அரசியல்

கொரோனா காலமும் சகுனியின் பகடையும் …

கொரோனா காலம் நோய்க்கு அஞ்சி ஊரடங்கா .. பசிக்கு அஞ்சி ஊர் திரும்பலா ..என விவாதிக்கும் வகையில் ஏராளமான அனுபவங்களைத் தந்துள்ளன .

அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளிகள் அதிகரித்து வருகின்றனர் .உடலுழைப்பு தொழிலாளர்களாக உள்ள இவர்கள் பெரும்பாலும் கிராமங்களில் விவசாய வேலைகளை இழந்த விவசாயிகள், தொழிலாளிகள் என்பதை ஊரடங்கு காலம் நமக்கு காட்டியது.

அதே சமயம் ஆன்லைன் கல்வி, விளையாட்டுகள், சூதாட்டம், கருத்து பரிமாற்றங்கள் ,போராட்டங்கள், என இது தவிர வேறு வழியில்லை எனும் வகையில் கொரோனா காலநிலைமை நகர்ப்புறத்திலும், கிராமங்களிலும் உருவாகியுள்ளது .

ஆன்லைன் கல்வி, உருவாக்கும் மன அழுத்தம் மற்றும் பொருளாதார செலவு குறித்து பலரும் இக்காலத்தில் வெளிப்படுத்தியுள்ள னர். சமீபத்தில் ஒரு ஏழை வட இந்தியக் குடும்பம் மகளின் ஆன்லைன் கல்விக்காக மாட்டை விற்று போன் வாங்கியுள்ளார் . மாட்டின் மூலம் வருமானம் பார்த்து காலம் தள்ளிய குடும்பமது .

நகர்ப்புற குடும்பம் ஒன்றில் தன் மகனின் ஆன்லைன் கல்விக்காக போன் வாங்கித் தந்தனர் .அதன் மூலம் அவன் கல்வி கற்றானா தெரியாது. ஆனால் பப்ஜி விளையாட்டில் ஈடுபட்டு லட்சக்கணக்கான ரூபாய்களை தந்தையின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து செலவிட்டுள்ளான் .ஏதோ சந்தேகத்தில் வங்கி தந்த தகவலில் தந்தை அதை அறிகிறார்.

இதேபோல் சென்னையில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் ரம்மி ஆடி நிறைய பணமும் பொருளும் தொலைத்து பின் தற்கொலை செய்துள்ள வேதனை தரும் செய்தியும் காண்கிறோம். திருப்பூரில் சிறுதொழில் செய்யும் ஒருவர் ரம்மி ஆடி, தன் செல்வத்தை இழக்கிறார். பிறகு அதை மீட்கும் முயற்சியில் மீண்டும் மீண்டும் ஆடுகிறார். அவரை நம்பிய வாடிக்கையாளர்களின் பொருள்களை விற்று அதையும் இழக்கிறார். அவர்களை நம்பியவர்களையும் இழப்பில் தள்ளுகிறார். அதை ஈடுகட்ட அவர் குடும்பம் முயற்சி செய்து மிச்சமீதம் இருந்ததையும் இழந்து ஏதுமற்றவர்களாக மாறுகிறார்கள் .ரம்மி விளையாடித் தோற்றவர் தன்னை மாய்த்துக் கொள்கிறார் .

கணிணி என்பது மனித மூளையின் சிந்தனைகளை பதிவு செய்து, அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் உதவி செய்யும் ஒரு கருவி. இந்த அளவில் இதைப் பார்த்தாலும் அதன் பதிவு மற்றும் அதன் வெளிப்படுத்தும் வேகத்தை ஈடுகட்ட தொழில்நுட்ப அறிவில் தொடர்ந்து வளர வேண்டிய தேவை உள்ளது. கணிணி சார்ந்த தொழிலில் உள்ள பணியாளர்கள் கூட அப்டேட்டில் உள்ள வேக வேறுபாடு காரணமாக பணியிலிருந்து நீக்கப் படுவதைக் காண்கிறோம்.
இந்நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடும் மனிதமூளை கணிணியின் வேகத்திற்கு ஈடுதர வேண்டியுள்ளது. அதில் பணம் கிடைக்கும் போது அதிக ஆர்வத்துடனும், இழப்பின் போது அதை மீட்கும் வெறியுடனும் மூளை செயல்படுகிறது . கணிணியைப் போல் ஒரே நிலையில் சிந்தித்து விளையாடுவதும், அதன் வேகத்துடன் போட்டி போடுவதும் முடியாது.

