அரசியல்

ரோஸா லக்ஸம்பர்க் நினைவு நூற்றாண்டு: ரோஸா லக்ஸம்பர்க்கின் மரணம்…

ரோஸா லக்ஸம்பர்க் இங்கே புதைக்கப்பட்டிருக்கிறாள்.

போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள்.

ஜெர்மானிய ஒடுக்குமுறையாளர்களின் கட்டளையின்படி படுகொலை செய்யப்பட்ட-

ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடிய-

வீரப்பெண்மணி இவள்

ஒடுக்கப்பட்டவர்களே-

உங்களது மாறுபாடுகளைக் குழி தோண்டிப் புதையுங்கள்.

பெர்ட்டோல்ட் பிரெக்ட்

*

தலைக்குள் கொஞ்சமாக உஷ்ணம் ஏறுவதை உணரக் கூடியதாக இருந்தது.  மனம் சஞ்சலம் கொண்டது. லேசாகப் பதட்டமாக இருந்தது. மார்கரெட் வான் ட்ரோட்டாவின் ‘ரோஸா’ திரைப்படத்தில் ரோஸா லக்ஸம்பர்க்கின் உடல் வீசப்படும் இரும்பிலான குறுக்குப் பாலம் மேலே தெரிந்தது.  கால்வாயில் வீசப்பட்ட அன்று, அவ்வேளை விரிந்தது போல் நீர்ச்சுருள் இப்போது விரியவில்லை.

நான் குடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை அணைத்து வீசிவிட்டு, புனித இடமொன்றில்; நுழைகிற தலைக்கிறக்கத்துடன்; ரோஸாவின் நினைவுச் சின்னத்தை அண்மித்தேன்.  எதிர்ச்சுவற்றில் ரோஸா மற்றும் லீப்னெக்ட் என இருவரதும் மரணம் குறித்த குறிப்புக்கள் பதியப்பட்டிருந்தது.  ரோஸா லக்ஸம்பரக் என்று நீளவாக்கிலான, லான்ட்வாயர் கால்வாயில் ரோஸாவின் உடல் சரிகிறதான நிலையில் நீரைத் தொட்டுக் கொண்டு, கீழே சாய்ந்த பலகை போன்ற எளிமையான நினைவுச் சின்னம் கால்வாயின் கரையைத் தழுவி நின்றிருக்கிறது.

கால்வாய் நீர்  ரோஸாவின் உடல் வீசப்பட்டு சில நொடிகளில் அமைதியான அன்றைய அந்தகார இரவு போலவே இன்றும் மரணத்தின் சலனம் காட்டாமல், சாட்சியங்களை மறைத்துக் கொண்ட பாவனையில் ஓடிக் கொண்டிருக்கிறது.   ரோஸா லக்ஸம்பர்க் கால்வாயில் வீசியெறியப்படும் முன்னரே சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஏன் பிணத்தைக் லான்ட்வாயர் கால்வாயில் வீசியெறிந்தார்கள்?

அக்காலகட்டத்தில் ஓரளவு வசதியான மேல்வர்க்க ஜெர்மன் குடும்பங்கள் அனைத்திலும் கிராமப்புறங்களில் இருந்து வந்த வறிய ஏழைப் பெண்கள் வேலைக்காரிகளாக அமர்த்தப்படுவது வழக்கமாக இருந்தது.  அவர்கள் வீட்டு எஜமானர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதும், அவர்கள் கர்ப்பமடைகிறபோது கொல்லப்பட்டு, தாம் புரிந்த அவச்செயலால்   அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் எனும் பெயரால், அப்பெண்களது உடல்கள் கால்வாய்களிலும் குளங்களிலும் மிதப்பதும் வழக்கமாக இருந்து வந்தது. இவ்வகையிலான தகாத பாலியல் உறவு – கர்ப்பம் – போன்ற அவநடவடிக்கையால் தற்கொலை செய்து கொண்ட ஒரு சாதாரணப் பெண்ணாக ரோஸாவையும் சித்தரிக்கத்தான்; அவர் கொல்லப்பட்டு கால்வாயில் வீசப்பட்டார்.

மார்கரெட் வான் ட்ரோட்டாவின் ‘ரோஸா’ திரைப்படத்தில் கூட ரோஸா ஈடன் ஹோட்டலுக்கு தளர்ந்த நிலையில் கைது செய்து அழைத்து வரப்படும் போது அவளை ஈன நோக்கத்துடன் நெருங்கிய கனவான்களின் கும்பல்  “இதோ ரத்தவெறி பிடித்த ரோஸா – பழைய தேவடியாள் வந்திருக்கிறாள் “ என்றுதான் வசை  பொழிந்தது.

உலகின் மகத்தான கலைஞர்களையும் புரட்சியாளர்களையும் இன்றளவிலும் ஆகர்ஷித்துக் கொண்டிருக்கும் மாபெரும் பெண் ஆளுமை ரோஸா லக்ஸம்பர்க். ரோஸாவின் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு என்ன ஆனது என்கிற மர்மம், பல பத்து ஆண்டுகளாக ஒரு மாயப்புதிர் போல உலகப் புரட்சியாளர்களது மனங்களை ஆட்கொண்டிருந்தது. ரோஸாவின் மரணமும், அவரது மரணத்தின் பின் அவரது உடலுக்கு நேர்ந்த குரூரமான சித்திரவதைகள்; குறித்த மர்மங்களும்; இன்றளவிலும் தீரக்கப்பட முடியாத கேள்விகளாகவே இருக்கிறது. 

ரோஸா லக்ஸம்பரக் நேற்றுத்தான் மரணமுற்றது போலிருக்கிறது. மார்கரட் வான் டிரோட்டாவின் ‘ரோஸா’ எனும் திரைப்படத்தில் அவர் கொல்லப்படும் இறுதிக் காட்சி இன்னும் மனதில் நிழலாடுகிறது.

அறைக்குள் ரோஸா அமர்ந்திருக்கிறார். லீப்னெக்ட் வருகிறார். வந்ததும் ரோஸாவின் கைகளை எடுத்துத் தனது கையில் ஏந்திக்கொள்ளும் லீப்னெக்ட் சொல்கிறார்:

நாம் தோற்கடிக்கப்படவில்லை. நாம் இங்கிருக்கப் பிறந்தவர்கள். நாம் வெல்வோம்’

ரோஸா : ‘நாம் வெற்றியைக் காண உயிரோடிருந்தால் சரி கார்ல்’

லீப்னெக்ட் : ‘நாளைக்கான கட்டுரை இதோ. வரலாற்றின் உயரும் சமுத்திரங்களின் மீது நாம் தொடர்ந்து படகு வலிப்பவர்கள். பெருமிதத்துடன் உறுதியாக எமது இலக்கு நோக்கி நாம நகர்வோம். எமது சேருமிடத்தைப் பார்க்க நாம் உயிருடனிருக்கிறோமா இலலையோ, எமது திட்டம் உயிர் வாழும். எல்லாவற்றையும் மீறி மனசாட்சியுள்ள மனிதனின் உலகை அது ஆளும்’

