அரசியல்

மஹாத்மா காந்தியை காப்பாற்றி இருக்க முடியாதா?

“நாம் இன்று என்ன செய்கின்றோமோ அதன் மீதுதான் எதிர்காலம் கட்டப்படும்” – காந்தி

1

“அவர்தான் தேசப்பிரிவினைக்கு காரணமானவர்; அவர் முஸ்லிம்களை அரவணைத்தார், இந்துக்களை கை விட்டார்; அவரை வாழ அனுமதித்தோம் எனில் ஹிந்து ராஷ்டிரம் அமைய தடங்கலாய் இருந்திருப்பார்; பாகிஸ்தானுக்கு 55 கோடி ரூபாய் கொடுக்குமாறு இந்தியாவை வற்புறுத்தினார்; தேசப்பிரிவினையின் போது இந்து அகதிகளின் துயரங்களை அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார், ஆனால் இந்தியாவிலேயே தங்கிவிட்ட இஸ்லாமியர்களை ஆதரித்தார்; பாரத்மாதாவை காப்பாற்ற ஒரே வழி அவரை கொல்வதுதான்”. கோட்சேவின் ஆதரவாளர்களும் வலதுசாரி இந்துத்வா தீவிரவாதிகளும் காந்தியை கொல்லப்போவதற்கும், கொன்றதற்கும் கடந்த 90 வருடங்களாக சொல்லிவரும் இந்தப் பொய்களை 1947க்குப் பின்னும் இரண்டு மூன்று தலைமுறைகள் நம்பி வளர்ந்துள்ளன.

உண்மை என்ன? மட்டுமின்றி, 1947க்குப் பின் அமைந்த காங்கிரஸ் அரசு உண்மையில் காந்தியின் உயிர் மீது எத்தனை அக்கறை கொண்டு இருந்தது, அவர் வாழ வேண்டும் என்று விரும்பி இருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியாதா என்ற கோணம் மிக முக்கியமானது, அதிகம் பேசப்படாதது, விவாதிக்கப்பட வேண்டியது. ஒட்டுமொத்தமான பழியும் அந்த இரண்டு அமைப்புகளை மட்டுமே சாருமா?

2

அவரைக்கொல்ல 5 முறைகளுக்கும் மேல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துமே வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் ஆன ஆர்.எஸ்.எஸ், ஹிந்து மஹா சபா அமைப்புக்களினால் நடத்தப்பட்டவை. 1934 ஜூன் 25, 1944 ஜூலை, 1944 செப்டம்பர், 1946 ஜூன் 29, 1948 ஜனவரி 20, இறுதியாக ஜனவரி 30 அன்று கொலை செய்யப்பட்டார். உண்மையில் 1934க்கு முன்பாகவே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அவை கண்டுகொள்ளாமல் விடப்பட்டன, அல்லது தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முடியாமல் போனது. எனவே தேதிவாரியான ஆவணங்கள் இல்லாமல் போயின.

இந்த கால வரிசையை கவனித்தால், பாகிஸ்தான், தேசப்பிரிவினை ஆகிய கருத்தாக்கங்கள் முஸ்லீம் லீக்கின் அஜெண்டாவில் இல்லாதிருந்த காலத்திலேயே அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பது புரியும். அவ்வாறெனில், ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை சொல்கின்ற, அவரது கொலையை நியாயப்படுத்த முன்வைக்கும் “தேசப்பிரிவினைக்கு அவரே காரணம்” என்ற பிரச்சாரம் எப்படி உண்மை ஆகும்?

இந்த இரண்டு அமைப்புக்களிலும் இருந்த உயர்மட்ட தலைவர்களும் காந்தியின் கொலை முயற்சிகளில் நேரடியாக ஈடுபட்டவர்களும் பெரும்பாலோர் பூனா நகரை சேர்ந்த வலதுசாரி உயர்சாதி இந்துக்கள் என்பது தற்செயலானது அல்ல. அது ஒரு இயக்கம். மூன்று முயற்சிகளில் நாதுராம் கோட்ஸேயும் நாராயண் ஆப்தேயும் பிறரும் இருந்தார்கள், இரண்டு முயற்சிகளில் கோட்ஸே பிடிபட்டான்.

