தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

பணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் …

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 13

(முந்தைய பகுதி: 12 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 14)

மூலதன நூல் குழுவாக வாசிக்கும் நடவடிக்கை துவங்கிய நேரமோ என்னவோ என் அன்றாட வாழ்வில் குறுக்கிடும் நிகழ்ச்சிகள் எல்லாம் மூலதன நூலில் எழுதி வைத்தது எப்படிப் பொருந்திப் போகிறது என்பதை ஒவ்வொரு கணமும் உணர்த்தி வருகிறது. என்னுடைய தற்போதைய தொழில் பொறியியல் சேவைத் தொழில். இந்தத் தொழிலின் விற்பனைப் பொருள் நேரடி உழைப்புச் சக்தியே. இந்தத் தொழிலுக்கு நான் வந்து பதினொரு ஆண்டுகள் முடிந்துவிட்டது. அதற்கு முன்பு பராமரிப்புப் பணி, கட்டுமானப் பணி, ஆய்வுப் பணி, கொள்முதல் பணி, திட்டப்பணி என்று பொறியியல் பணிகளின் பல்வேறு பணிகளில் இருந்தாலும் இப்பணிகளில் பூடகமாய் இருப்பது போல் பொறியியல் சேவைப் பணியில் உழைப்புச் சக்தி விற்பனை அப்பட்டமாக தெரியாது. எங்களது பொறியியல் சேவைப் பணியில் உழைப்பு நேரமே எங்களது விளையாட்டுக் களம். ஆம் வாடிக்கையாளர் கேட்கும் சேவையை வழங்குவதை எங்களது உழைப்பு நேரத்தின் முலமாகவே அளவிடப்படுகிறது. அதிக தேர்ச்சித்திறன் உள்ளவருக்கு அதிக மணி-நேரக் கட்டணத்தை வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கிறோம். இதற்கெல்லாம் என்ன அடிப்படை. மூலதன நூலே சரியான பதிலைத் தருகிறது. மென்பொருள் உற்பத்தியிலும் இதுதான் நிலைமை. ஆம் இது மனித-நேரத்தில் (Man-Hour) அளக்கப்படுகிறது. பொறியியல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் கூட ஒரிரு மாதங்களில் இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு விடுகின்றனர். ஆம் வேலை நேரம் (Labour-Time), வேலை மும்முரம் (Intensity of Labour), தேர்ச்சித் திறன் (Skill), உற்பத்தித் திறன் (Productivity) ஆகிய விஷயங்கள் ஒரு வருடத்திற்குள் அத்துபடியாகிவிடுகிறது. எங்கள் கட்டண அளவான மனித-நேரத்திற்குள் தேர்ச்சித் திறனும், வேலை மும்முரமும் அடங்கியிருக்கிறது என்பது அவருக்கு புரிந்துவிடுகிறது.

இந்தியாவில் வாழும் நபர் தனது வரவு செலவுகளை ரூபாயில் நடத்துகிறார் அவரே துபாய் சென்று வாழ்ந்தால் திராம்களில் நடத்துகிறார், அமெரிக்கா சென்றால் டாலரில் நடத்துகிறார். வாடிக்கையாளர்களிடம் நாங்கள் வேலை மணியில் கட்டணத்தை வசூலிப்பதால் எங்கள் சிந்தனைப் போக்கும் ரூபாய், திராம், டாலர் போன்று வேலை-மணியிலேயே பயணிக்கிறது. வாடிக்கையாளரின் வேண்டுகோளைப் படித்தவுடன் சகஊழியர்கள் வேலை-மணியை பேச ஆரம்பித்துவிடுவார்கள். ஒரு விற்பனையாளன் வார இறுதியில் எவ்வளவு விற்றிருக்கிறான் என்று முதலாளிக்கு கணக்கு கொடுப்பது போல் எங்களது அலுவலகத்திலும் வார இறுதியில் ஒவ்வொருவரும் எவ்வளவு வேலை-மணி செலவழித்த்திருக்கிறார்கள் என்று கணக்கு கொடுக்க வேண்டும். பணத்தை வைத்து அன்றாட வாழ்வில் எப்படி சர்ச்கைகள் வருகிறதோ எங்களது அலுவலகத்தில் வேலை-மணியை வைத்து சர்ச்சைகள் வருகின்றன.

