தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா !

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 11

(முந்தைய பகுதி: 8 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 10)

பிரஞ்சுப் பொதுமக்களைப் பற்றி மார்க்ஸ் கூறியது இது

பிரஞ்சுப் பொதுமக்கள் எப்போதுமே ஒரு முடிவுக்கு வர அவசரப்படக்கூடியவர்கள்; பொதுவான கோட்பாடுகளுக்கும், தங்களது உணர்ச்சிகளைக் கிளறி விட்டுள்ள உடனடிப் பிரச்சனைகளுக்கும் இடையிலான தொடர்பை அறியத் துடிப்பவர்கள்“ (பக்கம்42)

இது பிரஞ்சுப் பொதுமக்களுக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாசகமல்ல நமக்கும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். மூலதனத்தின் இயங்கு விதிகளைப் பற்றிய புரிதல் மூலதனத்தை வாசிப்பதற்கு முன்பே ஏற்பட்டுவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்மில் அதிகம். ஆகவே நூலை அலமாரியில் வைத்துக் கொண்டே படித்துவிட்டதாக தங்கள் விருப்பத்திற்கு விளக்கம் கொடுப்பவர்கள் அதிகம். மூலதனம் ஒருபுறம் கிடக்கட்டும் அந்த மாபாவி மோடி எப்படி தேர்தலில் ஜெயிக்கிறான்? ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மதஉணர்வை தூண்டிவிட்டு பல்லாயிரம் பேரை கொன்று குவித்தவன் என்று தெரிந்திருந்தும், அதனால் என்ன அவனுக்குத்தான் வாக்களிப்பேன் என்று ஒரு கூட்டம் வாக்களிக்கிறதே. இது எப்படி சாத்தியமாகிறது என்று தங்கள் உணர்ச்சிகளை கிளறிவிட்டுள்ள இந்த உடனடிப் பிரச்சனைக்கும் மார்க்சிய கோட்பாட்டிற்கும் உள்ள தொடர்பை கூறுங்கள் என்று பலர் கேட்கிறார்கள். எங்களுடைய மூலதன அமர்வில் இது போன்ற கேள்விகளே அதிகம் முன்னுக்கு வந்து எங்களுடைய அமர்வு விவாதத்தை திசை திருப்பியிருக்கின்றன. மீன்காரனுக்கு தக்கைமேல் குறி என்பதற்கிணங்க நாங்கள் அதையெல்லாம் விவாதிக்காமல் மூலதன நூலை மட்டுமே விவாதித்து வந்திருக்கிறோம். இதற்கு அர்த்தம் இதற்கெல்லாம் மார்க்சிய கோட்பாட்டினடிப்படையில் விளக்கமளிக்க முடியாது என்பதல்ல, ஒரு நேரத்தில் ஒரு பிரச்சனையை குவிமையமாக வைத்து செயல்பட்டால்தான் குறைந்த ஒரு பிரச்சனையிலாவது நாம் முன்னேற முடியும் என்பதுவே இந்த அணுகுமுறையை எனக்கு கற்றுக் கொடுத்தது மார்க்சின் கீழ்க்கண்ட வாசகங்களே

விஞ்ஞானத்திற்கு ராஜபாட்டை ஏதுமில்லை; அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாயப்புண்டு“ (பக்கம் 42)

.

மூன்றாவது ஜெர்மன் பதிப்பு நவம்பர் 1883ல் வெளியாகிற பொழுது மார்க்ஸ் உயிருடன் இல்லை. ஆகவே அந்தப் பதிப்பிற்கு முன்னுரையை ஏங்கெல்ஸ் எழுதுகிறார். அதில் குறிப்பிடுகிறார் :

மார்க்சை இழந்ததன் மூலம், எனது மிகச் சிறந்த, மிக உண்மையான நண்பரை, நாற்பதான்டு காலம் நண்பராய் இருந்தவரை சொல்லிலடங்காத அளவுக்கு நான் கடன்பட்டுள்ள நன்பரை இழந்துவிட்டேன்.“ (பக்கம் 44)

இது தவிர மார்க்ஸ் தனது நூலில் மேற்கோள் காட்டப்படும் எழுத்துக்கள் எந்த அடிப்படையில் மார்க்சால் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஏங்கெல்ஸ் விளக்குகிறார். அவர் கூறுகிறார் :

