தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

மதிப்பினைப் புரிந்துகொள்ளல் … 1

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 15

(முந்தைய பகுதி: 14 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – அடுத்த வாரம் 16)

இப்படி ஒப்பீட்டு வடிவம் அல்லது சார்பு வடிவம் மற்றும் சமதை வடிவம் என்று இரண்டு வடிவங்களாக ஆரம்ப கால மதிப்பின் வடிவங்களை மார்க்ஸ் வரையறுத்த பொழுது இரண்டுக்கும் உள்ள பண்புகளை சற்று ஆழமாக பார்க்க வேண்டியதிருக்கிறது. ஆம் மாற்றத்துக்குள்ளாவைகளை பகுத்துக் கொண்டே சென்றால் அவற்றில் அடங்கியுள்ள இரட்டைத்தன்மை வெளிப்படும். அந்த இரட்டைத்தன்மைகளுக்கிடையில் நடைபெறும் போராட்டம்தான் மாற்றத்திற்கு வழிகோலுகிறது. ஒப்பீட்டு வடிவமும் சமதை வடிவமும் முட்டி மோதிக் கொண்டிருந்த சூழ்லையை புரிந்து கொள்ள வேண்டுமானால் ஒப்பீட்டு வடிவத்தை சற்று நுணிகி ஆராயவேண்டும்.

மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தில பங்கு பெரும் இரு சரக்குகளில் ஒரு சரக்கானது மற்றொரு சரக்கின் மதிப்பின் நிலவல் முறையே. இந்த விதத்தில் இரு சரக்குகளும் சமன் செய்யப்படுகின்றன அல்லது ஒன்றாகின்றன. அதே நேரத்தில் மதிப்பிடப்படும் சரக்கின் சொந்த மதிப்பு முன்னுக்கு வந்து சார்பற்ற தெரிவிப்பை பெறுகிறது. ஆக சார்புசார்பற்றதன்மை என்ற இரண்டை நிலை ஒரே நேரத்தில் வெளிப்படுகிறது. இரு சரக்குகளுக்கு பொதுவாக இருக்கும் மதிப்பு என்ற பண்பை ஒரு நிலவல் முறையில் வெளிப்படுத்துவதை புரிந்து கொள்ள வேண்டுமானால் இரு சரக்குகளை சமன் செய்ய வாய்ப்புள்ள வேறு ஒரு நிலவல் முறை இருக்கிறதா என்றால், இருக்கிறது என்ற உதாரணத்திற்கு பியூட்டிரிக் அமிலம் மற்றும் புரொபைல் பார்மேட் என்ற இரு இரசாயனப் பொருட்களை காட்டுகிறார் மார்க்ஸ். இரண்டும் வெவ்வேறு பொருட்கள். ஆனால் இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் கரிம அணுக்களும், ஹைட்ரஜன் அணுக்களும், ஆக்ஸிஜன் அணுக்களும் உள்ளன. இரண்டுக்கும் ஒரே வேதிச் சூத்திரம்தான் C4H8O2… ஆக C4H8O2.. என்பதை நிலவல் வடிவமாக எடுத்து சமன் செய்யலாம் என்கிறார் மார்க்ஸ்

பியுட்ரிக் அமிலத்தின் மூலக்கூறு கட்டமைப்பு படத்தில் உள்ளது போல் இருக்கிறது என்று கூறலாம். பியூட்ரிக் அமிலம் நமக்கு எல்லாருக்கும் தெரிந்த இரசாயனம்தான் நமது வீட்டில் பால் கெட்டுப்போனால் ஒரு நாற்றம் வருகிறதே. அந்த நாற்றத்தின் மூலகர்த்தா இவர்தான். பால் திரியும் போது இந்த அமிலம் உருவாகிறது

புரொபைல் பார்மேட்டின் மூலக்கூறு கட்டமைப்பு அருகில் உள்ள படத்தில் உள்ளது போல் இருக்கிறது என்று கூறலாம். இது எளிதில் தீப்பிடிக்க்க் கூடியதிரவம். இது மணமூட்டியாக உபயோகப்படுத்தப்படுகிறது.

