தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

இயக்கவியலே மார்க்ஸ் ஆய்வின் அடிப்படை

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 11

(முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12)

(படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது)

ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில்.

“எந்தப் பண்டத்தினது மதிப்பினது பருமனையும நிர்ணயிப்பது சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவே, அதாவது சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரமே“ (பக்கம் 65)

ஆக ஒரு கிலோ வெள்ளியை அது உற்பத்தி செய்வதற்கு தேவையான தாதுவை வெட்டி எடுத்து அதிலிருந்து ஒரு கிலோ வெள்ளியை பிரித்தெடுப்பதற்கு ஆகும் மனித உழைப்பே அந்த ஒரு கிலோ வெள்ளியின் மதிப்பாகும். சமூக வழியில் அவசியமான மனித உழைப்பு குறைந்தால் அப்பொருளின் மதிப்பு குறையும். மார்க்ஸ் கூறுகிறார்:

“சிறிது உழைப்பைச் செலவிட்டு கரியை வைரமாக மாற்றுவதில் நாம் வெற்றிகான முடிந்தால் அதன் மதிப்பு செங்கல்லின் மதிப்பைவிடவும் குறையக் கூடும் (பக்கம் 66)“

அது எப்படி கரியானது செங்கல்லைவிட மதிப்பு குறையக்கூடும் என்பவர்களுக்கு அலுமினிய உற்பத்தியின் கதையை நினைவுபடுத்துவது அவசியம்.

51S0EF3HN8Lஅலுமினியம் ஒரு தனிமம் என்றளவில் கண்டுபிடிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டில்தான் என்றாலும் அலுமினியத்தின் பயன்பாடு பல நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது.  அலுமினியத் தாதுவை வெட்டி எடுத்து அதிலிருந்து அலுமினியத்தை பிரித்தெடுப்பதற்கு ஆகும் மனித உழைப்பும் வெள்ளியை உற்பத்தி செய்வதற்கு ஆகும் மனித உழைப்பும் 19ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் ஒன்றாகவே இருந்தது எனவேதோன் அலுமினியத்தின் மதிப்பும் வெள்ளியின் மதிப்பும் ஒன்றாக இருந்தது. 1884ம் ஆண்டில் அமெரிக்காவானது 60 கிலோ அலுமினியத்தை உற்பத்தி செய்தது அதை வெள்ளி என்ன விலைக்கு விற்றதோ அதே விலைக்கு விற்றது. 18ம் நூற்றாண்டில் கனவான்களுக்கு அளிக்கப்படும் மதிப்பு மிகுந்த பரிசு அலுமினிய மோதிரம். வேதியலில் அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டிமிட்ரி மெண்டலீவ் அவர்கனை லண்டன் நகரில் கௌரவப்படுத்தி கொடுக்கப்பட்ட பரிசு அலுமினிய மோதிரம்.

பாக்ஸைட் என்ற தாதுவானது பெரும் பகுதி அலுமினிய ஆக்ஸைடு உள்ளது, இது 2000 செல்ஷியல் வெப்பநிலையில்தான் உருகும் இந்த அளவிற்கு அதை வெப்பமூட்டுவதற்கு செலவிடப்படும் மனித உழைப்பே அதன் மதிப்பிற்கு காரணமானது. ஆனால் 22 வயதே ஆன சார்லஸ் மார்ட்டின் ஹால் என்ற இளைஞர் அமெரிக்காவிலும் அதே வயதுடைய பால் ஹெரால்ட் என்ற இளைஞர் பிரான்சிலும் தனித்தனியாக 1886ம் ஆண்டில் 1000 செல்ஷியல் வெப்பநிலையில் உருக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவுடன் அதன் மதிப்பு சரிந்தது. ஆம் ஒரு கிலோ அலுமினித்தை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மனித உழைப்பு கணிசமாக குறைந்து போய்விட்டது. இன்று நடைமேடைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஐந்து மோதிரம் என்ற அளவிற்கு அலுமினிய மோதிரத்தின் விலை தாழ்ந்துவிட்டது. அதையும் ரூபாய்க்கு ஆறு மோதிரம் கொடேன் என்று பேரம் பேசும் நிலையில் நாம் இருப்பது வேறு விஷயம். கிமு நான்காம் நூற்றாண்டில் மாமன்னன் அலெக்ஸாண்டர் மட்டுமே உணவு உண்ண பயன்படுத்திய விலையுயர்ந்த அலுமினியத் தட்டு இன்று சிறைக் கைதிகள் உணவு உண்ணப் கொடுக்கப்படுகிறது

பண்டத்தின் மதிப்பைப் பற்றி பேசும் பொழுது பொதுவாகத்தான் என்று கூறுகிறோம். அப்படியென்றால் எல்லாப் பண்டங்களுக்கும் மதிப்பு உண்டா? என்றால் மதிப்பு இல்லாத பண்டங்களும் இந்த உலகத்தில் உள்ளது, மனிதனுக்கு பயனில்லாதது மதிப்பில்லாததுதானே. ஆகவே மதிப்பு என்று சொல்லும் பொழுது அது அப்பண்டத்தின் பயன்பாட்டைத்தான் குறிக்கிறது. ஆனால் அந்தப் பயன்பாட்டிற்கு வரையறை எதுவும் உண்டா? என்றால் அதை திட்டவட்டமாக கூறமுடியாது.