தொடர்ந்து ரோஸா சொல்கிறாள் : ‘எனது இறுதியான சில வார்த்தைகளைப் படியுங்கள் கார்ல்’

ஜெர்மனியில் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுவிட்டது என்கிறீர்கள். கொடுங்கோலர்களே, உங்கள் ஒழுங்கு மணலில் கண்டெடுக்கப்பட்ட ஒழுங்கு. நாளை புரட்சி மறுபடியும் தலையை உயர்த்தும். உம்மை அவமானத்தில் அழுந்தும்படி அது சொல்லும் : நான் இருந்தேன், நான் இருக்கிறேன், நான் இருப்பேன்’

ரோஸா லீப்னெக்டைப் பாரத்துச் சொல்கிறாள் : ‘கார்ல் ஏதேனும் வாசியேன். நீண்ட நாட்கள் இசை இல்லாமலேயே நான் வாழந்துவிட்டேன்’

கார்ல் பியானோவின் முன்னிருந்து  வாசிக்கத் துவங்குகிறார். கார்ல் ரோஸாவிடம் கேட்கிறார் : ‘சாப்பிட ஏதேனும் இருக்கிறதா?’

அப்போது லியோ ஜோகித்ஸே  அறைக்குள் நுழைகிறார்.

யாரோ நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். இங்கிருந்து கிளம்புங்கள். பிரமனுக்கு அல்லது பிராங்க்பர்ட்டுக்கு. ரோஸா, எங்கே போக விரும்புகிறாய். நீ

ரோஸா பதிலிருக்கிறாள்: ‘நிக்கோலின். பத்திரிக்கை தொடர்ந்து வரவேண்டும். எம் தோழர்களுக்கு நாம் காட்டவேண்டும். நம்மை எவரும் அமைதிப்படுத்திவிட முடியாது’

பரஸ்பரம் முத்தமிட்டு ரோஸாவும் லியோவும் தழுவி விடைபெறுகிறார்கள். லீப்னெக்டும் விடைபெறுகிறார். இருளில் ரோஸா திரும்பித் திரும்பிப் பார்த்தபடி போக, லியோ திரையை நோக்கி, ரோஸாவை நோக்கி,  இருளில் முன் வருகிறார்.

அடுத்த காட்சியில், வேகமாகக் கதவைத் திற்நதுகொண்டு ஜெர்மானிய ராணுவத்தினரால் பெர்லின் ஈடன் ஹோட்டலுக்குள் ரோஸாவும் லீப்னெக்ட்டும் இழுத்து வரப்படுகிறார்கள். லீப்னெக்ட் முன்னால் இழுத்துவரப்பட, தொடர்ந்து ரோஸாவும் ராணுவத்தினால் இழுத்து வரப்படுகிறார். கும்பலாக நிற்கும் ராணுவத்தினர் கெக்கலியிடுகிறார்கள்.

இதோ அவள் சிவப்பு ரோஸி. பழைய  தேவடியாள்’-

தளர்ந்த ரோஸா. கூட்டத்தில் இழுத்துத் தள்ளப்படும் ரோஸா. விந்தி விந்தி நடக்கும் ரோஸா. ராணுவப் பேடிகளால் இழுத்துச் செல்லப்படும் ரோஸா. லீப்னெக்ட்டும் ரோஸாவும் தனித்தனி அறைகளுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அரை நிமிஷம். மெல்ல மெல்ல நொண்டி நொண்டி அமரச் செல்லும் ரோஸாவின் பின்புறம் ராணுவ அதிகாரி வருகிறான்.

நீதான் ரோஸா லக்ஸம்பர்க்கா?’

அலட்சியமாக முகம் திருப்புகிறாள்  ரோஸா.

நீயாகத்தானிருக்க வேண்டும்’.

ரோஸா : ‘நீ சொன்னால் சரி’

ராணுவத்தினன் : ‘இனி நீ  சொல்வதற்கு ஏதுமில்லை’

ரோஸா: ‘எதனடிப்படையில்?’

ராணுவத்தினன் : ‘உன் திமிரைக் காண்பிக்காதே. நாங்கள் அதிகாரத்திலிருக்கிறோம். நீயும், நாசகாரன்களான உனது தோழர்களுமல்ல’

ரோஸா: ‘வரலாறு வேறு மாதிரி உனக்குக் காண்பிக்கும். எந்தச் சிறைக்கு நீ என்னைக் கொண்டு செல்லப் போகிறாய்?’

ராணுவத்தினன் : ‘அப்படியேதான’;

லீப்னெக்ட் பிறிதொரு அறையிலிருந்து நெட்டித் தள்ளப்படுகிறார். இரண்டு ராணுவத்தினர் இருபுறமுமிருந்து அவரை இழுத்து வருகின்றனர். கண்ணாடிக் கதவு. வெளித் தள்ளப்படும் லீப்னெக்டின் பின்மண்டையில் துப்பாக்கியின் பின் கட்டையால் அடிக்கிறார்கள். கீழே மண்டை நசுங்கி விழும் லீப்னெக்ட் இன்னும் இரண்டு இராணுவத்தினரால் தரதரவெனத் கற்கள் பாவிய தரையில் இழுத்துச் செல்லப்படுகிறார். இவை எதனையும் அறியாத நிலையில் வேறொரு அறையில் ரோஸா அமர்;ந்திருக்கிறார்.

அருகிலிருக்கும் ராணுவ வீரனை ரோஸா கேட்கிறாள் : ‘உன் பெயரென்ன? உனக்குச் சகோதர சகோதரிகள் உண்டா? நான் பேசுவது உனக்குக் கேட்கிறதா?’

அப்போது ராணுவ அதிகாரியொருவன் வந்து, ரோஸாவின் மேலங்கியை அவருக்கு அணிவித்து, அறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்கிறான். சிவப்புக் கம்பளத்தில் மேலிருந்து செங்குத்தாக இறங்கும் படிக்கட்டுகள். ரோஸா படிகளில் இழுத்து வரப்படுகிறாள். ஓரு நிமிடம் முழுக்க சோகமயமான இசையின் பின்னணியில், துயரம் தோய்ந்த, ரோஸாவின் விந்தி விந்தி நடக்கும், தோள்பட்டை மேலேறி கீழிறங்க நடக்கும் ரோஸாவின் முழு முகமும் திரையில் அசைகிறது. பத்து தப்படிகள் வரையிலான ஜீவனுள்ள, நெஞ்சை உருக்கும் அசைவுகள் அவை.

