பிற

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: அரசின் அறிக்கை மீது சில கேள்விகள் !

செம்பரம்பாக்கம் அணை திறப்பு தொடர்பான அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆமாம், நாங்கள் எல்லாமே சரியாகத்தான் செய்திருக்கிறோம். இதோ எழுதிவைத்த வழிகாட்டுதல்படிதான் செய்திருக்கிறோம். இவ்வளவுதான் முடியும் என்றுதான் அந்த அறிக்கையை புரிந்துகொள்ள முடிகிறது.
 
1) முதலில் இந்த அரசு யாருடைய அரசு? தலைமைச் செயலாளர் ஏன் அறிக்கை விடுகிறார்? இதுவரையிலும் இப்படித்தான் எல்லாம் நடந்துவந்ததா?
 
2) எல்லாம் இழந்து நிர்க்கதியாய் கையேந்தித் திரியும் எங்கள் மக்கள் மேல் நிகழ்த்தப்பட்டுள்ள பேரிடரின், பேரிழப்பின்  வலியை அரசு உணர்கிறதா? அல்லது ஆவணங்களின்படி எங்கள் மேல் குற்றமில்லை என்று தப்புகிறதா?
 
3) அடையாறு ஆற்றின் மொத்த நீர்வரத்துப் பகுதியான 808 சதுர கி.மீட்டரில் 198 ஏரிகள் உள்ளதும், அனைத்தும் நிரம்பிவிட்டது, எல்லாத் தண்ணீரும் சேர்ந்து இது பெருவெள்ளமாகிவிட்டதென்றால் – ஏரிகள் நிறம்பிய கணக்கு யாருக்குத் தெரியும்? தெரிந்த அரசு ஏன் கமுக்கமாய் இருந்தது? இல்லை எல்லாம் காலக் கச்சிதமாய் கணக்கிட்டுத்தான் நடந்ததா?
 
4) நவம்பர் 8 ஆம் தேதியிலிருந்தே சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் மழையும், வெள்ளமும் ஏற்பட்டுக் கொண்டிருந்தபோது – எல்லாம் திடீரென 30 ஆம் தேதி இரவில் நடந்துவிட்டதாக நம்பவேண்டுமா? அதற்கு நாங்கள் ஒன்றும் ஜெயா தொலைக்காட்சிக்குள் வாழ்க்கை நடத்தவில்லையே?
 
5) நவம்பர் 30 ஆம் தேதி வெளியான பத்திரிக்கைகளின் தலைப்புச் செய்திகள் அனைத்துமே சென்னையில் பரவலாக மழை விட்டுவிட்டு பெய்யும் என்றும், கனமழை இருக்கும் என்றும் சொல்லியுள்ளது. அது 29 ஆம்தேதியே வெளியான அறிக்கை. அரசுக்கு இது தெரியாமல் இல்லை. அப்போதே மழை பெய்துகொண்டுதான் இருந்தது.  பொதுமக்கள் எல்லோருமே பதட்டத்தோடுதான் செய்தியை கவனித்துக் கொண்டிருதோம். அரசுக்கு அந்தப் பதட்டம் உருவாகாதது ஏன் என்பதை உங்கள் அறிக்கை விளக்கிவிடுமா?
 
6) பத்திரிக்கைகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ள தலைமைச் செயலர், இஸ்ரோ விஞ்ஞானி சிவன் தெரிவித்த கருத்துகளை பதில் சொல்ல தகுதியில்லை என்று ஒதுக்கிவிட்டாரா?
 
7) மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி வெளியிட்ட அறிக்கையில் 5 ஆயிரம் கன அடி திறக்கப்படும், 7 ஆயிரத்து 500 கன அடிவரை உயரலாம் என்ற தகவல் உள்ளது. இரண்டாவது அறிக்கை 2 மணி நேர இடைவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை வருவதற்குள் வெள்ளம் வந்துவிட்டது. மாவட்ட ஆட்சியருக்கே பொதுப்பணித்துறை முடிவுகள் ‘இன்ஸ்டால்மெண்ட்டில்’ தான் தெரிவிக்கப்பட்டதா? அப்படியெனில் ஒருங்கிணைப்பு இருந்ததாகச் சொல்வது அப்பட்டமான பொய் அல்லவா?
 
8) “பொதுப்பணித்துறையினரிடம் இருந்து தகவல் கிடைத்தவுடன், காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, அடையாறு ஆற்றோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி தெரிவித்துள்ளார்.” – அவர் சொல்கிறார். ஆனால், அதுதான் நடந்ததா?
ஏற்கனவே, நவம்பர் முதல் வாரத்தில் மழை வெள்ளத்தைப் பார்த்ததால், மக்களாக சுதாரித்துக் கொண்டனர் என்பதுதானே உண்மை. (அப்போதும் முதலமைச்சர் ஆர்.கே நகர் தொகுதிக்கு வாகனத்தில் சென்று ‘வாக்காளப் பெருமக்களே’ என வாய் மலர்ந்ததை மறக்க முடியுமா?)
 
9) டிசம்பர் 1–ந்தேதி காலையில் “முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கனமழை குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டார். நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு மூத்த அமைச்சர்களுக்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.” மீட்பு நடவடிக்கைகளுக்கு மத்தியப் படைகள் எப்போது வந்தன? அவர்களுக்கு ஒத்துழைப்பு எப்போது வழங்கப்பட்டது? இவையெல்லாம், இங்கேயே வாழ்ந்து சாகிற மக்களுக்கு உங்கள் அறிக்கைதான் தெரிவிக்குமா என்ன?
 
10) பேரிடர் மேலாண்மை பற்றி நாம் சுனாமி காலம்தொட்டே விவாதித்துவருகிறோம். இருப்பினும் செயலுக்குக் கொண்டுவரத் தவறியது யார் குற்றம்? ‘எனது அரசு’ செய்த குற்றமா? இயற்கையின் குற்றமா?
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான பணியிலாவது அரசு அக்கறைகாட்டுமா? என்று கருதினால், உண்மையை மூடிமறைக்கும் முன்முனைப்பில் ஈடுபடுவது அபத்தத்திலும் அபத்தம்.
 
பண்டைய தமிழகத்தின் அறிவியல் பூர்வமான நீர்மேலாண்மை அமைப்புகள் சிதைக்கப்படுவது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், எல்லாவற்றையும் லாபக்காடாக்கி, மனித மாண்புகளை மறந்து செயல்பட்ட ஆட்சியாளர்கள் – தங்கள் அறிக்கையின் மூலம் பொய்மைக்கு வடிவம் கொடுக்கலாம். ஆனால், குப்பை மேடாகவும், குட்டிச்சுவறாகவும் மாறிப்போன வீடுகளின் எச்சத்தில் தங்கள் வாழ்க்கையைத் தேடும் மக்களின் கண்ணீர், உங்களை வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து மூழ்கடிக்காமல் நில்லாது.

Related Posts