பிற

கடற்காகம் : நாவல் விமர்சனம்

நாவல்: கடற்காகம்
ஆசிரியர்: முஹம்மது யூசூஃப்
வெளியீடு: யாவரும் பதிப்பகம்

தன் முதல் நாவலான ‘மணல் பூத்த காடு’ மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட நண்பர் முஹம்மது யூசூஃப், தனது இரண்டாவது நாவலை சமீபத்தில் நடந்து முடிந்த சார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் யாவரும் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அரங்கில் கின்னஸ் உலக சாதனைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து தத்தமது படைப்புகளுடன் ஒரே அரங்கில் அமர்ந்ததை கேள்வியுற்றபொழுது ஓர் தமிழ் வாசகனாக நெகிழ்சியடைந்தேன்.

வாழ்த்துகள்.

முதல் நாவலில் Docu-Fiction முறையில் சவுதியை கதைக்களமாகக் கொண்டு வஹாபியிசம் வேர்பிடித்த வரலாற்றை கதைமாந்தர்களின் துணையுடன் முன்வைத்தவர், தனது இரண்டாம் நாவலான கடற்காகத்தில், மத்தியகிழக்கு நாடுகளில் இன்றும் நிலவும் சன்னி-ஷியா மோதலை அதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச அரசியலை கதைவடிவில் புனைந்து எழுத முற்பட்டுள்ளது நாவலை தொய்வின்றி வாசிக்கவைக்கிறது.

நாவலில் என்னைக் கவர்ந்தது அய்டா மற்றும் மருத்துவ நண்பர் சத்யா. அய்டாவிடம் எப்பொழுதும் ஓர் மெல்லிய குறும்புத்தனம் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தான் விரும்பும் ஒருவரிடம் தன் காதலை வெளிப்படுத்தும்வரை இருக்கும் அந்த துள்ளலான உணர்ச்சியினை அய்டாவின் கண்களில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் நண்பர் யூசூஃப். அவர் வழக்கமாய் அடித்து ஆடும் மைதானம் கைகொடுத்திருக்கிறது.

மருத்துவர் சத்யா. நாவலில் வரும் கதாப்பாத்திரங்கள் கிட்டத்தட்ட அனைவருக்கும் சின்னதாய் ஒரு அறிமுகமும், முன்கதைச் சுருக்கமும் இருந்தபோதிலும் மருத்துவர் சத்தியாவிற்கு அழுத்தமாய் அப்படியேதும் இல்லை. ஆனாலும் மருத்துவர் தாரிக்கின் முதுகெலும்பாய், உற்ற தோழராய் நாவல் முழுதும் வருகிறார் மருத்துவர் சத்யா. அவரிடம் எனக்கும் இயல்பாய் தோழமையின் நம்பிக்கை பிறக்கிறது.

ஆசிரியர் சமீரா ஆச்சர்யம் தருகிறார். பள்ளியில் குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தில் குழந்தையாய், மர்வானுடன் அந்தப் பொட்டல் வெளி குறித்து தர்க்கம் செய்யும் நேரத்தில் தேர்ந்த ஆசிரியராய், நாவல் முழுக்க உணர்வுப்பூர்வமான காதாப்பாத்திரமாக வருகிறார்.

நாவல்களில் வரலாற்று சம்பவத்தை குறிப்பிடும்பொழுது அது நிகழ்ந்த காலத்தை நேரடியாகக் குறிப்பிடுவது அல்லது குறிப்பால் உணர்த்துவது இன்றியமையாதது என்பது என்கருத்து. அந்தப் பொட்டல் வெளியில் ஆசிரியர் சமீரா மர்வானுடன் நிகழ்த்தும் உரையாடலில், முக்கியமான வரலாற்றுச் செய்தியை குறிப்பிடும்பொழுது காலத்தை குறிப்பிடாமல் “அப்போ என்ன வயசு இருக்கும் உனக்கு..?” என்று மர்வான் கேட்க… “பதினஞ்சு, ஈரான்ல சிராஜ் ஊர்ல ஸ்கூல் போய்ட்டு இருந்தேன்” என்றிருப்பது கொஞ்சம் சுத்தலில் விட்டுவிடுகிறது.

