அரசியல்

டெல்லி வன்முறை………

“அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்துள்ளதால் எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை. அவர் இந்தியாவில் இருந்து கிளம்பியது அனைத்து போராட்டக்காரர்களையும் (குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புபாளர்கள்) நாங்களே காலி செய்து விடுவோம்”- இம்மாதம் 23ம் தியதி இவ்வாறு கொக்கரித்தவர் பி.ஜெ.பியின் முக்கிய தலைவரான கபில் மிஸ்ரா. இப்படியான ஒரு வன்முறையை தூண்டும் உரையை நிகழ்த்தும் போது அவரருகே ஒரு காவலரும் பாதுகாப்புப் பணியில் இருந்தார்! தில்லியில் குடியுரிமை சட்ட ஆதரவு பேரணியின் முடிவில் தான் இந்த வன்மம் நிறைந்த உரை நிகழ்த்தப்பட்டது. இதே தலைவர் தான் “இது வெறும் தேர்தல் அல்ல. இது இந்தியாவிற்க்கும் பாகிஸ்தானுக்கும்
நடக்கும் போர்”, என வன்மம் விதைக்கும் விதமாக பேசியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்யக் கூடாது என்கிற ‘மிகப்பெரும்’

தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த வன்முறையை தூண்டும் பேச்சு தற்போது வரை 40க்கும் அதிகமான உயிர்களை காவுவாங்கியுள்ளது.

தில்லி ஷகின் பாக் பகுதியில் தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவு பகல் பாராமல் பெண்களும், குழ்ந்தைகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சமூக நல்லிணக்கத்திற்க்கு எடுத்துக் காட்டாக பல நிகழ்வுகளும் ஷகீன் பாக் போராட்டக் களத்தில் நடைபெற்ற வண்ணம் இருந்தது.கபில் மிஸ்ராவின் தூண்டல் உரைக்குப் பின்னர் சந்த் பாக், ஜாப்ராபாத் பகுதிகளில் இஸ்லாமியரக்ள் வீடுகள், வியாபார தலங்கள் மீது கல் வீச்சு தாக்குதல்கள் துவங்கின.
பிப்ரவரி 24ம் தியதி மவுஜ்பூர் பகுதிக்கு வன்முறை பரவத் துவங்கியது. இங்கும் பெருமளவிலான கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின. அன்றைய தினம் இரவு கோகல்புரி டயர் சந்தையில் தீ வைப்பு சம்பவம் நடந்தேறியது. இப்பகுதி இஸ்லாமியர்கள் அதிகமாக தொழில் செய்யும் பகுதி. இஸ்லாமியர்களின் கடைகள் குறிவைத்தே தாக்கப்பட்டன. இரு நாட்களாக வன்முறை தொடர்ந்த போதும் அமெரிக்க அதிபரின் இந்திய விஜயத்தின் மீது தான் கவனம் செலுத்தப்பட்டதே தவிர தில்லி காவல்த்துறையை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் உள்த்துறை அமைச்சகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அடுத்த நாளான பிப்ரவரி 25 தில்லி மக்களுக்கு மேலும் கசப்பான கொடூர அனுபவங்களை கொடுத்தது. கலவரம் கஜூரி காஸ், யமுனா விகார், ப்ரிஜ்புரி உள்ளிட்ட மற்ற பகுதிகளுக்கும் பரவியிருந்தது. ஒரு பெரிய வீட்டில் இருந்த இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 20க்கும் அதிகமானோரை ஒரு கும்பல் உயிரோடு தீ வைத்து கொளுத்த முயன்ற சம்பவமும் அரங்கேறியது. அன்றைய தினமே கலவர கும்பலால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மதச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சிலர் தங்களது ஆடையை களைந்து தங்கள் மதத்தை நிறுவ வேண்டிய நிலையும் உருவானது. மதச் சோதனையில் தோல்வியடைந்த இஸ்லாமியர்களின் நிலை அச்சில் ஏற்ற இயலா வண்ணம் பெரும் துயரம் வாய்ந்தது என்பதை சொல்லி அறிய வேண்டியதில்லை.
இச்சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நேரத்தில் தில்லி காவல்த்துறை வெறும் பார்வையாளர்களாகவும், கலவரக்காரர்களின் உதவியாளர்களாகவும் மாறிப் போயினர். காவல்த்துறையின் கட்டுப்பாட்டு அறைகளும் பாதிக்கப்பட்டோரின் அவசர அழைப்புகளுக்கு செவிசாய்க்க மறுத்தன. அகாலி தள் கட்சியின் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் தங்களது அழைப்புகளுக்கு எந்த பதிலும் கிடைக்காத கையறு நிலையை கடிதம் மூலம் மத்திய உள்த்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர். சாதாரண மக்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நம்மால் எளிதில் ஊகிக்க முடியும்.
நிலைமை கைவிட்டு செல்வதை உணர்ந்த தில்லி உயர் நீதிமன்றம் நள்ளிரவு கூடு காவல்த்துறையை நோக்கி கேள்விக் கணைகளை தொடுத்தது. கேள்விகளை கேட்கும் உரிமைகளை நீதிமன்றங்கள் இழந்துவிட்டதாக கருதும் மத்திய அரசு, நீதியரசர் முரளிதர் அவர்களை அன்றைய தினமே பணியிட மாற்றம் செய்தது. அரசு வழக்கறிஞரிடம் நிதியரசர் நிலைமை அத்துமீறி செல்கிறதே வன்முறையை தூண்டியவர்கள் மீது வழக்கு பதிய ஏன் தாமதம் என கேள்வி கேட்டதை நமது மத்திய அரசால் எவ்வாறு பொறுத்துக் கொள்ள இயலும்? புதிய நீதிபதியால் விசாரிக்கப்பட்ட பின் நான்கு வாரங்கள் பொறுத்து வழக்குப் பதிவு செய்தால் போதுமானது என்ற மத்திய அரசு விரும்பிய தீர்ப்பும் வழங்கப்பட்டது. ஒய்வு பெற்ற தில்லி காவல் கண்காணிப்பாளர் அஜய் ராஜ் ஷர்மா, தான் பதவியிலிருந்திருந்தால் அனுராக் தாகூர் மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோரை கைது செய்திருப்பேன் என்றும், தில்லி காவல்த்துறை மதம் சார்ந்து செயல்படுவதாக தான் அஞ்சுவதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • நீலாம்பரன்.

Related Posts