கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் நாளொரு அறிவிப்பு செய்து இந்திய தேசியத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபமாக அறிவித்த அறிவிப்புகள் எல்லாமே செம ஹாட் அறிவிப்புகள் தான்.
அதில் ஒன்று தான், 6 தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அறிவிப்பு.
கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. திருவாங்கூர் தேவசம் போர்டு என்பது கேரள அரசின் தேவசம் போர்டு என்று அறியமுடிகிறது. அந்த 120 கோயில்களிலும் இத்தனை ஆண்டுகளாக பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருந்து வந்துள்ளனர். கேரளா மட்டுமல்ல இந்தியா முழுவதும் அதுதான் நிலைமை. இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளில் இந்து கோயில்கள் இருந்தால் கூட அதுதான் நிலைமை. இப்போதும் அதே நிலை தான் எனினும், அந்த கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணையின்படி இந்தியாவிலேயே முதன்முதலாக பிராமணர் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 36 பேரில் 6 பேர் தலித்துகள். அந்த 6 தலித்துகளில் ஒருவரான யாது கிருஷ்ணன், திருவனந்தபுரத்தில் திருவல்லா அருகே உள்ள மணப்புரம் சிவன் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவின் முதல் தலித் அல்லது பட்டியலின வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர் என்ற பெயர் பெற்றுள்ளார் யாது கிருஷ்ணன்.
36 பேரில் 6 தலித்துகள் தவிர உள்ள பிற சமூகத்தினர் யார் யார் என்று பெயர் கூட குறிப்பிடவில்லை. அவர்களை குறிப்பிடாமல் தலித் அர்ச்சகர் ஆனதை மட்டும் குறிப்பிட்டு ஏன் சொல்லவேண்டி இருக்கிறது என்பதற்கான காரணங்கள் தெரியவேண்டுமெனில் நீங்கள் இந்திய வரலாறும் இந்து மதத்தின் வரலாறும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்திய பெருநிலத்தில் முதன்முறையாக பிராமணர் அல்லாத சாதியினரும், தலித்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த செய்தி, ஆஹா பிரம்மாதம் என்று சொல்லிவிட்டு கடந்து போய்விடக்கூடிய செய்தியாக இல்லை. அப்படி எடுத்துக்கொள்ளவும் கூடாது. முடியாது. அதே நேரத்தில் இந்த செய்தியை மிக சாதாரணமாகவும் எண்ண முடியாது. இந்த நிகழ்வின் பின் தொடர்ச்சிகள் பற்றி இப்போது யோசிக்கவேண்டிய தேவை, அவ்வளவாக இல்லை எனினும், இதன் முன் வரலாறு பற்றி நாம் கொஞ்சம் விரிவாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அப்படி தெரிந்துகொள்வதற்கான தகவல்களை சேகரிக்கத் தொடங்கியபோது அது மிகப்பெரிய ஆய்வாக விரிந்து நீண்டு கொண்டே இருந்தது. எனவே அவ்வளவு பெரிய கட்டுரையை எழுத நிறைய நாள்களும் தாள்களும் தரவுகளும் தேவைப்படும் என்பதால் எதைத்தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் நினைத்தேனோ, அவற்றை கேள்விகளாக வரிசைப்படுத்துகிறேன். அதில் இருந்து விவரமான விளக்கமான பதில்களை தேடித்தெரியுங்கள்.
கேள்விகள்.
- தலித் அர்ச்சகர் ஆனதை ஏன் பெரிதாக கொண்டாட வேண்டும்?
- இவ்வளவு நாள்களாக ஏன் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டார்கள்?
- இந்துக்கள் என்றால் பிராமணர்கள் மட்டும் தானா?
- பிராமணர் அல்லாதவர்கள் யார் யார்?
- ஏன் பிராமணர் – பிராமணர் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது, எப்போது, எதன் அடிப்படையில் அப்படி பிரிக்கப்பட்டது?
- அர்ச்சனை உள்ளிட்ட சடங்குகளை செய்பவர்கள் தான் அர்ச்சகர்கள் என்றால் அர்ச்சனை அல்லது அர்ச்சனைகள் என்றால் என்ன?
