தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மார்க்சியம் ஐரோப்பிய மையவாதமா?

அதெப்படி சித்தி அல்லது பெரியம்மா மகளை, அதாவது தாயின் சகோதரியின் மகளைத் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்கும்? இவர்கள் தங்கை முறை வராதோ? என்று சங்பரிவாரக் பிரசாரங்களில் மூழ்கிப் போன ஒருவர் ஒரு இஸ்லாமியரைப் பார்த்து கேட்பார். கேட்ட வேகத்தில் இஸ்லாமியரிடமிருந்து ஒரு எதிர்க் கேள்வி வரும். அதெப்படி அத்தை அல்லது மாமன் மகளை அதாவது தந்தையின் சகோதரியின் புதல்வி அல்லது தாயின் சகோதரனின் புதல்வியைத் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்கும். பொதுவாக ஒரு விஷயத்தில் மூழ்கிப் போனவர் மற்றொரு விஷயத்திற்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்பது அரிது.

ஒருவரின் மரபணுக்களில் 25 சதவீதம் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மரபணுக்களில் இருக்கும் அதேபோல் அவருடைய மரபணுக்களில் 25 சதவீதம் அவருடைய மாமன் மகள் அல்லது அத்தை மகளுக்கு இருக்கும். இரண்டுமே ஒரே விளைவை ஏற்படுத்துபவைதான் அதிக எண்ணிக்கையில் பொதுவான மரபணுக்கள் இருக்கிற தம்பதிகளுக்குப் பிறக்கிற குழந்தைகளுக்கு மரபணு ரீதியான பிரச்சனைகள் வருவது அதிகம் என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இவர்களின் வாதங்களை விட்டுவிடுங்கள். சங் பரிவார ஆசாமிகளைப் போல், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகளாக சொல்லிக் கொள்ளும் சிலர் மார்க்சியத்தை ஐரோப்பிய மையவாதம் (Euro centric) என்று வரையறுக்கும் பொழுது. சங்பரிவாரத்தினருக்கு பதிலளிக்கும் இஸ்லாமியர்களைப் போல் ஐரோப்பாவில் மார்க்சியத்தை இங்கிலாந்து மையவாதம் என்று அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த அறிவுஜீவிகள் கூறிக் கொண்டிருந்தார்கள் . மார்க்ஸே இதற்கு பதில் அளித்திருக்கிறார். முதல் ஜெர்மன் பதிப்பிற்கான முன்னுரையில் கூறுகிறார்

“இந்த நூலில், நான் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையையும், அந்த முறைக்குரிய உற்பத்தி, பரிவர்த்தனை இவற்றின் நிலைமைகளையும் ஆராய வேணடியுள்ளது. இதுவரை அவற்றின் தூய எடுத்துக் காட்டுக்குரிய நிலைக்களன் இங்கிலாந்தே. எனது தத்துவ கருத்துக்களின் வளர்ச்சியில் பிரதான எடுத்துக்காட்டாக இங்கிலாந்து பயன்படுவதற்கு இதுவே காரணம். ஆயினும் ஜெர்மானிய வாசகர், ஆங்கிலேயத் தொழில்துறை, வேளாண்துறைத் தொழிலாளர்களின் நிலமையைக் கண்டு முகஞ்சுழிப்பார்களேயானால், அல்லது ஜெர்மனியில் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று தன்னம்பிக்கையுடன் ஆறுதலடைவார்களேயானால் திட்டவட்டமாக அவருக்குச் சொல்கிறேன்: “De te fibula narraturi” (ஐயா, உங்கள் கதையும் இதுதான்)“ (பக்கம் 26)

மார்க்ஸ மேலும் கூறுகிறார்

“சாராம்சத்தில், முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இயற்கையான விதிகளிலிருந்து விளைகின்ற சமூகப் பகைமைகள் வளர்ச்சியில் உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலை பற்றியதன்று பிரச்சனை. இந்த விதிகளை பற்றியதே பிரச்சனை. தவிர்க்க முடியாத முடிவுகளை நோக்கி வலுக்கட்டாயமான அவசியத்துடன் செயல்படுகிற இந்த போக்குகளைப் பற்றியதே பிரச்சனை. குறைவாகத்தொழில் வளர்ச்சி அடைந்த நாட்டுக்கு அதன் எதிர்காலத்தின் பிரதி பிம்பத்தையே அதிகம் தொழில் வளர்ச்சியடைந்த நாடு காட்டுகிறது.“