வேலை நேரம், வேலை மும்முரம், தேர்ச்சித் திறன், ஆகிய மூன்றும் சேர்ந்துதான் உழைப்பு சக்தியை தீர்மானிக்கிறது. ஒரு பொருளில் பொதிந்திருக்கும் உழைப்பளவு என்பது குறைந்த வேலை மும்முரத்தில் குறைந்த தேர்ச்சித் திறனுள்ளவரால், செலுத்தப் பட்டிருக்குமானால் அந்தப் பொருள் செய்து முடிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆகவே சோம்பேறி, சுறுசுறுப்பி என்பதெல்லாம் இந்த மூன்று அளவுகளை வைத்து அளவிடப்படுபவையே. சமூகம் உருவாக்கிய அடைமொழிகளே இவைகள்.

ஒரே மாதிரி இரு பொருளை இருவர் உருவாக்கினால் அதில் அடங்கியிருக்கும் உழைப்பு சமமாகவே இருக்கும் எனினும் அந்த உழைப்பானது அந்த பொருளுக்கு சென்று சேர்ந்த விதம் இந்த மூன்று விஷயங்களால் வேறுபடுகிறது. எனவே உழைப்புச் சக்தியை செலவிடப்பட்ட நேரத்தை வைத்து மட்டும் அளந்துவிட முடியாது. கொஞ்சம் சிக்கலானதுதான். சிக்கல்களை மார்க்ஸ் கையாளும் விதம் சுவாரசியமானது. ஆம் எந்த ஒரு சிக்கலையும் கையாளும் பொழுது அதை சிறு சிறு துண்டுகளாக உடைத்து சிக்கல்களை குறைத்து இறுதியில் தனிப்பட்ட துண்டுகள் மீதான ஆய்வு முடிவுகளை இணைத்தால் சிக்கல்களின் போக்கை புரிந்து கொள்ள முடியும் என்பதே மார்க்சின் அணுகுமுறை. இந்த அணுகுமுறையையே அவர் தேர்ச்சித்திறன் பெற்ற தொழிலாளிக்கும் தேர்ச்சித் திறனில்லா தொழிலாளிக்கும் பயன்படுத்துகிறார். தேர்ச்சித் திறனுள்ளவருக்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்ச்சித் திறனில்லாதவர் அடங்கியிருக்கிறார் என்பதை வைத்தே ஆய்வை நடத்துகிறார்.

மார்க்சின் வார்த்தைகளில் கூறுவதானால், “தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது மும்முரமாக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே அல்லது இன்னும் சரியாகச் சொன்னால், பன்மடங்காக்கப்பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப்படுகிறது“ (பக்கம் 71)

“எளிமையின் நிமித்தம் இனிமேல் சகல வகைப்பட்ட உழைப்பையும் தேர்ச்சியற்ற சாமானிய உழைப்பாகவே கணக்கில் கொள்வோம் இதன் மூலம் பெயர்ப்பு செய்கிற தொந்தரவைத் தவிர்க்கிறோம். அதற்குமேல் ஒன்றும் இல்லை.“ (பக்கம் 72)

ஒரே அடியில் ஒரு சிக்கலை உடைத்துவிடுகிறார். ஆகவே அவருடைய ஆய்வில் உழைப்பு நிகழ்முறையைப் பற்றி வரும் இடங்களிலெல்லாம் தேர்ச்சித் திறன் கணக்கில் வருவதில்லை. ஆனால் வேலைநேரம், வேலை மும்முரம் ஆகியவை மட்டுமே இடம் பெறுகிறது.

ஒரே வேலை நேரம், ஒரே மும்முரம் ஆனால் வெவ்வேறு உற்பத்தித் திறன் உள்ள உழைப்பால் உருவாகும் பொருளின் மதிப்பு ஒன்றுதான். காரணம், உழைப்பளவில் உற்பத்தித் திறன் பங்களிப்பதில்லை ஆனால் பயன்மதிப்பில் பங்களிக்கிறது. ஒரே வேலைநேரத்தில் ஒரே மும்முரத்தில் ஒருவர் இன்னொருவரைவிட நுட்பமான கருவிகளை பயன்படுத்தியிருந்தால் முதலாமவர் அதிக எண்ணிக்கையில் பொருளை படைத்திருப்பார். எனினும் இருவர் செலவிட்டதும் ஒரே உழைப்பளவுதான். அகவே இருவர் படைத்ததும் ஒரே மதிப்புதான். எனினும் முதலாமவர் அதிக எண்ணிக்கையில் பொருளை படைத்திருப்பதால் ஒரே பொருளாக இருந்தாலும் முதலாமவர் படைத்த தனியொரு பொருளின் மதிப்பானது இரண்டாமவர் படைத்த தனியொரு பொருளின் மதிப்பைவிட குறைவு. இதையே ஒரு விதியாக வகுத்தளிக்கிறார் மார்க்ஸ்.