நேரடியாக 1948 ஜனவரி 20க்கு வருவோம். ஹிந்து மஹாசபையின் மதன்லால் காஷ்மீரிலால் பாவா, நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே, திகம்பர் பட்கே, கோபால் கோட்ஸே, சங்கர் கிஷ்டய்யா ஆகிய 7 பேர் கூடினார்கள். அவர்கள் திட்டம் இதுதான். டெல்லி பிர்லா மாளிகையில் மாலையில் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியின் மேடைக்கு அருகில் வெடிகுண்டு வீசுவது, மக்கள் கலைந்து ஓடும்போது பட்கே அல்லது கிஷ்டய்யா துப்பாக்கியால் காந்தியை சுட வேண்டும். மதன்லால் பாவா வெடிகுண்டை வீசினான். காந்தி தப்பித்தார். இந்த தாக்குதலுக்குப் பின் மதன்லால் கைது செய்யப்பட்டான். போலீசில் அவன் கொடுத்த வாக்குமூலம் தெளிவானது. காந்தியை கொல்ல பூனாவில் இருந்து வந்துள்ள கும்பலில் தானும் ஒருவன் என்று சொன்னதுடன், அவனும் கூட்டாளிகளும் தங்கியிருந்த டெல்லியில் மரினா ஹோட்டலுக்கு போலீசை அழைத்து சென்றுள்ளான். அங்கு இருந்த ஆடைகளில் NVG என்ற சலவைக்குறி இருந்ததால் அங்கே கோட்ஸேயும் இருந்ததை போலீஸ் உறுதி செய்தது.

அப்போது பம்பாய் மாகாண காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். பம்பாயில் Ruia College இல் இந்தி மொழி பேராசிரியர் ஆக இருந்தவர் ஜே சி ஜெயின். காந்தியை கொல்ல வந்துள்ள கும்பலில் தானும் ஒரு ஆள் என்று பாவா தன்னிடம் கூறியதாக ஜெயின் மொரார்ஜியிடம் சொல்லியிருக்கிறார். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத மொரார்ஜி, அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஆன சர்தார் படேலிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்படி எல்லாம் நடக்காது என்று பட்டேலும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். நடந்தது என்ன? அடுத்த 10 நாட்களில் அதே கும்பல் காந்தியை அதே இடத்தில் கொன்றது.

3

ஜனவரி 20 முயற்சிக்குப் பின்னர் காங்கிரஸின் மத்திய அரசின் உள்துறை, போலீஸ் நிர்வாகங்கள் எச்சரிக்கை அடைந்து முயற்சி செய்து இருந்தால் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திருக்க முடியும். ஏனெனில் ஜனவரி 20 வெடிகுண்டு வீச்சுக்கு பின் கைது செய்யப்பட்ட பாவா, தன் வாக்குமூலத்தில், மராத்தி மொழிப் பத்திரிகைகள் ஆன Hindu Rashtra, Agranee ஆகியவற்றின் ஆசிரியர்கள் ஆன கோட்ஸேயும் ஆப்தேயும் தங்கள் கும்பலை சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லியிருக்கிறான். மீண்டும் அவன் வருவான் என்றும் சொல்லியிருக்கிறான். பாம்பே, பூனா நகர போலீஸுக்கு இந்த இரண்டு பத்திரிகைகளை நடத்தும் நபர்களை நன்றாகவே தெரியும். ஆனால் டெல்லி போலீஸ் பூனா போலீசின் உதவியை நாடவே இல்லை! இது ஒரு விசித்திரம் எனில், அப்போது டெல்லியில் இருந்த பாம்பே போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரிடம் பாவாவின் வாக்குமூலத்தை கொடுத்து, பாம்பே சென்று தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அந்த அதிகாரி என்ன செய்து இருக்க வேண்டும்? பாம்பேக்கு விமானத்தில் சென்று இருக்க வேண்டும், அவரோ ரயிலில் டெல்லியில் இருந்து அலகாபாத் சென்று மீண்டும் இன்னொரு ரயிலை பிடித்து பாம்பே சென்றுள்ளார். அவர் பாம்பே செல்வதற்குள் கோட்ஸே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கார்கரே ஆகிய மூவரும் பாம்பேயில் இருந்து புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்து விட்டார்கள், அதாவது 31ஆம் தேதி அன்று காந்தியை கொல்வதற்கு.