ரோஸா லீப்னெக்ட் வெளியேற்றப்பட்ட அதே கண்ணாடிக் கதவுகள் வழியே வெளியே இழுத்து வரப்படுகிறாள். துப்பாக்கிப் பின்கட்டையால் ரோஸாவின் பின் மண்டையில் அடி விழுகிறது. மல்லாந்து தரையில் பரவுகிறது ரோஸாவின் சலனமற்ற உடல். உடல் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறது. அவரது செறுப்பும் கைப்பையும் சேகரிக்கப்பட்டுக் கொண்டு வாகனத்தினுள்; வீசப்படுகிறது. மழை பெய்த ஹோட்டல் வராந்தா வழி தரதரவென இழுத்தப் போகப்பட்டு அவரது உடல் ராணுவ வாகனத்தில் வீசப்படுகிறது. ஹோட்டலின் உள்ளிருந்து வரும் அதிகாரியொருவன் வாகனத்தில் தொற்றிக் கொள்கிறான்.

ரோஸா முணுமுணுக்கிறார் :  ‘சுடவேண்டாம்’

அவரது நெற்றியின் பக்கவாட்டில் அழுத்தப்பட்டு கைத்துப்பாக்கி வெடிக்கிறது. லான்ட்வாயர் கால்வாய்க்கு வந்ததும் வண்டி நிற்கிறது. நகரின் விளக்கு வெளிச்சத்தில் ஓடிக் கொண்டிருக்கும் அலைகளின் படிவுகள் அசைகிறது. ரோஸாவின் உடல் கால்வாயில் வீசப்படுகிறது. கால்வாயில் அலைகளின் மீது அலைகளாக வெளிச்சத்தைச் சுமந்து கொண்டு தண்ணீர் ஓடிக் கொண்டேயிருக்கிறது. நிற்காத ஜீவனுள்ள நீண்ட தடைப்படாத நீண்ட பயணம் அது. திரையில் ரோஸாவாக நடித்த பார்பரா சுகோவாவின் பெயர் நீரோட்டத்தினிடையில் மெல்ல எழுகிறது.

நூற்றி முப்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டது, இந்த அற்புதமான ஆளுமை கொண்ட பெண் பிறந்து. அதைப்போலவே அவர் பாசிஸ்ட்டுகளால் கொலை செய்யப்பட்ட அந்த அந்தகார இரவின் பின் நூறு ஆண்டுகள் ஓடி விட்டது.

1871 ஆம் ஆண்டு  கிழக்கு ஐரோப்பாவிலுள்ள போலந்து நாட்டில் ஸமோஸ்க் நகரில் மார்ச் 5 ஆம் நாள் யூதப் பெற்றோருக்குப் பிறந்தார் ரோஸா. ரோஸாவின் பெற்றோர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். மறுமலர்ச்சியுக மதிப்பீடுகளுடனும், கெதேவின் இலக்கியத்துடனும் வளர்ந்தவர் ரோஸா. 1873 இல் அவரது குடும்பம் வார்ஸாவுக்குக் குடி பெயர்ந்தது. அங்குதான் அவரை வாழ்நாள் முழுதும் அலைக்கழித்த இடுப்புவலி அவரைப் பீடித்தது. பள்ளிக் கூட நாட்களிலேயே ரோஸா அரசியலில் பிரவேசித்துவிட்டார்.

ரஷ்ய தீவிரவாதிகளினால் பாதிப்புக்குட்பட்ட நரோத்னிக் தழுவிய ‘போலீஷ் புரொலிடரியட்டில்’ செயல்பட்டார் ரோஸா. அக்கட்சி போலீசின் வேட்டகை;குட்பட்டபோது, 1887 இல் பள்ளி இறுதி முடித்ததும், ரோஸா சூரிச்சுக்குப் பறந்தார். அவ்வாண்டில்தான் அவர் மார்க்ஸ் எங்கெல்ஸைப் படிக்கத் துவங்கினார். இங்குதான் அவளது காதலனும் தோழனுமான லியோ ஜோகித்ஸேவை அவர் சந்தித்தார். தென்றலும் புயலும் மாறி மாறி வீசிய அவர்களது காதல் வாழ்வு, 1896-1907 ஆம் ஆண்டுகளில் சந்தோஷங்களுடனும் கொந்தளிப்புகளுடனும் கழிந்தது.

1907  ஜோகிசத்ஸேக்கு அவரது ரஷ்யத் தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு ரஷ்யத் தோழியுடனான உறவின் பின்  அவர்களுக்கிடையில் காதல் வாழ்வு முறிந்தது. ஆனால்,  அவர்களது முன்னைய நெருக்கமும் அரசியல் தோழமையும் ரோஸாவின் இறுதி நாட்கள் வரை அவர்களை இணைத்திருந்தது.

ரோஸா சூரிச் பல்கலைக்கழகத்தில் கணிதமும் இயற்கை விஞ்ஞானமும் பொருளாதாரமும் கற்றார். அவரது சிறை வாழ்வில் அதிகமும் அவர் இயற்கை விஞ்ஞானம் சம்பந்தமாகத்தான் படித்தார். அவரது மையப்பாடம் பொருளாதாரமாக இருந்தாலும், அவர் தனிமையில் தனது தோழமையாகத் தேர்ந்தது பறவைகள் பற்றிய புத்தகங்களும் தாவரங்கள் பற்றிய புத்தகங்களும் தான்.

அவரது மறைவுக்குப்பின் தொகுக்கப்பட்ட ரோஸாவினது கடிதங்கள் பெண்ணிலைவாத வட்டாரங்களில் அவரது வாழ்வு குறித்த அதீதமான தேடலைத் தூண்டிவிட்டது. தனிமனுஷியாக இயற்கை, தாவரங்கள், பிராணிகள், அவற்றின் ஜீவனுள்ள செயல்பாடு என்பன அவரது தனிமைத் துணைகளாக ஆகியிருந்தன. இந்த ஈடுபாடு அவரது பள்ளிக் கூட நாட்களிலிருந்தே தொடங்குகிறது. ஆனால், போராட்டம் மற்றும் புரட்சி என்பது, தன்னின் அழிவு, வன்முறை, சாவு, புறஉலகு போன்றவற்றோடு சதா தொடர்படையது. இந்த அகத் தனிமைக்கும் புறநடவடிக்கைக்குமான பதட்டம் ரோஸாவுக்குள் அவரது வாழ்நாளெல்லாம் தொடர்ந்து வந்தது.

அவர் இனம், மொழி போன்ற அடையாளங்களை ஒப்பாதது போலவே, பெண் எனும் தனி அடையாளத்தையும் ஒப்புக் கொண்டவரல்ல. இந்த அடையாள மையங்கள் அனைத்தும் முதலாளித்துவத் தன்மை கொண்டதென அவர் நினைத்தார். தனித்த பெண்களின் இயக்கம் என்பதில் அவர் அவ்வளவு ஈடுபாடு காட்டியவராக இல்லை. வர்க்க அடையாளத்துடனான  ஆண் பெண் காதல் போன்றதாகத்தான் அவரது வாழ்க்கைப் பார்வை அமைந்தது.

