அரசியல்

விமர்சன மரபென்பது ரவிக்குமாரில் தொடங்கி பாராளுமன்றத்தில் முடிவதல்ல…

ஆர்.எஸ்.பாரதி விவகாரம் குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த விழுப்புரம் பாராளமன்ற MP ரவிக்குமார் அவர்களின் பேட்டி இன்றைய காமதேனு இதழில் வெளியாகி இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோ ரவிக்குமாரோ இது குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை? என்கிற கேள்வியை முன் வைப்பதே நேர விரயம் என்பது என் பொதுவான கருத்து.

காரணம்; இன்றைய அரசியல் சூழல், அதுவும் கூட்டணியில் இருக்கும் தலித்துகளுக்கு எந்தளவு ஜனநாயக உரிமை இருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. அதைத்தாண்டி இயக்கம் சாரா இயங்கும் தலித்துகளும் இணையத்தில் இயங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர், திருமாவளவனும் திருச்சி பேரணியில் இதையொட்டி தெரிவித்த கருத்து ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

ஆனால் இன்று ரவிக்குமார் அளித்திருக்கும் பேட்டிக்கு பதிலாக அவர் அவரது வழக்கமான மௌன விரதத்தையே கடைபிடித்திருக்கலாம், தொட்டும் தொடாமலும் போகிற போக்கில் ஒரு கருத்தைச் சொல்லி முத்தாய்ப்பாக “ஆர்.எஸ். பாரதியை விமர்சிப்பவர்கள் பாஜவையோ பாமக வினரையோ விமர்சிப்பதில்லை” என்று முடித்து வைத்திருக்கிறார்.

சமூகநீதி பார்வையில் ஆர்.எஸ்.பாரதி வெளிப்படுத்திய கருத்து கண்டிக்கத்தக்கது என்பது ABCD அறிந்தவர்கள் கூட ஒப்புக்கொள்வது, அதையொட்டி காத்திரமாக தனது விமர்சனத்தை முன் வைக்கும் ஒரு சுதந்திரத் தரப்பு வரலாறு நெடுகிலும் இருந்துக் கொண்டே இருக்கும், 2006 ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று பின்பு திமுகவோடு இணையும் வரையில் ரவிக்குமாருக்கு இருந்த அதே சுதந்திரம்.

ரவிக்குமாரால் தக்க தர்க்கத்தோடு விமர்சிக்க முடியாமால் போனாலும் ( அது பொருட்படத்தக்கதல்ல என்று அவர் கருதினாலும் ) குறைந்த பட்சம் விமர்சிப்பவர்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் அந்த சூட்சமத்தை மட்டுமாவாவது அவர் செய்யாமல் தவிர்த்திருக்கலாம், ஏனினில் தலித் விமர்சன மரபுக்கு எதிராக உருவாக்கப்படும் இந்த உள்நோக்கக் கலாச்சாரம் புதிதில்லை என்பது ரவிக்குமார் அவர்களுக்கே தெரியும், நிழல் போல இன்று வரை அவரையும் தொடர்கிற ஒன்று தான். திராவிட இயக்க நன்மதிப்பை பெற எவ்வளவு சமரசங்களை செய்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பது அவருக்கோ திருமாவுக்கோ புலப்படாததல்ல.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு உண்மையில் திமுகவுக்கு எதிரணியில் இருப்பவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, அரசியல் காரணங்களுக்காக பட்டும் படாமலும் சுட்டி காட்டியிருக்கலாம், அந்த எண்ணிக்கை சொற்பம். ஆனால் ரவிக்குமாரின் பேட்டி கொடுக்கும் சித்திரம் விமர்சனத்தை பொதுமையாக்குகிறது, ஆர்.எஸ்.பாரதியிடம் இயல்பாக வெளிப்பட்ட மேலாதிக்கத் தனத்தை சுட்டிக்காட்டி கடுமையாகவும் அக்கறையோடும் விமர்சித்தவர்கள் அனைவரும் முற்போக்காளர்கள். இந்த இணையம் எந்தளவு நிதானமிழக்கும் நபர்களை உருவாக்கி வைத்திருக்கிறதோ, அதே அளவு தவறுகளை சுட்டிக்காட்டினால் அதை மூத்த அரசியல்வாதிகள் கூட அதற்கு உடனடியாக திருத்தி வருத்தமோ விளக்கமோ கொடுக்க வைக்கும் சூழலை உருவாக்கி வைத்திருக்கிறது என்கிற அளவில் இணைய விமர்சன மரபு முக்கியமானதாகிறது, இணையம் என்பது பரிணாமம் விமர்சன மரபு என்பது தொடர்ச்சி. ஆகையால் பாஜக என்கிற இந்துத்துவ பாசிஸ்டுகளையும் பாமக என்னும் சாதிய வாதிகளையும் தேர்தல் அரசியல் காரணமாய் சேர முடியாமல் இருப்பதையே தகுதியாக்கி, தத்துவார்த்த அடிப்படையில் பாசிசத்தையும் சாதியத்தையும் சுட்டிக்காட்டுபவர்களை அதைக்கொண்டு வீழுத்தும் மலிவாவன தந்திரமிது.