மை நிரப்பப்பட்ட ஒரு பேனா 8 வயதில் எனக்கு கிடைத்த பொழுது அந்தப் பேனாவை வைத்து தெருவில் செல்பவர்களின் பின்னால் சென்று அவரின் சட்டையின் முதுகுப்புறத்தில் மையைத் தெளிப்பதற்கே அந்தப் பேனாவைப் பயன்படுத்தினேன். எட்டுவயது சிறுவனான எனக்கு பேனாவின் பயன்மதிப்பு மற்றவர்களின் சட்டையில் மைதெளிப்பதுவே. ஆனால் அந்தப் பேனா ஒரு எழுத்தாளர் கையில் இருந்தால் ஒரு ஒரு படைப்பை உருவாக்க உதவும். எழுத்தாளரின் பயன்மதிப்பு வேறு குறும்புக்காரச் சிறுவனின் பயன்மதிப்பு வேறு. ஒரே பண்டம் இருவரிடம் இருவேறு பயன்மதிப்பை கொடுக்கிறது. ஆனால் பண்டத்தில் பொதிந்திருக்கும் சமூகவழியில் அவசியமான உழைப்பு என்பது ஒரு திட்டவட்டமான அளவாகும். அது மாறப்போவதில்லை. அது எப்படி பண்டத்தை உபயோகிப்பவரின் பயன்பாட்டைப் பொறுத்து மதிப்பு மாறுபடும்? மதிப்பு என்பது பயன்பாட்டிற்கு புறத்தே அமைந்தால்தான் அது திட்டவட்டமான அளவாக இருக்க முடிகிறது.

ஆக மார்க்ஸ் கூறிய மதிப்பின் உண்மையான அர்த்தம் என்ன?

இதே பண்டம் இன்னொரு பண்டத்திற்காக பரிவர்த்தனை செய்யப்படுகிறது என்றால் அந்த இருபண்டங்களுக்கும் இடையில் பரிவர்த்தனையின் போது என்ன உறவு இருக்க முடியும்? இரு பண்டங்களையும் எப்படிச் சமப்படுத்த முடியும்?

சமப்படுத்துவதற்கு பயன்படும் அளவுகோலே அதில் அடங்கியுள்ள சமூக வழியில் அவசியமான மனித உழைப்பு. ஆக, பண்டத்தில் அடங்கியுள்ள மனித உழைப்பை வைத்து அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற உண்மையானது பரிவர்த்தனைக்கு மட்டுமே பொருந்தும் ஆனால் பண்டங்கள் பரிவர்த்தனையாக வேண்டுமானால் அதற்கு பயன் இருந்தாக வேண்டும்.

எனவே பண்டங்களுக்கு பயன்மதிப்பு, பரிவர்த்தனை மதிப்பு என்ற இரட்டை குணாம்சமுள்ள மதிப்புகள் இருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது. ஒன்று செயல்படும் பொழுது மற்றது செயல்படாது. பயன்மதிப்பாக பண்டம் செயல்படும் பொழுது அது தனிநபர்களின் கையில் இருக்கும். பரிவர்த்தனைக்கு வராது. பரிவர்த்தனை செய்ய வரும் பொழுது பரிவர்த்தனை செய்பவருக்கு பயன் இருக்காது பரிவர்த்தனையில் பெறுபவருக்கு பயன் இருக்கும். ஆகவே எதிர்மறைகளில் ஒத்திசைவே இயக்கம் என்ற இயக்கவியல் விதியானது பண்டங்களில் மதிப்புகளின் விஷயத்தில் கொண்ட இரட்டைத் தன்மை மூலமாக வெளிப்படுகிறது. இயக்கவியலே மார்க்சுடைய ஆய்வின் ஆயுதம்.

பண்டத்தில் உருக்கொண்ட மனித உழைப்பே அதன் மதிப்பு என்றால் சட்டை என்ற பண்டமானது தையல் என்ற உழைப்பின் வினை பொருளாகவும், துணி என்ற பண்டத்தில் நெய்தல் என்ற உழைப்பின் வினை பொருளாகவும், நூல் என்ற பண்டத்தில் நூற்பு என்ற உழைப்பின் வினை பொருளாகவும் வெளிப்படுவதை எப்படி பொதுவாக மனித உழைப்பு என்று கூற முடியும்? தையலைச் செய்பவனும் மனிதனே! நெய்தலைச் செய்பவனும் மனிதனே! நூற்பை செய்பனும் மனிதனே! ஒரே மனிதனே இந்த வெவ்வேறு வகையான உழைப்பைச் வெவ்வேறு தருணங்களில் செலுத்த முடியும் என்ற போழ்தில் ஏன் இந்த உழைப்புகளை சமப்படுத்த முடியாது?