மேற்கோள்கள் முற்றிலும் உண்மை விவரக் கூற்றுகளாக அல்லது விவரணங்களாக இருக்கும் போது. எளிய ஆவண நிரூபணமாகப் பயன்படுகின்றன என்பது உண்மையே. உதாரணம் : ஆங்கிலேய நீலப்புத்தகங்களிலிருந்து தரப்படும் மேற்கோள்கள். ஆனால் ஏனைய பொருளாதார அறிஞர்களின் த்த்துவக் கருத்துகள் எடுத்துக் காட்டப்படும் போது சங்கதி இதுவன்று. எங்கே, எப்போது, யாரால் என்பதைக் கூறுவது மட்டுமே மேற்கோளின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேசப்படும் பொருளாதாரக் கருத்தோட்டம் இவ்விஞ்ஞானத்தின் வரலாற்றுக்கு ஒரளவு முக்கியத்துவமுடையதாக இருக்க வேண்டும், அது தன் காலத்திய பொருளாதார நிலைமையின் ஏறக்குறைய பொருத்தமான தத்துவ தெரிவிப்பாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே இங்கு நோக்கம்.“ (பக்கம் 46)

ஏங்கெல்ஸின் மறைவுக்கு முன்பாகவே நான்காவது ஜெர்மன் பதிப்பு வெளியாகிறது. இதற்கும் ஏங்கல்ஸே முன்னுரை எழுதுகிறார். மார்க்சின் மீதின் பேராசிரியர் பிரெண்டானோவின் விமர்சனத்திற்கு விளக்கம் அளிக்க இம்முன்னுரையை ஏங்கெல்ஸ் பயன்படுத்துகிறார்.

ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வல்லமை படைத்தவர் பேராசிரியர் பிரெண்டானோ. இவர் கன்கார்டியா (Concordia) என்ற இதழில் பெயர் குறிப்பிடாமல் ஒரு கட்டுரை எழுதினார். இந்த ஏடு ஜெர்மானியத் தொழிலதிபர்கள் நடத்தும் ஏடு. இந்த ஏட்டின் 02-03-1872 தேதியிட்ட இதழில் “மார்க்ஸ் எப்படி மேற்கோள் காட்டுகிறார்“ என்ற தலைப்பில் எழுதினார். அதில் மூலதன நூல் பக்கம் 876ல் மேற்கோள் காட்டப்படும் பிரித்தானிய நிதியமைச்சரின் பேச்சு மார்க்ஸால் திரித்துக் கூறப்பட்டு காட்டப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். மகத்தான ஒரு அறிவுப்பணியாக வெளிவந்த மூலதன நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி பேசத் துப்பில்லாத அந்த பேராசிரியர் மேற்கோள் தவறு என்றும் அது இட்டுக்கட்டி எழுதப்பட்டது என்றும் கூறி மார்க்சின் ஒட்டுமொத்தப் பணியையும் நிராகரிக்கும் வேலையில் இறங்கினார்.

கன்கார்டியா இதழின் அனாமதேயக் கட்டுரைக்கு மார்க்ஸ் பதிலளித்து ஃபோல்க்ஸ்தாத் என்ற பத்திரிக்கையில் 01-06-1872 தேதியிட்ட இதழில் பதில் எழுதினார். மார்க்ஸ் குறிப்பிட்டது தி டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியான செய்தி ஆனால் உண்மையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பேசியதைக் குறிப்பிட வேண்டுமானால் அவர் பாராளுமன்ற அதிகாரபூர்வ அவைக்குறிப்பிலிருந்து எடுத்து மேற்கோள் காட்டியிருக்க வேண்டும் என்று மேற்கோள் காட்டுவதன் ‘இலக்கணத்தை‘ குறிப்பிடுகிறார் பேராசிரியர் பிரெண்டானோ, 04-07-1872 மற்றும் 11-07-1872 ஆகிய தேதியிட்ட கன்கார்டியா இதழ்களில் எழுதினார். மூன்றாவது ஜெர்மன் பதிப்பின் முன்னுரையிலேயே மேற்கோள் பற்றிய மார்க்சின் அணுகுமுறையை ஏங்கல்ஸ் எடுத்துக் காட்டியிருக்கிறார். தொழிலாளர்கள் நிலைமை மோசம் என்ற ஒப்புதல் வாக்குமூலமாக அமைச்சரின் பேச்சு இருந்திருக்கிறது என்பதற்காகவே மார்க்ஸ் அந்த பேச்சைக் குறிப்பிடுகிறார். அமைச்சர் அப்படிப் பேசியிருக்காவிட்டாலும் தொழிலாளர்கள் நிலைமை மோசம்தான். .

