அரசியல்

அவைத்தலைவரின் தலித் கவசமும் எதிர்வினைகளும் – ஒரு பார்வை . . . . . . . !

அரசியலைத் தவிர சாதி வேறெங்கும் செயல்படுவதில்லை – Andre Beteilen.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவுவதை நாம் அனைவரும் அறிவோம். அவருடைய மருத்துவமனை நாட்கள், பல யூகங்களுக்கும் பூடகங்களுக்கும் வாய்ப்பாகவே இருக்கின்றன. அனைவரும் எதிர்பார்த்தது போலவே யாவரும் அதிர்ச்சி அடையாத வகையில் திரு.பன்னீர் செல்வம் அவர்கள் டிசம்பர் 5 2016 ஆம் நாள் இரவு முதல்வராகப் பதவியேற்கிறார். மத்திய பாஜகவின் அரசியல் சதுரங்கத்தில் சசிகலா, பன்னீர் செல்வம், ஜெ.தீபா அனைவரும் காய்களாக நகர்த்தப்படுகின்றனர். எதிர்பார்த்தது போலவே திருமதி சசிகலா அதிமுக வின் பொதுச்செயலாளராகிறார். அதனைத்தொடர்ந்து ‘தைப் பேரெழுச்சி’ தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக எழுந்தது. பல்வேறு அடக்குமுறைகளுக்குப் பின் இப்பேரெழுச்சி முடிவுக்கு வந்தது.

இம்முடிவுக்குக் காத்திருந்தது போலவே, கட்சித்தலைமையும் ஆட்சித்தலைமையும் ஒருவரிடம் இருக்க வேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்பட்டு, திருமதி சசிகலா ஏகமனதாக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.  பொறுப்பு ஆளுநர் தமிழகத்தில் இல்லாததாலும், சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு வருவதாலும் சசிகலாவை ஆளுநர் பதவியேற்க அழைக்கவில்லை என்று  பேசப்பட்டது. திடீரென முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். சசிகலாவைக் குற்றம் சாட்டி தனியாக அதிருப்தி அதிமுகவை உருவாக்குகிறார். இவருக்குப்பின்னால் மத்திய பாஜக இருப்பதாக திரு.கி.வீரமணி போன்றோரும் , பல அரசியல் பார்வையாளர்களும் கருத்துத் தெரிவித்து இருந்தனர். பாஜகவின் கருத்துகள், இப்பார்வைக்கு வலு சேர்ப்பதாகவும் இருந்தன.

சொத்துக் குவிப்பு வழக்கில் திருமதி சசிகலா சிறை செல்லவும் அந்த அணியினர், திரு.எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்தனர். இடையே பன்னீர் செல்வம் அவர்களும் ஜெ.தீபா அவர்களும் ஒன்றாகச் செயல்படுவதாக அறிவித்தனர். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். பொறுப்பு ஆளுநர் திரு. எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்கிறார். 15 நாட்களில்  பெரும்பான்மையை நிறுவிட கெடு விதிக்கிறார். எப்படியும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று நினைத்த காபந்து முதலமைச்சர் பன்னீர் செல்வத்தால் பெரும்பான்மை பலத்தை எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிரூபிக்கும் நாள் வரையிலும் 11 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே தன் பக்கம் இழுக்க முடிந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்குச் சட்ட மன்றம் தயாராகிக் கொண்டிருந்தது.பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி அணி என அனைவரும் தயாராகவே இருந்தனர். திமுக கொறடாவும் அதற்கு முந்தைய நாளில், நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்களுக்கு உத்தரவிடுகிறார்.

பன்னீர் செல்வம் அணியும், திமுக வும் சட்டமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்புக் கோரினர்.

ஆளுநர் பதினைந்து நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கெடு விதித்து இரண்டு நாட்கள் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோருகின்றார். இடையில் இருந்த இரண்டு நாட்களில் திமுக இரகசிய வாக்கெடுப்புக்காக நீதிமன்றத்துக்குச் செல்ல வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யவில்லை முதல் நாள் வரை கொறடா உத்தரவிடும் வரையில் தான் திமுக வின் நிலைப்பாடு இருந்தது.

இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை அவைத்தலைவர் தனபால் அவர்கள் நிராகரிக்கவே அவையில் அமளி தொடர்ந்தது. இரு முறை அவையை மூன்று மணி வரை ஒத்தி வைத்தார். பூட்டிய அவையினுள், ஜெயா தொலைக்காட்சி மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அது தரும் ஒட்டி வெட்டிய காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பிக்கொண்டிருந்தன. அதில் திமுக உறுப்பினர்கள் மேசைகளில் ஏறியும், மைக்குகள், இருக்கைகளை உடைத்தும், அவைத்தலைவர்  இருக்கையில் இரண்டு திமுக உறுப்பினர்கள் அமர்ந்தும், அவைத்தலைவரை முற்றுகையிட்டு, அவரது சட்டையைப் பிடித்து இழுப்பதும் என செய்திகள் ஓடின. அவைக் காப்பாளர்கள், அவைத்தலைவரைப் பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். 89 ம்ஆண்டு, ஜெயலலிதா சேலைக் கிழிப்பு விவகாரத்துக்குப் பின், தமிழகப் பேரவையில் நடந்த பேரமளியாக இதனைச் சொல்லலாம். அவைத்தலைவரின் சட்டை கிழிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தன.

பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் அவை கூடியது. மீண்டும் அமளி, திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அவைத்தலைவர் உத்தரவிடுகிறார். அவைக் காவலர்கள் மிகுந்த சிரமங்களோடு அவர்களை வெளியேற்றினர். செயல் தலைவர் ஸ்டாலினைக் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் திமுகவுக்கு ஆதரவாக, வெளியேறினர்.

அதிமுகவின் இரண்டு அணிகள் மட்டுமே அவையில் இருந்த நிலையில், முதல்வரின் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக, அவைத்தலைவர் அறிவித்தார்.

அதன் பிறகு, அவைத்தலைவரின் பேச்சும், ஊடகங்களில் திரு.ஸ்டாலினின் பேச்சும், அவற்றைத் தொடர்ந்த விமரினங்களும், திறந்த மனதோடும், காத்திரமாகவும் விவாதிக்கப்பட வேண்டியன.

“இந்திய மரபு, அரசியல் அதிகாரத்தையும் சமூக அந்தஸ்தையும் பிரித்தே வைத்திருக்கிறது. எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும், சமூக அந்தஸ்த்து அனைவருக்கும் ஒரே மாதிரி இல்லை.”

“எனக்கு நடந்த கொடுமையை எங்கே சென்று முறையிடுவேன். மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னை திமுக உறுப்பினர்கள் நடத்திய விதம்  மிகவும் மோசமானது. சட்டப்பேரவையின் விதிகளுக்குட்பட்டும், அவைத்தலைவரின் அதிகார வரம்புக்குட்பட்டும் தான் செயல்பட்டேன். என்னைப் பிடித்து இழுத்து, சட்டையைக் கிழித்து இருக்கிறார்கள் ” என்று அவைத்தலைவர் பேசுகிறார்.

வெளியேற்றப்பட்ட திரு.ஸ்டாலின், தலை கலைந்து, திறந்த, கிழிந்த சட்டையுடன் ஊடகங்களைச் சந்திக்கிறார். “எங்கள் உறுப்பினர்கள் நடந்து கொண்டதற்காக, அவைத்தலைவர் அறைக்குச் சென்று வருத்தம் தெரிவித்த பின்னும், அவைத்தலைவர் இப்படிப் பேசுகிறார். இது சரியல்ல. திமுகவின் தலித் நிலைப்பாடுகளை எல்லோரும் அறிவார்கள். அவையில் நாங்கள் தான் தாக்கப்பட்டோம் ” என்றார்.