- இந்து கோயில்களாக / ஆலயங்களாக அடையாளப்படுத்தப்படும் அனைத்திலும் அர்ச்சனை முறை உண்டா?
- இல்லை என்றால் எந்த வகை கோயில்களில் அர்ச்சனை முறை இருக்கிறது? எந்த எந்த கடவுளருக்கு அர்ச்சனை முறை இருக்கிறது?
- அர்ச்சனை முறை இல்லாத கோயில்கள் எவை? அர்ச்சனை இல்லாமல் வேறு என்ன வழிபாட்டு முறைகள்/சடங்குகள் இருக்கிறது? அதை எந்த கடவுளர்களுக்கு யார் செய்கிறார்கள்?
- அர்ச்சனை முறையும், அர்ச்சகர்களும் இல்லாத கோயில்களும் இந்து கோயில்களாக எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது?
- அர்ச்சனை என்பதில் சமஸ்கிருதம் கண்டிப்பாக இடம் பெற வேண்டுமா? சமஸ்கிருதம் இல்லாமலும் அர்ச்சனை செய்யலாமா?
- தீட்சை என்றால் என்ன?
- ஆகமம் / ஆகம விதிகள் என்றால் என்ன? ஆகம விதிகளை பின்பற்றி எந்த எந்த கடவுளர்களின் ஆலயங்களில் வழிபாடுகள் செய்யப்படுகிறது?
- ஆகம விதிகளோடு சற்றும் தொடர்பில்லாத கோயில்கள் கடவுளர்கள் பற்றிய விபரம்?
- ஆகமங்கள் / சட்டங்களை விட வலிமையானதா? சட்டங்கள் ஆகமங்களை கட்டுப்படுத்த மீற முடியாதா?
- அர்ச்சகர்களை பூசாரிகள் என்று அழைக்கலாமா? கூடாது என்றால் இருவருக்கும் என்ன வேறுபாடு? இவர்கள் இருவர் தவிர வேறு யாரும் உண்டா?
- அர்ச்சகர்கள் அல்லது அர்ச்சகர்கள் பயிற்சி எடுத்தவர்கள் தான் குறிப்பிட்ட கோயில்களில் பணிபுரிய முடியும் என்று எது சொல்கிறது?
- அர்ச்சகர் பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது?
- அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன? எங்கே உள்ளன? பயிற்சியின் காலம் எவ்வளவு? கட்டணம் எவ்வளவு? சேர தகுதியும் நிபந்தனைகளும் என்னென்ன?
- தமிழக அரசின் துறைகளில் “இந்து சமய அறநிலையத்துறை” என்ற தனித்துறை இருக்கிறது. அது இந்து சமய கோயில்களின் நிர்வாகப்பொறுப்பை கவனிக்கிறது. அதுபோல பிற சமயங்களுக்கு துறைகள் இருக்கிறதா? ஏன் இல்லை?
- சில மதங்களுக்கு தனியாக வாரியங்கள் உள்ளதென்று சொல்கிறார்கள்? வாரியங்கள் என்றால் என்ன?
- துறைகளுக்கும் வாரியங்களுக்கும் என்ன வேறுபாடு. இரண்டிற்குமான அதிகார எல்லை எவை?
- பிற மதங்களில் அர்ச்சகர்கள் போல வழிபாட்டு முறைகளை செய்பவர்களுக்கு பயிற்சிகள் உள்ளதா? தமிழகத்தில் உள்ள மதங்களில் என்ன என்ன மதங்களில் எந்த மாதிரியான பயிற்சிகள் உள்ளன?
- தமிழகம் தான் முதலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை கொண்டு வந்தது எனில் எப்போது? யார் ஆட்சியில்? ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை இன்னும்?
