தொடர்கள் மூலதனம் - வாசகர் வட்டம்

ஒரு கிலோ மென்பொருளின் விலை என்ன?

மூலதன நூல் வாசகர் மேடை

எனது வாசிப்பு அனுபவம் – 10

(முந்தைய பகுதி: 9 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 11)

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. எதற்கு இந்த முதலாளியிடம் அல்லல்பட்டு அவன் கொடுக்கும் அற்பச் சம்பளத்தை பெற்று வாழ்க்கை நடத்தவேண்டும்? என்று என்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த நண்பரொருவர் ஒரு மருத்துவ மென்பொருளை விற்பனை செய்ய ஆரம்பித்தார். எனக்கும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. நண்பர் போல் விற்பனைத் தொழிலைக் கற்றுக் கொண்டால் … ஓடியது எனது சிந்தனை. அவரிடம் பேசி ஒரு மடிக்கணிணியில் அதன் விற்பனை செயல்வடிவத்தை (Demo Version) நிறுவிக் கொண்டு புறப்பட்டேன். முதலில் செயல்வடிவத்தை பார்த்த மருத்துவர் அந்த மடிக்கணிணியுடன் தருவீர்களா என்று கேட்டார். தரமுடியும், ஆனால் மடிக்கணிணியின் விலை ரூ 50,000 மென்பொருளின் விலை ரூ 1,00,000 என்றேன். மென் பொருளில் என்ன இருக்கிறது? அதை எங்கே பார்க்க முடியும்? ஒன்னுமேயில்லாத மென்பொருளுக்கா இந்த விலை? மடிக்கணிணியை ரூ 50,000க்கு கொடுங்கள் அத்துடன் இலவசமாக இந்த மென்பொருளையும் போட்டு கொடுங்கள் என்றார். இரண்டு கிலோ எடையுள்ள மடிக்கணிணியில் ஒரு எடையும் இல்லாது ஓடும் இந்த மென்பொருளுக்கா இந்த விலை என்பது அவரது ஆச்சரியம்

விற்பனை முயற்சியில் தோல்விகண்ட நான், எனது இயல்பான தொழிலையே தொடர்ந்தேன். நான்காண்டுகள் ஓடிவிட்டன. பணித்திட்ட மேலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு குடிசார் பொறியாளர் (Civil Engineer) தலைமையில் என்னுடைய அலுவலகத்தில் செயல்திட்டக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பொறியாளரும் அவரவர் துறைகளில் திட்டத்தில் இடம் பெரும் வன்பொருட்கள் பற்றியும் அதன் விலை பற்றியும் பேசிக் கொண்டிருந்தனர். இயந்திரவியல் பொறியாளர் கொதிகலனுக்கு தேவைப்படும் மொத்த இரும்பின் எடையும் அவருடைய மதிப்பீட்டை கூறிக் கொண்டிருந்தார். என்னுடைய முறை வரும் பொழுது நான் கொதிகலனை கட்டுப்படுத்தும் கருவிகள் மட்டும் கட்டுப்பாட்டு அமைப்பை விளக்கி அதன் மதிப்பையும் கூறினேன். என்னுடைய மதிப்பீட்டைக் கேட்ட செயல்திட்ட மேலாளர் அதிர்ந்து போய் நீங்கள் கேட்கும் தொகை 500 டன் இரும்புத் தளவாடங்களின் விலைக்கு சமமாக இருக்கிறதே என்றார். ஒரு கிலோ எடையுள்ள இரும்பும் ஒரு கிலோ எடையுள்ள அளவீட்டு கருவிகளும் கட்டுப்பாட்டு மென்பொருளும் சமமான விலையில் இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. ஒரு கிலோ மணலுக்கும் ஒரு கிலோ சிமெண்டுக்கும் ஒரே விலையா கொடுக்கிறீர்கள்? அல்லது ஒரு கிலோ சிமெண்டுக்கும் ஒரு கிலோ இரும்புக்கும் ஒரே விலையா கொடுக்கிறீர்கள்? என்று நான் கேட்டேன். சரியான கேள்விதான் என்று அங்கீகரித்த அவர், ஆனால் ஒரு கிலோ எடையுள்ள அழுத்த ஆற்றல் மாற்றிக்கு (Pressure transducer) ஒரு கிலோ இரும்பைவிட நூறு மடங்கல்லவா நீங்கள் விலை கேட்கிறீர்கள் என்றார்.

