தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

பணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் … 2

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 14

(முந்தைய பகுதி: 13 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – அடுத்த வாரம் 15)

எதிர் நிலைகளின் ஒருமை என்ற விதியின் வெளிப்பாடே சார்பு வடிவம் – சமதை வடிவம்

பணத்தின் புதிரை விடுவிப்பதற்காக, பணம் உருவான வரலாற்றின் நினைவுமீட்புக்குள் (Flashback) செல்கிறார் மார்க்ஸ். பழைய படம் என்றால் ஒரு சுருள் கோட்டைப் போட்டுவிட்டு ஆரம்பித்து விடலாம். புதிய படம் என்றால் ஒரு பச்சை நோட்டு காண்பித்து அது அடித்தொண்டையில் நான் எப்படி உருவானேன் தெரியுமா என்று கூறும் காட்சியை காட்டிவிட்டு அடுத்த காட்சிக்குச் செல்லலாம். எப்படியிருப்பினும் அடுத்த காட்சி கண்டிப்பாக கருப்பு-வெள்ளை காட்சிதான்.

அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த காட்சிதான். அங்கே சந்தை என்பது இன்றிருப்பது போல் குளிரூட்டப்பட்ட இடமாகவும் இருக்காது கம்யூட்டரும் இருக்காது அல்லது கோணிப் பைகளில் பொருட்களைக் கொட்டி கூவி விற்கும் காட்சியும் இருக்காது. ஒரு சாதாரண மரத்தடிதான். ஒரிருவரே இருப்பர் ஒவ்வொருவரிடமும் ஒரு பொருள் இருக்கும். அதுவும் அந்த பொருளைக் கொண்டு வந்தவரின் பயன்பாட்டுத் தேவைக்கு போக உபரியாக மிஞ்சிய பொருளாகத்தான் அது இருக்கும். சத்தம் போடாமல் இருவரும் பொருட்களை மாற்றிக் கொண்டு செல்வர். அந்த பரிமாற்றம் கண்மூடித்தனமாக கண்டிப்பாக இருக்காது. பரிமாறிக் கொள்ளப்பட்ட பொருட்களின் பரிவர்த்தனை மதிப்பு சமமாக இருக்க வேண்டும். ஆம் சந்தை விதி என்றுமே மாறாதது. கோழியைக் கொண்டு வந்தவர் சேலையை வாங்கிச் செல்வார் என்றால் சேலையிலும், கோழியிலும் சம அளவு மனித உழைப்பு அடங்கியிருக்க வேண்டும். இந்தக் காட்சியை நாம் மந்தநகர்வில் (Slow Motion) பார்த்தால், கோழி உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித மணித்துளிகளும் சேலை உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித மணித்துளிகளும் சமமாகவே இருந்திருக்கும்.

தனது தேவைக்கதிமான கோழியை சந்தைக்கு கொண்டு வருபவர் எதை வைத்து அவர் அதை மதிப்பிடுவார்? பணமே இல்லாத காலகட்டம் அது. அவருக்கு வேண்டிய பொருளை வைத்துதான் அதன் மதிப்பை அவர் கூறியிருப்பார். அதாவது அவருக்கு வேண்டிய பொருள் சேலையாக இருக்கும் பட்சத்தில் ஒரு கோழியின் மதிப்பு ஒரு சேலை என்றிருப்பார். சேலையைக் கொண்டு வருபவராலோ சேலையின் மதிப்பை சேலையால் கூறமுடியாது. அவருக்கு வேண்டிய கோழியின் மதிப்பாலே சேலையின் மதிப்பை வெளிப்படுத்துவார். இதுதான் மதிப்பு தெரிவிப்பின் ஆரம்பகட்டம். தற்செயலாக அமைந்ததால் இதை தற்செயல் வடிவம் என்கிறார் மார்க்ஸ். நான் இதை இயல்பு வடிவம் என்றே கூறுவேன். தற்பொழுது பொருட்களின் மதிப்பை நாணயத்தின் வாயிலாக தெரிவிப்பது போல் அன்று பொருட்களின் வாயிலாக தெரிவிக்கப்பட்டு வந்தது.

