அரசியல்

மதம் மாற்றப்பட்ட கொரோனா கிருமி…

ஒ, நீ துயரங்களில் இருக்கிறாய்,
நம்பிக்கையென்பது பொறுமையின் நற்குணம் என்பதை அறிந்து கொள், அது கடவுளின் பரிசு என்பதையும்.

தூதரின் பணிகளை நினைவு கொள்,அவரே எல்லோருக்குமான சுமைதாங்கி; அவர் கடவுள் தந்த சாட்சி, மதிப்பு.

ஓ முஸ்லிம், இருண்மையாகவும் சுவர்களாகவும் இருந்தபோதிலும்; பொறுமையின் பாதையைக் கண்டு கொள் அதுதான் விடுதலைக்கான பாதை, எந்தவகையிலும் மேலே நீ அறிந்துகொள், கடவுள், யார் பொறுமையானவர்களோ அவர்களுடனே இருப்பார்!

(நிழலற்ற பெருவெளி…
தாஹர் பென் ஜீலோவ்ன் மறைந்த எழுத்தாளர் அர்ஷ்யாவின் மொழிபெயர்ப்பு நாவலிலிருந்து …)

சோசலிச நாடான சீனா, வல்லரசு என்று மார் தட்டிக்கொள்ளும் அமெரிக்கா, வளர்ந்த நாடுகளான இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற நாடுகளையே இந்த கொரோனா நிலைகுலைய வைத்திருப்பதை நாம் அறிவோம்.

உலக நாடுகள் இப்படி ஒரு அபாயக்கட்டத்தில் இருப்பது ஊடகங்களின் மூலம் தெரியவந்த போதே இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இது குறித்த அலட்சியப் போக்கை கடைப்பிடித்ததுதான் இந்த நோய் பரவ காரணம்.

ஜனவரி 31ம் தேதி இந்தியாவில் தனது காலை பதித்தது கொரோனா. அதன்பிறகும் கூட கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகளை உரிய பரிசோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதித்ததன் விளைவு தற்போது நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உள்துறை அமைச்சகம் வழிகாட்டி, பிப்ரவரி மாதம் முழுவதும் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் அனைத்து விவரங்களையும் மாநில அதிகாரிகளுடன் பகிர்ந்திருந்தால், மாநில அரசுகள் இதைக் கண்காணிக்கத் தொடங்கியிருந்தால், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தியிருக்க முடிந்திருக்கும்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்டுப்பாட்டின் கீழ் வரும் தில்லியின் காவல்துறை தப்லீக் ஜமாத் அமைப்பின் நிகழ்வை இந்தக் காலக்கட்டத்தில் தொடர்ந்து நடத்த ஏன் அனுமதித்தது? இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டிய மோடியும் அமித்ஷாவும் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் நோயுற்ற மக்கள் மீதே பழிபோடும் முயற்சிதான் நடக்கிறது.

தற்போது அந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்களால்தான் இந்தியா முழுவதும் கொரோனா பரவப்போகிறது. தமிழகத்திற்கு இவர்களால்தான் பரவியது என்று ஊடகங்களிலும் முகநூல்களிலும் அச்சத்தை ஏற்படுத்தும் வண்ணம் செய்திகள் பரப்பப்படுகிறது. இதனால் அக்குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வாழும் பகுதியில் சுற்றியுள்ளவர்கள் பயணிக்கவோ அவர்களிடம் பேசி பழகவோ அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தில்லியில் தப்லீக் ஜமாத் கருத்தரங்கினை இந்த சூழலில் நடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த காலக்காட்டத்தில் வேறு எந்த நிகழ்வும் நடக்கவில்லையா என்பதைப் பார்க்க வேண்டியது எல்லோரின் பொறுப்பு.
பிப்.6 லக்னோ ஆயுத கண்காட்சியில் 70 நாடுகளில் 172 ஆயுதம் தயாரிக்கும் நிறுவனங்களிலிந்து கலந்துக் கொண்டனர்.

பிப். 13 உலக புனித ஆன்மீக திருவிழா.

பிப். 21 ஈசா யோக மையத்தில் மகா சிவாராத்திரி வெளிநாட்டினர் உட்பட பல லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர்.

பிப். 22 முதல் 25 வரை கோவா திருவிழா.

பிப்.24 அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்துக் கொண்ட நமஸ்தே டிரம்ப் நிகழ்வில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு விருந்தினர்களும் லட்சக்கணக்கான மக்கள் பங்கெற்றனர்.

மார்ச்.7 திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவத்தில் நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

மார்ச்.8 பெண்கள் தின கொண்டாட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது.

மார்ச்.13 தில்லியில் கங்கை நதியை சுத்திகரிக்க தேசிய திட்டம் வகுக்க சிறப்பு மாநாடு உள்துறை அமைச்சர் அமிஷா தலைமையில் நடைபெற்றது.

மார்ச் 15. லண்டன் சென்று வந்த பாடகி கனிகா கபூர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏகப்பட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

மார்ச்.17 தேதி வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டமன்றம் நடந்தது.

இப்படி தொடர்ந்து பல்வேறு வகையான கூடுகைகள் நடந்த சூழலில் திடீரென ஒரு நாள் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு பிரதமர் மோடி கொரோனா நோய் பாதிப்பை தடுக்க மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவை அறிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மாலை 5மணி கை தட்ட சொன்னதால், மக்கள் கூட்டமான வீதிக்கு வந்து கை தட்டி பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர். ஊரடங்கின் நோக்கமே சிதைந்து போனது.