ஏன் இவர்கள் இப்படி யோசிக்கிறார்கள். இவர்களுக்கு புரியும் படி என்னால் விளக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் ஒருபுறம் எனக்கு இருந்தாலும் இரும்பு இயந்திரத்திற்கும், கட்டுப்பாட்டு கருவிக்கும் எடை ரீதியாக பார்த்தால் ஏன் இவ்வளவு விலை வேறுபாடு என்பதும் எனக்கும் விளங்கவில்லை. அவற்றில் பொதிந்திருக்கும் பொருளின் அளவு ஒன்றுதானே விலை மட்டும் எப்படி மாறுகிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது? விஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது.

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது. முதலில், அளவு நிலைமாற்றம் பண்பு நிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற விதியை சரிவர புரிந்து கொண்டதே மூலதன நூலின் மூலம்தான். அணுவின் பண்பானது, அதே அணு பலகோடி எண்ணிக்கையில் கூடி ஒரு பொருளாக உருவாகும் பொழுது பண்பு மாற்ற மடைந்துவிடுகிறது. இருப்பின் அணுவிலும் அழுத்த ஆற்றல் மாற்றி அணுவிலும் ஒரே பண்புள்ள புரோட்டான்களும், நியுட்ரான்களும், எலக்ட்ரான்களும் இருந்தாலும் இவ்விரண்டும் அளவு மாற்றடைந்து வரும் பொழுது வெவ்வேறு விதத்தில் பண்பு மாற்றங்கள் நடைபெறுகின்றன என்ற புரிதல் வந்தது. இரண்டுக்கும் ஒரே எடையிருக்கிறது ஒரே அளவுள்ள அணுக்கள் இருக்கின்றன. ஆகவே ஒரே விலை என்பது தவறு என்றும், விலை என்பது பண்புகளில் ஒன்று என்றும் அளவையும் பண்பைபும் போட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் புரிந்து கொண்டேன். சரி விலை என்ற பண்பு அல்லது மதிப்பு என்ற பண்பு ஏன் ஒரே அளவுள்ள இரண்டிற்கும் மாறுபடுகிறது? ஆக பொருளின் மதிப்பை தீர்மானிப்பது எது? என்ற கேள்வியே எஞ்சி நின்றது.

மனிதன் தன்னுடைய உழைப்புச் சக்தியை செலவிட்டதால் உருவானதே உலகில் இருக்கும் ஒவ்வொரு பொருளும். ஆகவே அதன் மதிப்பு என்பது அதில் அடங்கியிருக்கும் உழைப்பே. உழைப்பின் விளைவாக உருவான பொருட்களே செல்வம். ஆக உழைப்பே செல்வம். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் செல்வமாக தோற்றமளிப்பது சரக்குகளே. உழைப்பு பின்னுக்குப் போய் அதன் பயனாக விளைந்தது முன்னுக்கு வந்துவிட்டது என்ன ஆச்சர்யம் ! தோற்றமான செல்வத்தின் பின்னால் சாரமான உழைப்பு ஒளிந்து கொண்டிருக்கிறது. நூலின் முதல் வரியே இப்படித் துவங்குகிறது

“முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை நிலவுகிற சமுதாயங்களின் செல்வம் “சரக்குகளின் பெருந்திரட்டலாக“ காட்சி தருகிறது“(பக்கம் 59)

காட்சிதரும் தோற்றத்துடன் சிலர் நின்றுவிடுவார்கள். அதன் சாரத்தை சிலர் ஆராய ஆரம்பிப்பார்கள். நான் கடந்துவந்த இரண்டு அனுபவங்களிலும் வந்த மருத்துவரும், குடிசார் பொறியாளரும் தோற்றத்துடன் நின்றுவிட்டதாலேயே அப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் தோற்றத்தை தாண்டிச் செல்பவர்களே மனித இனத்தின் அறிவுச் செல்வத்தை உருவாக்குபவர்கள். உதாரணத்திற்கு விஞ்ஞானி டார்வின் இயக்கவியலை பயன்படுத்த ஆரம்பித்ததன் விளைவாக – தோற்றத்தைத் தாண்டி சாரத்துக் சென்றதால் மனிதன் தோன்றிய வரலாற்றை அவரால் கண்டுபிடிக்க முடிந்த்து. அதே போல் மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்திமுறை காட்சிதரும் தோற்றத்தோடு நின்றுவிடாமல் அதில் ஒளிந்திருக்கும் சாரத்தை இந்த நூல் முழுவதும் அடையாளம் காட்டுகிறார்.