தனது காதலனும் தோழனுமான ஜோகித்ஸேவுடன் அவருக்கிருந்த உறவு உணர்ச்சிபூர்வமான கொந்தளிப்பான காதல் நிறைந்த உறவாகும். அவர் ஜோகித்ஸேவை மணந்து கொள்ள விரும்பினார். நிறையக் காதல் கடிதங்கள் எழுதி, இதற்காக அவர் ஜோகித்ஸேவை மன்றாடினார். குழந்தை பெற்றுக் கொள்ளவும் அவர் விரும்பினார்.  ஜோகித்ஸே புரட்சிகர நடவடிக்கையும் குடும்ப வாழ்வும், குழந்தைபெறலும் இணைந்து போகவே முடியாது என்றார்.

ஜோகித்ஸேவின் இன்னொரு பெண் உறவின் பின், ரோஸா தன்னைவிடவும் மிக இளவயதினனான கோயட்ஷேயுடன் உறவு கொண்டிருந்தார். கோயிட்ஷே ரோஸாவின் தோழி கிளாரா ஜெத்கினின் மகன். இந்த உறவு கிளாரா ஜெத்கினுக்குத் தெரியவந்தபோது ரோஷாவுக்கும் அவருக்கும் இடையில் பகைமை மூண்டது. ‘கிளாரா ஒரு போலி’ என விமர்சித்தார் ரோஸா. கிளாராவுக்கு விருப்பமில்லாததினாலேயே அவர்கள் உறவு தொடர்ந்தும் இருக்கவில்லை.

பின்பாக ஹான்ஸ் திபன்பாக்குடன் ரோஸா கொண்டிருந்த உறவு உணரச்சிவசமானதல்லாததாகியது. அறிவுபூர்வமான, நிதானமான, அரசியல் தவிர்ந்த உறவாக அது இருந்தது. ஆயினும் கோயிட்ஷே போரில் இறந்த வேளையில் கிளாராவும் ரோஷாவும் சேர்ந்தே துக்கம் கொள்கிறார்கள்.

ரோஸாவின் அரசியல் உலகும் கோட்பாட்டுலகும் விரிந்ததாயினும், அவரது அக உலகம் தனிமையால் நிறைந்தது. தேர்ந்தெடுத்த நண்பர்களையே அவர் கொண்டிருந்தார். அவரது நட்புக்கும், அவரோடான அரசியல் ரீதியிலான பிறரின் உடன்பாட்டுக்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லை. அரசியல் எதிரிகளிடம் அவர் நட்பு வைத்திருக்கிறார். தீவிரமாக அரசியல் உடன்பாடு கொண்டவர்களை தனிப்பட்ட உளவியல் காரணங்களினால் அவர் வெறுத்தும் வந்திருக்கிறார்.

அரசியல் எதிரியான காவுட்ஸ்க்கியோடு அவர் நட்பு பாராட்டினார். அரசியல் உடன்பயணியான த்ரோஸ்த்க்கியுடன் அவர் விரோதம் பாராட்டினர். தனிநபர் எனும் அளவில், மிகுந்த பிடிவாதம் கொண்டவர் அவர். சாதாரணமாக ஆட்ளை நிராகரிக்கத் தயங்காதவர். அவர் பூனையிடமும் பறவையிடமும் அன்பு பாராட்டியவர்.

அவரது நண்பர்கள் விரல்விட்டு எண்ணத்தக்கவர்கள். அவர் மிக நெருக்கமாக கடிதத் தொடர்பு கொண்டவர்கள் சாஞ்ச்சா லீப்னெக்ட, லூயிஷா காவுட்ஸ்க்கி, ஜோகித்ஸே போன்றவர்களாவர். அவருடயை கடிதங்களில் அவர் தனது கோட்பாடுகள் பற்றி விவாதிப்பதி;ல்லை. அவர் தன்னைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்பான தனி உலகத்தையே வேண்டினார். அவர் நண்பர்களையும் சரி, எதிரிகளையும் சரி எடுத்த எடுப்பில் தீர்மானித்துவிடுவார். அவரைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருப்பவர்கள் சொல்கிறபடி, ‘அவர் நிரம்பவும் சிக்கனமானவராகவும், சீக்கிரம் கோபப்படக் கூடியவராகவும் இருந்தார்’.

அவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய சிநேகிதிகள், ரோஸாவை அரசியலை அடிப்படை வாழ்வாகக் கொள்ளாத குடும்ப வாழ்வுக்கு ஏங்;கிய பெண்ணாக, கடுமையான அரசியல் கொண்ட அரசியல்ஜீவி அல்ல அவர் என்கிற மாதிரி சித்தரித்தார்கள். ஆனால், அவரது உறவுகள் அனைத்தும் அரசியலின் வழியில் அவர் கண்டடைந்தவைதான். இன்னும் அவரது படிப்பு, இயல்பான ஈடுபாடுகள்,  ஆய்வுகள், அவரின் சர்வதேசியம், அவரது இயற்கை நேசிப்பு போன்றவற்றுக்கிடையில், அரசியல் பெண்-அரசியல் அல்லாத குடும்பப் பெண் என்று கூறு போடமுடியாது என்கிறார் அவரது வரலாற்றை எழுதிய நெட்டல்.

ரோஸா எனும் பெண்ணின் காதல், அவரது கோபம், அவரை இறுதியில் சந்தித்த மரணம் என்பது வரை அரசியலை அவரது வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் பிரிக்கவே முடியாது.

1882 ஆம் ஆண்டு தோன்றிய போலந்து புராலிடேரியன் கட்சியின் உறுப்பினர் அவர். போலந்து, ரஷ்யா, ஜெர்மனி போன்ற நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் நேரடியாகப் பங்கு பற்றியவர் அவர். கார்ல் மார்க்சிலிருந்து தொடங்கும் யூத இனத்தின் இடதுசாரி மரபில் வந்தவர் அவர். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மேதைகள், புரட்சியாளர்கள் அனைவருடனும் சமதையாக நின்று விவாதித்த புரட்சிகரப் பெண்மணி அவர். முதலாம் உலகப் போரில் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் யுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தபோது தொழிலாளி வர்க்கத்தையும ராணுவத்தையும், ‘போருக்கு எதிராக நில்லுங்கள், யுத்தத்தை சோசலிசத்துக்கான உள் நாட்டு யுத்தமாக மாற்றுங்கள்’ என்றார்கள் ரோஸாவும் லீப்னெக்ட்டும்.