மீண்டும் பிரெண்டானோவிற்கு ஆகஸ்ட் 7, 1872 தேதியிட்ட்ட ஃபோக்ஸலாந்து பத்திரிக்கையில் பதில் எழுதினார். இதற்கு ஆதாராமாக மார்னிங் ஸ்டார் மார்னிங் அட்வர்டைசர் ஆகிய பத்திரிக்கைகளிலும் வெளியான அமைச்சரின் பேச்சை எடுத்துக் காட்டியிருந்தார். இதில் கூத்து என்னவென்றால் அனாமதேயப் பேரில் எழுதி வந்த பேராசிரியர் பிரெண்டானோவைப் மார்க்ஸை அம்பலப்படுத்தியதில் வல்லவர் என்று பாராட்டி தி டைம்ஸ் பத்திரிக்கையில் செட்லி டைலர் என்பவர் எழுதியதன் மூலம் இதுவரை நிழல் யுத்தம் நடத்தியது பிரெண்டானோதான் என்று அம்பலமாகியது.

பாராளுமன்றத்தில் பேசிய பிரிட்டிஷ் நிதியமைச்சரின் பேச்சு பத்திரிக்கைகளில் வெளியானவுடன் ஹன்சார்டு எனப்படும் அரசிழில் வெளியாவதற்குமுன் தன்னுடைய பேச்சைபே அரசிழில் திருத்தி முதலாளி வர்க்கத்திடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்த பேர்வழியவர். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று இன்று பேசுவதை அன்றே நடைமுறைப்படுத்தியவர் அமைச்சர் கிளாஸ்டன். மார்க்ஸ் கூறுகிறார்

தானே பின்னர் புரட்டி சரிகட்டிய வாசகத்தில், திரு கிளாட்ஸன் சாமர்த்தியமாக இந்தப் பகுதியை நீக்கிவிடுகிறார். ஏனென்றால் ஆங்கிலேய நிதியமைச்சர் ஒருவரின் வாயிலருந்து இப்படியொரு கூற்று வெளியாவது நிச்சயமாக அவரை சந்தேகத்துக்குரியவராக்கும். இது ஆங்கிலேய பாராளுமன்றத்தில் பரம்பரையாக வழக்கத்திலிருக்கும் நடைமுறைதான், பேபலுக்குக்கெதிராக சிறியவர் லாஸ்கர் செய்த விஷமம் அன்று“ (பக்கம் 51)

பிரெண்டானோவின் அனாமதேயக் கட்டுரையில் அந்த பேராசிரியர் நிதானமிழந்து வார்த்தைகளை பயன்படுத்துவதைப் பற்றி ஏங்கெல்ஸ் குறிபிப்பிடுகிறார்

மேலே நாம் காட்டியதைப் போல் அவரது கட்டுரை “வாய் கூசாத பொய்மையின்“ உருவாகத் திகழ்கிறது என்றாலும். “நயவஞ்சக்ம்“. “அயோக்கியத்தனம்“, “பொய்யுரை“, “அந்த போலி மேற்கோள்“, “வாய் கூசாத பொய்மை“, “முற்றிலும் பொய்யாகத் திரிக்கப்பட்ட மேற்கோள்“, “இந்த தகிடுதத்தம்“, “மானவெட்கமின்மை“ போன்ற கூப்பாடு போடும் வசைச் சொற்கள் கட்டுரையில் இடையிடையே சிலித்தெழுகின்றன என்றாலும் பிரச்சனையை திசைதிருப்புவது அவருக்கு அவசியமாகிவிடுகிறது“ (பக்கம் 52)

மார்க்ஸின் கருத்துக்களுக்கு பதில் கூறமுடியாத அந்த பேராசிரியர் பயன்படுத்தும் வார்த்தைகளை ஏங்கெல்ஸ் அம்பலப்படுத்துகிறார் இந்த முன்னுரையில், ஆக 55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்..

….தொடரும்

Related Posts