழிவை, அதுவும் உலகத்தின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றான, ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை உடைய ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிய மிக முக்கிய நடவடிக்கையானதாலோ என்னவோ, இந்த நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் இந்த பரிணாமம் பெரிதாக பேசப்படவில்லை. இந்துத்துவ கண்ணோட்டம் எப்போதும் புராணங்களை விஞ்ஞான நோக்கோடு பார்க்கும், இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளானது இந்திய வரலாறு.  இது போன்ற கண்மூடித்தனமான பார்வை இந்துத்துவத்துக்கே உரித்தானது என்றாலும், இந்துத்துவா அரசியல் கோலோச்சும் தற்போதைய சூழலில், வராலாறு, விஞ்ஞானம் ஆகியவற்றையும் தாண்டி, பொருளாதார தளத்திலும் நமது சமகாலத்தில் நுழைந்துள்ளது.

இந்த  இடத்தில், பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக் அவர்கள் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து தி சிட்டிசன் தளத்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.”இந்திய நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்து கொண்டிருக்கிற இந்த நடவடிக்கையை குறித்து, பல்வேறு பொருளாதார சொல்லாடல்களை பயன்படுத்தி பொய்களை அரசு கூறிக்கொண்டு இருக்கிறது. ஒரு சாதாரன குடிமகன், இதுபோல் கட்டவிழ்த்து விடப்படும் பொய்களை நம்பாமல் இருக்க மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இந்த போலியான வாதங்களை மட்டும்  எதிர்த்து கொண்டிருந்தால் போதாது.  இந்த தர்க்க நியாயமற்ற கண் மூடித்தனமான வாதங்களின் தோற்றுவாய் எது என்று நாம் சற்று கவனிக்க வேண்டும்.

பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி ஒரு ஆழ்ந்த அறிவில்லாத, மிகவும் பின் தங்கிய ஒரு புரிதலில் இருந்து வருவதுதான் இதுபோன்ற யோசனைகள். ஃப்ரன்ட்லைன் நிருபர் ஸ்ரீதர் கூறியது போல, ஒட்டுமொத்த இயக்கத்தையே நிலைகுலைத்தது இந்த பின் தங்கிய சிந்தனை. பொருளாதார அறிஞர் ஜீன் ட்ரீஸ் இந்த நடவடிக்கையை , “பந்தயத்தில் ஓடும் காரின் டயரை குறிபார்த்து சுடுவது போன்றது” என்றார். இந்த நடவடிக்கையை லாரன்ஸ் சம்மர்ஸ்-ல் இருந்து, கவுஷிக் பாசு, பிரபாத் பட்நாயக் வரை, வலது இடது பேதமில்லாமல் விமர்சித்துள்ளனர். இவர்களது எல்லா விமர்சனத்திலும் இழையோடும் ஒன்று, இந்த அடிமுட்டாள்தனமான நடவடிக்கையின் மீது உள்ள விமர்சனமும், நிறைவேற முடியாத நோக்கங்கள்,  மற்றும் அப்பாவி மக்கள் படும் துயரங்களின்பால் இருக்கும் பரிதாபமும் மட்டுமே. ஆனால் மோடியோ இல்லை அவருடன் இருக்கும் துதிபாடிகளோ, உலகெங்கிலும் இருந்து வந்த விமர்சனங்களுக்கு காதுகுடுக்கவில்லை என்பது  நாம் அறிந்ததே.

ஆரம்பத்தில் இருந்தே கருப்பு பணமும் ஊழலும், மட்டுமே இந்துத்துவத்தின் பொருளாதாரத்தை பற்றிய புரிதலாக இருந்துள்ளன. வரலாற்றில் எந்த தருணத்தில் இருந்து இந்த தவறான புரிதலை அவர்கள் வளர்த்துக்கொண்டார்கள் என  சரியாக தெரியாவிட்டாலும், சமீப காலங்களில் ஆர் எஸ் எஸ்  இந்திய நாட்டின் பிரச்சனையாக இந்த இரண்டு விஷயத்தையும் பார்க்கிறதை நாம் கண்கூடாக காணலாம்.

அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை , ஆர் எஸ் எஸ்  கவனத்தில் கொண்டது என்பது முக்கியமான ஒன்று,  2011- 12 ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதி சபாவில், அதன் தலைமை வெளியிட்ட அறிக்கையில் இதைப் பற்றிய குறிப்பை காணலாம். மேலும், இந்துத்வா எழுத்தாளரான எம்.ஜி சித்கரா (வக்கீலான இவர், ஹிமாச்சல பிரதேசத்தின் அட்வகேட் ஜெனரலாகவும் இருந்துள்ளார்) 2003-ல் பதிப்பித்த தனது “இந்துத்துவ பரிவார்” என்ற புத்தகத்தில் தனது இந்த புரிதலை பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளார், “வெளிநாட்டிலும், சுவிஸ் வங்கியிலும் பதுங்கி இருக்கிற இந்திய  வியாபாரிகளின், அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் பணத்தையும், தீவீரவாதிகளின் கணக்கில் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் பனத்தையும் வெளிக்கொண்டுவந்தால்  இந்திய பொருளாதாரம்  புதிய உத்வேகத்தை அடையும்” என்று குறிப்பிட்டு உள்ளார். மோடியும் தீவிரவாதத்தையும், ஊழலையும் ஒழிக்கப்போவதாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது குறிப்பிட்டதை இங்கு நினைவு கூற வேன்டும்.

மேலே குறிப்பிட்ட பத்தி அவரது புத்தகத்தில் “இந்து பொருளாதாரம்” என்ற பகுதியில்  எழுதப்பட்டது. கருப்பு பணமும், ஊழலும் தார்மீகப் பிரச்சனை, ஆதலால் ஒரு தார்மீக நெறிமுறையை கட்டாயமாக்கி, சற்று கடுமையான நடவடிக்கையின் மூலமே  இந்த பிரச்சனையை தீர்க்கமுடியும் என்பதுதான்  இந்த புரிதலின் அடிநாதம்.  இதைத்தான் மோடியும் செய்திருக்கிறார். பாராளுமன்றத்தில் ஏதும் விவாதிக்காமல், எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்ததால் பேருக்கு  வந்து உட்கார்ந்துவிட்டு எதுவும் பேசாமல் எழுந்து  போனது முதற்கொண்டு, மோடி செய்ய முனைந்தது இதைத்தான்.

இது மட்டும் அல்ல , சங் பரிவார அமைப்புகள் கறுப்பு பணத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மோடியின் மீது அழுத்தத்தை தந்த வண்ணமே இருந்தன. பாபா ராம்தேவ் 2016-ம் ஆண்டின்  மத்தியில் “இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், முதலில் கறுப்பு பணத்தின் மீது நடவடிக்கை எடுங்கள்” என்று விமர்சனம் செய்தார், பின் அது விமர்சனமல்ல, வேண்டுகோள் என்று  மோடியுடன் சமாதானம் செய்துகொண்டார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது தான்தான் அதை மோடிக்கு முன்பு ஒருமுறை  பரிந்துரை செய்ததாகவும் சொன்னார்.

மோடியின் இந்த நடவடிக்கை, வெளிநாட்டு வங்கிகளின் மீது  பெரிதாக கவனம் செலுத்தவில்லை, (இத்தனைக்கும் இந்திய அரசு  2019-க்கு பிறகு சுவிஸ் வங்கியில் இந்தியர்களின்  கனக்குகளை  பார்ப்பதற்கு அனுமதி  வாங்கி இருக்கிறது). மாறாக உள்நாட்டு வங்கிகளின் மீது அதிக கவனம் செலுத்தியது இந்த அரசு. ஒருவேளை 2019 வரை  நேரம் இருப்பதால் உள்நாட்டின் பக்கம் கவனம் திரும்பியதோ என்னமோ!! இதன் விளைவு, பழைய சங் பரிவாரத்தின் கண்மூடித்தனமான  புரிதலில் புதிய முட்டாள் தனங்களும் சேர்ந்து கொண்டது! இதன் விளைவாக “அர்த்தக்கிராந்தி பரிஷ்தன்” என்ற திட்டம்!. இதன் தலைவர் அனில் போகில்,  அரசால் தான் பலமுறை இந்த திட்டத்திற்காக அணுகப்பட்டதாகவும்,  இந்த திட்டத்திற்கான விவாதத்தின் போதுதான் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை  பிரதமருக்கு பரிந்துரைத்தாகவும், இது தவிர எல்லா வரிகளிலிருந்தும் விலக்களிப்பதற்கு கூட பரிந்துரைத்ததாகவும் (எவ்வளவு புத்திசாலித்தனம்!!) , ஒன்றரை மணி நேரம் பிரதமருக்கு இதனை விளக்கி வகுப்பெடுத்ததாகவும் கூறுகிறார். பிரதமர் அலுவலகத்திலிருந்து இதுவரை இச்செய்திக்கு  மறுப்பு  எதுவும்  வரவில்லை.