இத்தனை கொலை முயற்சிகளுக்குப் பின்னும் கூட, தனக்கு கூடுதல் பாதுகாப்பை காந்தி மறுத்துள்ளார், தன்னைக் காண வருவோரை பரிசோதனைக்கு உட்படுத்தக் கூடாது என்றும் உறுதியாக இருந்துள்ளார். பூனாவின் கொலைக்கும்பல் பற்றி நன்கு அறிந்து இருந்த பாம்பே, பூனா, அகமத் நகர் போலீஸ்துறையை காந்தியின் பிரார்த்தனை கூட்டங்களில் அதன் பிறகாவது நிறுத்தி இருந்தால் கோட்ஸே, ஆப்தே, கார்கரே ஆகியோரை அவர்கள் அடையாளம் கண்டு பிடித்து இருப்பார்கள். ஒருவேளை 30ஆம் தேதி காந்தி உயிருடன் இருந்திருப்பார்.

சர்தார் பட்டேலிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ரகசிய அறிக்கையில், “போலீஸ் அதிகாரிகளும் அரசின் உயர் அதிகாரிகளும் ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை அமைப்புகளில் ரகசிய உறுப்பினர்களாக இருக்கிறார்கள், தீவிரவாத இந்து அமைப்புகளின் கொள்கைகளை ஆதரிப்பதிலும் பரப்புவதிலும் தீவிரமாக ஈடுபடுகின்றனர்” என்றே பதிவுசெய்யபட்டுள்ளது. காந்தியை கொலை செய்ய முயற்சி செய்து வந்த கும்பலோ இந்த இரண்டு அமைப்புகளின் முன்னணித் தொண்டர்கள். எனில் இவர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் திரைமறைவில் கூட்டு இருந்ததா? காந்தியை காப்பாற்றுவதற்கான போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் செய்யாமல் இருந்தது, காந்தி படுகொலை விசாரணை நடந்த விதம், இவை இரண்டையும் கவனித்துப்பார்க்கும் ஒருவர், இப்படித்தான் முடிவு செய்வார்: காந்தி படுகொலை விசாரணையானது, பல ரகசியங்களை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக பலவற்றை மூடி மறைக்கவே நடத்தப்பட்டது.

4

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை தீவிரவாதிகள், தாங்கள் அணியும் காலணியின் கீழ் காந்தி, நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களின் படங்களை ஒட்டிவைத்து இழிவுபடுத்துவார்கள். துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தோட்டாவின் இலக்காக காந்தியின் படத்தை ஒட்டிவைத்து சுடுவார்கள். காந்தியின் படுகொலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள், காரணம், இந்து மத புராணங்களில் கதையாக சொல்லப்படும், ராட்சசர்களை தெய்வங்கள் வதம் செய்வதற்கு ஒப்பானது காந்தியின் கொலை என்பது.

ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபை அமைப்புகளின் மேல்மட்ட தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் பிராமணர்கள் ஆன பேஷ்வாக்கள், சித்பவன் பிராமணர்கள். பிரிட்டிஷ் ஆட்சியில், நிர்வாகம், போலீஸ், நீதித்துறை என அதிகார மட்டத்த்தை ஆக்கிரமித்து இருந்தவர்கள் பிராமணர்களே. 1947க்கு முன், அதாவது தேச விடுதலைக்கு முன் இந்தியாவில் இருந்த ஒரே ஒரு பிராமண அரசு மஹாராஷ்டிராவில் பூனா பேஷ்வா பிராமணர்கள் ஆட்சி செய்த மராத்திய அரசுதான். பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறியதும் இந்தியாவின் ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் வந்து விழும் என்று பெரும் கனவுடன் இருந்த பேஷ்வா பிராமணர்களின் நம்பிக்கை, காந்தியின் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தலித் மக்கள் ஆதரவு, தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரம், சமபந்தி உணவு, தலித் மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சொன்னது மட்டும் இன்றி நேரடியாக களத்திலும் இறங்கியது ஆகிய நடவடிக்கைகளால் தகர்ந்தது. ஏனெனில் காந்தி மட்டும் அல்லாது, காங்கிரஸ் கட்சிக்குள் மாற்று சிந்தனை கொண்ட ஒருவர், நேரு, பிரதமர் ஆக இருந்ததும் அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஹிந்து ராஷ்டிரக்கனவைத் தோற்றுவித்த சாவர்க்காரும் ஹிந்து மஹாசபை உறுப்பினர்களும் இந்தியா எங்கும் வெறித்தனமாக ஹிந்து மேலாதிக்கத்தை ஆதரித்தும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் தீவிரமாக பிரச்சாரம் செய்த காலமும் அது. சனாதன இந்துக்களும் இந்து தீவிரவாத அமைப்பினரும் காந்தி செல்கின்ற இடங்களில் மட்டுமின்றி, இந்தியா எங்கும் அவருக்கு எதிராக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். இந்துத்வா கோட்பாட்டுக்கும் மேல் சாதி ஆதிக்கத்துக்கும் எதிராக விமர்சனங்களை முன் வைத்தவர்கள் மீது நாதுராம் கோட்ஸே, நாராயண் ஆப்தே கும்பல் பல இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருந்ததாக வரலாறு சொல்கின்றது. எனவே 1934க்கு முன்பாக காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சிகளையும் கோட்ஸே கும்பல்தான் செய்திருக்க வேண்டும்.

தேசப்பிரிவினையின் காரணமாக ஒட்டுமொத்த முஸ்லிம்களும், குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து, புதிய பாகிஸ்தானுக்கு இடம்பெயர்ந்து விட வேண்டும், அதேபோல் புதிய பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் எல்லை கடந்து வந்து இங்கே குடியேற வேண்டும், அதன் பின் எஞ்சியிருக்கும் முஸ்லிம்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்துவது எளிது. அதன் பின் இந்த தேசம் நூறு விழுக்காடு இந்து நாடாகும். ஆனால் அப்படியான ஒரு மாபெரும் இடப்பெயர்ச்சியானது வன்முறை மூலமே சாத்தியம் ஆகும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த காந்தி தன் களச்செயற்பாடுகள் மூலம் அவ்வாறு ஒரு பெரும் கலவரம் மூளாமல் தடுத்தார். வட மேற்கு எல்லையில் நடந்த கலவரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் உண்மையே. ஆனால் அவருடைய இருப்பும் பாத்திரமும் பாதிப்பும் இல்லாமல் போயிருந்தால் ஆர் எஸ் எஸின், ஹிந்து மஹாசபையின் பெரும் கனவுத்திட்டங்கள் ஒருவேளை பல கோடி மக்களின் உயிரிழப்புக்குப் பின் சாத்தியம் ஆகி இருக்கக்கூடும்.

5

காங்கிரஸின் அணுகுமுறை எப்படி இருந்தது?