அவைத்தலைவரின் இந்தப் பேச்சு பலவாறான, தூற்றுதலுக்கும், வசவுகளுக்கும், விமர்சனத்துக்குமுள்ளாகி இருக்கிறது. “அதிமுக அடிமை; சசிகலா அடிமை; எடப்பாடி எடுபுடி; சாதி ஆதிக்கத்துக்கு எதிராக எதுவும் பேசாதவர்; தனக்குச் சிக்கல் என்றவுடன் தலித் ஆயுதத்தை எடுக்கிறார்; இரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிப்பைச் சரிக்கட்டவே, தலித் போர்வைக்குள் ஒளிகிறார்; இனி தனபால் இதேபோல், தன் சமூகத்துக்கும் குரல் கொடுக்கவேண்டும்; அவைத்தலைவராக யார் இருந்தாலும், இதுவே நடந்திருக்கும், எனவே இது சாதியப் பிரச்சனை இல்லை…..” என்று இன்னும், இன்றும் நீள்கின்றன.

“திமுக இல்லை என்றால் நீங்கள் எல்லாம் படித்திருக்கவே முடியாது ” என்ற திமுகவின் திரு.மனுஷ்யபுத்திரனின் பேச்சும் விமர்சனத்துக்குள்ளானது. இங்கு கவனிக்கப்படவேண்டியது இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள்.

திமுகவினர் வலைதளங்களில்,  சமூகநீதிக் காவலர்களாகத் தங்களை அறிவிப்பதாக எண்ணிக்கொண்டு, அவைத்தலைவர் மீது சகட்டுமேனிக்கு சேறு வாரித்தூற்றுகின்றனர்.

சாதியச் சமூகத்தில், ஒடுக்கப்பட்டோருக்குக் கூடுதல்  நிர்பந்தம் கொடுப்பதும், அவர்கள சர்வ நியாயத்துடன் இருக்கவேண்டும் என்பதும் ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு தான். சாதிய இந்தியச் சமூகத்தில், சாகும் வரையிலும், எவ்வளவு உயரிய இடத்தில் பட்டியலினத்தோர் இருந்தாலும், சாதி இழிவு தொடர்கிறது. இதற்கு அவைத்தலைவர் மட்டும் விதிவிலக்காக இருக்கிறாரா?

அதிமுக, திமுக போன்ற கட்சிகளில் தலித் உறுப்பினர்களின் நிலை என்ன? அவர்கள் சுதந்திரமானவர்களா? திருமாவளவன் அவர்கள் தோற்றதற்கு, அத்தொகுதியின் வெற்றி பெற்ற இன்னொரு கட்சியின் தலித் வேட்பாளரைக் குற்றம் சொல்லமுடியுமா? திருமாவளவன் போன்ற மிகப்பெரிய ஆளுமைகளே, தனித்தொகுதியில் தான் நிற்கமுடிகிறது இந்தச் சாதியச் சமூகத்தில்.

அவைத்தலைவரின் இப்பேச்சுக்கு முன், “அவர் இதுவரை அவர் சமூகத்துக்குச் செய்ததென்ன?” என்று அறியாதவர்களா நாம்? ஆக, எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் இப்படிப் பேசக்கூடாது என்று அவருக்கு விடுக்கும் எச்சரிக்கையா இத்தகைய விமரிசனங்கள்?

அவைத்தலைவர் தன் நிலைப்பாட்டைத் திசை திருப்பவும், தப்பித்துக்கொள்ளவும்  தலித் ஆயுதம் எடுத்தார் (என்று வைத்துக்கொண்டாலும்) என்பதற்கு பின்னர் தான், அவர் இதுவரை செய்ததென்ன என்ற கேள்வி, எத்தகைய சிந்தனையில் இருந்து வருகிறது?

உலகெங்கிலும், எவ்வளவு உயரிய இடத்தில் இருந்தாலும், பெண்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள். அதேபோல, இந்தியச் சமூகத்தில், தலித்துகள் எவ்வளவு உயரிய இடத்தில் இருந்தாலும், எதாவது ஒருவகையில் பாரபட்சத்துடன் நடத்தப்படுகிறார்கள் என்பதும் கண்கூடு. அவர்கள் தங்களை அப்படித்தான் அவர்களாகவே உணர்ந்துகொள்கிறார்கள் என்கிற வாதமே  சாதியவாதம்.

