பிற

வரமுடிந்தால் வந்துவிடுங்களேன் தோழர் கருப்பு கருணா…………….

“சிந்தனுக்கு என் பிரியங்களும்… வாழ்த்துக்களும்..”
– எஸ்.கருணா

இதுதான் கருப்பு கருணா தோழர் எனக்காக பேஸ்புக்கில் எழுதிய முதல் வரி. 2010 ஆம் ஆண்டில் என்னுடைய பிறந்தநாளுக்கு பேஸ்புக்கில் அவர் எனக்கு இவ்வாறு வாழ்த்துக் கூறியிருந்தார். அன்று வாழ்த்து தெரிவித்த சில நூறு பேரில் ஒருவரான அவரிடம் தனியான ஒரு அன்பும் பாசமும் உருவாகும் என்று நான் அப்போது நினைத்துப்பார்க்கவில்லை.

2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த சில இடதுசாரி கருத்தியலாளர்கள் ஒருங்கிணைந்து மாற்று என்கிற இணையதளம் உருவாக்கப்பட்டது. அதற்கு ஒரு ஆசிரியர்குழுவும் அமைக்கப்பட்டது. அந்த ஆசிரியர்குழுவில் கருப்பு கருணா தோழரும் இருந்தார். நானும் இருந்தேன். ஆனாலும் அவருடன் அதுவரையிலும் நான் எதுவும் பேசியிருக்கவில்லை.

பின்னர் ஒருநாளில் தமிழில் வெளியான குறும்படங்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியினை அவர் துவக்கினார். அதுகுறித்து அவருடைய தனிப்பட்ட வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அப்போது முதன்முதலாக அந்த முயற்சியைப் பாராட்டி அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு அவரும் பதிலளித்திருந்தார். ஆனாலும் அதற்கு மேல் எதையும் பேசிக்கொள்ளவில்லை.

அப்போதெல்லாம் பேஸ்புக்கில் மிகமிகக் குறைவானவர்களே நண்பர்களாக இருந்தபடியால், ஒவ்வொருவர் எழுதுவதையும் நிறுத்தி நிதானமாகப் படிப்பதற்கான நேரமும் காலமும் பொறுமையும் நிறையவே இருந்தது. நகைச்சுவையும் நையாண்டியும் கலந்து நம்முடைய மூளையின் மையப்பகுதிக்கே நேரடியாகச் சென்று உரையாடும் திறன்படைத்த அவரது பதிவுகள் அனைத்தும் படிக்கிற எவரையும் ஒரு நொடியில் ஈர்த்துவிடும். அப்படித்தான் அவர் மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உருவானது. இன்னும் சொல்லப்போனால், அவருடைய பின்னணி, வரலாறு என எதுவுமே தெரியாமலேயே, அவரது எழுத்து மட்டுமே அத்தகைய அன்பை அவர்மீது என்னில் உருவாக்கியது.

The day i became Woman என்ற ஒரு திரைப்படத்தை அந்த காலகட்டத்தில் தான் நான் பார்த்திருந்தேன். மூன்று வெவ்வேறு வயதுடைய பெண்களின் வாழ்க்கையைப் பேசும் ஒரு படம் அது. அப்படம் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனக்கு ஏற்பட்ட தாக்கத்தை எப்படியாவது மற்றவர்களுக்கும் கடத்திவிடவேண்டும் என்கிற ஆசையும் எனக்குள் எழுந்தது. அதனால் அதனை ஒரு கட்டுரையாக மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் முடியவே இல்லை. என்ன எழுதிப்பார்த்தாலும், அது அப்படத்திற்கு நியாயம் செய்வதாக இல்லை. அதன்பின்னர் அந்த முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டேன். அதனை மறந்தும்விட்டேன். அப்போது தான் ஒருநாள் கருப்பு கருணா தோழர், அதே படத்திற்கு ஒரு விமர்சனக் கட்டுரையை பேஸ்புக் குறிப்பாக எழுதியிருந்தார். தலைப்பைப் பார்த்ததுமே ஆர்வமாகப் படித்தேன். மிகமிகச் சிறப்பாக எழுதியிருந்தார். எப்படி இவ்வளவு நேர்த்தியாக அந்த படத்திற்கு விமர்சனம் எழுத முடிந்தது இவரால் என்று எனக்கு ஆச்சர்யம் தாங்கவே இல்லை. அதனால், முதன்முதலாக மெசஞ்சருக்குச் சென்று, அவருக்கு ஒரு செய்தி அனுப்பினேன்.

