சமூகம்

21 ஆம் நூற்றாண்டிலும் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்த தந்தையின் மரணம் …

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதில் ஒரு குழந்தையிடம் உன் பெற்றோர் உன்னை எதற்கு திட்டுவார்கள்? என்கிற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அந்தக் குழந்தையின் பதில் இயல்பாக ‘ஹோம்வொர்க் செய்யலைனா திட்டுவாங்க’ என்றிருந்தது. ஆனால் தகப்பன் ‘எச்சில் பண்ணினா திட்டுவேன்’ என்றார். இந்த நிகழ்ச்சியைப் பார்த்ததும் பிராமண வளர்ப்பு முறை சட்டென நினைவுக்கு வந்தது.

சனாதன தர்மத்தைக் கடைப் பிடிப்பதில் மனுவின் ஏகப் பிரதிநிதியாக இருந்து சில மாதங்களுக்கு முன் மறைந்த என் தந்தையின் வாழ்வு இந்தக் கேள்வி பதில் மூலம் மனதை ஆக்கிரமித்தது. இன்னும் எத்தனை குடும்பங்களில் இது தொடர்கிறதோ என்ற சிந்தனையை இது உருவாக்கியது.

என் தந்தை ரயில்வே துறையில் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். ஆனாலும் இறுதிவரை சாதி ஆச்சாரங்களைக் காப்பதிலும் பெண்ணடிமைத்தனத்தை சரியாகப் பேணுவதிலும் ”சிறந்த குடும்பத் தலைவராக” இருந்தார். அவர் எந்த சாதி சங்கத்திலும் எப்போதும் சேர்ந்திருந்ததில்லை எனும் போதிலும், அவர் மறைவின் போது வந்திருந்த ஆண்களும் பெண்களும் என் தந்தையின் பெருமையாகக் கருதி சிலாகித்தது, அவர் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த ஆச்சாரத்தை எனும்போது எனக்கு அதிர்ச்சியாகக் கூட இருந்தது.

பணிபுரியும் இடத்தில் அவர் லஞ்சம் வாங்காத நேர்மையாளராக, எந்த சூழலிலும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதவராக, ஏமாற்றாதவராக, சொத்துக் குவிப்பதில் நாட்டமில்லாதவராக இருந்தார். பொதுவாக அமைதியான குணத்தோடு இருந்ததால் அக்கம்பக்கத்து மனிதர்களிடத்திலும் அவருக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார். இதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சி கொடுப்பவைதான். ஆனால் மற்றவர்களிடம் அவரின் இந்த குணங்கள்தான் ஏற்றம் பெற்றதா என்பது கேள்வியாகவே இருந்தது.

சாதி ஆச்சாரத்தின் பேரால் முதலில் அருவெறுப்புணர்வு வளர்ப்பில் இயல்பாக ஊட்டப்படுகிறது. சாதாரண காலத்தில் குளித்த பிறகும், பண்டிகை நேரங்களில் அழுத்தமாகவும், அதட்டலாகவும் அப்பாவும், அம்மாவும் திரும்பத் திரும்ப வலியுறுத்துவது ‘தொடாதே’ என்பதைத்தான். பண்டிகை என்றால் கொண்டாட்டம் என்பதற்கு பதிலாக இந்தச் சொல்தான் நினைவில் நிற்கும். ஒருவரின் இறுதிச் சடங்கென்றாலும் நிலைமை இதேதான்.

கடந்தகாலத்தில் என் வீட்டில் நிகழ்ந்த மரணங்களின்போது துக்கம் விசாரிக்க வந்த சில தோழர்களும், கணவர் வீட்டு உறவினர்களும் அதிர்ச்சியடையும் வகையில் ‘தள்ளு தள்ளு, தொடாதே’ என்ற வார்த்தையின் சூட்டை உணர்ந்தார்கள்.

இலையில் சாப்பிடலாம் அல்லது வெள்ளித்தட்டில் சாப்பிட்டுக் கழுவினால் ஆச்சார தோஷமில்லை. மற்றபடி நாம் சாப்பிடும் வேறு எந்த தட்டைக் கழுவினாலும் தனி இடத்தில் வைக்க வேண்டும். மறந்து அதனை தொட்டுவிட்டாலும் கை கழுவ வேண்டும். தனியாக வைக்கப்படும் தட்டினை சாப்பிட எடுக்கும்போது, வேண்டாத ஒரு பொருளை எடுக்கும் உணர்வே நமக்கு உருவாகும். சமைத்த உணவுப் பொருள் ‘பத்து எனப்படும். சாப்பிட்டால் கையில் எச்சில் ஒட்டாது என்றாலும் கைகழுவ வேண்டும். பெட்டிக்கடையில் பொருட்களை வாங்க எங்களை அனுமதித்ததில்லை. முறுக்கும், பீடியும் ஒரே கையில் எடுப்பார்கள் என அதற்கு காரணம் சொல்லப்படும்.