உலகில் நிலவுகிற அடிமை முறைகளிலேயே, மிகமோசமானது இந்தச் சாதிய அடிமைமுறை. அது தலித் மக்களுக்குச் சில உரிமைகளை வழங்கிவிட்டு, அவர்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் அபகரிக்கும். அத்தகைய முறைமையின் நவீன வடிவமே, “சபாநாயகரான நீ, இத்தனை முறை எம்எல்ஏவான நீ இதுவரை என்ன கிழித்தாய் உன் சமூகத்துக்கு?” என்று தூற்றுவது.

அவைத்தலைவரின் பிரச்சினையா இது? நிலவுகிற ஜனநாயக, சீர்திருத்த அமைப்பின் சிக்கல் இல்லையா இது?

“தன் இடத்தில் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவர் இருந்திருந்தால், அவரை இப்படி நடத்தியிருக்கமாட்டார்கள்’ என்று அவைத்தலைவர் நினைக்கும் அளவுக்குத் தான் இங்கு சாதிய ஏற்றத்தாழ்வு நிலவுகிறது என்பது தான் விவாதிக்க வேண்டியது.

ஜெயலலிதா தன்னை அவையில் பாப்பாத்தி என அறிவித்த போதும், சசிகலா புஷ்பா, கருணாஸ், காடுவெட்டிகுரு போன்றோர் தங்கள் சாதிக் கவசத்தை அணிந்தபோதும் வராத அறச்சீற்றம், அவைத்தலைவர் தலித் கவசம் ஏந்தும்போது வருகிறது என்றால், சாதியப் படிநிலையைப் பொதுப்புத்தி தக்கவைக்கிறது என்று தானே அர்த்தம்.

அறம் ஒடுக்கப்பட்டோரை வாழவைக்காது என்பதையும் விட, ஒடுக்கப்பட்டோரை மேலும் ஒடுக்கத்தான் அறம் என்கிற ஆயுதமே என்று தயக்கமற்றுச் சொல்லலாம்.

பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆனதிலிருந்து, தீபா அரசியல் பிரவேசம், ஆளுநரின் நடவடிக்கைகள் என எல்லாவற்றிலும், பாஐக தன் சதுரங்க ஆட்டத்தை ஆடி, தமிழக அரசியலில் பேசுபொருளாகுவதையும், முதன்மைப்படுவதையும் திமுக தாமதமாகவே உணர்ந்தது. எப்படியும் ஆட்சி கவிழும் என்று நினைத்தது. அதற்கு வாய்ப்பில்லாமல் போகவே, அமளி நடக்கிறது. இது திட்டமிடப்பட்டுருக்கலாம் என்ற விமர்சனம் பெரிதாக இல்லை.
பூட்டிய அவையினுள், ஒருவேளை, அவைத்தலைவர் சொல்வது போல ஏதாவது நடந்திருக்குமோ என்கிற தர்க்க வாய்ப்பைக் கூட பொதுப்புத்தி அவருக்கு வழங்கவில்லை.

உலக விடுதலை இயக்கங்களைவிடவும் மிகக் கடினமானது இந்திய தலித் விடுதலை.

வானளாவிய அதிகாரம் படைத்த ஒருவர், இப்படித் தான் தன்னை முன்னிறுத்திக்கொள்ள முடிகிறது என்பது இவ்வமைப்பின் அவலம் இல்லையா?

சசிகலா எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக, அவைத்தலைவர் மீது திருப்பிவிடுவது, சுயமாகத் தங்களைச் சொரிந்துகொள்வது மட்டுமல்ல, பிச்சைபோடும் மனோபாவத்தோடு, ஒடுக்கப்பட்டோருக்குக் கூடுதல் நிர்பந்தம் கொடுப்பது மட்டுமல்ல, நிலவுகிற அரசியல் போக்கை, நபர்வாதமாகச் சுருக்கி, இந்த அமைப்பைத் தக்கவைக்கும் செயலாகும்.

இந்த அமைப்பு முறை தான் விவாதிக்கப்பட வேண்டியது.