இந்து மதம் மட்டும் தான் கடவுளுக்கு வழிபாடு செய்பவர்கள் முறையாக பயிற்சி எடுத்து இருக்க வேண்டும் என்று சொல்கிறதா என்றால் இல்லை. கிறிஸ்தவ மதத்திலும் அப்படி பயிற்சி எடுத்தவர்கள் தான் பாதிரியார்களாக இருக்கிறார்கள். இஸ்லாம் மதத்திலும் பயிற்சி எடுத்தவர்கள் தான் ஹஷரத்களாக இருக்கிறார்கள். அதனால் பயிற்சி என்பதை பொதுநோக்கில் தவறாக பார்க்க வேண்டியது இல்லை. எனினும் எனினும் கிறிஸ்தவம், இஸ்லாம் போல இந்து மதத்தை சொல்லமுடியுமா என்றால் முடியவே முடியாது. அடிப்படையில் இந்து மதம் என்பது மற்ற இரண்டிலும் இருந்து முற்றிலும் வேறுபாடு கொண்டது. அந்த வேறுபாடு தான் இந்து மதத்தின் ஆகப்பெரிய பிரச்சினை என்று ஒரு சாராரும், அந்த வேறுபாடு தான் இந்து மதத்தின் ஆகப்பெரிய பலம், அதுதான் இந்து மதம் என்றும் இன்னொரு சாராரும் நீண்ட காலமாக விவாதித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
கேரளாவில் அர்ச்சகர் பயிற்சி எடுத்த ஏடு முகுந்தன் தலித் என்பதைத்தாண்டி இன்னும் சில செய்திகளையும் கேள்விப்பட முடிகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் உண்மையாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
- அர்ச்சகர் பயிற்சி என்பது ஆகம விதிகளுக்கு உட்பட்டே இருக்கிறது.
- தலித் அர்ச்சகர், அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள கோயில், தலித் மக்கள் வாழும் பகுதியில் உள்ள கோயில் என்று சொல்கிறார்கள்.
- தலித் அர்ச்சகர், மூலவர்கள் எனப்படுகிற சாமி சிலைகளை தொட்டு அர்ச்சனை செய்ய அனுமதி இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தலித் அர்ச்சகர், தன்னுடைய பாரம்பரிய உடை கலாச்சாரத்தை விட்டுவிட்டு அர்ச்சகருக்கு ஏற்றதாக சொல்லப்படுகிற உடை கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்.
தலித் அர்ச்சகர் அவரது பணி நேரம் தவிர்த்த பிற நேரங்களில் சராசரி தலித்துகள் போல வாழ அனுமதிக்கிறதா ஆகமம்? அதாவது அசைவம் எக்ஸட்ரா எக்ஸட்ரா…
சட்டம் எவ்வளவு பெரிய சமத்துவத்தைப் பேசினாலும், அதன் எல்லை ஆகமம் வரை மட்டுமே. இந்து மதம் ஆகமங்களின் விதிமுறைகளுக்கு எதிரானதாக சட்டம் இருக்கக்கூடாது. இருக்காது.
மற்ற மதங்களிலும் மத வழிபாடு செய்பவர்களுக்கு தனி உடை உண்டு. இஸ்லாமில் ஹஸ்ரத்களுக்கு தனி உடை இருக்கிறது என்றாலும் அது கட்டாயம் என்று சொல்லப்படவில்லை. கிறிஸ்தவத்திலும் பாதிரியார்களுக்கு தனி உடை இருக்கிறது.
ஆனால் இந்து மதம் போல அது ஒரு தனி சமூகத்திற்கான உடையாக இல்லை. இங்கு அந்த உடை என்பது ஒரு தனி சமூகத்திற்கான அடையாள உடையாகவே இருக்கிறது. இருந்திருக்கிறது. இருக்கப்போகிறது.
ஆக, ஒரு தலித் அர்ச்சகர் ஆனால் ஆகம விதிகளைப் பின்பற்றி அனைத்து வழிகளிலும் வாழ்வார். உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்வார். உடை பழக்கத்தை மாற்றிக்கொள்வார். அப்படி ஒன்றும் அவ்வளவு சீக்கிரத்தில் தலித்துகள் பிராமணர்களோடு நிரந்து கலந்து விட முடியாது எனினும், அர்ச்சகர் ஆகிற தலித்துகள், தலித் என்ற அடையாளத்தில் இருந்து காலப்போக்கில் விடுபடுவார். விடுபடுதல் என்றால் மெல்ல மெல்ல பிராமணராக மாறி விடுவார். இதுவும் தனிப்பெரும் விவாதத்திற்குரிய பொருள் தான்.