நகரப் பேருந்தில் அப்பா தன் மரணம் வரையிலும் பயணித்ததில்லை. நாங்களும் எங்கள் 17 வயது வரை நகரப் பேருந்தில் ஏறியதில்லை. வேலை செய்யும் இடத்தில் அப்பா சாப்பிட மாட்டார். காபி கூட வீட்டில் இருந்துதான் கொண்டுபோவோம். 10, 12 வயதிலும் எங்கள் மீது பாத்திரம் பட்டுவிடாமல், ஜாக்கிரதையாகக் கொண்டுபோவோம். அவருடன் பணிபுரிந்த ஒருவர் தலித் என்பதால் அவர் ஷிஃப்ட் மாறிச் செல்லும்போதெல்லாம் நாற்காலிக்கு தண்ணீர் தெளித்து விட்டுத்தான் அமர்வார் அவர். பேண்ட், சட்டை போடுவது சாதி ஆச்சாரத்திற்கு ஒவ்வாது என்பதால் ரயில்வே கார்டு, ஸ்டேசன் மாஸ்டர் போன்ற பதவி உயர்வுகள் கிடைத்தபோது, அவற்றை மறுத்துவிட்டார். வீட்டில் ஆச்சாரம் கருதி வெங்காயம், பூண்டு சமைப்பதில்லை. இதன் காரணமாக நான் 12 ஆம் வகுப்பு பாடங்களைப் படிக்கும்போது அவற்றின் வடிவம் எப்படி இருக்கும் என்று தெரியாமல் முழித்தேன். உயிரியல் பாடங்களில் முட்டை பற்றி வரும்போதும் இதே நிலைதான். முட்டை என்ற வார்த்தையை வாய்விட்டுப் படிக்காதே என்று அதட்டுவார் அப்பா.

ஒரு நாள் என் அம்மாவைத் தேள் கடித்துவிட்டது. வலி தாங்கமுடியாத வேதனையில் அவர் துடித்தார். ஆனால், அம்மாவைத் (சுமங்கலி) தவிர யாரும் அப்பாவின் உணவைச் சமைக்கக் கூடாது என்பதில் அவர் பிடிவாதமாக இருந்தார். உயிர் போகும் வலி நேரத்திலும், மனிதத் தன்மையற்ற முரட்டுத் தனத்தோடு அவர் நடந்துகொண்டார். அம்மாவும் மறுப்பேதும் சொல்லாமல் சமைத்துக் கொடுத்தார்.

வேற்று சாதியினர் யாராக இருந்தாலும், அவர் என்ன படித்திருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும் வாசலில்தான் நிற்க வேண்டும் என்பது அப்பாவின் நிலை. 2005 ஆம் ஆண்டு வரையில் என் கணவரும் அப்படித்தான் நிறுத்தப்பட்டார். அவருக்கு தண்ணீர் கொடுத்தால் கூட தண்ணீர் தெளித்து உள்ளே கொண்டு செல்லப்படும். தலித் என்றால் அவர்களுக்கு கையைக் குவிக்கச் சொல்லி உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றப்படும். இதனால் ஏற்படும் தர்ம சங்கடத்தை என்னைப் போலவே, சாகோதர சகோதரிகளும் உணர்ந்தார்கள். ஆனால், எனக்கும் என் பெரிய அண்ணனுக்கும் இது குற்ற உணர்வை உருவாக்கியது. ஒருமுறை என் உடன் பணியாற்றும் ஒருவரிடம் இதுபோல நடந்துகொண்டதைக் கேள்விப்பட்ட என் கணவர், நேரடியாக அப்பாவிடம் சீறிவிட்டார். அதன் பின்னர் அப்பா எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதுதான் அப்பாவின் வாழ் நாளில் சந்தித்த முதல் சீற்றம் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது.

என் அம்மாவுக்கு 13 வயது இருக்கும்போது அப்பாவுடன் திருமணம் நடந்தது. 15 வயதிலிருந்து குடும்ப வாழ்க்கையை அவர்கள் தொடங்கினார்கள். அப்பாவோடு பிறந்த தங்கைக்கும் அதே 13 வயதில் திருமணம் நடந்தது. அவர் பெரிய பெண்ணாகிய 14 வயதில் மாமா வீட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது மாமா காலரா நோய்தாக்கி பின் மரணமடைந்தார். திருமண வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாத பால்ய வயதில் விதவையானார் அத்தை. அதுமுதல் அவர் எங்கள் வீட்டில்தான் வசிக்கிறார்.

