அரசியல்

அசோக் எனும் போராளி……..

ஜுன்-12 தோழர் அசோக் வீரவணக்க தினம்.


ஒரு மனிதன் ஒரு வாக்கு என்பதை உறுதி செய்த இந்திய அரசியல் சட்டத்தால் ஒரு மனிதன் ஒரே மதிப்பு என்பதை இந்தியாவின் சாதிய சமூக அமைப்பை தாண்டி உறுதி செய்ய முடியாத நிலையை தோழர் அசோக் படிக்கும்போதே உணர்ந்திருக்க வேண்டும். தோழன் அசோக் அந்த அநீதியான சமூக அமைப்பிற்கு எதிரான சமரில் தன்னை இணைத்துக்கொண்டவன் மட்டுமல்ல ரத்தசாட்சியாக மாறிப்போனவன்.

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே கரையிருப்பில் பிறந்து வளர்ந்த தோழன் அசோக் தனது ஆரம்பகல்வியை தனது சொந்த கிராமமான கரையிருப்பில் பயின்றாலும் மேல்நிலை கல்வியை நெல்லை மாநகரின் இதயப்பகுதியான சந்திப்பு பகுதியில் “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” எனப் பாடிய முண்டாசுக்கவிஞன் பாரதி படித்த அதே இந்துக் கல்லூரி பள்ளியிலேயே பயின்றான். தனது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக மதிதா இந்துக்கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பயன்றான். ஆனாலும் அவனது விருப்பமான துறை வரலாறாகவே இருந்தது.

அசோக் தனது கல்லூரி காலத்தில் தான்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அறிமுகமாகிறான். தனது பள்ளிக்காலம் முதல் நண்பனாகவிருந்த தற்போதைய வாலிபர் சங்க தோழனான கௌதம் மூலம் அமைப்பில் செயல்பட ஆரம்பிக்கிறான். மக்களை நேசிக்கிறான், மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க தொடங்குகிறான்.

மக்களை நேசித்த இளைஞன் அசோக் வாலிபர் சங்கத்தின் அறிமுகம் கிடைத்ததும் தனது கிராமத்தின் அடிப்படை தேவைகளாக இருந்த குடிநீர், ரேசன்பொருள், தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் மனுகொடுப்பது, போராட்டம் நடத்துவது என தனது சமூக அரசியல் செயல்பாட்டை துவக்குகிறான்.

அதில் ஊர்மக்களின் அன்பை பெறுகிறான். தனது கிராமத்து இளைஞர்கள் தவறான பாதையில் செல்வது தெரிந்தால் அவர்களிடம் பேசி சரிசெய்வதை தவறாமல் செய்வான் தோழர் அசோக். இளைஞர்களும் சிறுவர் சிறுமியர்களும் பெண்களும் தனது தனித்திறன்களை வெளியே கொண்டுவர ஆண்டுதோறும் பொங்கல் விழாவை நடத்துவதை வழக்கமாக மாற்றிக்காட்டினான் அசோக்.

கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் பெண்கள் பங்கேற்க வேண்டும் என உற்சாகமூட்டுவான். அதுமட்டுமல்ல ஊர் மக்களில் எவருக்கு எந்த பிரச்சனையென்றாலும் முன்னின்று தீர்த்துவைப்பதன் மூலம் மக்களை நேசித்தான் தோழன் அசோக்.

தேடலும் துடிப்பும் கொண்ட செயல்வீரன் அசோக்
மக்களை நேசிப்பவன் ஏராளமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தவன் அசோக். அதனால்தான் அசோக்கை எப்போது எங்கே பார்த்தாலும் அவனுடன் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும் என்று எல்லோரும் சொல்வார்கள். சேகுவேரா, பகத்சிங், இம்மானுவேல் சேகரன், கரிபால்டி என வரலாற்று ஆளுமைகளில் தொடங்கிய அவனது வாசிப்பு பயணம் பெரியார், மகாத்மா ஜோதிபாபூலே, அய்யன்காளி, முத்துகுட்டி சாமிகள் என்ற சீர்திருத்த வாதிகளின் வரலாற்றையும் கற்க வைத்தது. அது அண்ணல் அம்பேத்கர், மார்க்ஸ், லெனின், கிராம்சி என விரிவடைந்தது.

அதுபோலவே வாலிபர் சங்கத்திலும் மேலும் பல பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ஒரு தலைவனாக வளர்ந்தான் தோழன் அசோக். இடதுசாரி இயக்கத்தின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பெறப்படும் கருத்துக்கள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மாநாடுகள் கருத்தரங்குகளுக்கு அதிகமதிகமான இளைஞர்களை கூட்டிச்செல்வதில் துடிப்புடன் செயல்படுவான்.