தமிழகத்திற்கு வருவோம். தமிழகம் தான் கேரளாவிற்கு பல வருடங்கள் முன்னதாகவே இந்த முயற்சிகளை எடுத்தது என்று சொல்கிறார்கள்.
1970-ல் இது பற்றிய முதல் போராட்டத்தை பெரியார் துவங்கி இருக்கிறார். அதன்பின் அதற்கான மசோதா நிறைவேற்றப்படுகிறது. எல்லோரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் சட்டம், ஏற்கனவே இருந்த இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை சட்டத்தின் பிரிவு 55, 56, 116 ஆகியவற்றில் செய்யப்பட்ட திருத்தச் சட்டம்தான். இதற்கான மசோதா 2.12.1970-ல் தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எம். சிக்ரி, ஏ.என். குரோவர், ஏ.என். ரே, டி.ஜி. பாலேகர், எம்.எச். பெக் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து 1972 மார்ச் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். அதன்படி, இந்தச் சட்டம் அரசியல் சாஸனம் அளிக்கும் மத வழிபாட்டுச் சுதந்திரத்தை மீறுவதாக கூறியது. ஒரு கோவிலில் அர்ச்சகரை நியமனம் செய்யும்போது, ஆகமங்களை மீறி அறங்காவலர் நியமனங்களை மேற்கொள்ள மாட்டார் என்று அரசு கூறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், குறிப்பிட்ட இனம், உட்பிரிவு, குழுவிலிருந்தே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டியது. ஆனாலும் மனுதாரரின் அச்சத்திற்கு இப்போது அவசியமில்லை என்று கூறி சேஷம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
சட்டத்தை எதிர்த்தவரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகத் தோன்றினாலும் ஆகமத்திற்கு உட்பட்டே நியமனங்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்த உத்தரவு வலியுறுத்தியது.
(https://indiankanoon.org/doc/641343/)
இடையில் இருந்த எம்.ஜி.ஆர் காலத்திலும், தொடர்ந்த ஜெயலலிதா காலத்திலும் இந்த விசயத்தில் அத்தனை சிரத்தை எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை.
பின் நீண்ட இடைவெளிக்குப்பின், 2006ஆம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான அரசாணையை வெளியிட்டது.
2002-ல் ஆதித்யன் Vs கேரள அரசு என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கிய கேரள உயர்நீதின்றம், ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் எல்லோரும் சமம் என்ற இந்திய அரசியல் சாஸனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்டரீதியாக செல்லாது என்று கூறி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க முடியும் என்று தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா ஏதும் செய்யாத நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த தி.மு.க., இந்த அரசாணையை வெளியிட்டது.
அரசாணை வெளியிடப்பட்டதோடு 2007-ம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, சென்னை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, பழனி ஆகிய இடங்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதில் பழனி, திருச்செந்துர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு ஊர்களில் உள்ள பயிற்சி மையங்கள் சைவ முறை அடிப்படையிலும், சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு ஊர்களில் உள்ள பயிற்சி மையங்களில் வைணவ முறையிலும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. ஒன்றரை வருடம் காலம் கொண்ட பயிற்சி இது.
மொத்தம் 6 மையங்களில் ஒரு மையத்திற்கு 40 பேர் என்ற அடிப்படையில் மொத்தம் 240 பேர் சேர்க்கப்பட்டனர். அதில் 207 பேர் முழுப்பயிற்சி முடித்து அர்ச்சகர் ஆகத் தகுதி பெற்றனர்.
