மனந்தளராத விக்கிரமாதித்யன் ! (மூலதனம் வாசிப்பு)

(மாற்று இணையதளம் தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ‘மூலதனம் – இணைய வாசகர் வட்டம்’ தொடங்கப்படுகிறது. சென்னையில் 3 மையங்களில் செயல்பட்டுவரும் நமது நண்பர்கள் – இந்தப் பகுதியில் தொடர்ந்து எழுதவும், விவாதிக்கவும் செய்வார்கள். இணையத்தில் தொடர்ந்து தொடர்பில் இருப்பது குறித்த தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் அடுத்த கட்டுரையில் வெளியாகும்)

மூலதன வாசிப்பு வாசகர் வட்டம் என்ற இந்தப் பகுதியானது மூலதனம் வாசித்து வருபவர்களுக்கான ஒரு மேடையாக அமைய வேண்டும் என்று தெரிவித்த மாற்று இணையதள ஆசிரியர் குழுவினர், தற்பொழுது சென்னையில் இயங்கிவரும் இரண்டு மூலதனம் வாசிப்பு வட்டங்களின் செயல்பாட்டாளர்களில் ஒருவன் என்ற முறையில் இப்பகுதியில் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தனர். நானும் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கினேன். ஏனென்றால் மூலதனம் வாசிப்பு என்பது தமிழகத்தில் பரவலாக செயல்பட்டு விரைவில் நிறையப் பேர் மூலதன வாசிப்பு அனுபவம் பற்றி எழுத ஆரம்பித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு போன்று நீளும் அனுபவமாகவே இருக்கும். காரணம் மூலதன நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் விதந்து எழுத நிறைய இருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தைப் பற்றியும் நிறையப் பேர் எழுதினால் அது கன்னித் தீவாகத்தான் நீளும். ஒன்னுமில்லாத கன்னித் தீவே நீண்டு கொண்டிருக்கும் பொழுது சரக்குள்ள மூலதன நூலின் (மூலதன நூலில் மார்க்ஸ் கூறும் சரக்கல்ல இது. அறிவார்ந்த விஷயங்கள் என்பதைக் கூறும் நமது நடைமுறைத் தமிழ்) வாசிப்பு மேடை நீண்டு போவது ஒன்னும் ஆச்சரியமானதல்ல. ஆகவே இது ஒரு நீண்ட நெடிய முயற்சி என்ற பிரமிப்பில் நான் சுணக்கம் காட்ட மாட்டேன் காரணம் மூலதனத்தைப் படிக்க ஆரம்பித்த வாசகர்கள், “சொல்வதற்கு நிறைய இருக்கிறது நீயே எழுதிக் கொண்டிருக்கிறாயே எனக்கும் வாய்ப்பு கொடு“ என்று என்னிடமிருந்து இந்த மேடையைப் பறித்துக் கொள்வார்கள். எனவே அனைவருக்கும் வாய்ப்புக் கொடுப்பார்கள் என்ற எனது புரிதலில் இப்பகுதியை துவங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மூலதன நூலின் தமிழ் வடிவம் எனக்கு கிடைத்தது 1998ம் ஆண்டுதான். அந்த ஆண்டுதான் தோழர் தியாகுவின் மொழிபெயர்ப்பில் இந்த நூலை என்சிபிஎச் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த நூலானது எனது அலமாரியில் 10 ஆண்டுகாலம் உறங்கிக்கிடந்தது. அதுவும் எனக்கு ஓய்வு கொடுத்து வாசிப்பு ஒன்றே உனது ஒரே வேலை என்று என்னை பரோடாவிற்கு எனது நிறுவனம் அனுப்பிவைத்த பொழுதும் கூட நான் இதைப் படிக்க முயலவில்லை. ஐந்தாண்டு காலம் பரோடாவில் குப்பை கொட்டினாலும் ஒரு சில புத்தகங்களை வாசித்தாலும் மூலதனத்தை வாசிப்பது கைவரப் பெற்றதில்லை. எனினும் கடந்த 2008ம் ஆண்டு நிகழ்ந்த உலக முதலாளித்துவ பொருளாதார வீழ்ச்சியின் பலனாக மூலதன நூலின் விற்பனை அதிகமானது என்ற செய்தியைப் படித்தவுடன் எனக்கும் ஆர்வம் பீறிட்டு ஓரிரு பக்கங்கள் படித்துவிட்டு படிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தேன்.