தனிமையிலிருக்கும் ரஷ்யப் புரட்சி பற்றி மிகுந்த அக்கறை கொண்டார் ரோஸா. ‘அந்தப் புரட்சி காபபாற்றப்பட வேண்டுமானால், சர்வதேசியத் தொழிலாளர்கள் அப்புரட்சியைக் காப்பாற்றி வேண்டும். அதற்கு உதவ வேண்டும். அதன் பொருட்டு உலகின் பல்வேரு இடங்களில் தோழமை பூர்வமான புரட்சிகள் தோன்ற வேண்டும்’ என அவர் நினைத்தார். முதலாம் உலகப் போரைக் கண்முன் நின்று பார்த்தவர் ரோஸா. போருக்கு எதிராக நின்றவர். முதலாம் உலகப் போரின் இறுதியில் ஆட்சிக்கு வந்த சமூக ஜனநாயகவாதிகள் ரோஸாiயும் லீப்னெக்ட்டையும் உறுதியாகக் கொலை செய்வதென்று திட்டம் தீட்டினார்கள். அவர்கள் இருவரையும் தீரத்துக்கட்டும் சம்பவங்கள் மிக விரைவாகவே நடந்தேறியது.

ரோஸா லக்ஸம்பர்க் மற்றும் கார்ல் லீப்னெக்ட் போன்றவர்கள் படுகொலை செய்யப்பட்ட எண்பது ஆண்டுகளின் பின்பு, பழைய சோவியத் யூூனியனது பல்வேறு ஆவணங்கள் அதிகமும் வெளியுலகத்தை எட்டிய பின்பு, 1945 ஆம் ஆண்டு செஞ்சேனை பெர்லினைக் கைப்பற்றிய  காலகட்டத்தில் நிகழ்ந்த, ரோஸாவின் கொலையாளி ஒருவனிடமிருந்தான செஞ்சேனை அதிகாரிகளின் விசாரணையறிக்கை, 1995 ஆம் ஆண்டில் ரஸ்யமொழி இதழான ‘வெஸ்ட்னிக்’கில் வெளியாகியிருக்கிறது.

இந்த அறிக்கையின்படி, ரோஸா லக்ஸம்பரக் மற்றும் கார்ல் லீப்னெக்ட் என இருவரையும் கொல்வதற்கான திட்டம், 1917 ஆம் ஆண்டு டிசம்பர் 30 தொடக்கம் 1918 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முடிய மூன்று நாட்கள் நடந்த ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டின் பின்னரே, சமூக ஜனநாயகவாதிகளால் தீட்டப்பட்டது. 1919 ஜனவரி 13 ஆம் திகதி சமூக ஜனநாயகவாதிகளின் தலைமையகத்தில் இவர்கள் இருவரையும் கொல்வதற்கான திட்டம் தீ;ட்டப்பட்டது. வலதுசாரி சோசலிஸ்ட் தலைவரான பிரெடரிக் எபர்ட்டும், அவரோடு சேர்ந்து ஜெனரல் குரோனரும் இந்தத் திட்டத்தை வகுக்கிறார்கள். அவர்களது பாராளுமன்ற உளவுத்துறை அலுவலகம் ரோஸா லக்ஸம்பரக் மற்றும் லீப்னெக்ட்டின் தலைகளைக் கொணருபவர்களுக்கென  இலட்சம் மார்க்குகளை பரிசுத் தொகையாக அறிவித்தது.

1919 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி, கொலை நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாக, சமூக ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வப் பத்திரிக்கையில், ரோஸாவையும், லீப்னெக்ட்டையும் கொலை செய்யும்படி ஒரு ‘கவிதை’ அறைகூவல் பிரசுரிக்கப்பட்டது.

பன்னூறு சடலங்கள் அடுக்கடுக்காய்க் கிடக்கிறது.

‘பாட்டாளிகளே,அந்தச் சடலங்களில் கார்ல், ரோடக், ரோஸா கும்பலின் சடலங்கள் இல்லை.

இவர்களின் ஒரு சடலம் கூட அங்கு இல்லை.

இவர்களின் ஒரு சடலம் கூட அங்கு இல்லை, பாட்டாளிகளே’.

அடுத்த நாள் வந்த அவர்களது பத்திரிக்கையில், லீப்னெக்ட் உயிருடன் இருக்கும் போதே, லீப்னெக்ட்டின் வெட்டுண்ட தலையின் பகுதி இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி இருக்குமாறான ஒரு சித்திரம் பிரசுரிக்கப்பட்டது.

அடுத்த நாள், ஜனவரி 15 ஆம் திகதி, ரோஸாவும் லீப்னெக்ட்டும், பெர்லின் ஈடன் ஹோட்டலில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்கள்.

ருடோல்ப் வில்ஹெம்; எனும் பெயரிலான ஆவணத்துடன் வாழ்ந்து வந்த ஓட்டோ ரஞ்ஜ், 1875 ஆம் ஆண்டு பிறந்தவன். விவசாய வர்க்கத்தைச் சேர்ந்த அவன் ஜெர்மானிய பிரஜை. எட்டாம் வகுப்பு வரை படித்தவன். 1941 ஆம் ஆண்டிலிருந்து அவனுக்கு அரசு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வந்திருக்கிறது. 1919 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி, அப்போதைய ஜெர்மானிய ராணுவத்தின் பெர்லின் ராணுவப் பாசறையின் தலைமையகமாக இயங்கிவந்த ஈடன் ஹோட்டலில் பணிபுரிவதற்கென 15 ராணுவத்தினருடன் ஓட்டோ ரஞ்ஜ் அனுப்பி வைக்கப்படுகிறான்.

1919 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் திகதி, கேப்டன் பேப்ஸ்ட் என்பவன், பெர்லின் நேரம் மாலை 6.00 மணியிலிருந்து, இரவு 8.00 மணிவரை ராஞ்ஜ்சும், அவனோடு ட்ரேகர் எனும் ராணுவத்தினனும் ஈடன் ஹோட்டலின் வாயிற் கதவருகில் காவலுக்கு நிற்;கவேண்டும் எனும் கட்டளையைப் பிறப்பிக்கிறான். பிற்பாடாக, ஜெனரல் ஹாப்மென், காலவரையறையற்ற வகையில் ஈடன் ஹோட்டலின் நுழைவாயிலில் அவர்கள் காவலுக்கு நிற்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறான்.

இரவு 08.45 மணிக்கு ஹோட்டலின் பிரதான நுழைவாயிலில் வந்து நிற்கும் வாகனத்திலிருந்து நான்கு ராணுவத்தினர் சூழ ரோஜா லக்ஸம்பர்க்கை ராணுவத் தலைமையகத்திற்குள் அழைத்துச் செல்கின்றனர். அதிலிருந்து 10 நிமிடம் கழித்து, இரண்டாவது வாகனத்தில் மூன்று ராணுவத்தினர் லீப்னெக்டைக் கொண்டு வருகிறார்கள். அவரும் ராணுவத் தலையைத்திற்குள் அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்குள்ளாகவே ரோஸாவும் லீப்னெக்ட்டும் கைது செய்யப்பட்டதனையறிந்த பெர்லின் வெகுமக்கள் ஈடன் ஹோட்டலின் நுழைவாயிலில் குழுமத் தொடங்கிவிட்டார்கள்.

