தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

குகெல்மென்னுக்கு மார்க்ஸ் எழுதிய கடிதம்!

எதையெடுத்தாலும் ஆவணப்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள் ஆங்கிலேயர்கள். இந்தப் பழக்கம் கழிப்பறையிலிருந்து துவங்கியிருக்குமோ என்னவோ? ஆகவேதான் அவர்கள் நீலப்புத்தகம் என்பதை உருவாக்கி அரசின் அன்றாடச் செயல்களை ஆவணப்படுத்தி வந்தனர். முதல் ஜெர்மன் பதிப்பிற்கான முன்னுரையில் “தொழில்துறைப் பிரச்சனைகள், தொழில் சங்கங்கள் இவை சம்பந்தமாக மாட்சிமை தங்கிய அரசியாரின் அயல் நாட்டு தூதரகங்களுடன் கடிதப் போக்குவரத்து“ என்ற நீலப் புத்தகத்திலிருக்கும் தகவல்கள் மார்க்சின் கோட்பாடு இங்கிலாந்து மையவாத்த்தை அடிப்படையாகக் கொண்டது தவறானது என்று நிரூபிக்கின்றன. மார்க்ஸ் கூறுகிறார்

ஜெர்மனியில், பிரான்சில், சுருங்கச் சொல்லின் ஐரோப்பாக் கண்டத்தின் எல்லா நாகரிக நாடுகளிலும் மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையில் நிலவும் உறவுகளில் தீவிர மாற்றம் ஏற்படுவது இங்கிலாந்தில் இருப்பது போன்றே கண்கூடானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருப்பதை அயல் நாடுகளிலுள்ள ஆங்கிலேய முடியாட்சியின் பிரதிநிதிகள் இப்புத்தகத்தில் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்“ (பக்கம் 29)

ஐரோப்பாவிற்கு மட்டும்தான் மார்க்சின் ஆய்வுகள் பொருந்தபாடுடையதா என்றால் அமெரிக்காவிற்கும்தான் என்பதை அமெரிக்க அரசியல்வாதியான பெஞ்சமின் வேடு அவர்களின் கூற்றுக்களிலிருந்து மார்க்ஸ் எடுத்துக் காட்டுகிறார். பெஞ்சமின் வேடு அமெரிக்காவில் 1800 லிருந்து 1878 வரை வாழ்ந்த முற்போக்கு அரசியல்வாதி. தொழிற்சங்க உரிமை, பெண்ணுரிமை, கருப்பர்களின் உரிமை ஆகியவற்றிற்காக குரல் கொடுத்தவர். இவர் வாழ்ந்த காலத்தில்தான் அடிமைமுறை ரத்து செய்யும் போராட்டம் உக்கிரமாக நடந்து வெற்றி பெற்றது. மார்க்ஸ் கூறுகிறார் “மூலதன உறவுகளிலும் நிலவுடமை உறவுகளிலும் தீவிரமான மாற்றம் ஏற்படும் தருணம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் துணையதிபர் திருவாளர் வேடு பொதுக்கூட்டங்களில் பறைசாற்றினார்“

இவையெல்லாம் உதித்தெழுந்த்து வந்த முதலாளித்துவமானது மனித சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் இயல்பாக தோன்றியதாலேயே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு கட்டங்களில் ஒரேமாதிரியான சூழ்நிலை நிலவும் போது ஒரேமாதிரியான வளர்ச்சிப்போக்கை அடைகின்றன என்பது தெளிவாகிறது. இதையே மார்க்சின் வரிகளில் கூறினால்

காலத்தின் அறிகுறிகள் இவை;அரச உடுப்புக்களாலோ, பாதிரி அங்கிகளாலோ இவற்றை மூடி மறைத்துவிட முடியாது, நாளைக்கே ஏதோ அதிசயம் நடக்கப் போவதன் அறிகுறிகள் இவை என்று சொல்லவில்லை. ஆனால் இன்றைய சமுதாயம் மாறாத கல்லுருவம் அன்று; மாற்றத்துக்குரிய உயிரமைப்பே, அது இடைவிடாமல் மாறிக் கொண்டுமிருக்கிறது என்ற திகலுணர்வு ஆளும் வர்க்கங்கள் மத்தியிலேயே உதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவை காட்டுகின்றன“ (பக்கம் 29)