அதில் ஒருவர் விபத்தில் மரணம் அடைந்ததால் இப்போது அர்ச்சகர் பயிற்சி பெற்ற 206 பேர் இன்னும் பணி நியமிக்கப்படாமல் உள்ளதோடு, பயிற்சியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் பயிற்சி பெற்றவர்களில் பிராமணர்களான 4 பேர் அரசு நியமிக்கவில்லை என்ற போதிலும் வழிவழி சம்பிரதாயங்களின் படி அந்த வேலையை செய்கின்றனர். மற்றவர்களுக்கு அரசு தலையீடு இல்லாமல், அரசு நியமிக்காமல் அப்படி அன் அபிஸியலாக அர்ச்சகர் பணி செய்ய முடியவில்லை. யாரும் அழைக்கவும் இல்லை. அனுமதிக்கவும் இல்லை என்று தெரிகிறது.
பயிற்சி ஏன் நிறுத்தி வைக்கப்பட்டது, 206 பேர் பயிற்சி பெற்று, கிட்டத்தட்ட 9 வருடங்களாக பணி நியமனம் செய்யப்படாததற்கான காரணம் என்ன?
அதையும் பார்ப்போம்…
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான மசோதாவை அன்றைய தமிழக அரசு (தி.மு.க.) வெளியிட்டது. அந்த மசோதாவை எதிர்த்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவைப் பெற்றது. ஆனாலும், அர்ச்சகர் பள்ளிகள் அந்த ஆண்டு தொடர்ந்து நடந்தன.
இந்த வழக்கில் 2015 டிசம்பரில் மீண்டும் குழப்பமான தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.
வழக்கு பற்றிய விவரம்:
அரசாணை
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 36 ஆயிரம் கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களில் தகுதியும், பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்று கடந்த 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை 2006–ம் ஆண்டில் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
இதற்கிடையில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை 207 பேருக்கு ஆலயங்களில் பூஜை செய்யும் பயிற்சியை அளித்து அவர்களை நியமனத்துக்கு தயாராக வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடையால் இந்த 207 பேரை கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
மனுதாரர்களான ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோவில் பரிபாலன சபை ஆகிவற்றின் சார்பில் மூத்த வக்கீல் பராசரன் மற்றும் ஜி.உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ், கோலின் கொன்சால்விஸ் மற்றும் யோகேஷ் கன்னா ஆகியோர் ஆஜரானார்கள். ஏற்கனவே அர்ச்சகர்களாக பயிற்சி பெற்று தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட 207 பேர் சார்பிலும் வக்கீல் கோவிலன் ஆஜரானார்.
சமூக நீதி
தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல்கள், ‘‘அனைத்து துறைகளிலும் சமூக நீதியை கருத்தில் கொண்டு இந்த முடிவை தமிழக அரசு எடுத்து உள்ளது. இப்படி நியமனம் செய்வதற்கு அரசியல் சாசனத்தில் எவ்வித தடையும் இல்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு எந்த வகையிலும் ஊறு விளைவிக்காமல் அனைத்து தரப்பினரும் எவ்வித வேறுபாடும் இன்றி ஆலயங்களில் பூஜைகளை செய்ய வழிவகுக்கும் வகையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை ஆகம விதிகளை காட்டி எதிர்ப்பது தவறானது’’ என்று கூறினார்கள்.
207 பேரை அர்ச்சகர்களாக நியமிக்கும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நியமனங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் அவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டு உள்ளது என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
ஆகம விதிகளுக்கு எதிரானது
ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம், தென்னிந்திய திருக்கோவில் அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.பராசரன் மற்றும் ஜி.உமாபதி ஆகியோர் வாதாடுகையில், தமிழக அரசின் இந்த அரசாணை ஆகம விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், நடைமுறை சிக்கல்கள் நிரம்பியது என்றும், மேலும் 1972–ம் ஆண்டில் சேஷம்மாள் என்பவர் தொடர்ந்த வழக்கில் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரானது என்றும் கூறினார்கள்.
ஆகம சாஸ்திரப்படி யாரை வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று வாதிட்ட அவர்கள், மேலும் இந்து ஆலயங்களில் பல பிரிவினரும் பூஜைகள் செய்து வருவதாகவும், இந்த அரசாணை அப்படி ஏற்கனவே பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
நீதிபதிகள் தீர்ப்பு
கடந்த ஏப்ரல் 23–ந் தேதி இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:–
ஆகம விதிப்படி நியமனம்
இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சியும், தேர்ச்சியும் இருக்குமானால் ஒருவரை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது. இதனை புறக்கணிக்க முடியாது.