இதனைத் தொடர்ந்து யாரேனும் இதை வாசித்தவர்கள் இதுபற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தால் வாசிப்பைத் துவங்கலாம் என்ற எண்ணத்தில் பேராசிரியர் ஆத்ரேயாவை அணுகினேன். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் ஒரு சிலரைத் திரட்டினால் நான் உங்களுக்கு இதுபற்றி வகுப்பு எடுக்கிறேன் என்றார். எங்கே ஒரு சிலரைத் திரட்டுவது? முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்யன் போல் ஒரு சிலரைத் திரட்டி 9 வகுப்புகள் வரை நடத்த முடிந்தது அதற்குப் பிறகு அது செத்துவிட்டது. காரணம் ஒன்பது வகுப்பிலும் கலந்து கொண்ட ஒரே மாணவன் நான்தான். மற்றவர்களில் சிலர் இரண்டு வகுப்புகளிலும் சிலர் மூன்று என்று ஆரம்பித்து, ஒரே ஒரு வகுப்பில் மட்டும் கலந்து கொண்டவர்கள் அதிகம். இதற்கு நடுவில் பேராசிரியர் டேவிட் ஹார்வியின் மூலதன வகுப்புகள் 13 குறுந்தகட்டில் கிடைக்கப் பெற்றேன். அவருடைய ஆங்கிலம் எளிதில் புரிந்தது வகுப்பும் சுவாஸியமாக இருந்தது. எனக்குள் உறங்கிக் கொண்டிருந்த விக்கிரமாதித்யன் மீண்டும் கிளம்பிவிட்டான். மீண்டும் ஒரு சிலரைச் சேர்த்துக் கொண்டு முயன்றேன்.

அளவு மாற்றம் பண்பு மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பது போல் பிரம்மாண்டமாய் துவங்கி இன்று வரை ஓரளவு நடந்து வருகிறது. எனவே என்னுடைய அனுபவம் என்னவென்றால் இதுபோல் முயற்சியில் ஈடுபடுபவர்கள் 100 பேரையாவது திரட்டி வாசிப்பை துவங்க வேண்டும் அப்பொழுதுதான் வாசித்து முடித்தவர்கள் 20 பேராவது தேறும். முதல் தொகுப்பை முழுவதுமாக படித்துவிட்டேன். எந்த அத்தியாயத்தைப் பற்றி தூக்கத்தில் எழுப்பி விவாதிக்க கூப்பிட்டாலும் நான் பாட்டுக்கு என்னுடைய புத்தகத்தில் அடிக் கோடிட்டு அருகில் நான் எழுதி வைத்திருக்கும் குறிப்புகளை வைத்து விவாதிக்க துவங்கி விடுவேன். பொழுது போகவில்லை என்றால் முலதன நூலை எடுத்துக் கொண்டு அடிக்குறிப்புகள் மிண்டும் மீண்டும படித்து வருகிறேன். மார்க்ஸ் நையாண்டியாக குறிப்பிட்ட நபர்களைப் பற்றி கூகுள் செய்து தெரிந்து கொள்கிறேன். அவர்களைப் பற்றியெல்லாம் எழுதி உங்கள மொக்கை போடப் போறேன் என்பதையும் இப்பொழுதே எச்சரித்துவிடுகிறேன். எவ்வளவு தகவல்களைக் கொடுக்கிறார்! எவ்வளவு நூல்களை படித்திருக்கிறார்! என்ன மாதிரியான நூல் கட்டமைப்பு! விஞ்ஞான ஆய்வுத்தாள்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். இந்தளவு கட்டமைப்புள்ள ஒரு ஆவணத்தை இதுவரை படித்ததேயில்லை. புலவர் கீரன் வில்லிபாரதக் கதை சுமார் ஒருமாதம் சொல்லுவார். அவருடைய தமிழுக்காவும் சொல்லாற்றலுக்காவும் சென்றதுண்டு. அதைவிட வலிமையான சொல்லாற்றல் மார்க்ஸின் இந்த எழுத்து. இதனுடைய இலக்கிய நயத்திற்காவும் இயக்கவியலைப் பொருத்திய விதமும் அரசியல் பொருளாதார மூடுமந்திரங்களை கட்டுடைப்பதையும் ரசித்து மகிழ்ந்து அனுபவித்து படித்தேன். இந்த சுகம் உங்களுக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன். மனந்தளரா விக்கிரமாதித்யன் என்பது கொஞ்சம் அதீதம்தான். படிப்பதற்கு முயற்சி எடுத்தவனே தன்னை விக்கிமாதித்யன் என்று கூறும்பொழுது எழுதியவனை என்னென்று கூற?