கோழியின் மதிப்பானது சேலையின் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது என்றால் இங்கே கோழியின் மதிப்பானது சேலையைச் சார்ந்து இருக்கிறது என்று பொருள். கோழி சேலையைச் சார்ந்து இருப்பதால் இதை சார்பு வடிவம் (Relative Form) என்று மார்க்ஸ் கூறுகிறார். சரி சேலைக்கு மட்டும் என்ன இந்த புதிய வாழ்வு என்ற கேள்வி எழலாம். ஆம், அதனுடைய பயன்மதிப்பில் மற்றொன்றாக மற்ற ஒரு பொருளின் அதாவது, கோழியின் மதிப்பை அளவிடும் கருவி என்ற பயன்மதிப்பும் சேர்ந்துவிடுகிறதே! ஆச்சரியப்பட வேண்டாம்; இதுவும் தற்செயல்தான். காரணம் சேலையும் சந்தைக்கு வரும் பொழுது அது கோழியின் வாயிலாகவே தன்னுடைய மதிப்பை தெரிவிக்க வேண்டியதிருக்கும். எனவே அதற்கு தற்போது தேவை ஒரு சமதை. எனவே சேலையின் சமதை கோழி என்பதால் அதன் சமதை வடிவம் (Equivalence Form) என்கிறார் மார்க்ஸ். எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் நுணுகி பகுத்து அதற்குள் இருக்கும் இரட்டைத் தன்மையை, ஆம் எதிர்நிலைகளின் ஒருமை என்ற இயக்கவியல் முதல் விதியின் செயல்பாட்டை வெளிக்கெணர்வதில் கில்லாடியாக இருந்தவர் மார்க்ஸ். மதிப்பிற்கு இப்பொழுது சார்பு வடிவம் மற்றும் சமதை வடிவம் என்ற இருநிலைகள் உள்ளது. ஒன்று செயல்படும் பொழுது மற்றொன்று செயல்படாது. மார்க்ஸின் வரிகள்

“ஒப்பீட்டு வடிவமும் சமதை வடிவமும் மதிப்பு தெரிவிப்பின் இரு கூறுகளாகும் – நெருக்கமாகத் தொடர்புள்ள, பரஸ்பரம் சார்புள்ள, பிரிக்க முடியாத கூறுகளாகும். ஆனால் அதே போது ஒன்றுக் கொன்று பிரத்யேகமான பகைமை வாய்ந்த முனைகளாக அதாவது ஒரே தெரிவிப்பின் இரு துருவங்களாக – அவை இருக்கின்றன.“ (பக்கம் 77)

கோழியின் மதிப்பு சேலையால் அளவிடப்படும் பொழுது அது சார்பு வடிவத்தை பெறுகிறது. அதே பரிவர்த்தனையில் சேலையானது கோழியின் வாயிலாக தன்னுடைய மதிப்பை வெளிப்படுத்துகிறதே இதை என்னவென்று சொல்வது என்றால் அதை சமதை வடிவம் என்று சொல் என்கிறார் மார்க்ஸ். ஆக சார்பு வடிவத்தையும் சமதை வடிவத்தையும் பிரிக்க முடியாது ஆனாலும் இரண்டும் ஒன்றே என்று கூற முடியாது. ஒன்றின் மதிப்பை எதை வைத்து அளவிடுகிறோமே அதுவே சார்பு அல்லது எது மற்றதின் மதிப்பை அளவிட பயன்படுகிறதோ அதுவே சமதை. கோழி தனது மதிப்பை வெளியிட சேலையை சார்ந்திருக்கிறது. சேலையும் இந்த வேலையைச் செய்ய கோழியை தனது சமதையாக ஏற்றுக் கொள்கிறது. பரிவர்த்தனை வேலையை முதலில் துவங்கிய கோழியானது சேலையச் சார்ந்திருக்கிறது என்பதால் அது சார்பு வடிவம் அதே நேரத்தில சேலை கோழியை சமதையாக ஏற்றுக் கொள்கிறது எனவே சேலைக்கு கோழி சமதை வடிவம். கொடுப்பவரின் இடத்தில் சார்பு என்றால் பெறுபவரின் இடத்தில் அது சமதை.

“ஒரு சரக்கு ஒப்பீட்டு வடிவத்தை மேற்கொள்கிறதா அல்லது அதற்கு எதிரிடையான சமதை வடிவத்தை மேற்கொள்கிறதா என்பது முழுக்க முழுக்க மதிப்புத் தெரிவிப்பில் அதன் தற்செயலான நிலையைப் பொறுத்தது; அந்தச சரக்கின் மதிப்பு தெரிவிக்கப்படுகிறதா அல்லது அந்தச் சரக்கின் வாயிலாக மதிப்பு தெரிவிக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தது.“ (பக்கம் 78)

நாணயம் இல்லாத கட்டத்தில் உள்ள சிக்கல்களை பார்த்தீர்களா? நமக்கு சிக்கல்களாக தெரிகிறது. ஆனால் விஷயம் இயல்பாக நடந்தேறியிருக்கிறது. இயல்பாக நடந்தவற்றின் உள்செயல்பாட்டை புரிந்து கொள்ள இயக்கவியல் விதியே நமக்கு தேவைப்படுகிறது.

சரி, இரட்டை நிலையைப் பார்த்து ஆச்சரியப்படுவதும் எல்லாவற்றையும் இயக்கவியல் விதிக்குள் பொருத்திப் பார்ப்பதும், பணத்தின் புதிரை எப்படி விடுவிக்கும்? ஆம் தெரியாத ஒன்றைத் தேடுவது என்பது எதாவது ஒரு கருதுகோளைக் கொண்டுதான் துவங்க வேண்டும். பல நேரங்களில் கருதுகோள் தவறாகிவிட்டால் துவங்கிய இடத்துக்கே திரும்பி விடுவோம். இயக்கவியல் அணுகுமுறையை கடைப்பிடிப்பவர்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சந்தை என்ற ஒன்று தோன்றத் துவங்கிய காலத்தில் இருவர் பொருட்களை பரிமாறிக் கொண்டது ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். அதுவும் சம மதிப்புள்ள பொருட்கள், அதாவது, சம மனித உழைப்பை உள்வாங்கி உருவாக்கப்பட்ட பொருட்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான். இந்த உண்மை பணத்தின் புதிரை எப்படி விடுவிக்கும்? அன்று பொருட்கள் வெளிப்படுத்திய மதிப்பின் வடிவத்தின் இரட்டைத் தன்மையை கண்டுபிடித்த்து பணத்தின் புதிரை விடுவிப்பதற்கு எப்படி வழிகோலும்?