ஆனால் ஆன்லைன் ரம்மிக்கு டிவியிலும் முகநூலிலும் விளம்பரம் வருவதைப் பார்க்கிறோம் . இந்த விளையாட்டின் மூலம் அதிக தொகை ஈட்டி மேல்கல்வி கற்பது ,வாகனம் வாங்குவது போன்ற ஆசைகளை நிறைவேற்ற உதவும் என ஆசை காட்டுகின்றன. இவைகளின் நோக்கம் மற்றவர் இழப்பில் நிறுவனத்தின் லாபம் என்பதைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும் ! இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என ஒரு நீதிபதியின் வேண்டுகோளை முகநூல் வழி அறிய முடிந்தது.

தெலுங்கானா மிளகாய் விவசாயத்தில் ஒப்பந்த தொழிலாளி 12 வயது ஜாம்லா ஊரடங்கு இடப்பெயர்வில் மரணித்த கதையை ஒரு இணையதளக் கட்டுரை எழுதுகிறது. இந்தியாவின் உண்மை முகம் ரேசன் கார்டில் குடும்ப உறுப்பினர்களை சேர்க்க, ஆவணங்களில் பெயரை சரியாக பதிவு செய்யவும் கூட வக்கில்லாதது என அது குறிப்பிடுகிறது .

இந்நிலையில் மத்திய அரசு தன் பொறுப்பில் உள்ள தொலைதொடர்பு நிறுவனத்திற்கு இழப்பை தேடித்தரும் வகையிலும் ஜியோ போன்ற தனியார் நிறுவனங்களுக்கு வளரும் வகையில் உதவுவதையும் நாளும் காண்கிறோம். ஆன்லைன் கல்வியை அனுமதிப்பதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல தொலைதொடர்பு அலைவரிசையைக் கையில் வைத்திருக்கும் பெருமுதலாளிகள் மற்றும் மின்னணு பொருள் உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களும் பயன் பெறுகின்றன .

ராஜ்யத்தை கைப்பற்ற சகுனியின் பகடையை நம்பிய கதை இன்னும் உயிருடன் இருக்கும் நாடிது ! இதில் ஆன்லைன் மூலம் நடக்கும் கல்வியோ விளையாட்டோ இந்திய பெருமுதலாளிகளை உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெறவும் முன்னிலைக்கு நகர்த்தவும் மட்டுமே உதவும் ! அடித்தட்டு மக்களின் வாழ்விற்கு உதவாது !

எனவே ஆன்லைன் கல்விக்கு பதில் குறைந்த மாணவர்கள் அதிக ஆசிரியர்கள் எனும் வகையில் மாற்று கல்விமுறையை உருவாக்குவது . இதன் மூலம் கல்வித்தரம் மேம்படும் . வேலைவாய்ப்புக்கு வழி பிறக்கும். அலைபேசி பயன்பாட்டில் கட்டுப்பாட்டுடன் குடும்பங்கள் மாணவர்களை கையாள்வது எளிமையாகும் .

டிக்டாக் செயலிகள் ஒரு வகையில் பெண்ணோ ஆணோ தங்களது மன அழுத்தத்திற்கு வடிகாலானது . இன்னொரு வகையில் பெண்களின் டிக்டாக் செயல்பாட்டை ஆண்களால் ஏற்றுக் கொள்ள இயலாத ஆதிக்க மனப்போக்கு மற்றும் பல காரணங்களால் குடும்பங்களில் குழப்பம் வரவும் காரணமானது. இந்நிலையில் சீன செயலிகள் தேசப்பற்றை மையமாய் கொண்டு தடை செய்யப் பட்டுள்ளது .

உண்மையில் ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிப்பதில் அரசின் கவனம் இருக்க வேண்டும். குடும்ப பொருளாதாரத்தை சீரழிக்கும், குடும்ப வன்முறைக்கும் தற்கொலைக்கும் கூட காரணமாகும் ரம்மி பப்ஜி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும். வேலையிழப்பும் , வருமான இழப்பும் உள்ள இந்தக் கொரோனா காலகட்டத்தில் இந்தக் கோரிக்கை வலுப்பெற வேண்டும் . இதற்காக வலுவான இயக்கம் கட்டமைக்கப் பட வேண்டும் .

ஆர்.செம்மலர்.

Related Posts