மூலதன நூலின் இரண்டாம் ஜெர்மன் பதிப்பு வெளிவரும் பொழுது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. அதனைப் பற்றி குறிப்பிடும் பொழுது அத்தியாம் 1 பிரிவு 3ஐத் திருத்தவேண்டிய நிலை, டாக்டர் லூயிஸ் குகெல்மென்னைச் சந்தித்த பிறகுதான் என்கிறார் மார்க்ஸ் (பக்கம் 30). ஜெர்மனியில் வாழ்ந்த குகெல்மென் என்ற மகப்பேறு மருத்துவர், மார்க்ஸ், எங்கங்ல்ஸ் ஆகிய இருவருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவர் ஒரு மார்க்சிய சிந்தனையாளர் மற்றும் செயல்பாட்டாளர். குகெல்மென்னுக்கும் மார்க்சிற்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்தது. இக்கடிதங்கள் அனைத்தும் https://www.marxists.org/archive/marx/letters/kug/index.htm என்ற இணையதளத்தில் உள்ளது. இக்கடிதங்களைப் பற்றி குறிப்பிடும் லெனின் “இக்கடிதங்களில் அவர்கள் இருவருக்கும் இடையேயான சொந்த விஷயங்கள் அதிகம் இருக்கிறது. இவை வாழ்க்கைக் குறிப்பு எழுதுபவர்களுக்கு உதவுபவை. அதைவிட முக்கியமானது அவற்றில் ஏராளமாக அடங்கியிருக்கும் கோட்பாடு மற்றும் அரசியல் விஷயங்கள்“ மாமேதை லெனின், பெரிய பொக்கிஷம் என மதிக்கும் ஜுலை 11, 1968ல் மார்க்ஸ் குகெல்மெனுக்கு எழுதிய கடித சுருக்கத்தின் தமிழாக்கம் இதோ

தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் ஒவ்வொரு தேசமும் அழிந்துபடும் என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும். நான் கூறுவேன்: ஓராண்டல்ல ஓரிரு வாரங்களிலேயே இது நடக்கும் என்று. சமூகத்தின் வெவ்வேறு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொருட்களின் தொகுப்பினைப் படைக்க, சமூக உழைப்பாளிகளின் மொத்தத் தொகுப்பிற்கு வெவ்வேறு வகைகளிலும் அளவுகளிலும் உழைப்பாளிகள் தேவைப்படுவர் என்பது குழந்தைக்கும் தெரியும். சமூகத் தொகுப்பிலுள்ள உழைப்பாளிகள் வெவ்வேறு தொழில்களுக்கு பரவியிருப்பது ஒரு குறிப்பிட்ட உற்பத்திமுறையில் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் இருக்கும். இந்த விகிதாச்சாரத்தை அந்த உற்பத்திமுறையை மாற்றாமல் மாற்ற முடியாது ஆனால் அது வெளிப்படும் தோற்றத்தை மாற்ற முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. எந்த ஒரு இயற்கை விதியையும் மாற்றிவிட முடியாது. மாறிவரும் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த இயற்கை விதிகள் எந்த வடிவத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதையே நாம் காணமுடியும். உழைப்பாளிகளின் இந்த விகிதாச்சாரப் பரவலானது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் குறிப்பிட்ட கால கட்டத்தில் எந்த வடிவத்தில் நிலவுகிறதோ, அது அந்த சமூகத்தில் நடக்கும் உற்பத்திப் பொருட்களின் தனிப்பட்ட பரிவர்த்தனையிலிருந்து அதாவது அந்தப் பொருட்களின் பரிவர்த்தனை மதிப்பிலிருந்து வெளிப்படுகிறது.

மதிப்புகளின் விதிகள் எவ்வாறு தன்னை உறுதிப்படுத்திக் கொள்கிறது என்பதை செயல்முறையில் நிரூபித்துக் காட்டுவதே விஞ்ஞானம். துவக்கத்திலேயே ஒருவர் இந்த விதிகளுக்கு முரணாண போக்குகளை “விளக்க“ விரும்பினால், அவர் விஞ்ஞானத்தின் முன்னால் விஞ்ஞானத்தை நிறுத்துவதையே செய்கிறார். மதிப்புகளைப் பற்றி ரிக்கார்டோ எழுதிய புத்தகத்தின் (அரசியல் பொருளாதாரம் மற்றும் வரிவிதிப்பு பற்றிய கோட்பாடுகளைப் பற்றி ஆங்கிலப் பதிப்பு பக்கம் 479) முதலாவது அத்தியாயத்தில், இவைகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன என்பதை நிறுவுவதற்கு, எல்லா சாத்தியக் கூறுகளையும் அதே நேரத்தில் வளர்ச்சியடைய வேண்டிய வகையினங்களையும் கொடுப்பதே இவருடைய பிழையாகும்.