அதே நேரத்தில் ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமிப்பதை தடுக்கவும் முடியாது. மத நம்பிக்கைக்கு வழங்கப்படும் சுதந்திரம் போன்று, மத நடைமுறைகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இருந்து வரும் நடைமுறைகளுக்கு எதிரான நடவடிக்கை மத சுதந்திரத்தை மீறும் செயலாகும். ஒவ்வொரு கோவிலின் நடைமுறைகளை கருத்தில் கொண்டே இந்த அரசாணையை பார்க்கவேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு கோவிலிலும் எழக்கூடிய பிரச்சினைகளை நீதிமன்றம் புரிந்து கொண்டு உள்ளது. அதனை தவிர்க்க இயலாது.
அடிப்படை உரிமைகள்
அர்ச்சகர்கள் நியமன பிரச்சினை ஏற்படும் போது, ஒவ்வொரு தனிப்பட்ட கோவிலும் நீதிமன்றத்தை அணுகி அதை தீர்த்துக்கொள்ள வேண்டும். அர்ச்சகர்களை ஆகம விதிகளின்படி நியமிக்க வேண்டும். இதை அரசியல் சட்டத்தின் 14–வது பிரிவை மீறும் செயலாக கருதமுடியாது. அதே நேரத்தில் அரசியல் சட்டம் வகுத்துள்ள அடிப்படை உரிமைகளையும் கருத்தில் கொண்டு இந்த நியமனங்கள் அமைய வேண்டும்.
நன்றி: தினத்தந்தி
இந்த தீர்ப்பு, இப்படி அந்த பக்கமும் இல்லாமல், இந்த பக்கமும் இல்லாமல் இருப்பது போல மேலோட்டடமாக தோன்றினாலும் இறுதி முடிவை எடுக்கும் சுதந்திரத்தை ஆகம விதிகளுக்கும் அந்ததந்த கோயில்களுக்குமானதாக விட்டுத்தந்திருக்கிறது. ஒருவேளை பிரச்சினை எனில்… நீதிமன்றம் செல்ல வேண்டும். அங்கும் இதே விவாதம் தொடரும். அதாவது அடிப்படை உரிமைகளையும் கருத்தில் கொள்ளவேண்டும், ஆகம விதிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இது இரண்டுமே ஒரே நேரத்தில் நடக்கமுடியுமா என்பதைப்பற்றிய விவரங்களை எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. ஒருவேளை ஆகம விதிப்படியும் அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டும் தலித் உள்பட பிராமணர் அல்லாத ஒருவரை அர்ச்சகராக நியமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமோ என்னவோ? யாமறியோம்…
இந்து சமய அறநிலையத் துறை
தமிழ்நாட்டில் இந்து சமய திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக தனித்துறை ஒன்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது[1].இத்துறைக்கு, மாநில அளவில் ஒரு செயலகம் தலைமைச் செயலகத்தில் உள்ளது[2]
இத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோயில்கள், 56 திருமடங்கள் மற்றும் திருமடங்களுடன் இணைந்த கோயில்கள் 58 உள்ளன. இந்த இந்து சமய நிறுவனங்களுக்கு சொந்தமான அசையா சொத்து 4,78,347.94 ஏக்கர் நிலம், இத்துறையின் கீழுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டு வருவாய் உத்தேசமாக 58.68 கோடி மட்டுமே என்று இந்து சமய அறநிலையத் துறை குறிப்பிடுகின்றது.
English:
https://en.wikipedia.org/wiki/Hindu_Religious_and_Charitable_Endowments_Department
இந்த கோயில்களை 3 பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளனர். சைவ கோயில்கள், வைணவ கோயில்கள், கிராம தேவதைகள் என்ற 3 பிரிவுகள்.
tnhrce.org (பார்க்கவும்.)
சைவம், வைணவம், கிராம தேவதை, இதில் 5231 கோயில்கள் Listed Temples எனவும் 3527 Non Listed Temples எனவும் அரசு வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. Listed, Non Listed எதன் அடிப்படையில் என்கிற விபரம் சரியாகத் தெரியவில்லை.