என் அனுமானப்படி 1971-1980 க்குள் ஆசிரியர் சமீரா குடும்பத்தினர் ஈரானில் இருந்து அமீரகத்திற்கு புலம்பெயர்ந்திருக்கலாம். நாவலில் “அகதியாக” என்று சில இடங்களில் வருகிறது. இது காலம் குறிப்பிடாமல் விட்டதால் வந்த குழப்பம். அகதியாக வருவதற்கும் புலம்பெயர்வதற்கும் வேறுபாடு உள்ளது. ஏனெனில் சமீராவின் தந்தை முன்னரே அமீரகத்தில் வியாபாரம் செய்யத்துவங்கியிருந்தார். பத்தியின் முதல் வரியில் வரும் “Coastal-Migration” எப்படி அதே பத்தியின் இறுதியில் “அகதி” ஆனது? இன்னும் சற்று தெளிவாக விளக்கியிருக்கலாம்.

எழுபதுகளின் துவக்கத்தில் எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழ்ந்த அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களினால் பல ஈரானியர்கள் வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் அமீரகத்திற்கு அந்த காலக்கட்டத்தில்தான் பெருமளவில் வரத்துவங்கியிருந்தனர். இதற்குக் காரணம் தென்ஈரானிலிருந்து வணிகர்கள் தெஹ்ரானில் அதிகாரத்தை மையப்படுத்தியதால் அவர்கள் அமீரகத்திற்கு குடிபெயர்ந்தனர். ஈரான் இரட்டை குடியுரிமையை தடை செய்திருந்தது. ஆனாலும், ஈரானிலிருந்து புலம் பெயர்பவர்களுக்கு அமீரகம் பல சலுகைகளை வழங்கியது. காரணம் அமீரகத்திற்கு மனித உழைப்பு தேவையாய் இருந்தது.

ஈரானிய எழுத்தாளர் அஃப்ஷின் மொலவி “துபாயின் வெற்றியின் கூறுகள்,ஈரானின் தோல்வியுடன் பிணைக்கப்பட்டுள்ளது, இது இன்றும் தொடர்கிறது” என்று ஒருமுறை குறிப்பிட்டார்.

1979-ல் ஈரானில் நிகழ்ந்த புரட்சியும், அதன்பின்னான ஈரான்-ஈராக் யுத்தமும் மேலும் மேலும் மக்கள் அமீரகத்திற்குள் குடியேறுவதற்குக் காரணமாயிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமீரகத்தில் வேற்று நாட்டவரின் குடியேற்றத்தைப்பற்றி ஒரு நகைச்சுவை உண்டு.

வறட்சியால் கவலையடைந்த துபாயின் ஆட்சியாளர், அமீரகவாசிகளை தங்கள் “பிரியமான நாட்டில்” மழை பெய்ய வேண்டிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார். அடுத்த நாள், இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்கிறது. உடனே ஆட்சியாளர், தனது ஆணையை சரிசெய்து, அனைத்து எமிராத்திகளும் (அமீரக குடியுரிமை பெற்றவர்கள்) தங்கள் “அன்பான தாயகத்தில்” மழைக்காக வேண்டிக்கொள்ளும்படி கேட்கிறார். அடுத்த நாள், ஈரானில் மழை பெய்கிறது.

அந்தளவிற்கு ஈரானியர்கள் அமீரகத்தில் புலம்பெயர்ந்துள்ளனர் என்பதை நகைச்சுவையாகக் கூறுவதுண்டு.

காசாவில் தன்னார்வலராக மருத்துவப் பணிகளை முடித்துவிட்டு வரும் மருத்துவர் தாரிக்குடன் டெல்மாவில் மருத்துவர் இமாத் உரையாடும் அத்தியாயத்தில், தன் மகனின் கடவுச்சீட்டுக்காக தன் நிலத்தை வஞ்சகமாக அபகரித்தவனிடமே உதவிகேட்டு நிற்கும் அவலநிலையைப் படித்தபொழுது இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.

“உலகிலுள்ள 11 மில்லியன் யூதர்களில் 10 மில்லியன் பேரேனும் குடியமர்த்தப்பட்ட ஒரு இஸ்ரேலைக் கனவு காண்கிறேன்” என்றார் அவர்.

1978-ல் மேற்குக்கரை யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று அன்றைய அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தார். அதன் பிறகு வந்த ரொனால்ட் ரீகன் அந்த நிலைப்பாட்டை மாற்றினார். 2016-ல் ஒபாமா யூதக் குடியிருப்புகள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவை என்று மீண்டும் அறிவித்தார். தற்போது திருவாளர் டொனால்ட் ட்ரெம்ப், மேற்குக்கரையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மாலே அடுமிம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யூதக் குடியிருப்புகள் சட்டவிரோதமானவை அல்ல என்று அறிவித்துள்ளார்.