 • Pingback: மதிப்பினைப் புரிந்துகொள்ளல் ... 1 - மாற்று()

 • Pingback: பணத்தின் புதிரை விடுவிக்கும் மார்க்ஸ் ... 2 - மாற்று()

 • nishvanth

  மூலதனம் வாசிப்பு சென்னையில் எங்கு நடைபெறுகிறது.

 • மூலதனத்தை வாசிப்பதற்கே ஒரு இயக்கம் தேவைப்படுகிறது, அதுவும் எல்லா வகுப்புகளையும் ஆஜர் ஆன உறுதி .. மூலதன நூலை என்னுடைய ஐ பேடிலும் ஐ புக்கில் வைத்திருக்கிறேன்.. எத்தனையோ எளிமையான புத்தகங்களை வாசிக்க கிடைக்கும்போது மூலதனத்திற்குள் நுழைய முடியவில்லை… உங்களுடைய அனுபவ எழுத்துக்களின் வாயிலாக வாசிக்கமுடியும்.

  தொடரட்டும் மூலதன வாசிப்பு…எழுதுங்கள் இதே எளிமையான நடையில். வாழ்த்துக்களுடன்

  ஹரிகரன்
  கத்தார்

 • Srikanth

  ஏகாதிபத்திய மூலதனம் தன் ஆக்டோபஸ் கரங்களை உலகம் முழுதும் பரப்பி எளிய மக்களின் உழைப்பை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் தருணமிது. வாடிகன் வாசிகள் முதல் முதலாளித்துவ பொருளாதாரவதிகள் வரை சமீபத்திய நெருக்கடியின் பொழுது மூலதனத்தைத் தேடிப் படித்தனர். அது நெருக்கடியின் தன்மையைப் புரிந்து கொண்டு அதிலிருந்து மீண்டு வரும் வழி காண்பதற்கு என எளிதாக எண்ணிவிட முடியாது. நெருக்கடிகள் சமூக மாற்றத்துக்கு, குறிப்பாகச் சொல்வதெனில் தன் எதிரி வர்க்கமான தொழிலாளி வர்க்கத்துக்குச் சாதகமான மாற்றங்களுக்கு வித்திட்டுவிடக் கூடாது என்பதில் இருந்த பதட்டம் தான் முதல் காரணம். அதற்கான கூறுகளையும் சாத்தியமான வியூகங்களைக் கண்டு அவற்றை எதிர் கொள்ளும் வழிவகைகளைக் காண்பதும் அவர்கள் நோக்கமாக இருக்கும். இந்நிலையில் மூலதனம் இடது சாரிகளுக்கு ஏகாதிபத்திய கொடுமைகளுக்கு எதிராகச் சமர் செய்வதற்குத் தேவையான தத்துவ பலத்தைக் கொடுக்கும்.

  • Vijayan S

   மூலதனத்தை 2008 உலக நெருக்கடியை ஒட்டி படிக்க முயற்சித்த பொழுது அது தத்துவம் மற்றும் அரசியல் பொருளாதாரத்தையும் தாண்டி அழகியல் படைப்பாகவும் அமைந்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. கண்ணதாசனின் கவிதையை விரும்புவர்கள் கண்ணதாசன் தமிழ் மன்றம் அமைத்து அவருடைய கவித்துவத்தை விதந்து பேசும்பொழுது, சிலம்பொலி செல்லப்பன்களும் சிலம்புச் செல்வர்களும் சிலப்பதிகாரத்தை விதந்து பேசும் பொழுது மூலதனத்தை விதந்து பேசும் ஒரு குழு தமிழ்நாட்டில் இருந்தால் என்ன குறைந்துவிடும் என்பதாலேயே இதை முக்கியப்பணியாக எடுத்துக் கொண்டேன். அட கண்ணதாசனையும் இளங்கோ அடிகளையும் விட்டுவிடுங்கள் அவர்களிடம் சரக்கு இருக்கிறது. ஆனால் ஒன்னுமே இல்லாமல் 5 தொகுப்புகளாக நீளும் மசாலாக் கதைகளான பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவைகள் விடாமல் அச்சிடப்பட்டு மீண்டும் மீண்டும் தொடர்களாக வரும்பொழுது, மூலதன நூலின் மூன்று தொகுப்புகளும் விஷய ஞானத்தோடு சுவை குறையாமல் அமைந்திருப்பதை பிரபல்யப்படுத்த வேண்டாமா? இல்லாவிட்டால் வான் கோழிதான் மயில் என்ற நினைப்பில் வாழ்பவர்களுக்கு வான்கோழி எது மயில் எது என்று அறிமுகப்படுத்தும் கடமையிலிருந்து நாம் நழுவிவிடமாட்டோமா?