“மூன்று பெண்களின் கதை அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் தோழர். அதனை அப்படியே மாற்று இணையதளத்தில் வெளியிடலாமா?” என்று கேட்டிருந்தேன்.
“‘நன்றி இளைஞர் முழக்கம்’ என்று குறிப்பிட்டு வெளியிடுங்கள்” என்று பதில் சொல்லியிருந்தார். இளைஞர் முழக்கம் என்கிற மாத இதழில் மாதாமாதம் ஒரு உலக சினிமா குறித்த கட்டுரை எழுதிவருகிறார் என்கிற தகவலே அப்போது தான் எனக்குத் தெரிந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக அவர் இளைஞர் முழக்கத்தில் எழுதிய ஒவ்வொரு சினிமா விமர்சனக் கட்டுரையையும் விடாமல் படிக்கத் துவங்கினேன். பழைய கட்டுரைகளை வாசிக்கமுடியவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டேவிட்டேன்.

“எல்லாமே சேர்த்து ஒரு நூலா வருது தோழா” என்றார். அது எனக்கு பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.

“பொடம்கின் கப்பலும் போக்கிரித் திருடனும்” என்கிற பெயரில் அவருடைய சினிமா விமர்சனக் கட்டுரைகள் அனைத்தும் ஒரு நூலாக வெளியானதும் வாங்கிப் படித்தேன். சினிமா ஆர்வமிக்க ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய மிகமிக அவசியமான நூல் அது. அந்த நூலை வாசித்துவிட்டு, அவருக்கு மெசஞ்சரிலேயே சில கேள்விகளை அனுப்பியிருந்தேன்.

கேள்வி 1. இந்நூல் பேசும் 26 திரைப்படங்களை தேர்ந்தெடுப்பதற்கு பொதுவான காரணங்கள் என்னென்ன இருந்தன?

கருப்பு கருணா தோழரின் பதில்:
இந்த புத்தகத்திலிருக்கும் கட்டுரைகள் அனைத்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் இளைஞர் முழக்கம் மாத இதழில் வெளிவந்தவை. வாலிபர்களிடையே வேலைபார்க்கும் நமது தோழர்களுக்கு சினிமா குறித்த அடிப்படை சுவாரஸ்யத்தை உருவாக்குவதே படங்களின் தேர்வுக்கு முதற் காரணம். கூடவே உலக சினிமாக்கள் குறித்த வரலாற்று அறிவை போதிப்பதும்கூட இதன் தேவைகளில் ஒன்றாக இருந்தது.அந்த அடிப்படையில்தான் இப்படங்களை தேர்வு செய்து எழுதினேன். தவிரவும் அந்தந்த மாதங்களில் உருவாகும் சமூக அசைவுகளையொட்டி ஏற்கனவே வந்திருந்த சினிமாக்களை தேர்வு செய்தும் எழுதினேன்.

கேள்வி 2. கட்டுரைகளின் தொகுப்பு என்றாலும்கூட, ஒவ்வொரு கட்டுரையும் கதைக்களனுடன் கூடிய அழகான சிறுகதையை வாசிப்பது போல்தான் இருக்கிறது. எழுதும் முன்பே இது திட்டமிடப்பட்டதா?

