தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

யார் அந்த வில்ஹெம் வொல்ஃப்?

(ஒவ்வொரு வெள்ளியன்றும், மூலதனம் வாசகர் மேடை கட்டுரைகள் வெளியாகும் – ஆசிரியர் குழு, மாற்று)

மார்க்ஸ் போற்றும் மாமனிதர்!

எந்தவொரு நூலை வாசிக்க ஆரம்பித்தாலும் அந்நூலின் முன்னுரையை வாசித்துவிட்டுத் துவங்குவது நல்ல பழக்கம். முன்னுரையானது நூலைப் பற்றி கருத்துக் கூறுவதால் வாசிப்பின் போது நம்மை ஒரு பக்கம் இழுத்துவிடும் என்று சிலர் இறுதியில் முன்னுரையை வாசிப்பார்கள். எனினும் இந்த நூலைப் பொருத்தவரை முன்னுரைகளை முதலில் வாசிப்பது அவசியமாகும். காரணம் இது மூலதன நூலின் வரலாற்றைக் கூறுகிறது. முதலில் வந்தது மூலதன நூலின் தொகுதி 1 மட்டுமே. அதுவும் ஜெர்மன் மொழியில் பதிப்பிக்கப்பட்டது வெளிவந்த வருடம் 1867ம் ஆண்டு. இந்த நூலை மார்க்ஸ் தனது நண்பர் வில்ஹெம் வொல்ஃப் என்பவருக்கு சமர்ப்பிக்கிறார். அவரை “தீரம்மிக்க, பற்றுதி வாய்ந்த, உயரிய பாட்டாளி வர்க்க நாயகர்“ என்று வர்ணிக்கிறார்.

வொல்ஃப், மார்க்ஸைவிட 9 வயது மூத்தவர். 1931ல் புரட்சிகர மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்தார். 1834க்கும் 1946க்கும் இடையில் இவருக்கு கிடைத்த்து சிறைவாசம். 1846ல் மார்க்ஸுக்கும் ஏங்கெல்ஸுக்கும் பிரஸ்ஸல்ஸ் நகரில் நெருங்கிய நண்பராகிறார். அதே ஆண்டில் அதே நகரில் மார்க்ஸாலும் ஏங்கெல்ஸாலும் துவங்கப்பட்ட கம்யூனிஸ்ட் தொடர்பாடல் குழுவில் (Communists Correspondence Committee) உறுப்பினராகிறார். புலம் பெயர்ந்த ஜெர்மானியர்களால் பாரிஸ் நகரில் துவங்கப்பட்ட கற்பனாவாத சோசலிஸ்ட்களின் அமைப்பான நீதிக்கான குழுவிலும் (League of Just) உறுப்பினராக இருந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் தொடர்பாடல் குழுவானது ஒரு வருடத்தில் அமைப்பாக செயல்படும் நோக்கத்தில் கம்யூனிஸ்ட் லீக் என்ற அடையாளம் பெற்றது. இதன் ஸ்தாபக உறுப்பினர்களில் வொல்ஃபும் ஒருவர். இதன் மத்திய கமிட்டி உறுப்பினராக இயக்கப் பணிகளைச் செவ்வனே செய்தவர். இந்த அமைப்புதான் கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டது அதைத் தயார் செய்தவர்கள் மார்க்ஸும் ஏங்கெல்ஸும். மார்க்ஸை ஆசிரியராக் கொண்டு ஜெர்மனியில் வெளிவந்து கொண்டிருந்த Neue Rheinische Zeitung என்ற பத்திரிக்கையிலும் மார்க்ஸுடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்.

1844ல் இவர் எழுதிய சிலேசியா நெசவாளர்களின் பேரெழுச்சி என்ற கட்டுரையானது ஜெர்மனியில் தொழிலாளி வர்க்க பார்வையை முன்னெடுத்துச் சென்ற முக்கியமான கட்டுரையாகும். பின்னாளில் இந்த கட்டுரையானது புகழ்பெற்ற நாடகாசிரியர் கெர்ஹார்ட் ஹப்ட்மென் (Gerhart Hauptmann) என்பரால் நெசவாளர் (Die Weber) என்ற நாடகமாக்கப்பட்டு ஜெர்மனியை கலக்கியது. ஜெர்மனியில் சிறிது காலம் செயல்பட்ட (மே 1848 – ஜுன் 1949) முதல் பாராளுமன்ற அமைப்பும் அந்த நாட்டின் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றமாகிய ஃபிராங்ஃபர்ட் தேசிய சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1849ல் அடக்குமுறை காரணமாக ஸ்விட்சர்லாந்திற்கு குடியேறுகிறார். அங்கும் தாக்குப்பிடிக்க முடியாமல் 1851ம் ஆண்டு இங்கிலாந்து செல்கிறார். 1864ம் ஆண்டு இயற்கை எய்தினார்.