எந்தவிதமான முன் ஏற்பாடுகளும் செய்யாமல் மோடி அரசு 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததை விமர்சித்தாலும் எந்த கட்சியும் எதிர்க்கவில்லை ஊரடங்கை கடைப்பிடித்தனர். ஆனால், உத்திரபிரதேச முதல்வர் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மார்ச் 26ம் தேதி அயோதியாவில் ராமர் சிலையை இடமாற்றம் செய்யும் பூஜையை நடத்தினர்.

தீடிரென 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தியதால் வேலையின்றி உணவில்லாத தினக்கூலிகள் வாகனம் இல்லாமல் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல் பல மாநிலங்களிலிருந்து நடந்தே சென்று பாதி வழியில் இறந்து போகும் அவலமும் ஏற்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 22 வயது இளைஞரும் ஒருவர்.

மத்திய அரசின் அலட்சிய போக்கால் பல்வேறு நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற்ற போதும் ஒரு மதத்தினரை மட்டும் குறை கூறுவது உள்நோக்கம் கொண்ட வெறுப்பு பிரச்சாரமே ஆகும்.

கொரோனாவிற்கு தீர்வு உள்ளது என்று சொன்னதற்கு ஹீலர் பாஸ்கரை கைது செய்ததது தமிழக அரசு. ஆனால், மாட்டு கோமியம் போதும் கொரோனா போய்விடும் என்று சொல்லியது மட்டுமல்லாமல் உத்திர பிரதேசத்தில் மார்ச் 14ம் தேதி மாட்டு மூத்திரம் குடிக்கும் விழாவை நடத்தியவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ்யின் அகில பாரத இந்து மகாசபா.

தப்லீக் ஜமாத்தும் அரசும்:

மார்ச் 13ம் தேதி 200க்கும் மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதித்திருந்தபோது எப்படி இவ்வளவு பேரை கூட்டினீர்கள் என்றும்
கொரோனாவல் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து பயணத்தவர்களுக்கு நோய்தொற்று அறிகுறி இருந்தால் இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென விதிகள் இருந்தும் அதனை தப்லீக் ஜமாத் அமைப்பு மீறிவிட்டதாக கூறி தில்லி அரசாங்கம் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து தப்லீக் ஜமாத் அமைப்பு 13ம் தேதி கொடுத்த உத்தரவு என்பது அனைத்து விளையாட்டுக் கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் பற்றிப் சொன்னதாக நினைத்துக்கொண்டோம். இது மத ரீதியீலான கூட்டங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறதா என்பதை அரசு தெளிவுப்படுத்தவில்லை.
அதேபோல, வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது தனிப்பட்ட பயணிகள் மீது விதிக்கப்பட்ட பொறுப்பு எனவே அமைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

சட்டப்படி பிரச்சனையை அணுகுவது வேறு.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் “கொரானா ஜிஹாத்” என்று பரப்புகின்றன.

“உலக வரலாற்றிலேயே
ஒரு கிருமி முதன் முதலாக
மதம் மாறியிருக்கிறது
சீனத்தில் பிறந்ததால்
கம்யூனிஸ கிருமியென்று
அழைக்கப்பட்ட அது
இந்தியாவிற்குள் நுழைந்ததும்
இஸ்லாமியக் கிருமியாக
பரிமாணம் அடைந்துவிட்டது…’”

(மனுஷ்ய புத்திரனின் இஸ்லாமிய வைரஸ் கவிதையிலிருந்து)

வகுப்புவாதம் எனும் வெறுப்புவாதமும் ஒருவகை கொரோனாவே, அதனிடமிருந்தும் மக்கள் விலகி நிற்க வேண்டும். உடல் நோயிலிருந்து மட்டுமல்லாது உள்ளத்து நோயிலிருந்தும் தப்பிக்க இந்த விலகல் அவசியம் என்பதை தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை கொரோனாவால் 3000த்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் டில்லியில் முஸ்லீம் மாநாட்டிற்கு சென்றவர்களால்தான் கொரோனா பாதிப்பு என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்துவிட்டு, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பிலா ராஜேஷ். செய்தியாளர்கள் சந்திப்பில் தில்லி சென்று வந்த 364 முஸ்லீம்களில் 304 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

எனவே, அரசு தனிபட்ட சமுகத்தினர்களால்தான் நோய் தொற்று ஏற்படுகிறது என்று கூறுவதை விட்டுவிட்டு, அனைத்து மக்களைகளுக்கு இலவச பரிசோதனை செய்வது, சிகிச்சை கூடங்களை அதிகப்படுத்தி நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்குத் தேவையான வென்டிலேட்டர் போன்ற கருவிகளை வழங்குவது, மருத்துவர்களுக்கும் சேவிலியர்களுக்கு துப்புரவு தொழிலாளர்களுக்கு அடிப்படையான பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான உபகரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் அவதிப்படும் கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் அவர் தேவையை உணர்ந்து உரிய இழப்பீடு வழங்குவது அவசியமாகும். இதுதான் தற்போதைய உடனடி தேவை.

கொரோனா ஒரு பொது எதிரி. அதை வீழ்த்துவதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒன்றுப்பட்ட போராட்டமே பொதுவானதாக இருக்க வேண்டும் ஒழிய. மக்களைப் பிரித்து வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலமாக அல்ல.

ஹேமாவதி.

Related Posts