கருப்பு கருணா தோழரின் பதில்:
“நிச்சயமாக திட்டமிடாமல் எவனும் எதையும் எழுதிவிடமுடியாது. பேனாவை திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்…அதுவாக வந்து மளமளவெனக் கொட்டியது…என்றெல்லாம் புருடா விட்டால் அதை நம்புவதற்கு வாசகர்கள் ஒன்றும் அறிவில்லாத மக்கட்டைகளல்ல. இதை திட்டமிட்டுத்தான் எழுதினேன். சினிமாவை பார்ப்பது என்பது வேறு. அதை எழுத்தில் படிப்பது என்பது வேறு. ஒரு சினிமா குறித்து எழுத்தில் படிக்கிற வாசகன், அதை தன் மனத்திரையில் ஓடவிட்டு காட்சிப்படுத்தி பார்த்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இது சற்று சிரமமான காரியம்தான். ஆனாலும் அவந்தான் முயற்சி செய்தாக வேண்டும். அந்த முயற்சிக்கு உதவுகிறமாதிரி அந்த எழுத்து இருக்கவேண்டியது அவசியம். எனவேதான் ஒரு கதைச்சொல்லியைப்போல சுவாரஸ்யத்துடன் இக்கதைகளை சொல்ல முயன்றிருக்கிறேன். அதில் வெற்றி பெற்றேனா என்பதைப் படித்தவர்கள்தான் சொல்லவேண்டும்.
இதில் இன்னொரு அம்சம் என்னவெனில், ஒவ்வொரு படம் குறித்தும் சொல்லுவதற்குமுன்பு அதற்கு வாசகனை தயார்ப்படுத்தியாக வேண்டும். உலக சினிமாவுக்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்கிற மனவோட்டத்தை குலைத்துப்போடவேண்டிய தேவையும் இருந்தது. அதனால்தான் படத்தின் கதையை சொல்லத்துவங்குமுன், அதோடு தொடர்புடைய ஒரு சம்பவத்தையோ, அனுபவத்தையோ, செய்தியையோ, சமகால..அவனறிந்த நடப்பு ஒன்றையோ சொல்லி, அவனை கதைக்குள் இழுத்துப்போட்டுக்கொண்டுவிட்டுத்தான் மேலே தொடரவேண்டியிருந்தது. இந்த கதை சொல்லல் பாணி நிறைய பேருக்கு பிடித்தும் இருந்தது என நினைக்கிறேன்.”

மொத்தமாக பதினோரு கேள்விகளைக் கேட்டிருந்தேன். அவருடைய கடுமையான பணிசூழல் காரணமாகவும், தொடர்ச்சியாக அவரிடம் பதில் கேட்டுப்பெறாமல் நான் தவறவிட்டகாரணத்தாலும் மீதமுள்ள கேள்விகளுக்கான பதில் கிடைக்கவில்லை. அந்தக் கேள்விகளெல்லாம் இன்னும் கேள்விகளாக மட்டுமே என்னிடம் இருக்கின்றன. கருணா தோழரின் மறைவுக்குப் பின்னர் அக்கேள்விகளை மீண்டும் வாசித்துப் பார்க்கையில் அடக்கமுடியாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.

சர்வதேச அரசியல் சினிமாக்கள் குறித்து அவ்வப்போது பேஸ்புக்கிலும் மாற்று இணையதளத்திலும் நான் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பாரதி புத்தகாலயம் நூலாக வெளியிட முன்வந்தபோது, அதற்கு யாரிடம் முன்னுரை எழுதக் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். சினிமாவையும் நன்கு புரிந்துகொண்டவராக இருக்கவேண்டும், அரசியலிலும் ஈடுபாடுகொண்டவராக இருக்கவேண்டும் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருந்தது. சினிமா இயக்குநர்கள் பலரின் பெயரையும் எடுத்துக்கொண்டு, இவர் சரியா வருவாரா, அவர் சரியா வருவாரா என்று யோசித்துக்கொண்டே இருந்தேன்.
அப்போது தான், “உங்களுடைய எதிர்பார்ப்புக்கு மிகச்சரியான ஆள் கருப்பு கருணா தோழர் தான்” என்று சிராஜ் தோழர் என்னிடம் கூறினார். பல முக்கியமான மனிதர்களை அறிமுகப்படுத்தி என்னுடைய எழுத்துப்பணியில் முக்கியப்பங்காற்றிவர் சிராஜ் தோழர். பலரிடம் என்னை நெருக்கமாகக் கொண்டு சேர்த்ததுபோல, கருணா தோழருக்கும் நெருக்கமாக என்னைக் கொண்டு சேர்த்தவரும் அதே சிராஜ் தோழர் தான்.