“இந்த உற்பத்தித் திறனிலான மாற்றமெதுவும் மதிப்பால் குறிக்கப்படும் உழைப்பை பாதிப்பதில்லை. ….. உற்பத்தித்திறன் எப்படித்தான் மாறலாமென்றாலும் சம கால அளவுகளில் பிரயோகிக்கப்படும் ஒரே உழைப்பு எப்பொதுமே சம மதிப்பளவுகளையே கொடுக்கும். உற்பத்தித் திறன் உயர்ந்தால் அதிகமாகவும் வீழ்ந்தால் குறைவாகவும் கொடுக்கும்.“ (பக்கம் 74)

ஆக மதிப்பென்றவுடன் நாம் பயன் மதிப்பை ஒதுக்கிவிட்டு பரிவர்த்தனை மதிப்பையே கவனத்தில் கொள்கிறோம். பரிவர்த்தனைக்கு வரும் சரக்கின் மதிப்பு என்பது அதில் அடங்கியிருக்கும் சமூக வழியில் அவசியமான மனித உழைப்பு என்று தர்க்க ரீதியாக மார்க்ஸ் நிறுவினார். தர்க்கம் மட்டும் உண்மையாகிவிடுமா? நடைமுறையும் தர்க்கத்துடன் ஒத்துப் போக வேண்டாமா? சம மதிப்புள்ள சரக்குகளே பரிவர்த்தனை செய்யப்படும் என்ற அடிப்படை பரிவர்த்தனை விதியின் மூல வேர்களையும் அதன் வரலாற்றையும் புரிந்து கொண்டால்தான் தர்க்கமும் நடைமுறையும் இணைந்து போவதை நிறுவ முடியும். மார்க்ஸ் கூறுகிறார்.

“சரக்குகளின் மதிப்புக்கு முற்றிலும் சமூக வழிபட்ட மெய்ம்மை இருக்கிறது என்பதையும் அவை முழுதொத்த சமூக சாரத்தின், அதாவது மனித உழைப்பின் தெரிவிப்புகள் அல்லது உருக்கள் என்ற அளவிலேயே இந்த மெய்ம்மையை ஈட்டுகின்றன என்பதையும் நாம் மனத்திலிருத்தினால், சரக்குக்கு சரக்கு என்ற சமூக உறவிலேயே மதிப்பு தன்னை காண்பித்துக் கொள்ள முடியும் என்பது இயல்பாகவே தெரியும்.“ (பக்கம் 76)

மார்க்ஸ் கூறுவது போல் சரக்குக்குச் சரக்கா சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகின்றன? சந்தையில் பொருட்கள் பணத்திற்காக பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. பொருளைப் பெருகிறவரோ பணத்தை கொடுத்துவிட்டு பொருளைப் பெறுகிறார். பொருளை விற்பவரோ பணத்தைப் பெற்றுக் கொண்டு பொருளைக் கொடுக்கிறார். இதுதான் நாம் காணும் சந்தை. ஆனால் பொருளை விற்றவர், தான் பெற்ற பணத்தைக் கொண்டு இன்னொரு பொருளைப் பெற்றிருப்பார். அல்லது பொருளை வாங்கியருக்கு தான் கொண்டு வந்த பொருளை விற்றதன் மூலம் பணம் கிடைத்திருக்கும். இப்படி அனுமானித்துக் கொண்டால் கூட சம்மதிப்புள்ள பொருள்கள் இறுதியில் பரிமாறப்பட்டிருக்கும் என்று எப்படி கூறுகிறோம்? இதற்கு விடை காண்பதற்கு முன்பு பொருட்களின் பரிவர்த்தனைக்கிடையில் பணம் என்ற ஒன்று எப்படி வந்த்து. அதன் கதையையும் பரிவர்த்தனையில் அதன் அங்கத்தையும் புரிந்து கொண்டால்தான் இதனை விளங்கிக் கொள்ள முடியும். பணத்தின் புதிரை உடைக்கும் முயற்சியில் மார்க்ஸ் ஈடுபடுகிறார்.

“முதலாளித்துவப் பொருளாதார இயல் இதுவரை இந்த வேலையைச் செய்ய முயன்றது கூட இல்லை. இந்தப் பணவடிவத்தின் பிறப்பை கண்டறிவதுதான் சரக்குகளின் மதிப்புறவில் பொதிந்துள்ள மதிப்பு தெரிவிப்பை அதன் மிகவும் சாமானியமான, அநேகமாய்ப் புலனாகாத உருவரையிலிருந்து மினுமினுக்கும் பணவடிவத்துக்கு வளர்த்தெடுப்பதுதான் இந்தவேலை. இந்த வேலையைச் செய்வதன் மூலம், நாம் அதே நேரத்தில் பணத்தின் புதிரையும் விடுவிப்போம்“ (பக்கம் 76)

….தொடரும்

 

Related Posts