பாலஸ்தீனியர்களின் நிலத்தில் அமெரிக்க விளையாட்டு இன்றும் முடிந்தபாடில்லை.

“சாவு இல்லாத வீட்டை இனி ஆலிப்போ நகரில் கண்டுபிடிப்பது என்பது உலக வரைபடத்தில் வானத்தைத் தேடுவதற்குச் சமம்” – (பக்:323)

அவர்களின் விளையாட்டில் வீழ்வது மட்டும் அப்பாவிப் பொதுமக்கள்.

சாவக்காடு ஹமீது பாய், அன்வர் ராஜாவிடமும், மருத்துவர் தாரிக்கிடமும் இந்து-இஸ்லாமியர் உறவுமுறையை(!) விளக்கும் இடத்தில் அவர் சொல்லும் தரவுகளில் நான் மாறுபட்டாலும், இரு மத நூல்களில் வரும் கருத்துகளை ஒப்புமைசெய்து எங்கெல்லாம் பொருந்திவருகிறதோ அவற்றையெல்லாம் பட்டியலிட்டு இருவரும் ஒருவழியினரே என்கிற, அதன்பின் உள்ள மத ஒற்றுமைக்கான கருத்து ரசிக்கவைக்கிறது, வரவேற்கத்தக்கது.

தரவுகளில் நான் மாறுபடக்காரணம் இரண்டு. ஒன்று இந்து என்று நாவலில் ஆசிரியர் குறிபிடுவது ஆரிய வேதமரபு நூல்கள்/ வேத கருத்துகள். ஆரியர்கள் இந்தியாவின் ஆதிகுடிகள் அல்ல என்பது இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இரண்டு, ஆதிசங்கரர், திருநாவுக்கரசருக்கு முன்பே இந்தியாவில் பல சமயங்கள் வேரூன்றிவிட்டன.

நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தை வடிவமைக்கவும் கடந்தகாலமே துணைநிற்கும். அதற்கென களஆய்வில் வருடங்களை செலவழித்து எழுதியது அந்தக்காலம். இன்றைக்கு இணையத்தில் அனைத்துத் தகவல்களும் விரல்நுனியில் வந்துவிழுகிறது. அந்தத் தொழில்நுட்பத்தை நண்பர் முஹம்மது யூசூஃப் நிறையவே பயன்படுத்தியிருக்கிறார் என்பது அவரது எழுத்தின் வழியே பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இணையத்தில் விரவிக்கிடக்கும் தகவல்களின் நம்பகத்தன்மை என்றுமே கேள்விக்குறியானது என்பதை அறிந்தவர் அவர்.

ஏனெனில், இந்தக் குழப்பங்கள் வரலாறு முழுக்க நடந்துகொண்டிருக்கிறது.

இது வேறொரு வரலாற்று நூலாசிரியர்க்கு நேர்ந்த சம்பவம்.

ஓர் வரலாற்று நூலுக்காக அந்த ஆசிரியர், தான் தகவல் சேகரித்த அந்நகரைப் பற்றிய முக்கியக் குறிப்பாக, அந்த நகரத்தில் கி.மு. 2 நூற்றாண்டில் ஈரான் நாட்டுடன் வணிகம் இருந்ததாக ஒரு ஆய்வாளர் எழுதியிருந்த குறிப்பு கிடைத்ததும் அந்நூலாசிரியர் பெருமகிழ்ச்சியடைந்தார். சொன்னவர் ஆய்வாளராயிற்றே! எப்படி நம்பாமல் இருப்பது? அந்தச் செய்திக்கு ஆதாரமாக ஆய்வாளர் காட்டியிருந்த நூலின் ஆங்கில மூலத்தில் தேடினால் ஈரானைக் காணோம். எரான் என்னும் நாணயவகை மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. எரான் (ERAN) வகை நாணயத்தை ஈரான் (IRAN) நாடு என்று மொழிபெயர்ப்பு செய்திருந்தார் அந்த ஆய்வாளர். மொழிபெயர்ப்பில் நேர்ந்த குளறுபடி. களம் வேறு ஆவணம் வேறு.

ஆதலினால், அந்தப் புரிதலுடனேயே தகவல்களைத் தன்னளவில் சரிபார்த்து, ஆய்வுக்குட்படுத்தி அவர்தரப்பில் முன்வைக்கிறார் நாவலாசிரியர். அவற்றை மறு ஆய்வுக்குட்படுத்திப் பார்ப்பது வாசகர் பொறுப்பு.

நன்றி
அ. மு. நெருடா.

Related Posts