இச்சமயத்தில், கேப்டன் ப்ளுக்-ஹார்ட்டங் ரஞ்ஜ்சை அணுகி, ரோஸா லக்ஸம்பர்க்கும், லீப்னெக்ட்டும் ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது, அவர்கள் இருவரையும் சுட்டுக் கொல்லும்படி கட்டளையிடுகிறான். நிறைய வெகுமக்கள் ஹோட்டலின் முன் கூடியிருக்கும் வேளையில் தான் சுடும்போது தவறிவிடலாம் என்றும், அதனால் வேறு எவராயினும் குறிதவறி காயப்பட்டுவிடலாம் என்பதால், தன்னால் சுடமுடியாது என ரஞ்ஜ் மறுக்கிறான். இதயைடுத்து ப்ளுக்-ஹார்ட்டங் ஹோட்டலின் உள் செல்ல, சிறிதுநேரத்தில் அங்கு வரும் கேப்டன் பெப்ஸ்ட், ரோஸா லக்ஸம்பர்கையும் லீபனெக்டையும் ரஞ்ஜ் தனது துப்பாக்கியின் பின்கட்டையால் அடித்து அவர்களைக் கொல்லும்படி சொல்கிறான்.

பெப்ஸ்ட் அங்கிருந்து அகன்ற சிறதுநேரத்தில் அங்கு வரும் லெப்டினன்ட் கனாரிஸ், ரஞ்ஜ் அவர்களைச் சுடவில்லையானால், ரஞ்ஜ் சுட்டுக் கொல்லப்படுவான் என எச்சரிக்கிறான். நுழைவாயிலில் ரஞ்ஜ்சும் டிரேக்கரும் தனித்து விடப்பட்ட நிலையில், ரஞ்ஜ் கொல்லவில்லையானால் தனது துப்பாக்கியினால் அடித்து தானே ரோஸாவையும் லீப்னெக்ட்டையும் கொல்லப்போவதாக டிரேகர் சொல்கிறான். ‘இல்லையில்லை கட்டளை தரப்பட்டுவிட்டது, நானே கொல்வேன்’ என்கிறான் ரஞ்ஜ்.

சில நிமிடங்களில் பெயர் தெரியாத அந்த ஹோட்டலின் இயக்குனர் வெளியே  வருகிறான். அவனுக்கு நடுவில் ரோஸாவும், இடப்புறம் லெப்டினென்ட்; வோகலும் இருக்கிறார்கள். முழுத் தயாரிப்பில் இருந்த ரஞ்ஜ், ரோஸாவின் முகத்தின் இடதுபுறமும், இடது தோளிலும் தனது சக்தியையெல்லாம் திரட்டி, துப்பாக்கிக் கட்டையால் அடிக்கிறான். தரையில் வீழும் ரோஸாவுக்கு அப்போதும் உயிர் இருக்கிறது. அவர் எழுந்து நிற்கவும் முயற்சி செய்கிறார். அப்போது ஹோட்டலில் இருந்து வெளியே வரும் நான்கு ராணுவத்தினர் ரோஸாவை இழத்து வாகனத்தில் வீசுகின்றனர். வாகனத்தில் உடனே தொற்றும் வோகல், தனது துப்பாக்கியினை எடுத்து, ரோஸாவின் தலையில் அழுத்தி வைத்துச் சுடுகிறான். உயிரற்ற ரோஸாவின் சடலம் அவ்வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது. பிற்பாடு, லீப்னெக்ட்டும் இவ்வாறு துப்பாக்கியின் பின் கட்டையால் அடிக்கப்படுகிறார். ஆனால் அவரை வாகனத்தில் இழுத்துப் போட்டு அழைத்துச் செல்லும்போது அவருக்கு உயிர் இருக்கிறது.

சுமாராக, இரவு 10.30  மணியளவில் முதல் வாகனத்தில் தலைமையகத்திற்குத் திரும்பும் வோகல், ஸ்பிரி நதியில் லானட்வாயர் கால்வாயில் ரோஸாவின் உடல் வீசப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கிறான். இரண்டாவது வாகனம், 11.00 மணியளவில் திரும்புகிறது. அவர்கள் லீப்னெக்ட்டை தாவரவியல் பூங்காவினூடே கொண்டு சென்றதாகவும், அங்கு வாகனம் பழுதுபட்டுவிட்டதாக லீப்னெக்ட்டை இறங்குமாறு பொய் சோடித்ததாகவும், லீப்னெக்ட் இறங்கியவுடன் அவரது பாக்கட்டிலிருந்து, அவரது பேனாக் கத்தியை எடுத்த லெப்டினென்ட் சுல்ட்ஸ் தனது கையைத் தானே கீறிக் கொண்டு இரத்தக் காயம் எற்படுத்திக் கொண்டதாகவும், இதன் பின்பு, லீப்னெக்ட்டை உடனே சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் சுல்ட்ஸ் தெரிவித்தான்.

‘கத்தியால் காயப்படுத்திவிட்டு தப்பிச் செல்லும்போது லீப்னெக்ட்; சுட்டுக் கொல்லப்பட்டார்’ எனத் ஸ்தாபிப்பதற்காகவே இந்தச் சோடிப்பு எனவும் சுல்ட்ஸ் சொல்கிறான்.

ரஞ்ஜ்சை 16 ஆம் திகதி கேப்டன் பெப்ஸ், லெப்டினென்ட் லீப்மேனது வீட்டில் இருக்கச் சொல்லி, எட்டு நாட்களின் பின்பு அவனுக்கு பொய்யான பெயரில் ஆவணம் கொடுத்து 1000 மார்க்குகளும் கொடுத்து பிளட்ஸ்பர்க்குக்குப் போகுமாறு அவனை அனுப்பி வைத்திருக்கிறான். பிற்பாடு ரோஸா லக்ஸம்பர்க், லீப்னெக்டின் கொலை தொடர்பாகக் கைது செய்ப்பட்ட ரஞ்ஜ், கொலைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனச் சொல்லுமாறு காவல் துறையினரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறான்.

கொலை நடந்தபோது தான் பெர்லினில் இல்லை எனவும், பிளட்ஸ்பர்க்கில் இருந்ததாகவும்; தெரிவிக்குமாறு காவல்துறை அதிகாரிகளால் ஆலோசனை கூறப்பட்டிருக்கிறான்.

வழக்குமன்றத்தில் விசாரணை இருப்பதால் இடைக்காலத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ரஞ்ஜ்சை வழக்குரைஞர் கின்ஸ்பேர்க்கும், நீதிபதியான ஹென்சும் சென்று சந்திக்கிறார்கள்.

‘சித்தசுவாதீனமற்ற நிலையில், தானே ரோஸாவையம் லீப்னெக்ட்டையும் கொன்றேன்’ எனச் சொல்லுமாறு அவர்கள் அவனை வலியுறுத்தியிருக்கிறார்கள்.