சினிமா புகழ் மாயையில் சினிமாவில் பெரிய பிரபலங்களாக அறியப்படுகிறவர்களின் பெயரையே முன்னுரை எழுத யோசித்துக் கொண்டிருந்தே, அந்த சினிமா பிரபலங்களை விடவெல்லாம் அதிக அறிவுபடைத்தவரான கருணா தோழரை யோசிக்காமல் விட்டுவிட்டோமே என்று எனக்கு ஒருவித குற்றவுணர்ச்சியையும் அது கொடுத்தது. சிராஜ் தோழர் கருணா தோழரைத் தொடர்புகொண்டு, முன்னுரை எழுதக்கேட்டார்.

கருணா தோழர் என்ன சொல்லப்போறாரோ என்கிற பதட்டம் எனக்கிருந்தது. சும்மா விளையாட்டுக்கு போகிற போக்கில் பேஸ்புக்கில் நான் எழுதியதை நூலாகப் படிக்கையில் எப்படி உணர்வாரோ என்கிற பயம் இருக்கத்தான் செய்தது.

சில நாட்கள் கழித்து, மெசஞ்சரில் அவர் ஒரு செய்தி அனுப்பியிருந்தார்:
“எழுத்து நடை கட்டுரைக்கான நடையாக இருக்கிறது. இன்னமும் கொஞ்சம் மொழியை சுவாரசியப்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆனால் வாசிப்புக்குத் தடையாக இல்லை. படிப்பவர்களை அந்த படங்களைப் பார்க்கும் ஆவலை நிச்சயம் தூண்டிவிடும்”
என்னுடைய நூலுக்குக் கிடைத்த முதல் விமர்சனம் அதுதான். அன்றிலிருந்து எதை எழுதுவதாக இருந்தாலும், எழுத்து நடையில் ஒரு சுவாரசியம் இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்தே தான் எழுதுகிறேன். அதற்கு கருணா தோழரின் அந்த இருவரி விமர்சனம் தான் முழுமுதற்காரணம்.

புத்தகத்திற்கான முழு முன்னுரையையும் ஒருசில நாட்களில் கருணா தோழர் எழுதி அனுப்பினார். ஒட்டுமொத்த நூலையும் மிக அழகாக உள்வாங்கி, அதில் உள்ள கட்டுரைகளெல்லாம் என்ன நோக்கத்திற்காக எழுதப்பட்டதோ, அதனை ஓரிரு பக்கங்களில் மிகத்தெளிவாகவும், அதனைப் படித்தாலே நூலைப் படிக்கும் ஆர்வம் உண்டாகிவிடும் பாணியிலும் அந்த முன்னுரையை எழுதியிருந்தார். பொதுவாக நூலாசிரியரின் வரிகளைத் தான் பின்னட்டையில் போடுவது வழக்கம். ஆனால், கருணா தோழர் எழுதிய வரிகளை எடுத்தே, நூலின் பின்னட்டையில் போட்டோம். நூலின் எல்லா விளம்பரங்களிலும் அவரது வரிகளையே பயன்படுத்தினோம். நூல் வெளியீட்டு விழாவிற்கு அவர்தான் வரவேண்டும் என்று விருப்பப்பட்டேன். ஆனால் குறைவாக எனக்கிருந்த விடுப்பு நாட்களின் காலத்தில் அவருக்கு வரமுடியாத சூழல் இருந்தது.

“நான் வரலன்னாலும் பிரச்சனையில்லை சிந்தா. அடுத்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்துர்றேன்” என்றார். அடுத்த நூலெல்லாம் எழுதுவேனா என்று நான் யோசிக்காதபோதே, அவர் என்மீது நம்பிக்கை வைத்து அப்போது சொல்லியிருந்தார்.

பின்னாளில் “பாலஸ்தீனம் – வரலாறும் சினிமாவும்” என்கிற என்னுடைய இரண்டாவது நூல் வெளியாகப்போகும் செய்தியை அவரிடம் தெரிவித்தேன்.

