தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

எங்கே, திருப்பிச் சொல்?

துபாயில் நீ இருந்த முகவரியைக் கூறு – இது நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கேள்வி. நம்பர் 5, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து, துபாய் இது கதாநாயகன் பார்த்தீபனின் பதில். மிரண்டுபோன நகைக்சுவை நடிகர் கேட்பார் – எங்கே திருப்பிச் சொல். அதற்கும் சளைக்காத நமது கதாநாயகன் முழியை உருட்டிக் கொண்டு கூறுவார் துபாய், துபாய் குறுக்குச் சந்து, நம்பர் 5 விவேகானந்தர் குறுக்குத்தெரு என்று. நம்மில் பலர் இயக்கவியல் விதிகளைக் கூறு என்றால் எதிர்மறைகளின் ஒத்திசைவே இயக்கம், அளவுமாற்றம் பண்பு மாற்றத்தை ஏற்படுத்தும், நிலைமறுப்பின் நிலை மறுப்பு என்போம். எங்கே திருப்பிச் சொல் என்று கேட்டால் நாமும் நிலைமறுப்பின் நிலைமறுப்பு, அளவுமாற்றம் பண்புமாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்மறைகளின் ஒத்திசைவே இயக்கம் என்று முழியை உருட்டிக் கொண்டு கூறுவோம் அதற்குள் நமது முகத்தில் குப்பென்று வியர்த்துவிடும்.

ஆக இயக்கவியலை ஆழமாக புரிந்து கொள்வது எப்படி? இக்கேள்வியை முனைவர் டேவிட் ஹார்வியிடம் கேட்ட பொழுது அவர் கூறியது – “மூலதன நூலைப் படி“. சரி மூலதன நூலே புரியவில்லை என்று திருப்பிக் கேட்டால இயக்கவியல் தெரியாமல் மூலதன நூல் புரியாது என்பார். (எங்கே போனாலும் வடிவேல்-பார்த்தீபன் ஜோடி வசனம் வருகிறதே என்று அலுத்துக் கொள்ளாதீர்கள்!) தண்ணீருக்குள் இறங்காமல் நீச்சலடிக்க முடியாது – நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் இறங்க முடியாது என்ற நிலைதான் மூலதன நூல் விஷயத்தில். ஆனாலும் நாம் நீச்சலடிக்கிறோம் நீ எப்படி நீச்சல் கற்றுக் கொண்டாய் என்று நீச்சல் தெரிந்த ஒருவனிடம் கேட்டால் இதென்ன பெரிய விஷயம் என்று டாம்பீகமாக பதில் கூறுவார். மூலதன நூல் விஷயத்திலும் நானும் டாம்பீகமாக இந்த பதிலையே கூற விரும்புகிறேன். நீச்சல் கற்பது எவ்வளவு எளிதோ அவ்வளவு எளிது மூலதன நூலை வாசிப்பது.

மூலதன நூலின் முதல் அத்தியாயத்தை அதன் “படுகுழி“ என்றே அழைப்பேன். நான் முதலில் தடுக்கி விழுந்தது இந்தக் குழியில்தான். நீச்சல் அடிக்கப் பழகும்பொழுது தண்ணீர் குடித்து மூக்கில் பொறையேறிய நினைவுதான் வருகிறது. என்னைப் போல் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் பலர் இந்தக் குழியில் விழுந்து எழுந்ததே கிடையாது. அத்தோடு நீச்சல் முயற்சியை விட்டுவிடுவார்கள். மூலதனத்தின் மையக் கருவும் இதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் கையாளும் விஷயங்களை புரிந்து கொள்ளாமல் மூலதனத்தின் இயங்கு விதிகளுக்குள் செல்ல முடியாது. நாம் மொட்டையாக நமது வகுப்பறையில் படிப்பது போல் இயக்கவியல் விதிகளை கற்றுக் கொண்டோம். நமது ஆசான்கள் நமக்கு வகுப்பெடுத்த பொழுது புரிந்தது போல் இருந்தது. எங்கே திருப்பில் சொல் என்று யாராவது கேட்டால் பார்த்திபன் நிலமைதான் நமக்கும். இந்தச் சங்கடத்தை முதலில் போக்குவது மூலதன நூலே.