போராளி அசோக் கருப்பின மக்களின் விடியலுக்காக தனது இசையை ஆயுதமாக்கிய பாப் மார்லியைப் போல தனது பேச்சாற்றலையும் செயலாற்றலையும் தோழன் அசோக் தனது மக்களுக்காக ஆயுதமாக்கினான். உள்ளுர் மக்களின் பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல உலகத்தின் எந்த மூலையில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் தான் சார்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போராட்டங்களில் இளைஞர்களை திரட்டி போராடியவன் தோழன் அசோக்.

பேட்ரோல் டீசல் விலைஉயர்வு துவங்கி, கோக்-பெப்சி எதிர்ப்பு, நீட்தேர்வு எதிர்ப்பு, தாமிரபரணி பாதுகாப்பு, தமிழக உரிமைகள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள் என வாலிபர் சங்கம் நடத்தும் அத்;தனை போராட்டங்களிலும் வேலைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு இயக்கங்களை வெற்றியடைய அர்ப்பணிப்போடு செயல்படுவான்.

தென்மாவட்டங்களில் நடந்த சாதிய படுகொலைகளை தடுத்திடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினரின் கொடூரமான அடக்குமுறைக்கு உள்ளானபோதும், பட்டியலின மக்களின் வாழ்வுரிமை மாநாட்டின் போது சமூக விரோதிகள் தாக்குதல் தொடுக்க நினைத்த போதும் அஞ்சாமல் முன்வரிசையில் நின்று தீரமாக சமர்புரிந்தவன் தோழன் அசோக். தனது அம்மாவுடன் வயலுக்கு சென்று வருகையில் சாதி ஆதிக்கவாதிகள் வழிமறித்து தாக்கிய போதும் அப்படித்தான் அஞ்சாமல் எதிர்த்து நின்றான். அதுவே சாதி ஆதிக்க வெறி கொண்ட கும்பல் அசோக்கை தீர்த்துகட்ட போதுமான காரணமாகவும் மாறிப்போனது.

பல்திறன் ஆளுமை தோழன் அசோக் பொங்கல் விளையாட்டு போட்டியிலும், வாலிபர் சங்கத்தின் முகாம்களிலும் எல்லோரையும் உற்சாகப்படுத்த அவன் நகைச்சுவையாக பேசுவது எல்லோரையும் அவன்பால் ஈர்ப்பை உருவாக்கும். பொங்கல் விழாவில் அசோக்கின் நடனத்தை பார்க்க ஆர்.எஸ்.ஏ நகரில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. வாலிபர் சங்க போராட்டங்களிலும் பொது மாநாடுகளின் மேடைகளிலும் அவனது நையாண்டி கலந்த பேச்சு கேட்பவர்களை கட்டிப்போடும் ஆற்றல் கொண்டது.

வாலிபர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் நடந்த ஒரு முகாமில் நடந்த நாடகமொன்றில் சாதி ஆணவ படுகொலைக்கு இலக்காகும் ஒரு இளம்பெண்ணாக வேடமிட்டு அனைவரும் வியக்கும்படி நடித்தது என்றும் மறக்கமுடியாதது. அதுவே அசோக்கின் நிஜ வாழ்விலும் நடந்தேறியது கொடுமையிலும் கொடுமை.

சபதம் ஏற்போம்..
தோழன் அசோக்கின் உயிருக்கு சாதி ஆதிக்க வாதிகளால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று அறிந்த பின்னரும் அச்சமின்றி தனது இயக்கப்பணிகளை முன்னெடுத்த தோழன் அசோக்கின் இறுதி நம்பிக்கை எதுவாக இருந்திருக்கும்? அவன் தனது சகோதரன் சதீஷ் மற்றும் தோழர்களிடம் சொன்ன வார்த்தைகள் இவைதான், “எதிரிகள் என்னை கொன்றுவிடலாம், ஆனாலும் நமது இளைஞர்களின் கல்வி கனவோ மக்களின் முன்னேற்றமோ தடைபடக்கூடாது” என்பதுதான். ஆம் அசோக் ஒரு மாவீரன், சிறந்த போராளி, சிறந்த மனித நேயன். “சாதியத்திற்கும் மதவாதத்திற்கும் மாற்றான மனிதநேயமே நாங்கள் -தோழர்கள்” என்று முழங்கியவன். தோழர் அசோக்;கின் வழியில் அவர் விட்டுசென்ற பணியை முன்னெடுப்போம்..

வீரவணக்கம் தோழா..

  • ராஜகுரு.

Related Posts