தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மழையால் தவளைகள் கத்தியதா? தவளைகள் கத்தியதால் மழை வந்ததா?

அது ஒரு மழைக்காலம். வானம் இருட்டிக் கொண்டு வந்து அடைமழை பிடித்துக் கொண்டது. சோவென மழை கொட்டி தெருவெங்கும் தண்ணீர். தெருவில் விழும் தண்ணீர் ஓயாமல் ஓடி ஒரு பள்ளமான இடத்தை அடைகிறது. இந்தக் காட்சி இரண்டு நாட்கள் தொடர்கிறது. வறண்ட அந்த பள்ளமான பகுதியில் குளிர்ந்த தண்ணீர் தேங்கியிருக்கிறது. மழைத்தூறல் இன்னும் விட்டபாடில்லை. அந்த இரண்டு நாட்களுக்குள் அந்த குளிர்ந்த தண்ணீரில் தவளைகள் தோன்றிவிட்டன. நேற்று தலைப்பிரட்டையாக இருந்த தவளைகள் இன்று குஞ்சுகளாகி மாலை பெரிய தவளைகளாகி கூச்சல் போட ஆரம்பித்துவிட்டன. மழை சற்று குறைந்திருந்தது எனினும் தூவானம் விடவில்லை. தினமும் அந்த வழியாக நடைபயிற்சி செல்லும் முதியவர் ஒருவர் தலையில் முக்காணியைப் போட்டுக் கொண்டு நடந்து வருகிறார். வறண்ட பள்ளத்தில் முழுக்க தண்ணீர். செவிப்பறையைக் கிழிக்கும் தவளைகளின் உற்சாகமான கூச்சல். அடடே! இந்தத் தவளைகள் வந்து இப்படிக் கத்தி இந்த மழையைக் கொண்டுவந்துவிட்டனவே என்று ஆச்சரியத்தில் மூழ்கினார் பெரியவர். தான் கண்டுபிடித்த செய்தியை ஊருக்குள் அறிவிக்கிறார். ஊரே திரண்டு வந்து அந்தப் பள்ளத்தில தேங்கி நிற்கும் தண்ணீரையும், தவளைகளின் கூச்சலையும் பார்க்கிறது. அவர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை. நேற்று வரை பொட்டல் காடாக இருந்த இடத்தில் இந்த தவளைகளை வந்து கத்தியதால் மழை வந்துவிட்டது என்று முடிவெடுக்கின்றனர்.

விஷயம் இத்துடன் முடியவில்லை. இனிமேல் மழை பெய்யவில்லை என்றால் தவளைகளைக் கொண்டு வந்துவிட்டு கத்தவிட்டால் மழை வரும் என்று நீளுகிறது அவர்களின் கண்டுபிடிப்பு. தவளை கிடைக்கவில்லை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. இரண்டு தவளைகளை கொண்டு வந்து திருமணம் செய்துவிட்டால் அவைகள் பல்கி பெருகி தவளைக் கூட்டம் உருவாகிவிடும் என்று அடுத்த கட்டத்துக் போகிறது அந்த நம்பிக்கை. அந்த ஊரில் வாழும் அடித்தட்டு மக்களிடம் இதுவே நடைமுறையாகி விடுகிறது. அறிவாளிகள் என்று சொல்லிக் கொள்ளும் மேல்தட்டு வர்க்கம், நாங்கள் மட்டும் என்ன குறைந்தா போனோம் என்று தங்கள் பங்கிற்கு ஆய்வைத் தொடங்கியது. அற்பத் தவளைகள் கத்தினால் மழை பொழியும் பொழுது அதிபுத்திசாலிகளான நாங்கள் கத்தினால் மழை பொழியாதா என்று தர்க்கத்தை நீட்டுகிறது. இதன் விளைவாக வந்துவிட்டது வருண ஜபம். இதையொட்டி வருணஜப மகாயஞ்யம். தவளைகள் ஒன்றும் கத்தவில்லை, பாடுகிறது என்று ஒருவர் கண்டுபிடிக்க அது பாடும் ராகத்தை ஆய்வு செய்து நாமும் அதுபோல் பாடினால் மழைவரும் என்று அமிர்தவர்ஷினி ராகத்தை கண்டுபிடித்தது இன்னொரு அறிவுஜீவிக் கூட்டம்.

மழையால் தவளைகள் வந்ததா? தவளைகள் கத்தியதால் மழை வந்ததா? இந்தக் கேள்விக்கான பதிலுக்குள் செல்வதற்குமுன் விஷயங்களைத் தலைகீழாக புரிந்து கொண்டதன் விளைவே இந்தக் கூத்துக்கள் என்பதை இந்த கதையை வாசிப்பவர்கள் எளிதில் கண்டுகொள்வர். எனினும், இந்த கூத்துகள் இருபத்தியோராம் நூற்றாண்டின் நவீன யுகத்திலும் முடிந்தபாடில்லை. ஒரு விஷயத்தை தலைகீழாகப் புரிந்து கொள்வது மனித சமூகத்திற்கு உள்ள இயல்புதான், இதில் மிகச் சிறந்த தத்துவஞானிகள் கூட விதிவிலக்கல்ல. ஹெகலுக்கு மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது சிந்தனை நிகழ்முறையானது அதாவது கருத்து என்பது சுயேட்ச்சையானதாகத் தெரிகிறது. மார்க்சுக்கோ கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை. எப்பேர்ப்பட்ட அற்புத விஷயமான இயக்கவியலை கூறிய ஹெகல் முக்கியமான விஷயத்தை தலைகீழாக புரிந்து கொண்டதால் எவ்வளவு சீரழிவு. அவர் மீது விமர்சனம் வருகிறது.

