தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

தோல்வியடைந்த மௌனக் கொலை முயற்சி!

கடந்த கால ஜெர்மானிய அறிவுலகமும் ஒரு விதத்தில் இந்திய அறிவுலகம் போன்றதே. இங்கே இருவித போக்குகள் உண்டு. தத்துவம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் தலைசிறந்த  படைப்புகளை செய்தவர்கள் ஒரு புறமும். எதுவும் செய்யாமல் எல்லாம் என்னிடம் இருக்கிறது என்று பழம் பெருமைகளை கூறிக் கொண்டு அலையும் அறிவுஜீவிக் கூட்டம் மற்றொரு புறமும் உள்ள நாடு இந்தியா. இரண்டாமவருக்கு மூளையைச் செலவழித்து வேலை செய்ய வேண்டிய நிலைமை இல்லாததால், அவர்கள் அரசியல் அதிகாரத்தை குறிவைத்து செயல்படும் பாங்குள்ளவர்கள். ஜெர்மனியிலும் இதேதான் நிலைமை போலிருக்கிறது. மனித சமூகத்தின் உற்பத்தியமைப்புமுறை முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைக்கு மாறிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தோன்றிய அரசியல் பொருளாதாரம் என்ற அறிவுத்துறை ஜெர்மனியில் பலவீனமாகவே இருந்தது. இங்கிலாந்திலோ ஆடம் ஆண்டர்சன், ஆடம் ஸ்மித், வில்லியம் ஃபிளீட்வுட், ரிச்சர்ட் கேன்டிலியன், தாமஸ் ஹார்ட்க்ஸ்கின் என்று மார்க்ஸ் காலம் வரை  ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. ஜெர்மனிக்கு இந்தப் பாரம்பர்யம் கிடையாது. முதலாளித்துவ வளர்ச்சிப்போக்கில் இங்கிலாந்திற்கு சற்று பின்னால்தான் பயணிக்கத் தொடங்கியது. அரசியல் பொருளாதார விஷயத்தில் ஜெர்மனியில் மார்க்ஸுக்கு முன்னால் வாழ்ந்த ஒரே ஒரு அறிஞர் லுத்விக் குத்ஸவ் வான் குலிச் (Ludwig Gustav Van Gulich)  இவர் அரசியல் பொருளாதாரம் பற்றி ஐந்து தொகுதிகள் கொண்ட புத்தகம் எழுதியுள்ளார். அதற்குப் பிறகு ஜெர்மானியர்களுக்கு கிடைத்தது மூலதனம் நூலே. இது பற்றி மார்க்ஸ குறிப்பிடுகையில், “இன்றுவரை ஜெர்மனியில் அரசியல் பொருளாதாரம் ஒரு வெளிநாட்டு விஞ்ஞானமே. குஸ்தவ் வான் குலியிச் தமது வர்த்தகம் தொழில்துறை பற்றிய வரலாற்று விவரிப்பு என்றும் நூலில், குறிப்பாக 1830ல் பிரசுரிக்கப்பட்ட முதல் இரண்டு பாகங்களில் ஜெர்மனியில் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் வளர்ச்சியையும் ஆதலால் அந்நாட்டின் நவீன முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சியையும் தடுத்த வரலாற்று நிலைமைகளை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். இவ்வாறு அரசியல் பொருளாதாரம் வேர்விட்டு வளர்வதற்கு வேண்டிய மண் இல்லாமற் போயிற்று“ (பக்கம் 31-32).

சென்னை உஸ்மான் ரோட்டில் உள்ள நகைக்கடைகளிலும். பாத்திரக் கடைகளிலும், துணிக் கடைகளிலும் எப்பொழுதும் திருவிழாக் கூட்டம் போல் மக்கள் திரள் இருப்பதை வைத்து நமது அறிவுஜீவிகள் இந்தியா ஒளிர்கிறது என்று தம்பட்டம் அடிப்பதைப் போல் ஜெர்மனியிலும் இருந்திருப்பார்கள் போல் தெரிகிறது, மார்க்ஸ் கூறுகிறார்:

“ஜெர்மனியில் உள்ள அரசியல் பொருளாதார பேராசிரியர்கள் பள்ளிப் பருவத்தினராகவே இருந்தனர். அயல்நாட்டு எதார்த்தத்தின் தத்துவ வெளியீட்டை அவர்கள் சூத்திரங்களின் தொகுப்பாக்கினார்கள். தம்மைச் சுற்றிலுமிருந்த சில்லரை வர்த்தக உலகத்தின் வாயிலாக அதனை வியாக்யானம் செய்தனர்“ (பக்கம் 32)

இரண்டாம் ஜெர்மன் பதிப்புக்கு பின்னுரையில் முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாற்று கட்டங்களை விளக்குகிறார். முதலாளித்துவம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டிருந்த காலகட்டம்தான் அது. ஆகவே சமூக மேற்தளத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்களை அடித்தட்டில் நடக்கும் உற்பத்திமுறையின் மாற்றங்களோடு பொருத்திப் பார்க்க முடிந்தது.

