பிற

காலநிலை மாற்றம்- ஒரு தேடல்

இந்தியாவின் பேரழிவு என்று நாடே அல்லோலகப்பட்ட அந்த தருணங்கள்…

வீடு திரும்பிய சொந்தங்களின் திரில் அனுபவங்கள்…

இறந்தவர்களுக்கும் தொலைந்தவர்களுக்கும் புரியாத கணக்குகள் என இன்றும் தொடரும் அழுகுரல்கள்…

இந்தியாவின் ஒரு மூலையில் இயற்கை லேசாய் ஒரு ஆட்டம் போட்டுப் பார்த்தது…

மேக வெடிப்பு, பனிப்பாறைகளின் திடீர் பிரவாகம் இவற்றின் எதிரொலிதான் உத்திரகாண்ட் பேரழிவு …

சில ஆண்டுகள் மட்டுமே விதைத்த விதைகளுக்கு இழப்பீடாக பல ஆண்டுகளுக்கு அறுவடை செய்யப்போகிறோம் நாம்… இது தானே நிசப்தமான உண்மை.

இதுகுறித்து ஒருநாள் முன்னரே தெரிந்திருந்தால் அதன் முடிவு என்னவாக இருந்திருக்கும்? நிச்சயம் உயிரிழப்புகள் மட்டும் ஓரளவிற்கு தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் நம்மால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு நிவாரணம் கேட்டு இத்தனை நாள் போராடிப் பார்த்த இயற்கைக்கு பதில் என்ன?

மேக வெடிப்பு பேராபத்து ஒன்றும் பெரியதல்ல, ஒரு வாளி தண்ணீரை ஒரு எறும்புக்கூட்டத்தின் மீது கொட்டியது போலத்தான் இருக்கும். அதைத்தான் உத்திரகாண்ட் உள்வாங்கிக் காட்டியது!!

Northern_India_17_Jun_2013

Image Courtesy : Wikimedia

ஊடகங்கள் செய்திகளை சொல்கின்றன. ஆனால் பொருளாதாரச் சுயநலங்கள் எடையிடப்படுவதால் அவை செய்திகளாகவே மக்கி மண்ணாய் போய்விட்டன. இதன் இறுதி வடிவம், 5000 உயிரிழப்புகளுக்கும், ஆயுத ஊழலுக்கும் வித்தியாசம் தெரியாமல் நம்மை செய்தித் திண்ணிகளாக மாற்றி விட்டன. இன்று இவை அனைத்துமே சாதாரண செய்திகளாக ‘அட அதுதானே’ என்றாகி விட்டது.

சுயநலம்:
காசுக்காக நல்லது செய்வதைக்காட்டிலும், எனக்கு எதற்கு? என்று ஒதுங்குதலைக் கூட பாராட்டலம். கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற பெயரில் பெருநிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும் இரண்டுங்கெட்டான் இயற்கை விரும்பிகளாக உலா வருவது யாருக்கு சேவை செய்ய? இதன் விளைவு, அன்றாட பிழைப்புக்கே அலைந்தோடும் பரதேசிகளானவர்களுக்குத்தான் இதுபோன்ற இயற்கையின் பரிசுகள்…..

பார்த்தோமல்லவா உத்திரகாண்டை, இதை விட பெரிய உதாரணம் கூறத்தேவையில்லை. ஆயிரக்கணக்கான யாத்திரீகம் சென்றவர்களும், கொழுத்த பணம் படைத்து சுற்றுலா சென்றவர்களும் காணவில்லை என்று பதறித்துடித்த ஊடகங்களும் அரசாங்களும், ஏன் அங்கு வாழ்ந்த மலைவாழ் மக்களை குறித்துக்காட்டவில்லை?. பொத்தாம் பொதுவாக 200 கிராமங்கள் அழிந்தன. மறுசீரமைத்து சுற்றுலா துவங்கும் என்றால், நாம் கேள்வி கேட்ககூட திராணியற்றுத்தான் நிற்கிறோம். இதிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ளலாம், இயற்கையும் கூட காசு உள்ளவனை பாதிக்காது. பலிகடாவாக தலைகொடுப்பவர்கள் சாதாரண மக்கள்தான்.

சத்தியமாகச் சொல்கிறேன், ஒரு வாரம் முந்தி தான் நான் இதைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தேன். இது இப்படி, இந்த தேதியில் நடக்கும் என்றுதான் குறிக்கவில்லை. மற்றபடி ஆய்ந்து கூறியது போலதான் இருக்கிறது. நாம் எதிர்பார்க்காத இழப்புகளை இழப்பீடாக கொடுக்க வேண்டி வரும் என்ற அந்த வாக்குகள் சம்மட்டியால் தலையில் அடித்தது போல இருக்கிறது எனக்கு!