எங்கள் வீட்டின் எல்லா கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து எங்களையெல்லாம் வளர்த்து ஆளாக்கினார். அனைத்து வீட்டு வேலைகளையும் சலிக்காமல் செய்வார். ஆனால், அவரின் இந்தக் கடின உழைப்பைப் புரிந்துகொள்ளச் செய்யும் விதத்தில் பெற்றோர் பேசியதில்லை. அத்தையின் மரணம் வரைக்கும், அவரின் கையால் ஒரு காபியைக் கூட அப்பா குடித்ததில்லை. அப்பாவின் இறுதிக் காலம் நெருங்கும்போது, என் சகோதரி விதவையானார். அவருக்கும் அதே ஒதுக்குதல்தான். அத்தையோ, அக்காவோ அப்பாவிடம் இதற்காக வாதாடவோ, எதிர்ப்பைக் காட்டவோ இல்லை. ‘விதவைப் பெண்கள் காவி உடுத்தி, மொட்டையடித்துக் கொள்ள வேண்டும்’ இல்லாவிட்டால் இப்படித்தான் என்பது அவரின் நியாயம்.

ஒரு பெண்ணுக்கு மாதம் மாதம் வீட்டு விலக்காகும்போது வெளித் திண்ணையில் அமர வைப்பதும், அந்தப் பெண்ணை தீண்டாமல் ஆச்சாரம் கடைப்பிடிப்பதிலும் எங்கள் குடும்பம் உறுதியாக இருந்தது. உணவு பரிமாறும்போது கூட அதே இடைவெளியைப் பாதுகாத்து, நாய்க்கு வீசும் சோற்று உருண்டை போலத்தான் உணவைப் பரிமாறுவார்கள். குளித்த பிறகு, மாதவிலக்கானவர்கள் அவர்கள் கண்ணில் படக்கூடாது.

இன்றைக்கு இந்த அளவு ஒதுக்குதல் இல்லாவிட்டாலும், பண்டிகை காலங்கள், பூசைகளின் போது மாத்திரைகளை உட்கொண்டு மாதவிலக்கைத் தள்ளிப்போடும் வழக்கம் பெண்களிடையே உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்த எங்களுக்கு வெளியில் உள்ள சமூகத்தை எதிர்கொள்வது மிகுந்த தடுமாற்றத்தைக் கொடுத்தது. எனக்கும், பெரிய அண்ணனுக்கும் கம்யூனிச இயக்கத்தின் அறிமுகம் கிடைத்ததால், ஓரளவு இது சுலபமானது. மற்றவர்களுக்கு இன்னும் ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும் என்ற நிலைமைதான். ஆண் செய்யும் தவறுகள் எல்லாம் காயத்திரி ஜபம் செய்தால் அன்றைக்கே மறைந்துவிடும் என்பதை அப்பா அடிக்கடி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.

சாதிக்கும், பெண்ணடிமைத்தனத்திற்கும் எதிராக சிறு வயதிலிருந்தே என் மனநிலை திரும்பியது. அந்த வாழ்க்கையிலிருந்து விலகவே மனம் எத்தனித்தது. சாதி மறுத்து மணம் புரிந்த பிறகு, பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இதுபோன்ற சாதி ஆதிக்க மனநிலை பல விதங்களில் பரவிக்கிடப்பதை உணர்ந்தேன். அதற்கு எதிராகவும் கடுமையான போராட்டத்தை நடத்த வேண்டிவந்தது. இப்படி பல விசயங்களை, மிக நீண்டகாலமாக என் அப்பாவின் தவறுகள் என்று மட்டுமே புரிந்துவைத்திருந்தேன். ஆனால் புத்தக வாசிப்பும் அனுபவமும், அவர் மனுவின் தீவிர பிரதிநிதியாக இருந்ததைப் புரியவைத்தன. அவரின் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் அடிப்படையாக மனு வின் கொள்கைகளே அமைந்திருந்தன.

பேராசிரியர் அருணன் எழுதிய தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு கால சமூக சிர்திருத்த இயக்க வரலாறு’ என்ற புத்தகம் வாசித்தபோது அது இன்னும் தெளிவானது. மனுவின் வர்ணாசிரம தர்மம் – பெண்ணடிமைச் சிந்தனைகளையும், சாதி ஒதுக்குதலையும் நடத்தை விதிகளாக்கியிருக்கிறது. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் ‘சொல்லவே முடியாத கதைகளின் கதை’ என்ற சிறுகதைத் தொகுப்பின் வாசிப்பு, ஒரு பிராமணக் குடும்பத்தின் பெண்ணுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கும் உள்ள நேர்கோட்டு உறவைக் காட்டியது. ‘பண்பாடு என்றாலே பெண் தானே இலக்கு’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன. மனுவின் கொள்கைகளை மத ஆச்சாரம், சனாதன தர்மம், கலாச்சாரம், பண்பாடு என எந்த வகையில், எந்த வார்த்தையில் பயன்படுத்தி – அதனை உயர்வுபடுத்தினாலும், பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த சமூகமும், குறிப்பாக பெண்களும்தான். நாம் நம் ஒவ்வொரு நடவடிக்கையிலும், மனுவின் பிரதிநிதிகளை எதிர்த்து மாற்ற வேண்டும்.

Related Posts