“கம்பம் திரைப்பட விழாவில் உன்னோட நூலை வெளியிட்டு பிரமாதப்படுத்துறோம்” என்றார் பெருமகிழ்ச்சியுடன்.

ஆனால் அதற்குள் புத்தகம் அச்சாகி வெளிவரமுடியாமல் போனது. அதனால் சென்னையிலேயே வேறொரு வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதற்கு அவரை அழைத்திருந்தேன். அந்த தேதிகளில் ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட தர்மபுரி கூட்டங்கள் இருந்ததால், அவரால் வரமுடியாமல் போனது. தன்னுடைய படத்தில் நாயகியாக நடிக்கவேண்டும் என்று ஒவ்வொரு படத்திற்கும் ஐஸ்வர்யா ராயை அழைத்துக்கொண்டிருந்த ரஜினிகாந்தைப் போலவே, நானும் கருப்பு கருணா தோழரை அழைத்துக்கொண்டே தான் இருந்தேன். ஏனோ, சரியாக நேரம் ஒத்துப்போகாமலேயே இருந்தது. ஆனால் ஒன்றை மட்டும் வழக்கமாக வைத்திருந்தேன். என்னுடைய எந்த நூல் வெளியானாலும், முதன்முதலில் அவருக்கு ஒரு பிரதி அனுப்பிவிட்டுத்தான் அடுத்தவேலையைப் பார்ப்பேன்.

ஒவ்வொரு கலைக்கும் அதற்கே உரிய அழகியல் இருப்பதைப்போல, திரைப்படங்களுக்கும் தனியான அழகியல் இருக்கிறது. ஆனாலும் அந்த அழகியலைவிடவும் அது பேசும் அரசியலும், அதனை நேர்மையாகவே பேசும் தன்மையும் தான் மிகமிக முக்கியம் என்று கருத்துடையவராகத் தான் நான் கருப்பு கருணா தோழரைப் பார்த்தேன். அதனால், ஒரு திரைப்படம் பார்த்து முடித்ததும், அது நல்ல படமா இல்லையா என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போனாலே, கருணா தோழரின் மெசஞ்சர் உரையாடல் தான் நான் என்னுடைய குழப்பத்தைத் தீர்க்கும் இடமாக இருந்திருக்கிறது. ஒட்டுமொத்த சமூக ஊடகமே கொண்டாடித் தீர்த்த சில படங்களுக்குக் கூட எனக்கிருந்த நெருடல்களையெல்லாம் அவரிடம் பேசிவிட்டுத்தான் பொதுவெளியில் அதுகுறித்து எழுதும் பழக்கத்தை வைத்திருந்தேன்.

“உன்கிட்ட எவ்வளவு படம் இருக்கு?” என்று ஒருமுறை கேட்டார்.
“சுமார் 2000 படங்கள் இருக்கலாம்” என்றேன்.
“இப்ப எங்கப்பா இருக்க?” என்று கேட்டார்
“நாகர்கோவிலில் இருக்கேன் தோழர்” என்றேன்.
“சரி, நாளைக்கு ஒரு தோழரை அனுப்பினால், உன்னிடம் இருந்து காப்பி பண்ணிக்கலாமா?” என்று கேட்டார்.
“சரி தோழர்” என்று நம்பிக்கையில்லாமல் சொல்லி என் முகவரியைக் கொடுத்தேன்.
அடுத்தநாள், நான் தங்கியிருந்து வீட்டுக் கதவை ஒருதோழர் தட்டினார்.
“கருணா தோழர் சொன்னாரு. அதான் நேத்து நைட்டே தேனியில் வண்டி ஏறி வந்துட்டேன்” என்றார் அந்த தோழர்.
எனக்கு பகீரென்றது. ஒரு மனிதனின் பேச்சைக் கேட்டு, அடுத்த நொடியிலேயே பலநூறு கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணித்து ஒருவர் வருகிறார் என்றால், அந்த மனிதரின் வார்த்தைகளுக்கு இருக்கிற மரியாதை என்னை ஆச்சர்யப்படவைத்தது.