இன்றைக்கு விமானப் பயணம் சற்று மலிவான சூழ்நிலையில் பலர் விமானப் பயணம் மேற்கொண்டிருக்கிற வாய்ப்பு உண்டு. விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடக்கும் இடத்தை கடந்து செல்லாமல் யாரும் விமான நிலையத்திற்குள் சென்றிருக்க முடியாது. பயணிகள் தங்களது உடமைகளை இயங்கிக் கொண்டிருக்கும் கொண்டு வார்ப்பட்டையில் (Conveyor Belt) வைக்க அது ஊடுகதிர்க் கருவி பொருத்திய கூண்டிற்குள் சென்று வெளியேறும். கூண்டைக் கடக்கும் உடமைகளின் உள்ளே என்ன இருக்கிறது என்பது அங்கே அமர்ந்திருக்கும் அதிகாரியின் முன்னால் உள்ள கணிணியில் படம் போட்டுக் காண்பிக்கும். அதிகாரி சிலசமயம் கொண்டுவாரை பின்னோக்கி இயக்கி பிறகு மெதுவேகாத்தில் செல்ல வைப்பார். அப்பொழுது பயணிகளின் உடமைகளின் உள்ளே இருக்கும் பொருட்கள் துல்லியமாகத் தெரியும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கினை ஆய்வு செய்த மார்க்ஸ் இதே வேலையைத்தான் செய்கிறார். கொச்சைப் பொருளாதாரவாதிகள் போல் பெட்டிகளின் வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவெடுக்கவில்லை மாறாக அதன் உள்ளே என்ன இருக்கிறது என்பதை தன்னுடைய இயங்கியல் பார்வை என்ற ஊடுகதிர் இயந்திரத்தின் மூலமாக அறிந்து கொண்டு எழுதியிருக்கிறார். கண்ணாடி வில்லையை வைத்துபொருட்களைப் பார்த்தாலே அதைப் பெரிதாக்கிக் காட்டிவிடும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் நூறாண்டு காலத்தை கண்ணாடி வில்லையில் பார்ப்பது போல் துல்லியமாக காடியிருக்கிறார் அதன் வளர்ச்சிப் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறார்.

அப்பொழுதான் ஆயிரம் ஆண்டுகால நிலப்பிரபுத்துவத்தை வீழ்த்தி முதலாளித்தவம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறது. அதற்குள் முதலாளித்துவமும் மறைந்து வேறொரு சமூகம் தோன்றும் என்றால் முதலாளிகளால் தாங்கிக் கொள்ள முடியுமா? இரு ஜெர்மானியப் பதிப்புகளையும் ஒரு ரஷ்யப் பதிப்பையும் 1873க்குள் கண்டது மூலதனநூல். ஒருபக்கம் அதைப் பற்றிப் பேசாமலேயே அதைப் பெட்டிக்குள் அடைக்க நினைத்த்து ஆளும் வர்க்கங்கள். மற்றொரு புறம் அது அடைந்து வரும் செல்வாக்கினால் அது பற்றி பேச வேண்டிய நிலை. ஐரோப்பா கண்டத்தில் ஆங்காங்கே சில பத்திரிக்கைகள் மூலதன நூலை விமர்சித்து எழுத ஆரம்பித்தன. அதே நேரத்தில் அறிவுஜீவிகளின் மத்தியில வரவேற்பைப் பெற்று விமர்சனங்களுக்கு பதிலும் வர ஆரம்பித்தன. குறிப்பாக என்.சீபர் (N.Siebar) என்ற கீவ் பல்கலைக் கழக பேராசிரியர் ஆடம் ஸ்மித்தையும் டேவிட் ரிக்கார்டோவையும் காரல் மார்க்ஸின் மூலதன நூலின் துணை கொண்டு படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மார்க்ஸ் கூறுகிறார்:

“ஜெர்மானிய முதலாளி வர்க்கத்தின் கற்றாரும் கல்லாதாருமான பிரதிநிதிகள் எனது முந்தைய எழுத்துகளை எப்படி மௌனம் சாதித்து கொன்றார்களோ, அது போலவே தாஸ் கேப்பிட்டலையும் மௌனம் சாதித்தே கொன்றுவிடலாமென முதலில் முயன்றனர். இந்த தந்திரம் இனி காலத்தின் நிலைமைகளுக்குப் பொருந்தாது என்பதைக் கண்டதும் அவர்கள் எனது புத்தகத்தை விமர்சிக்கும் தோரணையில் “முதலாளித்துவ உள்ளத்தை சாந்தப்படுத்துவதற்கான“ நியமங்களை எழுதினர்.”(பக்கம் 35-36)