ஹெகலின் சீடராக இருந்த மார்க்ஸ் ஹெகலின் இயக்கவியலை உள்வாங்கிக் கொண்ட பொழுது அவரின் தலைகீழ்ப் பார்வையை அடையாளம் காணத் தவறவில்லை. மார்க்ஸ் கூறுகிறார்:

“அந்த மாபெரும் சிந்தனையாளரின் மாணவன் நான் என்று பகிரங்கமாக பறைசாற்றினேன்; ஏன் ? மதிப்பின் தத்துவம் பற்றிய அத்தியாத்தில் பல இங்களில் பிரத்யேகமாக ஹெகலுக்கேயுரிய தெரிவிப்பு முறைகளை கையாண்டு பார்த்தேன். ஹெகலின் கையில் இயக்கவியல் மாயாவாதத் தன்மைக்கு உள்ளாகிறதென்றாலும், அதன் பொதுவான செயற்பாட்டு வடிவத்தை விரிவாகவும் உணர்வுப் பூர்வமாகவும் முதன் முதலாக முன்வைத்தவர் அவரே. அவரிடம் இயக்கவியல் தலைகீழாக நின்று கொண்டிருக்கிறது. மாயாவாதச் சிற்பிக்குள் மறைந்துள்ள அறிவார்ந்த முகத்தை காண வேண்டுமானால் அதனை நேராக திருப்பி நிறுத்த வேண்டும்“ (பக்கம் 41)

சொன்னபடியே அதை நேராக நிமிர்த்திக் காட்டினார் மார்க்ஸ். நேராக நிமிர்த்துவதற்காக அவர் உழைத்த களம்தான் மூலதன நூல். ஒவ்வொரு பக்கத்திலும் இயக்கவியல் விதிகளின் பிரயோகங்கள்.

இன்னொருபுறம் இயக்கவியல், ஜெர்மனியில் அதன் மாயாவாத வடிவத்தில் முதலாளித்துவ அறிஞர்களால் போற்றிப் புகழ்ந்து பிரயோகிக்கப்படுகிறது. கொள்ளைக்காரன் கையில் உள்ள கத்தி மருத்துவரின் கைக்கு வந்த வரப்பிரசாதமாக இயக்கவியல் மார்க்ஸிடம் வந்து சேர்ந்தது. முதலாளித்தவம்தான் நிரந்தரமான அமைப்பு என்பவர்களின் மண்டையில் இயக்கவியல் விதிகளின் படி முதலாளித்துவ முரண்பாடுகள் முற்றி அதன் விளைவாக அந்த அமைப்பே நொறுங்கும் பொழுது உரைக்கும் என்கிறார் மார்க்ஸ்.

“முதலாளித்துவ சமுதாய இயக்கத்தில் உள்ளார்ந்த முரண்பாடுகள் நவீனத் தொழில் துறையின் காலவட்டச் சகடத்தில் ஏற்படும் மாற்றங்களின் வாயிலாக காரியாம்ச முதலாளிக்கு மனத்தில் பதிகின்றன. சர்வவியாபக நெருக்கடி இச்சகடத்தின் முத்தாய்ப்பாகும். அந்த நெருக்கடி இதுவரை பூர்வாங்க கட்டத்திலேயே உள்ளதென்றாலும், மீண்டும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது.; அது தனது செயற்களத்தின் சர்வவியாபகத் தன்மையாலும் தனது செயலின் உக்கிரத்தாலும், புதிய, புனித பிரஷ்ய-ஜெர்மானிய சாம்ராஜ்யத்தின் துதிபாடிகளான நேற்று முளைத்த காளான்களின் மண்டையிலும் கூட இயக்கவியலைப் புகுத்தும்.“ (பக்கம் 41)

இரண்டாம் ஜெர்மன் பதிப்பின் பின்னுரையைப் படித்ததுமே மூலதன நூலுக்குள் செல்ல வேண்டும் என்ற அவா எனக்குள் உந்தப்பட்டது. எனினும் முன்னுரைகள் அனைத்தையும் படிக்காமல் உள்ளே செல்லக் கூடாது என்று தீர்மானித்தால் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன். கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பார்கள். அந்த வகையில் அமைந்த்தே பிரஞ்சுப் பதிப்பிற்கான மார்க்சின் முன்னுரை. 1972 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் அச்சிடப்பட்டது பிரஞ்சுப் பதிப்பு. இதில் மார்க்ஸ் கூறிய அற்புதமான வரிகளை எடுத்துக் காட்டுவதற்கு முன் ஒரு சிறிய அனுபவத்தைக் கூறுகிறேன்.