படங்களை பிரதியெடுத்துக்கொண்டு போகும்போது, “வாங்களேன். நாகர்கோவில் புத்தகக் கண்காட்சிக்கு போயிட்டு வருவோம்” என்று அழைத்துக்கொண்டு சென்று, எனக்கு சில நூல்களையும் வாங்கிக்கொடுத்தார்.

“கருணா தோழர் உங்களுக்கு நூல்களை வாங்கித்தரச் சொன்னார்” என்றார்.

இப்படியாக அவரை நேரில் ஒருமுறைகூட அப்போதுவரையிலும் சந்திக்காமலேயே அவருடனான நெருக்கம் அதிகமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்கமுடியாமல் ஏதோவொரு தடைவந்துகொண்டே இருந்தது. பேசாம, திருவண்ணாமலைக்கே போய் பாத்துரலாமான்னு கூட அப்போது யோசிச்சிருக்கேன். தமுஎகச சார்பாக கீழடி தொடர்பான ஒரு கருத்தரங்கை திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தியபோது, நெருங்கிய தோழர் ஒருவர் என்னை அழைத்துச்சென்றார். அங்கே தான் முதன்முதலாக கருணா தோழரைப் பார்த்தேன். ஆம், சந்தித்தேன் என்று கூட சொல்லமுடியாது. அவர் மேடையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வேலையை செய்துகொண்டிருந்தார். நாங்களோ கீழே கூட்டத்தின் பின்னாடி வரிசையில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். நிகழ்ச்சி நெடுநேரம் நடந்துகொண்டிருந்தது. அவரைப் பார்த்து ஒரு வணக்கம் சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் நேரம் ஆகிக்கொண்டிருந்ததையும் கவனித்துக்கொண்டிருந்தேன்.

“கருணா தோழரைப் பார்த்து ஒரு ‘ஹாய்’ சொல்லிட்டுப் போவமா?” என்று தாழ்ந்த குரலில் என்னை அழைத்துக்கொண்டு சென்ற தோழரிடம் கேட்டேன்.
“பிரச்சனையில்ல. எவ்வளவு நேரம்னாலும் காத்திருக்கலாம்” என்றார் அந்த தோழர்.
அப்போதுதான் நிம்மதியே வந்தது. இறுதியாக நிகழ்ச்சி முடிந்து, வந்திருந்த பார்வையாளர்கள் ஒவ்வொருவராக கெளம்பியதும், மிகச்சிலர் மட்டுமே இருந்தனர். மேடையின் அருகே சென்றபோது கருணா தோழர் இன்னமும் வேலையாகத் தான் இருந்தார். நீண்ட நேரம் அமைதியாக மேடைக்கு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட நள்ளிரவானதும் அவர் மேடையை விட்டு விலகி எங்களை நோக்கி வந்தார்.

“என்ன சிந்தா. எப்படி இருக்க? எப்ப வந்த ஊர்ல இருந்து?” என்று பல ஆண்டுகளாக பழக்கமான பக்கத்துவீட்டு மாமா கேட்பதைப் போலக்கேட்டார். அவ்வளவு தான். எந்தத் தடையும் இல்லாமல், சாதாரணமாகப் பேசமுடிந்தது அவருடன்.

“தோழர், ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்டேன்.
“அதுக்கென்ன, எடுத்துக்கலாமே” என்று பக்கத்தில் வந்து நின்றார்.
பெரிய வெளிச்சமில்லாத அந்த நள்ளிரவு இருட்டில் நல்ல கேமராக்கள் இல்லாத எங்களுடைய அலைபேசிகளால் அந்த மகிழ்ச்சிகரமான தருணத்தை சரியாகப் படம்பிடிக்க முடியாமல் போனது. நானும் திரும்பத்திரும்ப எடுத்துக்கொண்டிருந்தேன். ஆனாலும் சரியாக வரவில்லை. மங்கலாகத் தான் எங்கள் முகங்கள் அதில் தெரிந்தன.
“நம்ம ரெண்டு பேரு கலரும் கருப்பு. இதுல இருட்டு வேற. அவ்ளோதான்யா வரும்” என்று அவருடைய அக்மார்க் நையாண்டியுடன் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அந்த முதல் சந்திப்பிற்குப் பிறகு அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. பலமுறை மெசஞ்சரிலேயே திட்டமிட்டும் நடக்காமலேயே தான் போனது. ஒருமுறை கருத்துரிமையை சிதைக்கும் அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக என் மகள் யாநிலா வரைந்த ஒரு ஓவியத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, உடனே “இதை தமுஎகச பக்கத்தில் வெளியிடலாமா” என்று கேட்டார். அத்துடன் நின்றுவிடாமல், தமுகஎகச நடத்திய கருத்துரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் அந்த வரைபடத்தை காட்சிக்கு வைக்குமளவிற்கு கொண்டு சென்றார்.