இதில் கிராம தேவதைகள் என்கிற அடிப்படையில் உள்ள கோயில்களில் பெரும்பாலானவை எந்த ஆகமத்தை பின்பற்றியும் இல்லை, எந்த சைவ, வைணவ கடவுளர்களின் அவதாரங்களும் இல்லை.
அப்படி எனில் எப்படி கிராம தேவதைகள் வகையில் வருகிற கோயில்களும் இந்து மதம் ஆகிறது எனில்… அதுதான் இந்து மதம். எண்ணிக்கை அடிப்படையில் தன்னோடு எதையும் சேர்த்துக்கொள்ளும். சேர்த்துக்கொள்வார்கள். ஆனால், அம்பாள்கள் கோயில்களுக்கு முழு உரிமையும் கொண்டாடுபவர்கள் அம்மன் கோயில் கொடைவிழாவில் பலியிடப்படும் ஆடு, கோழி இறைச்சியோ, சாப்பிட மாட்டார்கள். இரண்டு நேர் எதிர் துருவங்கள் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இந்து மதம் இருக்கும் என்று சொல்லும். அதைவிட முக்கியமாக அப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்லும். அம்பாள் இருப்பாள். அம்மனும் இருப்பாள். அம்பாள் மக்கள் மேலானவளாகவும் அம்மன் மக்கள் கீழானவர்களாகவும் அப்படியே தொடர வேண்டும், அதைத்தான் ஆகமங்களும் இந்து மதமும் சொல்கிறது.
அம்பேத்கர், நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்றார், இந்து மதமே பட்டியலின மக்களுக்கு வேண்டாம் என்று தான் பேசினார். அதைத் தன் வாழ்நாளிலே செய்தும் காட்டினார். புத்த மதத்தை தழுவினார்.
இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பின் ஆணிவேர் இந்து மதம் தான் எனில், அதில் தலித் ஒருவர் அர்ச்சகராக இருப்பது, அல்லது ஆவதை மிகப்பெரிய புரட்சியாக மாற்றமாக கொண்டாட முடியுமா என்பதை தேவையெனில் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
அரசின் சட்டங்களை மத கோட்பாடுகள் அடிப்படையில் ஆகமங்கள் தடுப்பதை ஏற்றுக்கொள்ளும் அரசு, அதை அனைத்து மதத்திற்கும் பொதுவானதாக ஏன் மாற்ற முடியவில்லை.
சட்டத்தின் அடிப்படையில் ஒரு மதத்தின் கோட்பாடுகளுக்குள் தலையிட்டு அதை சீர்திருத்தம் என்று அரசு கூறுமெனில் அதை அனைத்து மதத்திற்கும் பொருத்திப் பார்க்கவேண்டும். இந்து மத ஆகமங்கள் அந்த எல்லைக்குள் வராது எனில் அது பட்டவர்த்தமான நாடகம் அன்றி வேறென்ன?
இன்னொன்று அது தமிழகமோ, இந்தியாவோ, வேறு நாடோ… எதுவாக இருந்தாலும் ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு இடையில் பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரே மதத்தை பின்பற்றுபவர்களில் ஒருவர் மேல் என்றும் இன்னொருவர் கீழ் என்றும் இருப்பதை அந்த மதமும், அதன் கொள்கைகளும், அந்த மதத்தினை சார்ந்தவர்களும் ஆதரிப்பார்கள் எனில் அவர்கள் 100 சதவீதம் மனித சமத்துவத்திற்கு எதிரானவர்கள், அந்த மதமும் அப்படி ஆனதே. இதில் விவாதிக்க எதுவுமே இல்லை. அந்த மதத்தை கொண்டாடுவதும் அதன் கொள்கைகளை கொண்டாடுவதும் ஏற்றுக்கொள்வதும் அதைவிட்டு வெளியேறுவதும் சட்டத்திற்கு உட்பட்டு அவரவர் விருப்பம் சார்ந்தது.
– முருகன் மந்திரம்.
Recent Comments