தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

உழைப்பை எதை வைத்து அளந்து பார்ப்பது?

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 12

(முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12)

சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு

அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும்? உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு பண்டத்தைப் படைக்கிறான். பண்டம் என்பது எடை, அளவு, மணம் வெப்பம் போன்ற பண்புகளை உடையது தொட்டு உணரக்கூடியது (Tangible) ஆனால் உழைப்பு என்பது ஒரு போக்கு அல்லது நிகழ்முறை (Process), அருவமானது (Intangible) எப்படி இரண்டையும் ஒப்பிடமுடியும்? என்பதே இங்குள்ள கேள்வி.

நெல்லை அளக்க படி இருக்கிறது. இரும்பை அளக்க தராசு இருக்கிறது, சாலையின் நீளத்தை அளக்க அளவுநாடா (Measuring Tape) இருக்கிறது. வெப்பத்தை அளக்க வெப்பமானி (Temperature Gauge) இருக்கிறது. அழுத்தத்தை அளக்க அழுத்தமானி (Pressure Gauge) இருக்கிறது. வேகத்தை அளக்க வேகமானி (Speedometer) இருக்கிறது. மின் அழுத்தத்தை அளக்க வோல்ட்மானி (Volt meter) இருக்கிறது மின்னோட்டத்தை அளக்க அம்மீட்டர் (Ammeter) இருக்கிறது. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் பல விஷயங்களை அளப்பதற்கு நேரடி அளவுமானிகள் கிடையாது அதை மறைமுகமாகவே கணக்கிட வேண்டும். உதாரணத்திற்கு மின்புலத்தை அளக்க மின்புலம் ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து அதன் பருமன் அளவிடப்படுகிறது. ஏதேனும் ஒரு கம்பியில் அந்தப் புலம் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாக ஏற்படும் மின்னோட்டத்தை ஒரு அம்மீட்டர் மூலமாக அளந்தே மின்புலத்தின் பருமன் கணக்கிடப்படுகிறது. ஒரு எரிபொருளில் அடங்கியுள்ள வெப்ப ஆற்றலை அளவிடுவதற்கு குறிப்பிட்ட எடையுடைய அந்த எரிபொருளை ஒரு காப்பிடப்பட்ட அறைக்குள் எரித்து அது வெளிப்படுத்தும் வெப்பத்தை வெப்பமானியில் அளந்து அதை வைத்து அதில் அடங்கியுள்ள வெப்ப ஆற்றலை கணக்கிட முடிகிறது, இதேபோல்தான் பண்டத்தின் மதிப்பும் மறைமுகமாகவே கணக்கிட முடியும். மார்க்ஸ் கூறுகிறார்:

”நேர்கோட்டு வடிவங்களின் பரப்பளவைக் கணக்கிடுவதற்கும் ஒப்பிடுவதற்கும் அவற்றை முக்கோணங்களாகப் பிரித்துக் கொள்கிறோம். ஆனால் முக்கோணத்தின் பரப்பளவு, அதன் கண்ணுக்குத் தெரிகிற வடிவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஏதோ ஒன்றால் அதாவது அதன் அடிக்கோட்டு நீளம், குத்துயரம் இவற்றின் பெருக்கற் பலனில் பாதியால் வெளியிடப்படுகிறது. அதே விதத்தில் சரக்குகளின் பரிவர்த்தனை-மதிப்புகள் எப்பொருட்களை ஏதேனுமோர் அளவில் அவை குறிக்கின்றனவோ அப்பொருட்கள் அனைத்துக்கும் பொதுவான ஏதோ ஒன்றின் வாயிலாகத் தெரிவிக்கப்பட வல்லவையாக இருக்க வேண்டும்“ (பக்கம் 62)

முதலில் சரக்குகளின் பண்புகளை எல்லாம் நாம் பட்டியலிடுவோம்.

சரக்கு என்பது பொதுவான பெயர். எனவே பண்பைப் பற்றி பேசும் பொழுது தனியான ஒன்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆம் சரக்கின் உள்முரண்பாடு என்பது அது பொதுவானதாகவும் இருக்கிறது அதே நேரத்தில அதன் எதிர்மறையான தனியானதாகவும் இருக்கிறது. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாது எதிர்மறைகளின் ஒத்திசைவே இயக்கம் என்ற இயக்கவியலின் முதல் விதியானது சரக்கின் இருப்புக்கும் பொருந்தும்.

தனியான ஒரு சரக்கிற்கான நம்முடைய உதாரணம் பேனா.

