அறிவியல்

COVID19 குறித்து 20 கேள்விகளும் பதில்களும்

பொதுநலன் கருதி டெல்லி DYFI மருத்துவப் பிரிவால் வெளியிடப்படுவது

1. நிமோனியா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 2019- கொரோனா வைரஸ் நோய் (CoVid-2019) ஐத் தடுக்கும் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்திருக்குமா?

இல்லை. நிமோனியா அல்லது ஹெச்.ஐ.பி தடுப்பூசிகள் 2019 கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு ஆற்றலைத் தராது. இது ஒப்பீட்டளவில் புதிய நோய். இதற்கான தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகிறார்கள்.

2. புதிய கொரோனா வைரஸ் 2019ஐ கைகளைக் காயவைக்கும் இயந்திரத்தால் அழிக்கமுடியுமா?

இல்லை. அது பயனற்றது. கைகளை ஹாண்ட் வாஷ் அல்லது ஆல்கஹால் உடைய திரவ சோப்புகளால், அல்லது சோப்பு மற்றும் நீர் கொண்டு கழுவவும். கழுவிய பின், கைகளைக் காயவைக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்.

3. புதிய கொரோனா வைரஸை உடலில் க்ளோரின் அல்லது ஆல்கஹால் தெளித்துக் கொள்வதன் வழி அழிக்க முடியுமா?

உடலுக்குள் நுழைந்துவிட்ட வைரஸை இவற்றைக் கொண்டு அழிக்கமுடியாது. மட்டுமல்லாமல், இந்த வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்றால், குறிப்பாக கண் அல்லது வாய்க்குள் சென்றால், மிக ஆபத்தாக முடியும். அவை கிருமிநாசினியாக மட்டுமே பயன்படுத்தப் படலாம். மருத்துவத் துறையினர் சொல்லும் வழிமுறைகளை கறாராகப் பின்பற்றி இவற்றைச் செய்யவேண்டும்.

4. இந்த வைரஸை அல்ட்ரா வயலட் (யூ.வி) கதிர்கள் வைத்து அழிக்கலாமா?

இல்லை. யூ.வி. கதிரியக்கத்தால் தோல் அரிப்பு ஏற்படும்.

5. பூண்டு அல்லது பாதரசம் உட்கொண்டு இந்த வைரஸ் தொற்றைத் தவிர்க்கலாமா?

இல்லை. சொல்லப்போனால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் பாதரசம் உட்கொள்வது மனிதர்களுக்கு நஞ்சாகும்.

6. மாட்டுச் சாணம், அல்லது மாட்டு மூத்திரத்தைத் தடவிக்கொண்டாலோ சாப்பிட்டாலோ வைரஸ் தொற்றைத் தவிர்க்கலாமா?

இல்லை. அதனால் வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புதான் இருக்கிறது.

7. மூக்கில் சலைன் சொட்டுகளை விட்டுக்கொண்டால் வைரஸ் தொற்றைத் தவிர்க்கலாமா?

இல்லை. ஆனால், வழக்கமான சளியால் அவதிப் படுபவர்களுக்கு இது சற்றே ஆறுதல் அளிக்கலாம்.

8. இந்த புதிய கொரோனா வைரஸ் குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் எல்லோரையும் பாதிக்குமா?

ஆமாம். இந்த வைரஸ் யாரையும் தாக்கலாம். ஆனால், வேறு நோய்களால் அவதியுறும் வயதானவர்களைத் தாக்கும்போது, ஏற்கனவே இருக்கும் நிலைமையை வைரஸ் மேலும் மோசமாக்கலாம். அதனால், வயது பாகுபாடின்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

9. உடல் வெப்பத்தை அளவிடும் வெப்பமானிகளைக் கொண்டு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முடியுமா?

வெப்பமானிகள் அதிக ஜுரம் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றன. ஒருவரின் உடல் வெப்பநிலையை அவற்றைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். ஆனால் எல்லா ஜுரங்களும் கொரோனா வைரஸால் ஏற்படுவதில்லை. மட்டுமல்லாமல், வைரஸ் தொற்று ஏற்பட்ட உடனேயே ஜுரம் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றாது.

10. கொரோனா வைரஸுக்கான மருத்துவத்தில் ஆண்டிபயோட்டிக் மருந்துகள் பயனளிக்குமா?

இல்லை. ஆண்டி பயோட்டிக்குகள் கொரோனா வைரஸின் முன் ஆற்றலற்றவை (எந்த வைரஸ் இடமுமே). இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுகளுக்கு மருத்துவமளிக்க அவைப் பயன்படும்.

11. பூனை நாய் போன்ற செல்லப்பிராணிகளிடம் இருந்து இந்த நோய் பரவுமா?

இல்லை. இருப்பினும், எப்போதும் செல்லப்பிராணிகளைத் தொட்ட பின் கை கழுவுவது நல்லது.

12. ஹோமியோபதி/சித்தா/அக்குபஞ்சர் போன்ற பாரம்பரிய/மாற்று மருத்துவங்களால் இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்தவோ, தடுக்கவோ முடியுமா?

இல்லை. பாரம்பரிய அல்லது மாற்று மருத்துவ முறைகளால் கொரோனா வைரஸை குணப்படுத்தமுடியும் என்பது அறிவியலுக்கு ஒவ்வாதது. இது ஒப்பீட்டளவில் புதிய நோயாகும். இந்த வைரஸ் மற்றும் இதன் வளர்ச்சி மாற்றங்கள் குறித்த ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றைக் குறித்த புரிதல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் எல்லா உத்தரவாதங்களும் நிராரிக்கப் படவேண்டியது. நவீன மருத்துவம் வகுத்துள்ள வழிமுறைகளின்படி தனிநபர் சுகாதாரம் பேணுவதே வைரஸ் தொற்றைத் தடுக்கும் ஒரே வழி.