மாற்றத்துக்கு உள்ளாகும் எதுவும் இயக்கவியல் விதிக்கு உட்பட்டே மாற வேண்டும். பணம் என்பது திடீரென்று முளைத்தல்ல அது பல மாற்றங்களுக்கு உட்பட்டு உருவானதே தற்போதைய நிலை. எனவே இயக்கவியல் விதி கொண்டுதான் அதன் புதிரை விடுவிக்க முடியும். எனினும் இயக்கவியல் விதியை சரியாக பொருத்திப் பார்க்கத் தெரிய வேண்டும் என்பதே இதன் அடிப்படை நிபந்தனை. இந்த விஷயத்தில் மார்க்ஸ் ஒரு நிபுணர். மற்றவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதும் மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. உதாரணம் சா.பெய்ஸி. இவர் பணத்தின் புதிரை விடுவிக்க முயன்றவர். இவர் “பணமும் அதன் விவகாரங்களும“ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார். இது லண்டன் பதிப்பகத்தால் 1937ம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது. மதிப்பிற்கும், மதிப்பின் வடிவத்திற்கும் வித்தியாசம் காணத் தவறியதே பெய்லி செய்த தவறு. மதிப்பு என்பதை அளவு வழியில் பார்த்தார் அளவைத் தாண்டி மதிப்பிற்கு வடிவம் என்ற பண்பு இருக்கிறது. பண்பு வழி மாற்றமே இன்றைய பணம் தோன்றுவதற்கான காரணம். அளவு வழியிலே கவனம் செலுத்தி முட்டிக் கொண்டு நின்றவர் பெய்லி. எனவேதோன் இயக்கவியல் விதியை சரியாக பிரயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். பெய்லியின் கதையை மார்க்ஸின் வார்த்தைகளில் கூறுவதானால்:

“மதிப்பின் வடிவத்தை பகுத்தாயும் வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சிலரேயான பொருளாதார அறிஞர்கள் – அவர்களில் சா. பெய்லியும் ஒருவர் – எந்த முடிவையும் அடைய முடியவில்லை. இதற்கு முதற்காரணம் அவர்கள் மதிப்பின் வடிவத்தை மதிப்போடு போட்டுக் குழப்பிக் கொள்கின்றனர்; இரண்டாவது காரணம், காரியாம்ச முதலாளியின் பாதிப்புக்கு உள்ளாகி அவர்கள் இப்பிரச்சனையின் அளவு வழிபட்ட அம்சத்திலேயே பிரத்தியகமாக்க் கவனம் செலுத்துகின்றனர். “அளவின் கட்டனை … மதிப்பாக அமைகிறது.“ (“பணமும் அதன் விவகாரங்களும்“. லண்டன், 1837, பக்கம் 11, எழுதியவர் சா. பெய்லி)”“ (பக்கம் 78)

மார்க்ஸ் கூறும் இரண்டு காரணங்களில் இரண்டாவது காரணமே முதலாவது காரணத்திற்கு அடிப் போட்டிருக்கிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவ சிந்தனைப் போக்கில் இருப்பவரால முதலாளித்துவத்திற்கு ஊறுவிளைவிக்கும் எந்த விஷயத்திற்குள்ளும் செல்ல முடியாது. எனவேதான் அவர் மதிப்பையும் மதிப்பின் வடிவத்தையும் போட்டுக் குழப்பியிருக்கிறார்.

பணத்தின் புதிரை விடுவிப்பதற்கான பயணத்தை துவங்கிய மார்க்ஸ் மதிப்பின் இருவடிவங்களை அடையாளம் காண்கிறார். இது எப்படி மற்ற வடிவங்களுக்கு மாறுகிறது. பணம் என்ற வடிவம் எப்படி வருகிறது என்பதை நாம் அடுத்தடுத்துப் பார்க்கலாம். அதற்கு முன்பு இதுவரை சொல்லப்பட்ட விஷயங்களின் சுவாரஸியத்தை அனுபவிக்க வேண்டுமானால் நீங்கள் கட்டாயம் மூலதன நூலின் அசல் பிரதியை படிக்க வேண்டும் “பாஷ்யம்“ எழுதுபவர்கள் அவர்களின் அனுபவங்களையே கூறுகிறார்கள். அசல் பிரதியே என்றும் நிரந்தரமானது.

….தொடரும்

 

விஜயன்

23-11-2015

Related Posts