இன்னொரு புறத்தில், கோட்பாட்டின் வரலாறு சுட்டும் மதிப்பின் உறவுகள் எப்பொழுதும் மாறாதிருக்கும் என்ற கருத்தோட்டம் உன்னால் சரியாக அனுமானிக்கப்பட்டிருக்கிறது – சற்றேறக் குறைய தெளிவாகவும், சற்றேறக் குறைய மாயையால் பிணைக்கப்பட்டதாகவும் அல்லது சற்றேறக் குறைய விஞ்ஞான ரீதியாக நிச்சயமாகவும் அனுமானிக்கப்பட்டிருக்கிறது. சிந்தனைப் போக்கு என்பது வளர்ந்துவரும் ஒரு இயற்கையான நிகழ்ச்சிப் போக்கு, அனைத்தையும் உணரக்கூடிய சிந்தனை என்பது எப்பொழுதும் ஒரே மாதிரியாகவே இருக்கும். சிந்திக்கும் திறன் கொண்ட உறுப்பு வளர்ச்சியடைவது உள்ளிட்ட வளர்ச்சிப் போக்கு பக்குவமடைவதை ஒட்டி இதில் ஏற்படும் மாற்றம் என்பது மெதுவாகவே இருக்கும். மற்றவை எல்லாம் இதன் உபவிளைவுகளே.

பொருட்களின் அன்றாட பரிவர்த்தனை உறவுகள் நேரடியாக அவை தாங்கி நிற்கும் மதிப்பை சார்ந்தவை என்ற விதியைப் பற்றிய கிஞ்சித்த ஞானம் கூட கொச்சைப் பொருளாதாரவாதிகளுக்கு கிடையாது. உற்பத்தியில் பிரக்ஞையுடன் கூடிய கட்டுப்பாடு முதன்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதே முதலாளித்துவ சமூகத்தின் சாரம் என்பது தெளிவு. இயற்கையாகவும், பகுத்தறிவு ரீதியாகவும், இந்த இயற்கை விதிகளானது செயல்படக்கூடிய சராசரி விஷயங்களுக்கு உறுதியாக செல்லுபடியாகிறது என்பதன் மூலம் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அடிநீரோட்டமாக செயல்படும் விஷயங்களை விட்டுவிட்டு வெளித் தோற்றத்தில் வேறுவிதமாகத் தெரியும் விஷயங்களை வைத்து, தாங்கள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை கண்டுபிடித்ததாக கொச்சைப் பொருளாதார வாதிகள் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள், இன்னும் சொல்லப் போனால், வெளித்தோற்றத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டு இதுதான் இறுதியானது என்று பெருமையடித்துக் கொள்கிறார்கள். இதன் பிறகு விஞ்ஞானம் அவர்களுக்கெதற்கு?

பருப்பொருட்களுக்கு இன்னொரு பின்னணியும் உண்டு. பொருட்களுக்கு இடையிலான உறவுகளை அறிந்துவிட்டால், தற்போதுள்ள சூழ்நிலை நித்தியமானது என்ற விஷயம் நடைமுறையில் குலைந்து போவதற்கு முன்னால் தற்போதுள்ள சூழ்நிலை நித்தியமாயிருப்பது அவசியம் என்ற கோட்பாட்டு நம்பிக்கை குலைந்து போகிறது. ஆகவேதான் ஆளும் வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காக ஒரு அர்த்தமில்லாத குழப்பத்தை நிரந்தரமாக ஏற்படுத்தும் அவசியம் இருக்கிறது. அரசியல் பொருளாதாரத்தை வேறெந்த விஞ்ஞானக் கரம் கொண்டு காப்பதற்கு துப்பில்லாத துதிபாடிகளுக்கு இதை விட்டு வேறெதற்காக சம்பளம் கொடுக்கப்படுகிறது?

நிற்க, தொழிலாளிகளும், ஏன் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கூட என்னுடைய மூலதன நூலை புரிந்து கொண்டு அதற்கான வழிமுறைகளை தேடிக் கொண்டிருக்கும் பொழுது, எந்த விதத்தில் பார்த்தாலும், முதலாளிகளின் இந்தப் பூசாரிகள் அவர்களுடைய புரிதலிருந்து அதீதமாக நான் கோருகிறேன் என்று புகார் சொல்கிறார்கள்.

Related Posts