ஆக பண மதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்திற்கு இந்துத்துவத்தின் தனித்துவமான முதல் பங்களிப்பு!!!!  பொருளாதார கொள்கைகளை பொறுத்தவரை வாஜ்பாய் அரசும், மோடி அரசும் காங்கிரஸிலிருந்து துளியும் வேறுபடவில்லை. இதுவரை பாஜக விற்கு  இந்திய பொருளாதார கொள்கை வடிவமைப்பில்  எந்த  பிரத்தியேக பங்கும் இல்லை. மாறாக காங்கிரசை  விட மோசமாக பொருளாதாரத்தை புரிந்துகொண்டதன் விளைவு,  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றை ஒழித்துகட்டி ஏழைகளை பசியில் ஆழ்த்தியது  வேண்டுமானால் இந்திய பொருளாதாரத்திற்கு பாஜக வின் பங்காக  இருக்கலாம்.

இந்த மோசமான பொருளாதாரத்தை பற்றிய புரிதல்களே 2004 பாஜக  வின் படுதோல்விக்கு ஒரு முக்கிய காரணம். 2014 பாஜக ஆட்சிக்கு வந்தது கூட, காங்கிரசின் மீதான  மக்களின் அதிருப்திதான் முக்கிய காரணம். காங்கிரசின் கொள்கைகளை பெயர் மாற்றிப் போட்டுக்கொண்டிருப்பது இந்திய முதலாளிகளுக்கு போதவில்லை,  “இரண்டாம் தலைமுறை சீர்திருத்தங்கள்” என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது. ஆக மோடி அரசு எதையும் புதிதாக செய்யவில்லை என்பதே பன்னாட்டு பொருளாதார அறிஞர்களின் கருத்தாகவும் இருந்தது. இந்த நேரத்தில்தான் சங் பரிவார கூட்டத்தின்  பொருளாதார யோசனையான “பண மதிப்பிழப்பு” நடவடிக்கையை மோடி  நடைமுறைப்படுத்தினார். ஆக,  இது இந்திய முதலாளிகளின் பெருத்த வரவேற்பை பெற்ற  நிகழ்வு என்று கூட கூற முடியாது. சில பெரும்பணக்காரர்கள் இதை  வரவேற்றாலும் அவர்களின் சர்வதேச, பங்குதாரர்கள் இதனை அவ்வளவாக வரவேற்கவில்லை. மாறாக விமர்சிக்கவே செய்கின்றனர்.

சங் பரிவாரத்தின்,  மிக புதிய ஒரு முகத்தை மோடி, பொதுவெளிக்கு காட்டி இருக்கும்  இந்த நேரத்தில், பாஜக வின் பின் காலங்காலமாக நின்று வரும் சிறு வணிகர்களுக்கு, இந்நிகழ்வுக்கு பின் பாஜக வுக்கும் அவர்களுக்கும்  இருக்கும் தூரம் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கான கட்சி என்ற பெயர் வளர்ந்துவரும் நிலையில், இந்த சிறு வணிகர்கள் பாஜக விடமிருந்து அவர்களது கண்மூடித்தனமான மூட நடவடிக்கையின் விளைவால் விலக்கக்கூடும். இதை பாஜக  இப்போதைக்கு குறைத்து மதிப்பிட்டுள்ளது. தனது தவறை பாஜக உணராத நிலையில், எதிர்காலத்தில் இந்த பின்தங்கிய வணிகர்களின் விலகல் இன்னும் அதிகரிக்கக்கூடும்.

– சீத்தாராமன்

Related Posts