சமூகம்

தங்கம் வேண்டாம், இரும்பை வாங்கு என்ற விளம்பரம் பெண்களுக்கு உதவியானதா?

பெண்ணே, தங்கம் அல்ல இரும்பை வாங்கு என்று ஒரு விளம்பரம் பிரபலமாக பகிரப்பட்டு வருகிறது. அப்படி ஒரு விளம்பரத்தை பகிர்வோர் பலரும் நல்ல எண்ணத்தோடே பகிர்கிறார்கள். ஆனால், அந்த விளம்பரம் செய்வது நேர் மாறான வேலை ஆகும்.

இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் ரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்றால் நீங்கள் செய்ய வேண்டியது அதுபோன்ற விளம்பரங்களை பகிராமல் இருப்பதுதான். அல்லது சரியான விமர்சனத்தோடு அதனை பகிர்ந்து ஒரு விவாதத்தை முன்னெடுக்கலாம். அப்படியே விட்டால் அந்த விளம்பரம் மோசமான பாதிப்பையே சமூகத்திற்கு ஏற்படுத்தும்.

  • நம்மிடம் போதுமான பணம் இருந்தாலும் அதில் வீட்டில் உள்ள பெண்களின் உடல் நலனில் செலவிடாமல் அதை தங்கத்தில் செலவிடுகிறோம் என்பது அந்த விளம்பரம் சொல்லுகிற முதல் செய்தி.
  • இரண்டாவது செய்தி, ஒரு பெண் இரும்புச் சத்து உள்ள உணவை விடவும் அதிகமாக ஒரு பெண் தங்கத்தையே தேர்வு செய்கிறார் என்பதாகும்.

இந்தியாவில் பரவலான பெண்களிடையே காணப்படும் இரத்த சோகை, நமது மோசமான குடும்பக் கட்டமைப்பு விதிகளின் விளைவாக ஏற்படுவதாகும். தேடிச் சேர்த்த சத்தான உணவுகளை சமைப்பதுதான் பெண்களின் கடமையாக இருக்கிறது. சாப்பிடுவதில் அவருக்கு கடைசி இடம்.

தோசையம்மா தோசை என்ற குழந்தைப் பாடலில், அப்பாவுக்கு 4 தோசையும், அம்மாவுக்கு 3 தோசையுமாக வகைப்படுத்தும் அளவுக்கு அது மிக இயல்பான விசயமாகியிருக்கிறது.

மேலும், இந்தியாவில் ஊட்டச்சத்துள்ள குழந்தைகள் பிறக்க வேண்டுமானால், கர்ப்பிணிப் பெண்களின் உடல் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். ‘ஆஷா’ போன்ற திட்டப்பணியாளர்கள்தான் அதனை சாதிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் கடும் உழைப்பாளர்கள், குறைந்தபட்ச வருமானத்திற்கே போராடும் நிலைமை இருக்கிறது. மேலும், சுகாதாரம் பேணும் பணிகள் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் சுணக்கம் காண்கின்றன.

மேற்சொன்ன விளம்பரம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. உண்மையிலேயே உணவில் கவனம் செலுத்தாமல், உடல் தோற்றத்திலேயே கவனம் செலுத்தும்படி நினைக்கும் சில பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாவதற்கு சமூக கட்டமைப்பில் பெண் உடல் தோற்றம் குறித்து உருவாக்கப்பட்டுள்ள பொதுப்புத்தியே காரணம்.  குடும்பத்தார் மனநிலையில் மாற்றம் வந்தால்தான் அந்த நிலையிலாவது மாற்றமும் சாத்தியம். ஆனால் மேற்சொன்ன  விளம்பரம் பெண்ணுக்கு புத்தி சொல்கிறது.

மேலும், நாட்டின் மிக முக்கியமான சிக்கலுக்கு தீர்வே பெண்கள் மாற்றமடைவதுதான் என்று சொல்லி முடியும்போது – திசை திருப்பலையே சாதிக்கிறது அந்த விளம்பரம். இரத்த சோகை பிரச்சனைக்கு தீர்வு காண, பெண்களைக் குறித்த சமூக சிந்தனையை மாற்றுவோம். பெண்கள் நலம் காக்கும் திட்டங்களுக்கு அதிக நிதி, பெண்களுக்கு உரிய சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பை வலியுறுத்துவோம்.

Related Posts