நீதிமன்றத்தில் நீதிபதியான ஹென்சிடம் தான் அவ்வாறே சொன்ன பிறகு, தன்னிடம் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை என்கிறான் ரஞ்ஜ். ஆனால், தான் அப்போது சுயநினைவுடன் இருந்ததாகவும,; தனது எல்லா நடவடிக்கைகளுக்கும் பதில் சொல்லுமாறான நிலைiயில் தனது மனநிலை இருந்ததாகவும் அவன் தெரிவிக்கிறான். மருத்துவர்களான டாக்டர் லீப்மென் மற்றும் ஸ்டாஸ்மென் போன்றவர்கள் தனது ‘புத்திசுவாதீனமற்ற நிலைக்கு’ மருத்துவ அறிக்கை தந்தார்கள் எனவும் அவன் தெரிவிக்கிறான். பொதுமக்கள் இந்த வழக்கின் போது கடுமையான ஆட்சேபம் எழுப்ப, நீதிபதி ஹென்ஸ் பொதுமக்களை வழக்கு மன்றத்திலிருந்து அகற்றியிருக்கிறான்.

பிற்பாடு ரஞ்ஜ்சுக்கு 25 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட, பிற அனைத்து அதிகாரிகளும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 1919 ஆம் ஆண்டு நவம்பரில் கலோனல் பெஸ்டெட் என்பவர் ரஞ்ஜ்சை சிறையில் சந்தித்ததைனயடுத்து, வழக்கில் இரண்டாவது விசாரணை துவங்கியது. நீதிபதி ஹென்ஸ் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டான். மோசடியான தீர்ப்பிற்காக நீதிபதி ஹென்ஸ் பதவிநீக்கம் செய்யப்;பட்டான். இதற்கும் மேலாக, ‘எந்தச் சாட்சிகளையும் அல்லது கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை’.

ரஞ்ஜ் தனது முதியவயதின் உடல் நலக் குறைவினால், 1945 செப்டம்பர் 1 ஆம் திகதி மரணமுற்றான்.

மேலே கண்டவாறு விவரிக்கும் இந்த அறிக்கையை, மக்கள் கமிசார்களின் துணைத் தலைவரான கே.கோர்சின், 1945 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் திகதியிட்டு, தோழர். வி.எம். மாலட்டோவுக்கு, விசாரணை அறிக்கையாக இதன் நகலை அனுப்;பி வைக்கிறார். பெர்லின் பாசறையின் ராணுவ விசாரணை அதிகாரியான கோட்லியரின், 1945 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியிட்ட அசல் ‘ரகசிய’ அறிக்கையின் பிரதியே இது. கோட்லியரால் கையொப்பமிடப்பட்ட இந்த அறிக்கை, செஞ்சேனையின் சட்டமேலாளராரும், முதல்நிலை ராணுவ விசாரணயைதிகாரியும் ஆன தோழர்.என்.பி.அபனாசியாவினிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ரோஸாவின் பிரதான கொலையாளியான ஓட்டோ ரஞ்ஜ் (1975-  1945) எனும் ஜெர்மானியப் பிரஜையிடம், 1945 ஆம் ஆண்டு ஜூன் 13 முதல், ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரையிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி அவரது உடல்நிலக் குறைவினால் ஓட்டோ ரஞ்ஜ் மரணமடைந்திருப்பதாகவும் அந்த ரகசிய அறிக்கை முடிவாகத் தெரிவித்திருக்கிறது.

ரோஸா லக்ஸம்பர்க் மரணமுற்று 89 ஆண்டுகளின் பின் அமெரிக்க நாவலாசிரியரும், யூதருமான ஜோனாதன் ராப், ரோஸா லக்ஸம்பர்க்கின் மரணம் தொடர்பான வரலாற்றுப் புதிர்களையும், இடைவெளிகளையும் தனது புனைவின் வழி நிரப்புகிறதான நோக்குடன், 2008 ஆம் ஆண்டு துவக்கத்தில் 404 பக்கங்களில் ஆங்கில் மொழி நாவலொன்றினைத் தந்திருக்கிறார் .

ஐஸாயா பெர்லின் போன்ற யூதத் தத்துவவாதிகள் பற்றிய நூல்களை அதிகமும் வெயிடும் இலண்டனைச் சார்ந்த ‘ஹால்பன் பதிப்பகம்’ இந்த நூலை வெளியிட்டிருக்கிறது. இந்த நாவலை ரோஸா படுகொலை செய்யப்பட்டு, 89 ஆண்டுகளின் பின் எழுத நேர்ந்ததற்கான உந்துதல் பற்றி ஜோனாதன் ராப் பின்வருமாறு முன் வைக்கிறார்:

‘வரலாற்றுத் தருணங்களில் காணக்கிடைக்கிற ‘இடைவெளிகள் மற்றும் ‘அறிய வராமைகள்’, போன்றவற்றில் ஆர்வம் கொள்ளும் நான், பிற்பாடு ‘அது என்னவாக இருந்திருக்கு முடியும்’ என்கிற எனது ஆட்டத்தை எழுத்தின் வழி ஆட விரும்புகிறேன். ‘நிஜத்தில் இது இப்படித்தான் ‘மாறாக’ நிகழ்ந்தது என்கிற விதமாக ‘வித்தியாசமாக’ அணுகுவதல்ல  இந்நிலைபாடு. நான் வரலாற்றைத் ‘திருத்தி’ எழுதுகிறவன் அல்ல. ‘கதை’யின் பொருட்டு ஏற்கனவே அறிய வரப்பெற்ற வரலாற்றைத் ‘திரித்து’ எழுதுகிறவனும் அல்லன் நான்.

நான் எடுத்துக்கொள்கிற தருணத்தைச் சுற்றிலும் நாம் ‘அறிந்த’ வகையில் என்ன நிகழ்ந்தது என்பதனை முதலில் நான் அவதானிக்கிறேன். மிகச் சரியான வகையில் அதனோடு நான் ‘பிரச்சினை’யை இணைத்துக் காண்கிறேனா என உறுதிப்படுத்திக் கொள்கிறேன். பிற்பாடு இருக்கிற ‘இடைவெளியில்’ நான் என் கதையைச் சிருஷ்டிக்கிறேன்.

எடுத்துக்காட்டாக, எனது நாவலான ‘ரோஸா’ பற்றிப்; பேசுவோமானால், வரலாற்று ரீதியில், 1918 ஆம் ஆண்டு ரோஸா லக்ஸம்பர்க் பெர்லின் திரும்பினார் என நமக்குத் தெரியும். கார்ல் லீப்னெக்டுடன் இணைந்து ரோஸா லக்ஸம்பர்க் பெர்லின்ல்  எழுந்த புரட்சியில் ஈடுபட்டார் என்பதும் நமக்குத் தெரியும். அவர்கள் இருவரும் 1919 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதனையடுத்து, புரட்சி தற்காலிகமாகத் தடைப்பட்டது எனவும் நமக்குத் தெரியும். கொல்லப்பட்ட கார்ல் லீப்னெக்டின் உடல் அடுத்த நாளே பெர்லின் தாவரவியல் பூங்காவுக்குச் செல்லும் பாதையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், ரோஸாவின் உடல், 1919 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி ‘ரோஸா கொல்லப்பட்டு நான்கு மாதங்களின் பின’;, பெர்லின் லான்ட்வாயர் கால்வாயில் மிதந்ததும் நமக்குத் தெரியும்.