13. இந்த வைரஸ் தொற்றைத் தடுக்க நவீன மருத்துவம் ஏதாவது மருந்துகளை உருவாக்கியுள்ளதா?

இதுவரை இல்லை. தற்போதைய நடைமுறைகள், நோய்த் தொற்றின் பிற அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிப்பதும், ஆதரவாக கவனிப்பு அளிப்பதுமே. அதற்கு நவீன மருத்துவத்தைப் பின்பற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறவேண்டும்.

14. சாராயம் குடிப்பதால் கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்க்க முடியுமா?

இல்லை. எரிசாராயம் குடிப்பதால் தடுமாற்றம் ஏற்படும், நிறைய குடித்தால் மயக்கம் வரும், உயிருக்கு ஆபத்தாகும். மெத்தில் ஆல்கஹால் குடித்தால் கண்பார்வை பறிபோகும், உயிரிழக்க வாய்ப்புண்டு.

15. சைனாவிலிருந்து பார்சல்கள் பெற்றால் ஆபத்தா?

இல்லை. இந்த வைரஸால் கடிதங்கள், பார்சல்களில் நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியாது. இவற்றைப் பெறுவதில் பொதுவாக எந்த ஆபத்துமில்லை.

16. தொண்டையை நனைத்துக் கொள்வதால் அடிக்கடி தண்ணீர் குடிப்பதால் வைரஸ் தொற்றாமல் தடுக்கமுடியுமா?

இல்லை. ஆனால் தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு நல்லதுதான். கொதிக்க வைத்துக் குடியுங்கள்.

17. கொரோனா வைரஸால் நார்ப்பெருக்கம் எனும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதால், ஒருவரால் பத்து நொடிகள் மூச்சைப் பிடித்து வைக்க முடியாவிட்டால் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சொல்லலாமா?

இல்லை. இதற்கு எந்த அடிப்படையுமில்லை, அறிவியலுக்கு ஒவ்வாத கருத்து.

18. சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதாலும் சுடுகஞ்சி குட்ப்பதாலும் கொரோனா தொற்றைத் தவிர்க்கலாமா? இவை கேன்சர் திசுக்களைக் கொல்லும் ஹைப்பர்டென்சனைக் கட்டுக்குள் வைக்கும் என்கிறார்களே.

இல்லை. தண்ணீரில் எலுமிச்சை போட்டுக் குடிப்பது இந்த நோயைத் தடுக்காது. தனிநபர் சுகாதாரமே இது பரவுவதைத் தடுக்க உதவும். இவை கேன்சர் திசுக்களைக் கொல்லும் ஹைப்பர்டென்சனைக் கட்டுக்குள் வைக்கும் என்ற செய்திகளில் அறிவியல் உண்மையில்லை. உங்களுக்கு அப்படி எதுவும் அறிகுறிகள் இருந்தால் நவீன மருத்துவத்தைப் பின்பற்றும் மருத்துவமனையில், பயிற்சிபெற்ற மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ளுங்கள்.

19. முகக்கவசங்களை, நீங்கள் நோயாளியாக இருந்தால் வெள்ளைப்பக்கம் தெரியும்படியும், இல்லையென்றால் பச்சைப் பக்கம் தெரியும்படியும் அணியவேண்டும் என்பது உண்மையா

இல்லை. சாதாரண சர்ஜிக்கல் முகக்கவசத்தில் மூன்று அடுக்குகள் இருக்கும். முதலில் இருக்கும் பச்சை அடுக்கு தண்ணீர் புகாமல் தடுக்கும். இது பிறர் தும்மும்போது/இருமும்போது வெளியாகும் நுண்ணீர்த் துளிகளை உள்ளே விடாமல் தடுக்கும். வெள்ளை நிற அடுக்கு அதை அணிந்திருப்பவர் வெளியேற்றும் நீராவிகளை உள்ளிழுத்துக் கொள்ளும். இந்த இரண்டு அடுக்குகளுக்கும் இடையே ஒரு வடிகட்டி இருக்கும். நீங்கள் நோயாளியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், பச்சை நிறம் வெளியே தெரியும்படியும், வெள்ளை நிறம் உள்ளே இருக்கும்படியும் அணிந்துகொள்ளுங்கள்.

20. முப்பது டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் இருக்கும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவாது என்பது உண்மையா?

இல்லை. இதனை உறுதிப்படுத்தும் அறிவியல் ஆய்வுகள் எதுவுமில்லை. அதிக வெப்பநிலை நிலவும் இடங்களிலும் கொரோனா வைரஸ் பரவும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. உதாரணத்திற்கு சிங்கப்பூரில் இதுவரை 110 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், அங்கே வெப்பநிலை 30 டிகிர் செல்சியஸுக்கு மேல். 47 பேருக்கு மேல் தாய்லாந்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், அங்கும் வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல். மனித உடலின் இயல்பான வெப்பநிலையே இதைவிட அதிகம்தான், 37.4 டிகிரி செல்சியஸ் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஜுரம்/சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவர்களைப் பாருங்கள்

புதிய கொரோனா வைரஸ் குறித்த மேலும் விவரங்களுக்கு,

தொடர்புகொள்க: 011-22307145, 01122300012, 22300036, 044-29510500 (Tamil)

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

dyficuc.delhi@gmail.com

Related Posts