ஒருமுறை ஊருக்கு வந்த நேரத்தில், சிபிஎம் சார்பாக எட்டுவழிச்சாலைக்கு எதிரான ஒரு நடைபயணத்தை திருவண்ணாமலை முதல் சென்னை வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையில் இருந்து சில தோழர்களாக திருவண்ணாமலைக்கு கெளம்பினோம். போகிறபோதே, கருணா தோழரிடம் அச்செய்தியை சொல்லிவிட்டே சென்றோம். திருவண்ணாமலையில் நள்ளிரவு ஆகிவிட்டது. அவருக்கு போனில் தொடர்புகொள்ளவும் தயக்கமாக இருந்தது. ஆனால் வேறு வழியுமில்லை. போன் செய்ததும் எடுத்தார். வழியைச் சொன்னார். எங்கே, யாரைச் சந்திக்க வேண்டும் என்றும், என்னசெய்யவேண்டும் என்றும் நெறிப்படுத்தினார். தோழர்களின் உதவியுடன், கட்சி அலுவலகம் சென்றதும், அங்கே நிறையபேர் இல்லை. உறங்கி, காலையில் விழித்தால் அப்போதும் பெரியளவுக்கு யாருமில்லை. நடைபயணத்தைத் தடுப்பதற்காகவே, முக்கியமான தோழர்களை கைது செய்வதாகவும் வழிமறிப்பதாகவும் பிறகுதான் தெரிந்தது. நடைபயணம் நடக்கும் இடத்திற்கு சென்று சேர்ந்தபோதுதான், பல்வேறு தெருக்கள் வழியாக தோழர்கள் ஓரிடத்திற்கு வந்து சேர்ந்துகொண்டிருப்பதைப் பார்க்கமுடிந்தது. அப்போது தான் கருணா தோழரை அங்கே பார்த்தேன் இரண்டாவது முறையாக.

“என்ன சிந்தா, ஊருக்கு வந்ததுமே போராட்டத்துக்கு வந்திட்டியா” என்று அவருடைய இயல்பான சிரிப்புடனே ஆரம்பித்தார். பதிலுக்கு நானும் சிரித்தேன்.
“சென்னை வரைக்கும் நடக்கத்தான போறோம். பேசிட்டே போவோம் தோழர்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.
ஆனால், நடைபயணத்தை நடக்கவிடாமல் கைதுசெய்து ஊருக்கு வெளியே கொண்டுபோய் ஒரு மண்டபத்தில் அடைத்துவிட்டார்கள்.
“நீங்கள் எப்போது விடுதலை செய்தாலும், அப்போது எங்களது நடைபயணத்தைத் தொடர்வோம்” என்று மாநில செயலாளர் கேபி அறிவித்ததைத் தொடர்ந்து, மாலையாகியும் காவல்துறை எங்களை விடுதலை செய்யவில்லை. இரவும் ஆகிவிட்டது. அங்கிருந்த பல தோழர்களுடன் ஆங்காங்கே உட்கார்ந்து அரசியல் கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அன்று தான் கருணா தோழரிடம் அதிகநேரம் நேருக்கு நேராக உட்கார்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் தான் அவருக்கு நித்தியானந்தாவின் அடியாட்களால் தொல்லைகள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நித்தியானந்தாவையும் அவனது கூட்டத்தின் திருட்டுத்தனங்களையும் கருணா தோழர் தோலுரித்துக்கொண்டிருந்தார். அதனால் அதுகுறித்தும் அவரிடம் கேட்டுத்தெரிந்துகொண்டிருந்தோம். நள்ளிரவு கடந்ததும் மிகச்சிலரை மட்டும் கைதுசெய்துவிட்டு, எங்களை விடுதலை செய்தனர் காவல்துறையினர். அப்போது இருந்த களேபரத்தில், அவரிடம் சொல்லிக்கொண்டு கெளம்பவும் கூட முடியாமல் போனது.