Fountain_pen_parts2

இதன் பண்புகளை பட்டியலிட்டால் அதற்கு நீளம் இருக்கிறது, அகலம் இருக்கிறது, பருமன் இருக்கிறது, எடை இருக்கிறது, அது பல பாகங்களைக் கொண்டதாக இருக்கிறது ஒவ்வொரு பாகத்திற்கும் நீளம் அகலம் பருமன் ஆகிய பண்புகள் இருக்கின்றன. மைநிரப்புவதற்கான குழி இருக்கிறது, குழியை மூடும் திருகியுடன் கூடிய கழுத்து இருக்கிறது. கழுத்தின் ஓட்டைக்குள் மையை ஒருசீராக செலுத்த கூர்முனை இருக்கிறது. கூர்முனையைத் கழுத்திற்குள் அழுத்திப்பிடிக்கும் சக்கையும் இருக்கிறது. மைகுழிக்குள் மை இருக்கிறது கூர்முனையை ஒரு தாளில் வைத்து நகர்த்தினால் மை ஒரு சீராக மைக்குழியிலிருந்து இறங்கி வருகிறது. இப்படியாக அதன் பண்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்தப் பண்புகள் எல்லாம் சேர்ந்தே அதன் பயன்மதிப்பை தீர்மானிக்கிறது. இதே போல் இன்னொரு சரக்கான பென்சிலை எடுத்துக் கொள்வோம். அதன் பண்புகளைப் பட்டியலிட்டால் அதற்கு பேனாவிலிருந்து வேறுபட்ட பண்புகள் இருக்கின்றன. ஆக பேனாவையும் பென்சிலையும் எதை வைத்து பரிமாற்றம் செய்து கொள்வது.

இரண்டுக்கும் பொதுவான ஏதோ ஒன்று இருக்க வேண்டும் என்கிறாரே மார்க்ஸ் அது என்ன? மார்க்ஸ் கூறுகிறார்:

“இந்தப் பொதுவான “ஏதோ ஒன்று“ சரக்குகளின் வடிவகணித குணமாகவோ, இரசாயன குணமாகவோ அல்லது வேறு ஏதேனும் இயற்கைக் குணமாகவோ இருக்க முடியாது. இப்படிப்பட்ட குணங்கள் அந்தச் சரக்குகளின் பயன்பாட்டுத் தொடர்புள்ளவையாய் இருந்து, அவற்றை பயன்-மதிப்புகள் ஆக்குகிற அளவுக்குத்தான் நமது கவனத்துக்குரியவை ஆகின்றன. ஆனால் சரக்குகளின் பரிவர்த்தனை என்ற செயலின் சிறப்பியல்பு பயன்மதிப்பை முழுமையாக நீக்கிவிட்டுப் பார்ப்பதாகும“ (பக்கம் 62)

சரக்கின் பயன்மதிப்பு ஆய்வு களத்திற்கு வந்துவிட்டால் பரிவர்த்தனை மதிப்பு அகன்றுவிடும். பரிவர்த்தனை மதிப்பு வந்தால் பயன்மதிப்பு அகன்றுவிடும். பயன்மதிப்பில்லாத எதற்கும் பரிவர்த்தனை மதிப்பு கிடையாது என்றாலும், பரிவர்த்தனை மதிப்பை அளவிடுவதற்கு பயன்மதிப்பு பயன்படாது.

சரக்கின் பயன்மதிப்பை அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது எது? மார்க்ஸ் கூறுகிறார்:

“இந்த உற்பத்திப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் எஞ்சி நிற்பதை இப்போது பரிசீலிப்போம், ஒவ்வொன்றிலும் பொருளில்லா ஒரே மெய்மையே, அதாவது ஒருபடித்தான மனித உழைப்பின் – செலவிடும் விதத்தைப் பொருட்படுத்தாமல் செலவிடப்பட்ட உழைப்பு சக்தியின் – இறுகல் மட்டும் எஞ்சி நிற்கிறது. இவை நமக்குச் சொல்வதெல்லாம், மனித உழைப்புச் சக்தி அவற்றின் உற்பத்தியில் செலவிடப்பட்டிருக்கிறது, மனித உழைப்பு அவற்றில் உருக்கொண்டிருக்கிறது என்பதையே.“ (பக்கம் 63)

ஆக இந்த மனித உழைப்பே அதன் மதிப்பை தீர்மானிப்பதாக இருக்கிறது என்று கூறும் பொழுது, மனிதன் என்ற பொதுவான சொல் தன்னை ரமேஷ், மகேஷ், சுரேஷ் என்று தனியானதாகவே வெளிப்படுத்துகிறது. ரமேஷும், மகேஷும், சுரேஷும் எப்படி ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்கு ஒரே அளவு உழைப்பை செலவிட்டிருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது, மார்க்ஸ் கூறுகிறார்:

“ஒரு சரக்கின் மதிப்பு அதற்காக செலவிடப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறதென்றால், உழைப்பாளி எவ்வளவு அதிகம் சோம்பேறியாகவும் தேர்ச்சியற்றோராவும் இருக்கிறாரோ. அவ்வளவு அதிகம் மதிப்புள்ளதாக அவரது சரக்கு இருக்கும், ஏனெனில் அதன் உற்பத்திக்கு அதிக நேரம் தேவைப்படும் என்று சிலர் நினைக்க்க் கூடும். ஆயினும் மதிப்பின் சாரமாகிற உழைப்பு ஒருபடித்தான மனித உழைப்புச் சக்தியின் (Homogeneous Human Labour) செலவீடாகும். ஒரே சீரான உழைப்புச் சக்தியின் செலவீடாகும்.“ (பக்கம் 64)

சராசரியா? நான் உமியைக் கொண்டு வருகிறேன், நீ அரிசியைக் கொண்டு வா, இரண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம் என்ற கதையா?ஆம் தனியுடமை வருவதற்கு முன்பு இப்படித்தான் சமூகம் இருந்தது யார் யாரால் என்னென்ன முடியுமோ அதைச் செய்ய வேண்டும். ஒருவரால் உமியை மட்டுமே உற்பத்தி செய்ய முடியுமென்றால் அரிசி உற்பத்தி செய்பவர் அவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் சமூக வாழ்வின் அடிப்படை விதி. சமூக வாழ்வின் இந்த அடிப்படை விதியை எந்த சமூக அமைப்பாலும் அடியோடு ரத்து செய்ய முடியாது அது எப்படியேனும் ஒரு வழியில் இயங்கியே தீரும். முதலாளித்துவம் செய்யும் நாசங்களை இந்த சமூக விதி எப்படி சரி செய்கிறது என்பதை மூலதன நூலை முழுவதுமாக வாசித்த பிறகு புரியும். தற்பொழுது இந்த சராசரி மனித உழைப்பு எப்படி செயலுக்கு வருகிறது என்று பார்ப்போம். ஒரு சோம்பேறி உற்பத்தி செய்த பண்டத்திற்கும், ஒரு உற்சாகி உற்பத்தி செய்த பண்டத்திற்கும் உழைப்பளவு வேறுபட்டிருப்பதால் வெவ்வேறு மதிப்புகள் இருக்கும் ஆனால் இரண்டுக்கும் ஒரே பயன்மதிப்புதான். பரிவர்த்தனையின் போது அதை பெறுபவர் அந்தப் பயன்மதிப்பிற்காகவே அதை வாங்குகிறார். எனவே ஒரே பயன்மதிப்புடைய பண்டமான அது, இருவேறு பரிவர்த்தனை மதிப்புடையதாக இருந்தால் அவர் குறைந்த பரிவர்த்தனை மதிப்புடைய பண்டத்தையே தெரிவு செய்வார். அதிக உழைப்பளவு கொண்ட அதாவது அதிக பரிவர்த்தனை மதிப்புடைய சோம்பேறியின் பண்டமானது தேங்கி நின்றுவிடும். இறுதியில் அது தனது மதிப்புக்கும் கீழே பரிமாறிக்கொள்ளும் நிலை ஏற்படும். அந்த மதிப்பிறக்கமானது சராசரி மதிப்பின் அளவிற்கே வந்து நிற்கும். எனவே சராசரி மதிப்பு அமலாவது என்பது பரிவர்த்தனை நிகழ்வின்போது இயல்பாகவே ஏற்பட்டுவிடும் நிகழ்வுதான். மார்க்ஸ் கூறுகிறார்

“சமுதாயத்தில் உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் அனைத்தினதும் மொத்த உழைப்புச் சக்தி, அது எண்ணற்ற தனித்தனி அலகுகளால் ஆனதென்றாலும் இங்கே மனித உழைப்புச் சக்தியின் (Human Labour-Power) ஒரே ஒருபடித்தான திரளாகவே கணக்கிடப்படுகிறது. இந்த அலகுகளில் ஒவ்வொன்றும் சமுதாயத்தின் சராசரி உழைப்புச் சக்தியின் தன்மையை பெற்றிருக்கிறது. அவ்வாறே பயன்படுகிறது என்ற அளவில், அதாவது ஒரு சரக்கை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகிற நேரம் சராசரியாக தேவைப்படுகிற நேரம்தான், சமுதாய வழியில் அவசியமான நேரம்தான் என்ற அளவில் இவ்வலகுகள் அனைத்தும் ஒன்றே“(பக்கம் 64)

ஆக, உற்பத்தி நிகழ்முறை என்பது ஒரு சமூகப் போக்கு என்ற அடிப்படை விஷயத்தை வைத்தே பரிவர்த்தனை செயல்நுட்பம் (Mechanism) எப்படிப்பட்டது என்பதையும். அந்த செயல்நுட்பத்தின் செயல்பாடு எங்கு வந்தடைகிறது என்பதையும் விளக்கும் மார்க்சின் எழுத்துக்களை தொடர்ந்து படியுங்கள் மூலதனத்தின் அசல் பிரதியை வாசியுங்கள்.

 

சென்னை

விஜயன்

24-10-2015

Related Posts