காங்கிரஸ் கட்சியில் மேல் மட்டத்தில் இருந்த பல தலைவர்கள் நிலப்பிரபுத்துவ, பழமைவாத, சாதிய சிந்தனையில் ஊறியவர்கள். தேசவிடுதலை இயக்கத்துக்கு காந்தியை முன்நிறுத்திய இதே தலைவர்கள், தேசம் விடுதலை ஆன பின் காந்தியின் இருப்பை வெறுப்புடன் நோக்கினார்கள். அவரது நேர்மை, எளிமையான வாழ்க்கை முறை, ஆடம்பர வெறுப்பு, தலித் மக்களுடன் வேற்றுமை இன்றி பழகியது, தீண்டாமை ஒழிப்பு ஆகியன இந்த தலைவர்களுக்கும் பின்பற்றத்தகாதவையாக இருந்தன. மிக மிக முக்கியமான புள்ளி எதுவென்றால் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும் என காந்தி சொன்னதே. அதிவேக தொழில் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவுக்குப் பதிலாக கிராம சமுதாய இந்தியாவை நோக்கி மெதுவாக முன்னேறினால் போதும் என்ற அவர் வாதம்; காங்கிரஸ் மந்திரிகள் கடல் போன்ற தமது அரசு பங்களாக்களில் இருந்து வெளியேற வேண்டும், வீடுகள் இல்லாத மக்களுக்கு அந்த பங்களாக்களை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் காந்தி பேசினார். மவுண்ட் பேட்டன் பிரபுவையும் கூட, அவரது வைசிராய் மாளிகையில் இருந்து வெளியேற வேண்டும், மாளிகையை தேசப்பிரிவினையின்போது பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஆன மருத்துவமனையாய் மாற்ற வேண்டும் என்று வேண்டினார். தேசப்பிரிவினையை திரும்பப்பெற வேண்டி, நான் பாகிஸ்தானுக்கு போவேன் என்றும் கூட பேசினார்.

இப்படிப்பட்ட ஒருவர், நடைமுறைக்கு ஒவ்வாத முதியவர், காலாவதியான ஒரு மனிதராக, இனிமேல் வேண்டப்படாத ஒருவராக, ஆர் எஸ் எஸ், ஹிந்து மஹாசபைக்கு மட்டுமின்றி, காங்கிரசில் இருந்த மேல்சாதி நிலப்பிரபுத்துவ இந்துத்வா சிந்தனை கொண்டவர்களுக்கும் ஆனார். ஆக ஒரு தரப்பு நேரடியாகவும் மறுதரப்பு மறைமுகமாகவும் அந்த முதியவரை சமூகத்தில் இருந்து அகற்றிவிடப் பாடுபட்டனர்.

6

ஆக, இஸ்லாமியருக்கான பாகிஸ்தான் என்ற நாடு உருவான பின், இந்துக்களுக்கான ஒற்றை தேசம் ஆன இந்தியா உருவாகும் என்ற தம் கனவு தகர்ந்ததை இரண்டு தீவிரவாத இந்துத்வா இயக்கங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு ஒரே காரணம் காந்தியே என்று நம்பினார்கள். (மேலே சொன்ன காங்கிரஸின் முக்கியமான தலைவர்களும் இதையேதான் நம்பினார்கள்!) ஆனால் மிகத் தந்திரமாக என்ன செய்தார்கள்? தமது தாய்நாடு பிளவுப்படுத்தப் பட்டதாகவும், கிழக்கு-மேற்கு பாகிஸ்தான்களில் இந்துசகோதரர்கள் படுகொலை செய்யப்படுவதாகவும், இதற்கெல்லாம் காரணம் காந்திதான் என்றும் பிரச்சாரம் செய்து தமது கோபத்திற்கான உண்மையான காரணத்தை மறைத்தார்கள். காங்கிரஸ் தலைவர்களோ, தம் தவறுகளை மறைக்கவும் பழிபோடவும் ஆர் எஸ் எஸ் , ஹிந்து மஹாசபையினரின் இந்த மதவெறி பிரச்சாரம் தமக்கு உதவுவதாக உள்ளூர மகிழ்ந்தனர். அப்புறப்படுத்த வேண்டிய மனிதரை யாரோ ஒருவர் அப்புறப்படுத்தியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார்கள், ஆனால் பழி தம் மீது விழவில்லை என்று திருப்தி அடைந்தார்கள்.

… …..

உதவிய நூல்: ‘Let’s kill Gandhi!’, Tushar A.Gandhi, Rupa Publications.

காந்தியின் மகன் மணிலால் காந்தி, அவர் மகன் அருண் மணிலால் காந்தி, அவரது மகன் துஷார் காந்தி.

  • மு.இக்பால் அகமது

Related Posts