இந்த வரிசையில் ரவிக்குமார் தமது வரலாற்றில் விமர்சித்த விடயங்கள், விமர்சித்த தலைவர்கள், அவர் பயன்படுத்திய கடுமையான சொற்கள், அவரின் கோவம், அவர் மேற்கோள் காட்டிய தரவுகள் என்று எல்லாமே ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது, ஒன்றை மட்டும் தலைவர்களோ அல்லது புதிதாக வரப்போகிறவர்களோ புரிந்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் பிரதிநித்துவமும், உங்கள் வளர்ச்சியும் மட்டுமே அல்ல சமூகநீதி, நீங்கள் மட்டுமே விமர்சனத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் அல்ல, நீங்கள் ஆயிரம் வருடம் வாழப்போவதில்லை, நானுமில்லை. உங்களில் இருந்து நாங்கள் கற்று இருக்கிறோம், உங்களை விட காலத்தால் பண்பட்டும் இருக்கிறோம், என் எதிர்கால சமூகம் இதை விட வீரியமாக இயங்கும், இது தான் நியதி. இந்திய தலித் விடுதலையை பொறுத்த மட்டும் கண்ணுக்கெட்டிய தூரம் அதன் சாத்தியங்கள் தென்படவில்லை, அதற்கு பல தளங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது, அவரவரால் சாத்தியப்படுத்த முடிந்ததை சாத்தியப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இதில் தான் சார்ந்திருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்பதற்காக புதிதாய் முளைத்தெழும் குரல்களை பழைய பஞ்சாங்கப்படி உள்நோக்கம் கற்பிக்க நினைத்தால் அதை போலவொரு வரலாற்றுத் துரோகம் இருக்க முடியாது.

உள்நோக்கம் கற்பித்து அதை பிசுபிசுக்கச் செய்யும் பணியை ரவிக்குமார் வெவ்வேறு தருணத்தில் செய்துக் கொண்டே இருக்கிறார் என்பதை பல காலச் சூழல்களில் எழுதியிருக்கிறேன், இது தொடர்ந்தால் அவரது வரலாற்று தர்க்கங்களில் இருந்தே என்னால் மேற்கோள் காட்டி ஒப்பீடு செய்ய முடியும், தூய்மைவாதமென அடைமொழியிடும் சாதி இந்துச் சமூகம் அடையாளப்படுத்துவதைப் போல யதார்த்தம் புரிதாவர்கள் அல்ல இந்தத் தலைமுறையினர், நெருக்கடிக்குள் இருப்பவர் வலிய வந்து விளக்கம் சொல்லி அதன் போக்கை திசை மாற்றும் வேலையை மட்டும் பார்க்க வேண்டாமென்கிறோம், அவ்வளவே.

அதிகாரத்தோடு தன்னை துண்டித்துக்கொண்டு இயங்கும் ஒரு சமூகத்தின் பிரதிநிதிகள் இருந்துக் கொண்டே இருப்பர், அது சொந்தம் பந்தம் காரண காரியம் நெருக்கடி பணிவு கூச்சம் நிர்பந்தம் மௌனம் விளைவு எதிர்விளைவு ஆதாயம் போன்ற எதையும் எதிர்பாராத ஒரு குழு, செயல்பட்டுக் கொண்டே இருக்கும். இதை யாரொருவரும் உணர வேண்டும், அதை ரவிக்குமார் அவர்களும் உணர வேண்டும்.

வாசுகி பாஸ்கர்

Related Posts