அதுதான் அவரை கடைசியாகப் பார்த்த தருணம்.

நான் முதன்முதலாக மொழிபெயர்த்த, “நிழல் இராணுவங்கள்” நூலை ஏராளமானோரிடம் கொண்டு சென்றது அவர்தான். ஏராளமானோருக்கு அவரே அலைபேசியில் அழைத்து, “நிழல் இராணுவங்கள் புக்கு படிச்சியாய்யா?” என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார்.
“கருணா தோழர் விடாம சொல்லிட்டே இருந்தார். அதனால படிச்சேன்” என்று என்னிடமும் பலர் சொல்லியிருக்கின்றனர். அவர் கலந்துகொண்டு பேசும் எல்லா கூட்டங்களிலும் அந்நூலைக் குறித்து அவர் சொல்லாமல் இருந்ததில்லை. என்னிடம் மெசஞ்சரிலும் அதுகுறித்து நிறைய பேசினார்.

அவ்வப்போது பேஸ்புக்கில் இருந்து சில மாதங்கள் வெளியேறி அமைதியாக எதையாவது எழுதுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். அந்த கொஞ்ச நாட்களில் என்னைக் காணவில்லை என்றால், உடனே மெசஞ்சரிலோ வாட்சப்பிலோ தொடர்பு கொண்டு,
“என்ன சிந்தா, அடுத்த புக்கா?” என்று அப்போது கேட்பார்.
ஒரு சிரிப்பு ஸ்மைலியை அனுப்பிவிடுவேன்.
மீண்டும் பேஸ்புக் வரும்போது, புதிய நூலின் அட்டைப் படத்தை பதிவிட்டே துவங்குவேன்.

இன்று மீண்டும் பேஸ்புக் வந்திருக்கிறேன். ஒன்றல்ல, இரண்டு நூல்களை எழுதி முடித்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. என்னைவிடவும் மிகஅதிகமாக அவர்தான் மகிழ்ச்சியடைந்திருப்பார். அவற்றின் முதல் பிரதியை வழக்கம்போல அவருக்கு அனுப்பவோ, இச்செய்தியைச் சொல்லி அவரிடம் வாழ்த்துப் பெறவோ கூட முடியாது என்று என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

2019 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதினை நிழல் இராணுவங்கள் பெற்றிருக்கிறது. அவருக்கு நன்றி சொல்லும்விதமாக பேஸ்புக் திரும்பிவந்ததும் ஒரு பதிவினை எழுதவேண்டும் என்று கூட நினைத்திருந்தேன். ஆனால், இப்போது ஒரு அஞ்சலிக் கடிதத்தை எழுதவேண்டிய நிலைக்கு கொண்டு வந்துவிட்டிருக்கிறது காலமும் இயற்கையும் என்று நினைக்கையில் கண்கள் குளமாவதைத் தடுக்கவே முடியவில்லை…

எந்தப் பின்புலமும் இல்லாத, அவர் சார்ந்த இயக்கத்தில் கூட நேரடி உறுப்பினராகவும் இல்லாத, நேரில் அதிகப்பழக்கமுமில்லாத என்னைப் போன்ற ஒரு சாதாரணமானவனிடம் இருந்து எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், அரவணைத்து, ஆதரவுகொடுத்து, அன்புசெலுத்திய ஒரு மாமனிதர் எங்கள் தோழர் கருப்பு கருணா…

“போய் வாருங்கள் தோழா” என்று எளிதாகச் சொல்லிவிடமுடியவில்லை…
“வரமுடிந்தால் வந்துவிடுங்களேன் தோழா” என்று தான் சொல்லவேண்டும் போல் இருக்கிறது.

  • இ.பா.சிந்தன்.

Related Posts