மூலதன நூலை வாசித்த பொழுது நமது நாட்டில் இன்று நடந்து கொண்டிருப்பதை அப்படியே மார்க்ஸ் எப்படி தத்ரூபமாக எழுதியிருக்கிறார் என்று ரசித்தேன். உடனே முன்னுரையில் வாசித்த மேலே உள்ள பத்திதான் எனக்கு நினைவுக்கு வந்தது.

எந்த மாதிரியான தீர்க்க தரிசனம் என்று ஒரு பக்தனோ அல்லது தலைவரின் தொண்டனோ புல்லரித்துப் போவது போல் நாம் கூறமுடியாது. இது ஒரு இயற்கைவிதி. ஹைட்ரோ குளாரிக் அமிலத்தையும் சோடியம் ஹைடாக்ஸைடு என்ற காரத்தையும் கலந்தால் உடனடியாக நமக்கு சோடியம் குளோரைடு என்ற உப்பு கிடைப்பது நொடிப்பொழுதில் நடந்து விடுகிறது. இந்தப் பரிசோதனையை பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செய்த ஒருவன் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் செய்தால் இதுதான் நடக்கும் என்று கூறியிருந்தால் ஆச்சரியப் படமாட்டோம், ஏனென்றால் விஞ்ஞானம் என்பது பிரபஞ்சம் தழுவிய உண்மை என்பது நமக்குத் தெரியும். முதலாளித்துவத்தில் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த இங்கிலாந்தில் மார்க்ஸ் காலத்தில் நடந்தது சற்று பின்னே வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிற இந்தியாவில் அன்று இங்கிலாந்தில் நடைபெற்ற அதே நிகழ்வுப் போக்குகள் சாராம்சத்தில் நடக்கிறது என்பது விஞ்ஞானம் இந்த விஞ்ஞான விதியை பகுப்பாய்ந்து கூறியவர் மார்க்ஸ். இதை ஐரோப்பிய மையவாதம் என்றோ இங்கிலாந்து மையவாதம் என்றோ எப்படி கூறமுடியும்? யாராவது ஹைடரோகுளோரிக் அமிலத்தையும் சோடியம் ஹைட்ராக்ஸைடு காரத்தையும் கலந்தால் நொடிப் பொழுதில் சோடியம் குளோரைடு கிடைக்கும் என்ற உண்மையை ஐரோப்பிய மையவாதம் என்பார்களா?

மார்க்ஸ தன்னுடைய பகுப்பாய்வைச் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தியது தொழிலாளர்கள் நிலையை ஆய்வு செய்ய இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கைகள். தொழிற்சாலை ஆய்வாளர் அறிக்கைகள். குழந்தை உழைப்பு ஆணைய அறிக்கைகள், வக்கற்றவர் ஆணைய அறிக்கைகள் போன்றவைகளே. இந்த அளவிற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாடும் தன்னுடைய நாட்டு அவலத்தை ஆவணப்படுத்தியது கிடையாது. ஆகவேதான் ஆவணப்படுத்தப்படாத மற்ற நாடுகளைப் பற்றி மார்க்ஸ குறிப்பிடும் பொழுது

“தான் வேட்டையாடிய வேதாளங்கள் தன்னைப் பார்க்காதபடி பெர்சியஸ் மாயாஜாலக் குல்லாயை அணிந்து கொண்டான். வேதாளங்கள் எதுவுமில்லை என்று பொய்யாக நம்பும் பொருட்டு கண்ணையும் காதையும் மறைக்கும் படியாக நாமும் மாயதஜாலக் குல்லாயை இழுத்து விட்டுக் கொள்கிறோம்.“ (பக்கம் 27)