வறண்ட மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். எங்கள் ஊர்களில் மூன்றாண்டுகளுக்கு மூன்றாண்டுகள் மழைபொழிவு குறைந்து பஞ்சம் ஏற்படும். பஞ்சகாலத்தில் பசியைப் போக்குவதற்கு கிராம மக்கள் வயல்வெளிகளில் உள்ள எலிகளை வேட்டையாடுவர். எலிவேட்டை சுவாரஸியமான விஷயம். வயல் வெளிகளில் திரிந்தால் ஒரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது இருபது முப்பது எலி வளைகள் இருக்கும் இவைகளுக்கு இடையில் தரைக்கடியில் சுரங்கப்பாதைகளாக இணைப்புகள் இருக்கும் சுரங்கப்பாதைகளில் எலிகள் குடியிருக்கும். கிராம மக்கள் ஒரு எலிப் பொந்தில் வைக்கோலை வைத்து கொளுத்துவார்கள். வயல் வெளிகளில் அங்காங்கே உள்ள எலிப் பொந்துகள் வழியாக புகை வெளியேறும். புகை வெளியேறும் இடங்களில் முளைக் குச்சியை வைத்து பொந்தை அடைப்பார்கள். ஒரே ஒரு பொந்தை முகப்பாக வைத்துக் கொண்டு மண்வெட்டியால் தோண்ட ஆரம்பிப்பார்கள். மண்வெட்டியை பிரயோகிக்கும் முன் கிரிக்கெட் அரங்கத்தில் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் உள்ள நிறுத்தப் புள்ளிகளான ஸில்லி பாய்ண்ட், ஷாட் லெக், ஸில்லி மிட் ஆஃப், ஸில்லி மிட் ஆன், ஷாட் மிட் ஆஃப், மிட் ஆன், மிட் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர்,. மிட் விக்கெட். ஸ்கொயர் லெக், பேக்வேர்டு ஸ்கொயர் லெக். டீப் கவர். டீப் எக்ஸ்ட்ரா கவர் போன்றவற்றில் நிற்பது போல் வயல் வெளிகளில் தெரித்து ஓடும் எலிகளை தங்கள் கதிரறுவாளால் கொத்தி எடுப்பதற்கு தயாராக நிற்பார்கள். எனினும் மண்வெட்டியை துவங்கி சிறிதுநேரம் யார் போடுவது என்ற விவாதம் வரும்பொழுது அது முதியவர்களுக்கே வந்துசேரும். எலிகளின் உளவியலை படித்தவர்கள் கிராம மக்கள். புகை அதன் வளைகள் வழியாகச் செல்கின்றன என்றவுடன் எலிகளுக்குத் தெரியும் அடுத்து பொந்தைத் தோன்டுவார்கள் என்று. மண்வெட்டியை இளைஞர்களிடம் கொடுத்தால் அது மண்ணை வேகமாக வெட்டும் சத்தத்தை கேட்டு எலிகள் இளைஞர்தான் தோண்டுகிறார் கண்டுபிடித்துவிடும். இளைஞன் என்றுமே பொறுமையில்லாதவன் ஆகவே அவன் தோண்டும் வேகத்தில் நாமும் தோண்டிக் கொண்டு உள்ளே சென்றால் சிறிது நேரத்தில் பொறுமை இழந்து எலிகள் இல்லை என்று சென்றுவிடுவார்கள் என்று தோண்ட ஆரம்பித்துவிடும். மண்னை வெட்டும் சத்தம் மொக்கையாக இருந்தால் முதியவன் வெட்டுகிறான் எளிதில் விடமாட்டான் எனவே நாமும் தோண்டி போக்கு காண்பிப்பது விண் என்று எலிகள் எதிர் திசையில் பொந்த்தின் முகப்பின் வழியாக ஈசல் போல் வெளியேறும். களத்தில் நிற்கும் இளைஞர்கள் தங்கள் கதிரறுவாளால் கொத்தி முடிந்தவரை எலிகளை பிடித்துவிடுவார்கள். பொறுமைசாலிகளுக்கும் பொறுமையில்லாதவர்களுக்கும் உள்ள வித்தியாசம் எலிகளுக்குக் கூடத் தெரிகிறது. பிரஞ்சு மக்கள் எப்பொழுதுமே பொறுமையில்லாதவர்கள். ஆகவே பெரிய ஆய்வு நூலை படிப்பதற்கு தயக்கம் காட்டுபவர்கள். இவர்களுக்காகவே தன்னுடைய முன்னுரையில் மார்க்ஸ் கூறுகிறார்;

“விஞ்ஞானத்திற்கு ராஜபாட்டை ஏதுமில்லை; அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை எய்துகிற வாயப்புண்டு“ (பக்கம் 42)

 பிரஞ்சுக்காரர்கள் மட்டும்தான் பொறுமையில்லாதவர்களா? நாம் மட்டும் என்னவாம் நமக்கும் சேர்த்துதான் மார்க்ஸ் எழுதியிருக்கிறார்.

 ….தொடரும்

Related Posts