இயக்கவியல் முதல்விதியான எதிர்மறைகளின் ஒத்திசைவே இயக்கம் என்பதின் துணைவிதிகளான தோற்றமும்-சாரமும், தனியானதும்-பொதுவானதும், காரணமும்-விளைவும், உருவமும்-உள்ளடக்கமும். பூரணமும்-சார்பும் போன்றவைகள் விஷயங்களுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் விஷயங்களை கட்டுடைக்க பயன்படும். பகுப்பாய்வில் அவர் கடந்து வரும் விவரங்களை உன்னிப்பாக கவனிக்கிற பாங்கானது முதலாளித்துவ பொருளுற்பத்தியின் இயக்கவிதிகளை முழுமையாக அடையாளம் காண வழிவகுத்தது. சரக்குகளுக்கிடையே பரிமாற்றம் நடக்கிறது. பரிமாற்றம் நடக்க வேண்டுமானால் சரக்குகள் மனிதனுக்கு பயனுள்ளவையாக இருக்க வேண்டும் அதாவது அவற்றிற்கு பயன்-மதிப்புகள் இருக்க வேண்டும். பயன்-மதிப்பு என்ற காரணத்தின் விளைவாகவே பரிவர்த்தனை நடக்கிறது. பரிவர்த்தனை நடக்க வேண்டுமானால் சரக்குகளுக்கு பரிவர்த்தனை-மதிப்பு இருக்க வேண்டும் ஏனென்றால் சமதையானவைகளே பரிமாறிக் கொள்ளப்படும். மார்க்ஸ் கூறுகிறார்:

“பரிவர்த்தனை மதிப்புகள் என்ற விதத்தில் ஒன்றுக்கொன்று மாற்றீடு செய்யத் தக்கவையாய், அல்லது ஒன்றுக்கொன்று சமமானவையாய் இருக்க வேண்டும். எனவே, முதலாவதாக : குறிப்பிட்ட சரக்கின் செல்லுபடியாக்கத்தக்க பரிவர்த்தனை-மதிப்புகள் சமமான ஏதோ ஒன்றைத் தெரிவிக்கின்றன; இரண்டாவதாக : பொதுவாக பரிவர்த்தனை மதிப்பானது அதில் அடங்கியுள்ள ஆனால் அதிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கத்தக்க ஏதோ ஒன்றின் தெரிவிப்பு முறையாகவே, புலப்பாட்டு வடிவமாகவே இருக்கிறது“ (பக்கம் 61)

இந்தப் புலப்பாட்டு வடிவத்தை தாண்டி அவர்கூறும் அந்த “ஏதோ ஒன்று“ என்ன என்பதைக் கண்டுபிடிக்க முனைகிறார். அந்த “ஏதோ ஒன்று“ வேறொன்றும் இல்லை மனித உழைப்புதான் ஆம் பொருட்களுக்குள் உறைந்திருக்கும் மனித உழைப்பே அதன் மதிப்பை தீர்மானிக்கிறது,

மதிப்பை பற்றி மார்க்ஸ் கூறுகையில்

“எந்தப் பண்டத்தினது மதிப்பினது பருமனையும நிர்ணயிப்பது சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவே, அதாவது சமுதாய வழியில் அவசியமான உழைப்பு நேரமே“ (பக்கம் 65)

ஆக ஒரு கிலோ இரும்பிலும் ஒரு கிலோ எடையுள்ள ஆற்றல் மாற்றி என்ற கருவியிலும் அடங்கியிருக்கும் அணுக்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்தாலும் அந்த அணுக்கள் இரும்பாகவும் ஆற்றல் மாற்றி என்ற கருவியாகவும் மாறுவதற்கு மனித உழைப்பு செலுத்தப் பட்டிருக்க வேண்டியதிருக்கிறது. இரண்டிலும் அடங்கியிருக்கும் மனித உழைப்பு ஒன்றல்ல. ஒரு கிலோ இரும்பை உருவாக்க செலவழிக்கப்பட்ட மனித உழைப்பைப் போல் ஆயிரம் மடங்கு மனித உழைப்பு செலவிடப்பட்டு உருவானதே ஆற்றல் மாற்றி என்ற கருவி. அணுக்கள் இயற்கையிலேயே உருவானது மனிதன் பயன்படுத்தத்தக்க இரும்பாகவும் ஆற்றல் மாற்றி என்ற கருவியாகவும் அவை மாற்றப்பட்டது அதில்மனித உழைப்பு செலுத்தப்பட்டதால்தான். கண்ணுக்கே தெரியாமல் மடிக்கணிணியில் இயங்கும் அந்த மருத்துவ மென்பொருளை உருவாக்குவதற்கு செலவிடப்பட்ட மனித உழைப்பின் விளைவாகவே அதை ரூ 1,00,000 என்கிறார்கள் அதன் உற்பத்தியாளர்கள்.

 ….தொடரும்

 

Related Posts