இரண்டையும் ஒருவர் சமன் செய்யும் போது நிலவல் வடிவமாக C4H8O2.. இருக்கிறது. அதே போல் பரிவர்த்தனையில் மதிப்பு என்பது நிலவல் வடிவமாக இருக்கிறது. மதிப்பு என்பது மனித உழைப்பின் இறுகல்

மதிப்புகள் என்ற விதத்தில், சரக்குகள் மனித உழைப்பின் வெறும் இறுகல்களே என்று கூறும் போது அவற்றை நமது பகுப்பாய்வின் மூலம் மதிப்பென்ற சூக்கும நிலைக்குப் பெயர்க்கிறோம் என்பது மெய்தான். ஆனால் நாம் இந்த மதிப்புக்கு அவற்றின் தசையுறுவிலிருந்து வேறான வடிவமெதையும் உரித்தாக்கவில்லை. ஒரு சரக்கு இன்னொரு சரக்குடன் கொண்ட மதிப்புறவில், இது இப்படியில்லை. இங்கே ஒரு சரக்கு மறு சரக்குடனான தன் உறவின் காரணத்தால் தன் மதிப்புத் தன்மையில் முன்னிற்கிறது.“ (பக்கம் 79)

எப்பொழுதுமே உழைப்பு என்பது தனது ஸ்தூலமான வடிவில்தான் செலுத்தப்படுகிறது. துணியின் மீது தையல் என்ற ஸ்தூலமான வடிவில் உழைப்புச் செலுத்தப்படும் போதுதான் சட்டை உருவாகிறது. நூலின் மீது நெசவு என்ற ஸ்தூலமான வடிவில் உழைப்பு செலுத்தப்படும் போதுதான் துணி உருவாகிறது. பஞ்சின் மீது நூற்பு என்ற ஸ்தூலமான வடிவில் உழைப்பு செலுத்தப்படும் போதுதான் நூல் உருவாகிறது. இப்படி ஒவ்வொரு சரக்கு உருவாக்கத்திலும் வெவ்வேறு விதமான ஸ்தூலமான உழைப்பு செலுத்தப்பட்டிருக்கும் போது எப்படி சமன் செய்ய முடியும்?

சட்டையை துணியின் சமதையாக்குவதன் மூலம் சட்டையில் உருக் கொண்ட உழைப்பை துணியில் உருக்கொண்ட உழைப்புக்குச் சமன் செய்கிறோம். சட்டை தைக்கிற தையலானது துணி நெய்கிற நெசவுக்கு மாறான வகையைச் சேர்ந்த ஸ்தூலமான உழைப்புதான். ஆனால் அதை நெசவுக்கு சமன் செய்யும் செயல், உழைப்பின் இவ்விரு வகைகளிலும் உண்மையில் சமமானது எதுவோ அதற்கு அவற்றின் மனித உழைப்பென்ற பொதுத்தன்மைக்கு – தையலைப் பெயர்க்கிறது. அப்படியாயின், நெசவும் மதிப்பை நெய்கிறது என்ற அளவில் தையலிடமிருந்து அதை வேறுபடுத்துவதற்கு எதுவுமில்லை. ஆதலால் அது ஸ்தூலமற்ற மனித உழைப்பே என்ற உண்மை இந்தச் சுற்று வழியில் தெரிவிக்கப்படுகிறது. (பக்கம் 80)

பரிவர்த்தனைக்கு உள்ளாக்கப்படும் சரக்குகளில் மனித உழைப்பு அடங்கியிருக்கிறது என்கின்ற பொழுது, அந்த உழைப்பானது மனித உழைப்புச் சக்தியின் இயக்கத்தின் வெளிப்பாடே. எனினும் உழைப்புச் சக்தியை மதிப்பென்ற நிலைக்கு ஆரம்பகால சமுதாயங்களில் உயர்த்தப்படவில்லை. மார்க்ஸ் கூறுகிறார்.

இயங்குகிற மனித உழைப்புச் சக்தி, அதாவது மனித உழைப்பு, மதிப்பைப் படைக்கிறது; ஆனால் அதுவே மதிப்பன்று. ஒரு பொருளின் வடிவில் உருக்கொள்ளும் போது, அதன் இறுகிய நிலையிலே அது மதிப்பாகிறது. துணியின் மதிப்பை மனித உழைப்பின் இறுகலாகத் தெரிவிக்கும் பொருட்டு, அந்த மதிப்பு புறவய நிலவலைப் பெற்றிருப்பதாக, துணியிடமிருந்து பொருளாயதமாய் வேறுபட்ட ஏதோ ஒன்றாகவும், ஆயினும் துணிக்கும் மற்ற எல்லாச் சரக்குகளுக்கும் பொதுவான எதோ ஒன்றாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட வேண்டும். பிரச்சனை ஏற்கனவே தீர்க்கப்பட்ட் ஒன்றாகிறது (பக்கம் 80)