எதிர்மறைகளின் ஒத்திசைவே இயக்கம் என்ற இயக்கவியலின் முதல்விதியின் உபவிதியாக தோற்றமும் சாரமும் (Essence and Appearance) என்றொரு விதியைக் கூறுவார்கள். சாரம் என்பது பொருளின் அகநிலையை விளக்குவது தோற்றம் அதன் புறநிலையை வெளிப்படுத்துவது. அகநிலை என்பது பொருளின் உள்முரண்பாடுகளின் ஒத்திசைவு புறநிலை அதில் உள்ள ஏதோ ஒரு முரண்பாட்டின் வெளிப்பாடு (Manifestation). மூலதன நூலின் முதல் வாக்கியமே “முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களின் செல்வம் சரக்குகளின் பெருந்திரட்டலாக காட்சிதருகிறது“ சூக்குமத்தை இந்த வாக்கியத்திலேயே மார்க்ஸ் வைத்து விட்டார். இங்கே தோற்றம் என்று மார்க்ஸ் கூறுவது செல்வம் என்பது சரக்குகளின் பெருந்திரட்டல் ஆனால் சாரம் என்பது அதில் அடங்கியிருக்கும் மனித உழைப்பு.

சரி, இந்த தாடிக்கார மனுஷனுக்கு இயக்கவியலைப் பயன்படுத்தி முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையின் சூக்குமத்தை கட்டுடைப்பது என்று எப்படித் தோன்றிற்று? அதனால்தான் கூறுகிறேன்: நீங்கள் முன்னுரையை வாசிக்காமல் நூலை வாசிக்க துவங்காதீர்கள் என்று. இது ஒரு சிக்கலான சமூக பொருளுற்பத்தி முறையும் அதன் மீது கட்டப்பட்ட சமூக அமைப்பும். இதை ஒரு ஆய்வுக் கூடத்திற்குள் கொண்டு சென்று கொஞ்சம் சாம்பிளை கிள்ளி எடுத்து ஒரு சோதனைக் குழாயில் போட்டு அதன் மீது கொஞ்சம் திராவகத்தை ஊற்றிப் பொங்கிவரும் நுரைகளையும் கசிந்துவரும் வாயுக்களையும் முகர்ந்து தீர்ப்பு கூற முடியாது. இயக்கவியலைப் பயன்படுத்தாமல் இதை பகுப்பாய்வு செய்யவும் முடியாது சூக்குமப்படுத்தவும் (Abstraction) முடியாது.

சூக்குமப்படுத்துவதைப் பற்றி பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறும் பொழுது சென்னை நகரைப் புரிந்து கொள்ள அதன் 1:1 வரைபடம் வேண்டும். அதாவது சென்னைநகர் அளவு பரப்பளவுள்ள தாளில் சென்னை நகரை முழுமையாக வரைந்து பார்த்தால்தான் சென்னை நகர் புரியுமா?. அப்படிச் செய்வது சாத்தியமா? நாம் என்ன செய்கிறோம் என்றால் மருத்துவமனைகள் அடங்கிய வரைபடத்தை வரைகிறோம். பள்ளிக்கூடங்களை உள்ளடக்கிய வரைபடத்தை வரைகிறோம். சினிமா தியேட்டர்கள் கொண்ட வரைபடத்தை வரைகிறோம் இப்படியே சென்னைநகரில் உள்ள எல்லா இடங்களையும தனித்தனியான வரைபடத்தில் வரைந்து ஒன்றன் மீது ஒன்று வைத்தால் சென்னை நகரம் நமக்கு கிடைத்துவிடும். ஆனால் மருத்துவமனைகளை வரையும் பொழுது பள்ளிக் கூடங்களை நினைத்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இதைத்தான் சூக்குமப்படுத்துவது என்கிறோம் என்று எளிமையாக விளக்கினார். இதையே ஜெர்மன் மற்றும் பிரஞ்சுப் பதிப்பிற்கான முன்னுரையில் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்

“மதிப்பு வடிவம் – தொடக்க நிலைக்குரியது (அதன் முழு வளர்ச்சியடைந்த உருவம் பண வடிவமாகும்), மதிப்பு வடிவம் மிகவும் சாமனியமானது. ஆயினும், மனித உள்ளம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக அதனைப் புரிந்து கொள்வதற்கு செய்த முயற்சி பலிக்கவில்லை; ஆனால், பலவும் இணைந்து பன்மடங்கு சிக்கலாகியுள்ள வடிவங்களின் பகுப்பாய்வில் வெற்றி நெருங்கியாவது வந்துள்ளது. ஏன்? ஏனெனில், உடலை ஓர் அங்கக முழுமையாக பயில்வது அந்த உடலின் உயிரணுக்களை பயில்வதைக் காட்டிலும் சுலபமானது. மேலும் பொருளாதார வடிவங்களின் பகுப்பாய்வில். நுண்பெருக்காடிகளோ, இரசாயன ஆய்வுப் பொருட்களோ பயன்படுத்துவதில்லை. இவற்றுக்கு பதில் சூக்குமப்படுத்தும் ஆய்வு முறையின் சக்தி பயன்பட்டாக வேண்டும்“ (பக்கம் 25)

Related Posts