மார்க்ஸ் கூறுகிறார்:

“தையலும் நெசவும் பண்பு வழியில் உழைப்பின் வெவ்வேறு வகைகளாகும். ஆயினும் ஒரே மனிதன் தையலையும் நெசவையும் மாறிமாறிச் செய்கிற சமுதாய நிலைகள் உண்டு; இந்நிலையில் உழைப்பின் இவ்விரு வடிவங்களும் ஒரே ஆளினது உழைப்பில் வெறும் தழுவல்களே தவிர, வெவ்வேறு ஆட்களின் தனிவிதமான நிலைத்த பணிகளல்ல“ (பக்கம் 70)

தையல், நெய்தல், நூற்பு என்று ஸ்தூலமான வடிவங்களில் வெளிப்படும் உழைப்பானது சட்டை, துணி, நூல் என்ற பண்டங்களானதும் அதில் செலவிடப்பட்ட உழைப்பை, ஸ்தூலமற்ற வகையில் நாம் பொதுவாக உழைப்பு என்று கூறுகிறோம். ஆகவே உழைப்பு நிகழ்முறையில் ஸ்தூலமாக வெளிப்படும் உழைப்பானது அந்தநிகழ்முறை முடிவுற்று பண்டமாக உருமாறியபின் அது ஸ்தூலமற்ற வடிவத்தில் இருக்கிறது.

ஆம் தையலையோ நெய்தலையே நூற்பையோ நாம் கண்ணால் காணமுடியும் ஆனால் சட்டையிலும், துணியிலும், நூலிலும் அடகிய உழைப்பைக் கண்ணால் காணமுடியாது. அவை வெறும் பண்டங்கள் ஆனால் மனிதன் வினை புரிந்த்ததால் உண்டான பண்டங்கள். அவற்றில் செலுத்தப்பட்ட உழைப்பு எப்படி காணாமல் போகும்? அது பண்டவடிவில் அமைந்திருப்பதால் உழைப்பானது ஸ்தூலமற்ற வடிவத்தில் இருக்கிறது என்கிறோம் எனவே உழைப்பிற்கும் ஒரு இரட்டைத் தன்மை இருக்கிறது என்பதை மார்க்ஸ் ஆய்ந்தறிந்து கூறினார். இதிலும் ஒன்று இல்லாமல் மற்றது இல்லை இரண்டும் ஒரேநேரத்தில் வெளிப்பட முடியாது. அவையே ஸ்தூலமான உழைப்பு மற்றும் ஸ்தூலமற்ற உழைப்பு

ஆக பயன்மதிப்பு-பரிவர்த்தனை மதிப்பு; ஸ்தூலமான உழைப்பு-ஸ்தூலமற்ற உழைப்பு என்ற இரட்டைத்தன்மையானது இயக்கவியல் முதல் விதியான எதிர்மறைகளின் ஒத்திசைவே இயக்கத்திற்கு காரணம் என்கின்ற பொழுது அதன் அடுத்த கட்டமாக நிலைமறுப்பின் நிலை மறுப்பிற்கு செல்கிறது.

பயன் மதிப்பின் நிலை மறுப்பே பரிவர்த்தனை மதிப்பிற்கு காரணமாகிறது. ஆம் ஒருவருக்கு பயன்மதிப்பில்லாத பண்டமே பரிவர்த்தனைக்கு வருகிறது அதுவே அதற்கு பயன்மதிப்பை மறுத்துவிட்டு பரிவர்த்தனை மதிப்பை ஏற்படுத்துகிறது. ஸ்தூலமான உழைப்பு மறுக்கப்படுகிற பொழுதே ஸ்தூலமற்ற உழைப்பாக அது மாறுகிறது. நிலை மறுக்கப்பட்ட பின் ஏற்படும் அளவு மாற்றமானது பண்பு மாற்றத்திற்கு வழிவகுக்கிறது பரிவர்த்தனை மதிப்பாக மாறிய பண்டமானது அளவு வழியில் வளர்ச்சியடையும் பொழுது அதன் பண்பு வழி மாற்றங்களை அடுத்தடுத்து பார்க்கலாம். பயன்மதிப்பு மறுக்கப்பட்டு பரிவர்த்தனை மதிப்பு கிடைக்கப்பெற்று நடைபெறும் இயக்கத்தில் ஏற்படும் பண்பு மாற்றங்களே முதலாளித்துவ உற்பத்தி முறையாக பரிணமிக்கிறது. இயல்பான இயக்கத்தில் உருவான முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது மனித சமூக இயக்கத்தின் அங்கமாக எப்படி உருவெடுக்கிறது என்பதையும் அடுத்தடுத்து பார்க்கலாம். இதை எப்படி மார்க்ஸ் கட்டுடைக்கிறார் என்பதை புரிந்து கொள்ள மார்க்சின் அசல் எழுத்துக்களை படியுங்கள். மூலதனம் வாசியுங்கள்.

….தொடரும்

10-10-2015

Related Posts