ஜூன் மாத இறுதியில் பெங்களூருவில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் சுயவிருப்ப பத்திரிகையாளர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. கூடவே கட்டுரை, செய்தி வடிவமைப்பு குறித்த பயிற்சி வகுப்பு. செல்லும் போது ஆயிரம் குழப்பங்கள்.இருப்பினும் ஊடகத்துறை சார்ந்தவனானதால் உள்ளூர ஒரு ஆர்வம். சக பங்கேற்பாளர்களான அனுபவசாலிகளின் சந்திப்பு கிடைக்கும். ஊடகத்துறையில் நுழையவிருக்கும் எனக்கு நிச்சயம் ஒரு படிக்கல்லாக இருக்கும் என்ற அண்ணனின் உபதேசங்களால் நான் அங்கு சென்றேன். ‘எதுவும் தெரியாதே என்ற தயக்கத்தை விட, எனக்கு எதுவுமே தெரியாது’ என்ற தெளிவுடன் தான் புறப்பட்டேன். கட்டுரை எழுதுதலில் துவங்கி, செய்தி வடிவமைப்பு, அதற்கான வழிமுறைகள், முகப்பு (lead) வரைமுறை உள்ளிட்டவைகளை இரண்டு நாட்கள் விளக்கமாக கற்றுக்கொடுத்தார்கள். இடையிடையே பயிற்சி வகுப்பின் நோக்கமான காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை தெளிய வைத்தார்கள். மெரினா கடற்கரை உருவான கதை முதல் அவர்கள் கூறிய எடுத்துக்காட்டு விளக்கங்கள் வாய்பிளக்க வைத்தது என்னை!

பள்ளி, கல்லூரி மாணவி மாணவர்களுக்கு ஒரு கட்டுரைப் போட்டியாகவோ, பேச்சுப் போட்டியாகவோ நடத்தியிருக்கலாம். ஆனால் பத்திரிகைதுறையில் சுய விருப்ப நிருபர்களாக இருப்பவர்களுக்கு பயிற்சியளிக்க காரணம் என்ன?

காலநிலை மாற்றம் என்பது தற்போதுள்ள தலைபோகும் ஆபத்து. இதை அனைவருக்கும் உணர வைக்க ஊடகம் தேவை. அதில் தான் பிரச்சனை…
‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ உண்டு ஆனால் காலநிலை மாற்றத்துக்கும் எங்களுக்கும் ஏது சம்மந்தம். இதனால் வாசிப்பாளர்களும், பார்வையாளர்களுமா அதிகரிக்கப் போகிறார்கள்? இது இன்றைய ஊடகங்களின் நியாயமான கேள்வி !!
சரி, பணிபுரியும் பத்திரிகையாளர்கள் என்றால், அவர்களுக்கு பணி செய்யவே 25 மணி நேரம் போதுவதில்லையே. கவர் மாற்றிக்கொள்ளலாம், பிறகு இந்த காலநிலை மாற்றம் பற்றி பேசலாமே என்று கூட சொல்லலாம்…

ஆனால் இது முழுக்க முழுக்க சுயவிருப்ப நிருபர்களை வரவழைத்து இரண்டு நாட்கள் தங்குமிடம், உணவு வழங்கி, தேர்ந்த அனுபவமிக்க பத்திரிகையாளர்கள் முன் யோசனையுடன் பயிற்சி கொடுத்து, ஊக்குவித்து நீங்களும் இதுகுறித்து உங்கள் சொந்த மொழியில் உங்கள் சொந்த ஊர் மக்களுக்கு தெளிவுறும் வகையில் எழுத வேண்டும் என நிதியுதவி அளித்து அனுப்பி வைத்தார்கள்…

எனக்கு தெரிந்ததை நான் கூற கடமைப்பட்டுள்ளேன் என்ற கடமை உணர்வுடன் திரும்பி வந்துள்ளேன்.இதை மேலும் தொடர உங்களது மேலான கருத்துக்களையும், தகவல்களையும் வேண்டுகிறேன்றிப்பாக நாம் கைகளில் தவழும் மின்னணு சாதனக் கழிவுகளின் தாக்கம் நான் சார்ந்த கோவையில் எப்படி காலநிலையை கட்டுப்படுத்தியுள்ளது என்ற நோக்கில் தகவல்களை சேகரித்து வருகிறேன்.

Related Posts