“இட ஒதுக்கீட்டின் மூலம் முன்னேறியவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு என்ன செய்தார்கள் ? அவர்கள் தங்கள் இட ஒதுக்கீட்டை பொருளாதாரரீதியில் பின்தங்கியவர்களுக்கு விட்டுத்தரவேண்டும்”, என்கிற சமூகநீதிக்கு எதிரான பார்வையின் ஒரு வகைமைதான் அவைத்தலைவரின் பேச்சுக்கு வந்த இவ்வளவு வசவுகளும், தூற்றுதல்களும். திமுக வினர் வலைதளங்களில் தூற்றுவதும், சாதிஒழிப்பு போராளிகள்(?) மற்றும் சில முற்போபோக்குவாதிகள் கடுமையாக விமர்சிப்பதும் அவர்களின் சாதிய பொதுப்புத்தியில் இருந்துதான்.

  • தனபால் அவர்கள் தலித் ஆயுதத்தை எடுப்பதைக் குற்றமாகக் கருதி ஒரேயடியாக நிராகரித்துவிடமுடியாது.
  • இந்த அரசியலை விளங்கிக்கொள்ள அடையாள அரசியல் குறித்த தெளிவுவேண்டும்.
  • தலித், தலித்தல்லாதோர் செயல்பாடுகளைச் சமப்படுத்துவது சமூக நீதியோ, வர்க்கபார்வையோ ஆகாது. அவ்வாறு சமப்படுத்துவது சாதிய ஏற்றத்தாழ்வை, சீர்திருத்தக்கூட உதவாது.
  • தனபால் என்பவர் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர் அல்ல என்றாலும் இவ்விசையத்தில் சற்று நிதானிக்கலாம், பொறுக்கலாம், கடந்துபோகலாம். அதைவிடுத்து இப்படியோங்கி சம்மட்டியடி கொடுக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இது வெறும் நபர் சார்ந்த பிரச்சனையல்ல.

ஆக பா.ஜ.கவின் அரசியல் நகர்விற்கு நடந்த நிகழ்வுகள் சற்று பின்னடைவுதான். திமுக எதிர்கட்சியாகத் தன்னை முதன்மைப்படுத்திக்கொள்வதில் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசியலில்  மிகப்பெரிய எதிரியை வீழ்த்த முடியாமல், மொத்தமாக அவைத்தலைவரின் மீது அள்ளிவைப்பதை ஆரோக்கியமான அரசியலாகப் பார்க்கமுடியாது.

“ஸ்பெக்ட்ரம் வழக்கில், திரு.ஆ.இராசா தலித் என்பதனால் கூடுதல் நெருக்கடி தரப்படுகிறது “, என்ற திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் கருத்தை, திமுக ஒப்புக்கொண்டால், அது தனபால் அவர்களுக்கும் பொருந்தும் தானே.

பொதுவில், சிலர், “ஓர் அருந்ததியனாகக் கேட்கிறேன், தலித்தாகக் கேட்கிறேன்” என்கிற வரையறைகளை,  அவைத்தலைவரை விமரிசிக்கக் கூடுதல் தகுதியாக வைத்துக்கொள்ளும்போது, அந்த வரையறைகள் திரு. தனபாலுக்கும் பொருந்தும் என்பதை வசதியாக ஒதுக்கி வைத்துவிடுகிறார்கள். வடிகால் மனோபாவத்தால் தீர்வை எட்டமுடியாது. நிலவுகிற முதலாளிய அமைப்பில், நிகழ்பவை எல்லாம் தற்செயலானவை இல்லை.

அமைப்பு முறையை எதிர்க்காமல், நபர் சார்ந்த சிக்கலாக மடைமாற்றி, விமர்சனம் வைப்பது , சாதிய சமூகத்திற்கு ஆதரவாகவும், அதிமுக, திமுக, பாஐக, போன்ற கட்சிகளின் வழி முதலாளிய ஆதரவு நிலைப்பாடாகத் தான் சேவை ஆற்றும்.

எந்த ஒரு வர்க்கமும் அதிகாரத்தை வன்முறை மூலம் மட்டும் நிறுவி விடுவதில்லை. அது சிவில் சமுதாயத்தின் மக்களின் சம்மதத்தைப் பெற்றே தனது சித்தாந்த மேலாண்மையை நிறுவி அதிகாரத்தை நிறுவும் என்பார் கிராம்சி.

– ரபீக் ராஜா.

இளந்தமிழகம்

Related Posts