என்று கூறுகிறார். இங்கிலாந்தை நிலைக்களனாக தெரிவு செய்ததற்காக காரணத்தை நறுக்குத் தெரித்தாற்போல் கூறுகிறார். மார்க்ஸின் இந்த வாசகத்தை வாசித்த பொழுது எனக்குத் ஆர்வத்தை தூண்டியது மார்க்ஸ குறிப்பிட்ட பெர்சியஸ் என்ற ஆசாமியைப் பற்றியதே,

யாரந்த பெர்சியஸ் என்று கூகுள் செய்து பார்த்த பொழுது அவரு நம்ம ஊர் புராண பகவான் கிருஷ்ணன்தான். கிரேக்கத்தில் அவன் பெர்சியஸ். கிருஷ்ணனுடைய தாய்மாமன் கமசன் தன்னுடைய சகோதரி யசோதாவிற்கு பிறக்கும் மகன் தன்னைக் கொல்வான் என்று சகோதரியையும் மைத்துனைரையும் சிறையில் தள்ளி …. கடைசியில் எப்படியோ கிருஷ்ணன் பிறந்து கம்சனைக் கொல்லுகிறான். இது தவிர ஏராளமான வித்தைகளும் கிருஷ்ணன் செய்து கடவுள் என்ற அந்தஸ்தை அடைகிறான். இதே போல் பெர்சியஸின் தாத்தா அகரீஸியஸ் அர்கோஸ் நாட்டு அரசன். அவனுக்கு தன்னுடைய மகள் தனாயேவிற்கும் அவளின் ஆண் துணை ஜீயெஸிற்கும் (கிரேக்க புராணங்களில் இவரும் ஒரு கடவுள்தான்) பிறக்கும் மகன் தன்னைக் கொல்லுவான் என்று மகளை மட்டும் நம்ம ஊர் கம்சன் செய்த்து போல் கொடுமைப் படுத்துகிறான். புராண காலத்து அரசர்களுக்கு எவ்வளவு பிரச்சனைகள் பாருங்கள். அவன் கொடுமையையும் மீறி கிருஷ்ணன் பிறந்தது போல் பெர்சியஸ் பிறந்து விடுகிறான். பிறந்த குழந்தையை வெட்டுவதற்கு கம்சன் துணிந்தது போல். அக்ரிஸீயஸ் குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைத்து அடைத்து கடலில் வீசியெறிந்து விடுகிறான். இப்படியாகப் போகிறது அந்த புராணம். பெர்சியஸ் பிழைத்து பல சாகசங்கள் புரிவான் என்பது புராணத்தை படிக்காமலயே உங்களுக்குத் தெரியும். அந்த பெர்சியஸின் சாகசக் கதைகளில் வரும் வேதாளங்களை வேட்டையாடுதல் படலத்திலிருப்பதைத்தான் மார்க்ஸ் கிண்டலாக குறிப்பிடுகிறார்.

இந்தப் புராணக் கதையைப் படித்ததும். மார்க்சியம் என்னவோ ஐரோப்பிய மையவாதம் என்ற கருத்து இருப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல என்றே தோன்றுகிறது. நமது புராணங்களுக்கும் ஐரோப்பிய (கிரேக்க) மையவாதம் என்ற அவப்பெயரின் நீட்சியாகவே இது எனக்குப் படுகிறது.

கொசுறு: கிரேக்க புராணங்களைப் படித்தால் நமது பிரதமர் மோடி கூறியதைப் போல் அந்த நாட்டிலும் புராணகாலத்தில் நாட்டைப் போல ஏராளமான மரபணுவியல், பிளாஸ்டிக் சர்ஜன்கள் விஞ்ஞானிகள் திரிந்து கொண்டிருந்தார்கள் என்று மட்டும் தெரிகிறது. இந்தக் கருத்தை சொல்வதற்கு நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்தக் கட்டுரையை மோடி படித்தால் ஆமாம் புராண கால கிரேக்கத்தில் ஏராளமான மரபணு விஞ்ஞானிகள் திரிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் இந்தியாவிலிருந்து புஷ்பக விமானத்தில் அங்கு சென்றவர்களே என்று ஒரே போடு போடுவார்.

Related Posts