அரசியல்

ஜன. 8 பொது வேலை நிறுத்த கோரிக்கைகள்……….

கோடிக்கால் பூதமொன்று இந்திய உற்பத்தி சக்கரத்தை இழுத்து நிறுத்த தயாராகி விட்டது. நாளை வழக்கம் போல முதலாளித்துவ ஊடகங்கள் பந்த் பிசுபிசுத்தது, உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை, கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன, வாகனங்கள் வழக்கம் போல் ஓடின என்று ஏற்கனவே எழுதி வைத்ததை பேசப்போகின்றன. ஆனால் சுமார் 25 கோடி பேர் பங்கேற்கும், இந்திய தொழிலாளி வர்க்கத்தின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜனவரி 8. இந்தியா சந்திக்கிறது.

இரயில் மறியல் சாலை மறியலையும் தொழிலாளிகளுடன் விவசாயிகளும் விவசாய தொழிலாளிகளும் இளைஞர்களும் கரம் கோர்த்து நடத்தவிருக்கிறார்கள். மதியம் 12 மணியிலிருந்து 12:10 வரை 10 நிமிடம் வாகனங்களுக்கும் ஓய்வு கொடுக்க அறைகூவல் விடப்பட்டுள்ளது. ஏன் இந்த வேலை நிறுத்தம் மறியல் வாகன இயக்க நிறுத்தப் போராட்டம் நடக்கிறது? வேலை நிறுத்தம் செய்தால் இந்தியாவின் உற்பத்தி குறைந்து பொருளாதாரத்தில் பின்னடைவு உருவாகுமே என்று கவலைப்படுவோர்க்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் அவசியம் குறித்து ஒரு புரிதலை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. ஏனென்றால் கேரளா போன்று இடதுசாரிகள் வலுவாக இருக்கும் இடங்களில் மக்களுக்கு வேலை நிறுத்த போராட்டங்களின் அவசியமும் அதன் சக்தியும் புரியும். மற்ற பகுதி மக்களுக்கு???…
எனவேதான் இந்த விளக்கம்.

இந்திய தேசம் உலக அரங்கில் வளரும் நாடு பட்டியலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஏன் வளர்ந்த நாடாக மாற முடியவில்லை என்ற கேள்வியையும் வல்லரசு ஆகும் கனவையும் சுமந்து திரியும் வேலையில்லா பட்டதாரிகள் நிறைந்த நாடாகவே தற்போதும் இருக்கிறது இந்தியா. இந்த நிலைமை 1991ல் அறிமுகமான புதிய தாராளமய தனியார்மய கொள்கைக்கு பின்னர் அதிகரித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்க்கு தாரை வார்ப்பதும் அதனால் நிரந்தர வேலை என்ற ஏற்பாடு மறுக்கப்படுவதும், வேலையிழப்பு மற்றும் வேலையின்மை அதிகரிப்பதும் தொடர்கதையாகிப் போனது. 40 ஆண்டுகால இந்திய வரலாற்றில் இல்லாத வேலையின்மை தற்போது ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உற்பத்தி பொருட்கள் மீதான வரி உயரவு காரணமாக ஏற்பட்ட சிறுகுறு தொழில்கள் முடக்கம் வேலையின்மைக்கு பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. இன்னொரு புறம் விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்பு சுருங்கி போனதும், விவசாய உற்பத்தி மற்றும் வருவாய் இழப்பு காரணமாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சி ஸ்தம்பித்து நிற்கிறது. இவற்றை சரி செய்ய வேண்டிய மத்திய அரசு இரண்டாம் முறையாக தனித்த மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான பிஜேபி அரசு மெஜாரிட்டி மக்களை புறக்கணித்து விட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் நலன் காக்கும் நடவடிக்கைகளை செய்து வருகிறது. அது இந்திய பொதுத்துறை நிறுவனங்களையும் வங்கி இன்சூரன்ஸ் போன்ற மக்களின் சொத்துக்களை மட்டுமல்ல தேச பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் உருவாகும் வகையில் இராணுவத்திலும் தனியார்மயத்தை கொண்டு வருகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபவெறியில் மக்கள் மீதும் தொழிலாளிகள் விவசாயிகள் மீதும் அதீத சுரண்டலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இன்னொரு புறம் தொழிலாளிகள் சங்கமாக சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காக போராடும் போது தொழிலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களையும் திருத்தி வஞ்சிக்கிறது மோடி அரசு.

எனவேதான் இந்தியாவை பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டத்திற்கு விவசாய சங்கங்களும், விவசாயத் தொழிலாளிகளும் ஆதரவு தெரிவிப்பதுடன் கிராமப்புற வேலை நிறுத்த அறிவிப்பையும் செய்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் முன்வைக்கும் கோரிக்கைகள் பல. அதில் சிலவற்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

 • அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச கூலி ரூபாய் 21,000 என தீர்மானித்து சட்டம் இயற்று..
 • 60 வயதை எட்டிய அனைவருக்கும் ஓய்வூதியம் 5000 வழங்கிடு..
 • தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக திருத்தியதை திரும்ப பெறு..
 • பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்காதே..
 • கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோட்டார் வாகன சட்டத்தை திருத்தியதை திரும்ப பெறு..
 • பீடி, பட்டாசு போன்ற சிறுகுறு தொழில்கள் அழிவுக்கு காரணமான ஜிஎஸ்டி வரிவிதிப்பை ரத்து செய்…
 • கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை தடுத்திடு..
 • புதிய பென்சன் திட்டத்தை கைவிடு.. பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்து..
 • சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகர், MRB செவிலியர்கள் உள்ளிட்டோர்க்கு காலமுறை ஊதியம் வழங்கிடு..
 • துப்புரவு பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதுகாப்பான பணிச்சூழலை உருவாக்கிடு..
 • பாதாளச்சாக்கடை மரணங்களை தடுத்திட ரோபோ எந்திரங்களை பயன்படுத்து..
 • 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாளாக அதிகப்படுத்தி கூலி 400 ரூபாய் என உயர்த்தி வழங்கிடு..திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்து..
 • வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரைப்படி வேளாண் விளை பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்த பட்ச ஆதார விலை தீர்மானித்திடு..
 • விவசாயிகள் தற்கொலைகளை தடுத்திட அனைத்து வகை விவசாய கடன்களையும் ரத்து செய்.. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் புதிய கடன் வழங்கு. விவசாய நகைக்கடன் வட்டி விகித உயர்வை திரும்பப் பெறு..
 • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து..
 • வேலையின்மை பிரச்சனைக்கு முடிவு கட்டு, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு..

இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்தே இன்றைய வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

உழைக்கும் மக்களே ஒரு தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவேதான் உழைக்கும் மக்கள் உரிமைக்காக இன்றைய வேலைநிறுத்தம் மறியல் போராட்டங்களில் பங்கேற்போம். தேசத்தை பாதுகாப்போம்…

 • பா.ராஜகுரு.

Related Posts