மார்க்ஸ் கூறிய ஒரு வார்த்தை அவரைப் பற்றி என்னைத் தேட வைத்துவிட்டது. அது மட்டுமல்ல புருதோன் போன்று மார்க்ஸ்காலத்தில் வாழ்ந்த இதர சோசலிஸ்ட்கள் மார்க்ஸால் விமர்சனம் செய்யப்பட்ட பொழுது, வசிட்டர் வாயினாலேயே பிரம்மரிஷி பட்டம் வாங்கிய இந்த வொல்ஃப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலை இந்த நூல் உண்டாக்கியது. அது மட்டுமல்ல மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் காலத்தில் வாழ்ந்த இதர சோசலிஸ்ட்கள் மார்க்சிஸ்ட்கள் ஆகியவர்களில் பெரும்பாலோனர் இவர்களால் ஏசப்பட்டவர்களே. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த காவுத்ஸ்கியை எடுத்துக் கொண்டால் அவர் ஒரு ஓடுகாலி. சரி பெர்ன்ஸ்டைன்ஐப் பார்ப்போம் என்றால் அவர் ஒரு திருத்தல்வாதி. ஃபாயர்பாக் பற்றியும் பெரிதாக சொல்லிக் கொள்ள முடியாது. ரஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளராக இருந்த பிளக்கானவ் பற்றியும் விமர்சனங்கள் உண்டு. இவர்கள் லெனினால் ஏசப்பட்டவர்கள். கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்ஸம்பர்க் போன்றோர் கருத்து மோதலுக்கு உள்ளானாலும் இவர்களுக்கு மரியாதைக்குரியவர்களாக இருந்தனர். ஆனால் இந்த அந்தஸ்து ட்ராட்ஸ்கிக்கு கிடையாது.

இவர்கள் எல்லாரும் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் லெனின் பார்வையில் விமர்சிக்கப்பட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் மார்க்ஸை படிக்க வேண்டும் இல்லாவிட்டால் நமக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசானின் வார்த்தைகளை நம்பிச் சென்று இறுதியில் எங்காவது தடைபட்டு நிற்போம். ஆனால் மார்க்ஸினுடைய விமர்சனம் புருத்தோனிடமிருந்து எங்கு விலகுகிறேன் என்பது தெளிவாக கூறியிருக்கிறார். அதேபோல் ஏங்கெல்ஸ் எழுதிய லூத்விக் ஃபாயர்பாக்கும் மூலச் சிறப்புமிக்க ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும் என்ற நூலை முதன் முதலில் வாசிப்பவர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பது பிடிபடாது ஆனால் மூலதன நூலை வாசித்தபின் இந்த நூலை ஒரு ஓட்டு ஓட்டுங்கள் எங்கெல்ஸ் கூறவரும் விஷயங்கள் அற்புதமானவை என்று அசந்து போவீர்கள். மார்க்ஸுக்கு இணையாக சிந்தித்த சோசலிஸ்ட்கள் பட்டாளம் ஒன்று மார்க்ஸ் காலத்தில் இருந்த்து. அவர்களில் முதன்மையானவர் மார்க்ஸ் என்பதும் அப்படி ஒரு பட்டாளம் உருவாவது காலத்தின் கட்டாயம் என்பதும் மூலதனத்தை வாசிப்பவர்களுக்கு புரியும். இவர்கள் சோசலிஸ்ட்கள் சமூக ஜனநாயகவாதிகள் கம்யூனிஸ்ட்கள் பலரை விமர்சனம் செய்திருந்தாலும் இவர்களால் போற்றப்பட்டவர்களும் உண்டு என்பதற்கு உதாரணமாக வொல்ஃப் திகழ்கிறார்.

விஜயன்

Related Posts