இரண்டாம் பதிப்பிற்கான பின்னுரையில் இன்னொரு முக்கியமான விஷயம் கையாளப்பட்டிருக்கிறது. மார்க்சின் ஆய்வுமுறை பற்றியும், அணுகுமுறை பற்றியும் எழுப்பட்ட சீரியஸான கேள்விகளும் அதற்கான மார்க்சின் பதில்களும் இடம் பெற்றிருக்கின்றன. செயின் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து வெளிவரும் யூரோப்பியன் மெசஞ்சர் (1872 மே இதழ் பக்கம் 427-436) வெளியான இக்கேள்விகளின் சாராம்சம் இதோ (பக்கம் 38 – 39)

  • சமூக நிலைமைகளின் நிர்ணயமான அமைப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர வேண்டிய அவசியத்தை விடக்கண்டிப்பான விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் உணர்த்துவதைப் பற்றியும் அடிப்படைத் தொடக்க ஆதாரங்களாக நிலைநாட்டுவதைப் பற்றியுமே கவலை கொள்கிறார்.
  • மார்க்ஸ், சமுதாயத்தின் இயக்கத்தை, இயற்கை வரலாற்று நிகழ்முறையாக அணுகுகிறார். இந்நிகழ்முறையை ஆளுகின்ற விதிகள், மனித சித்தத்தையும், உணர்வையும், மதிநுட்பத்தையும் சார்ந்திராதவை மட்டுமல்ல, பார்க்கப் போனால்  அந்த சித்தத்தையும், உணர்வையும், மதிநுட்பத்தையும் நிர்ணயிக்கவும் செய்கிறவை எனக் கொள்கிறார்.
  • பொருளாதார வாழ்வின் பொதுவிதிகள் நிகழ் காலத்துக்குப் பிரயோகிக்கப்பட்டாலும், இறந்த காலத்துக்குப் பிரயோகிக்கப்பட்டாலும் ஒன்றே எனக் கூறப்படும். இதனை மார்க்ஸ் நேரடியாக மறுக்கிறார். இப்படிப்பட்ட பரம சூக்கும விதிகள் கிடையாதாதென்கிறார். ஒவ்வொரு காலத்துக்கும் அதற்கேயுரிய விதிகள் இருப்பதாக கருதுகிறார்.
  • சமூக உயிரமைப்புகளின் (Social Organisms) வேறுபட்ட வடிவமைப்பு, அவற்றின் தனித்தனி அங்கங்களின் மாறுபாடுகள், அந்த அங்கங்கள் செயல்படுகிற வேறுபட்ட நிலைமைகள் முதலானவற்றின் காரணத்தால் ஒரே புலப்பாடு வெவ்வேறு விதிகளுக்கு ஆட்படுகிறது. உதாரணமாக ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டமும் அதற்கேயுரிய மக்கள்தொகை விதிகளை உடையது என்கிறார்.

யூரோப்பியன் மெசஞ்சர் இதழின் கட்டுரையாளருக்கு மார்க்சின் பதில்கள் (பக்கம் 40):

  • உள்ளபடியே எனது வழிமுறையென்று இந்த எழுத்தாளர் எதை எடுத்துக் கொள்கிறரோ அதை இவ்வாறு பளிச்சிடும் விதத்திலும் (அம்முறையை நான் கையாண்டிருப்பதைப் பொறுத்தமட்டில்) விசால மனப்பாங்குடனும் சித்தரிக்கிறார். அவர் இப்படி சித்தரிப்பது இயக்கவியல் வழிமுறைதானே?
  • எனது இயக்கவியல் வழிமுறை ஹெகலிய வழிமுறையிலிருந்து வேறுபட்டது மட்டுமன்று அதற்கு நேர் எதிரானதுமாகும். ஹெகலுக்கு மனித மூளையின் உயிர் நிகழ்முறையானது, அதாவது சிந்தனை நிகழ்முறையானது – இதனை அவர் “கருத்து“ என்ற பெயரில் சுயேட்சையான கர்த்தாவாகவே மாற்றிவிடுகிறார். – எதார்த்த உலகத்தின் படைப்பாளி ஆகும்; எதார்த்த உலகம் “கருத்தின்“ புறவடிவமே, புலப்பாட்டு வடிவமே அன்றி வேறில்லை, மாறாக எனக்கு, கருத்துலகம் என்பது மனித உள்ளத்தால் பிரதிபலிக்கப்பட்டு சிந்தனை வடிவங்களாக மாற்றப்படுகிற பொருளுலகமே அன்றி வேறில்லை.

தத்துவார்த்த விஷயங்களைக் கையாளும் இரண்டாம் பதிப்பிற்கான பின்னுரையைப் பற்றி இன்னொடு இடுகை எழுத வேண்டியதிருக்கிறது.

….. தொடரும்

Related Posts