ஆக மதிப்பென்ற கருத்து நிலவல் ஒரு சரக்கு விஷயத்தில் இருப்பதாகச் சொல்லும் போது அதை இன்னொரு சரக்கின் மூலமாகத்தான் வெளிப்படுத்த முடியும். இன்னொரு சரக்கின் வாயிலாக மதிப்பு தெரிவிக்கப்படும்பொழுது வெறும் பயன்மதிப்பு மட்டுமே இருந்த சரக்கிற்கு பரிவர்த்தனை மதிப்பு என்ற ஒன்று வந்து அதிக முக்கியத்துவமுடையதாகிறது. வெறும் நெருஞ்செழியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனாகி அதிக முக்கியத்துவம் கிடைத்த்து போல் பயன் மதிப்புள்ள சரக்கிற்கு பரிவர்த்தனை மதிப்பு வந்தவுடன் அதிக முக்கியத்துவம் உடையதாகிறது. மார்க்ஸ் அவருக்கே உரிய நையான்டி வார்த்தைகளில் தெரிவிப்பதென்றால்,

சட்டையானது துணியுடன் மதிப்புறவில் வைக்கப்படும் போது பெறுகிற முக்கியத்துவம் அந்த உறவுக்கு வெளியே இருக்கும் போது பெறுகிற முக்கியத்துவத்துக்கும் மேலான ஒன்று என்பதை இது காட்டுகிறது – அநேக ஆசாமிகள் சாதராண உடையில் இருக்கும் போது மதிக்கப்படுவதைக் காட்டிலும், பகட்டான சீருடையில் ராஜ நடை போட்டுத் திரியும் போது அதிகமாக மதிக்கப்படுகிறார்கள் அல்லவா அதுபோலத்தான் இதுவும்“ (பக்கம் 81)

வெறும் பயன் மதிப்புள்ள இரு சரக்குகள் பரிவர்த்தனைக்கு வரும் பொழுது ஒன்றின் மதிப்பு மற்றொன்றின் பயன் மதிப்பால் தெரிவிக்கப்படுகிறது. பயன் மதிப்பு என்ற விதத்தில் இரண்டும வெவ்வேறானவை. பரிவர்த்தனை என்ற விதத்தில் இரண்டும ஒன்றே. இப்படியாக இந்த இரட்டைத் தன்மையானது ஒரு சரக்கின் பௌதிக வடிவத்திற்கு மாறான இன்னெரு வடிவத்திற்கு அந்தச் சரக்கைப் பெயர்த்துச் செல்கிறது மீண்டும் மார்க்ஸின் நையான்டி வரிகளை நாம் பார்த்தோமானால்,

ஒன்றின் மதிப்பு மற்றதன் பயன்மதிப்பால் தெரிவிக்கப்படுகிறது. பயன்மதிப்பு என்ற விதத்தில், துணி சட்டைக்குக் கண் கூடாய் மாறுபட்ட ஒன்றாகும்; மதிப்பு என்ற விதத்தில் சட்டையும் துணியும் ஒன்றே; இப்போது துணி சட்டையின் தோற்றத்தைப் பெற்றிருக்கிறது. இவ்வாது துணி அதன் பௌதிக வடிவத்துக்கு மாறான மதிப்பு வடிவத்தைப் பெறுகிறது. ஒரு கிறிஸ்தவரின் ஆட்டியல்பு அவர் தேவ ஆட்டுக் குட்டியை ஒத்திருப்பதில் வெளிப்படுவதுபோலவே. துணி மதிப்பாக உள்ளது என்ற உண்மை சட்டையுடனான அதன் சமத்துவத்தில் துலக்கமாக புலப்படுகிறது.” (பக்கம் 81)

ஒப்பீட்டுவடிவம் அல்லது சார்பு வடிவம் என்ற அம்சத்தில் மதிப்பின் இயல்பையும் அதன் கருத்தையும் இப்படி ஆழமாக பார்க்கும் மார்க்சின் அசல் எழுத்துக்களை படிப்பதன் மூலமே, அவர் இயக்கவியலை கையாளும் பாங்கை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

….தொடரும்

விஜயன் சென்னை

27-12-2015

Related Posts