எனது ‘ரோஸா’ நாவல், ரோஸா கொல்லப்பட்டதற்கு அடுத்த நாள், 1919 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதியிருந்து துவங்குகிறது. ரோஸாவின் உடல் ‘காணாமல் போன’ அந்த நான்கு மாதங்களில், ரோஸாவின் உடலுக்கு ‘என்ன நேர்ந்திருக்கக் கூடும்’ என்பதனை ‘புனைவினூடே’ எனது நாவல் பேசுகிறது.

1919 ஆம் ஆண்டு 15 ஆம் இரவு கொல்லப்பட்டு, சில நிமிடங்களிலேயே பெர்லின் லானட்வாயர் கால்வாயில் விசப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரோஸா லக்ஸம்பர்க்கின் உடல், மே மாதம் 31 ஆம் திகதிதான் நீரின் மேல் மிதந்தது.

அவரது உடல் கால்வாயில் வீசப்பட்டதற்கும், அவரது உடல் மிதந்ததற்கும் இடையிலான நான்கு மாதம் 15 நாட்களில் அவரது உடல் எங்கு கிடந்தது?

பல்வேறு சாத்தியங்கள் இருக்கிறது. அவரது உடலை கனத்த கற்கள் அல்லது பாறைகளில் அல்லது இரும்புக் குண்டுகளில் கயிற்றினால் பிணைத்துக் கால்வாயில் வீசப்பட்டிருக்கலாம். காலப் போக்கில் கயிறு மக்கி, கால்வாயின் ஜீவராசிகளது உணவாகி, உடல் மிதக்கும் நிலைக்கு வந்திருக்கலாம். அவரது உடல் உருக்குலைந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதனை ஞாபகம் கொள்வது இங்கு பொறுத்தமானது.

இத்தகையை செயலுக்கான காரணமாக, ஆட்சியாளர்கள் ரோஸாவின் மரணத்திற்குத் தாம் பொறுப்பாவதை விரும்பியிருக்கவில்லை என்பதனை நாம் சொல்ல முடியும். ரோஸாவின் கொலையை அவர்கள் மறைக்கவே விரும்பினார்கள்.

பிறிதொரு சாத்தியம், ரோஸாவின் உடல் கால்வாயில் வீசப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், அவ்வாறு செய்யாமல் அன்றிரவே அவரது உடலைக் கடத்தி, அவரது மரணத்திற்கு வேறு காரணங்கள் கற்பிக்கும் சாத்தியங்கள் பற்றின முயற்சிகளையும் ராணுவக் கொடுங்கோலர்கள் செய்திருக்கலாம். அதற்கான சம்பவ சாத்தியங்கள் அன்று அதிகமும் இருந்தன. லானட்வாயர் கால்வாயில், கையறுநிலையிலுள்ள வீட்டு வேலைக்காரப் பெண்களது பிணங்களும், விலைமாதர்களது பிணங்களும், சலவைத் தொழிலாளர் வீட்டுப் பெண்களது பிணங்களும், தொடர் கொலைகள் புரியும் மனநோயாளர்களால் கொல்லப்படும் தனித்து வாழும் மத்திய தர வயதுப் பெண்களின் பிணங்களும் மிதப்பது என்பது அன்றைய நாளில் அன்றாட நிகழ்வாகவே இருந்தது. ரோஸாவின் மரணத்தை இவ்வகையிலான மரணங்களில் ஒன்றாகச் சித்தரித்து விடுவது என்பது, பின்னாளில் பாசிஸ்ட்டுகளாகப் பரிமாணம் எய்திய அன்றைய சமூக ஜனநாயகவாதிகளுக்கு, அவர்களது குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ள மிக எளிமையான வழியாகவும் இருந்திருக்கும்’.

இந்த இரண்டாவது சாத்தியத்தைத்தான் ஜோனாதன் ராப் தனது ‘ரோஸா’ நாவலின் செயல்படுதளமாக எடுத்துக் கொள்கிறார்.

ரோஸா’ நாவலில் அன்றைய வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த மூன்று ஆளுமைகள் இடம் பெறுகிறார்கள். முதலாமவர் ரோஸாவின் தோழரும் காதலரும், ரோஸாவின் கொலை பற்றிய விவரங்கள் அறிந்தவருமான லியோ ஜோகித்தே. இரண்டமாவர் விஞ்ஞானியும் அன்றைய நாளில் ‘கெய்சர் வில்லியம் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றியவருமான’ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். மூன்றாமவர் காரல் லீப்னெக்ட்டின் மரணம் குறித்து அழியாப் புகழ்பெற்ற ஓவியத்தைத் தீட்டிய கதே கோல்விட்ஸ். இதுவன்றி நாவலின் பிரதான கதாநாயகனான நிக்கோலய் ஹாப்னர் உள்பட பிற முக்கியமான கதா பாத்திரங்கள் அனைவருமே கற்பனையானவர்கள்.

இந்தக் கற்பனையான பாத்திரங்கள் அனைவருமே அன்றைய நாளில் நிலவிய ‘நிஜமான’ நிறுவனங்களில் பொறுப்புக்களில் இயங்கியவர்களாக, அன்றைய ‘நிஜமான’ கருத்தியல்-அரசியல் சர்ச்சைகளில் உள்ளார்ந்த வகையில் ‘கருத்தியல்-அரசியல்’ நிலைபாடு எடுத்தவர்களாகவே நாவலில் நடமாடுகிறார்கள்.

மேலாக, இந்தப் பாத்திரங்கள் அனைத்திற்கும் இனத்துவ மற்றும் அழுத்தமான அரசியல் அடையாளங்கள் நாவலில் ஸ்தூலமாக இருக்கிறது. இந்த நாவல்; குறிப்பிட்ட வரலாறு மற்றும் குறிப்பிட்ட அடையாளங்களை அழித்து, கால இடப்; பரிமாணத்தை அழித்து, ஒரு அருவமான கால இடத்தில் நடைபெறவதாக கதையைச்; சித்தரிக்கவில்லை. மாறாக, குறிப்பிட்ட வரலாறு-காலம்-இடம் போன்ற பரிமாணங்களை இன்னொரு தளத்தில் ‘அதிகுறிப்பிட்ட தன்மைகளுடன்’, வரலாற்றின் இடைவெளிகளைத் தர்க்கபூர்வமாக நிரவும் சிருஷ்டிகரமான கலா தரிசனமாக நாவல் பரிமாணம் கொள்கிறது.

ரோஸா நாவலை, பாசிசம் முழு அளவில் அரசியலாக எழுவதற்கு முன்னால் ஆன காலத்தில் நிகழந்த, நிக்கோலாய் ஹாப்னர் எனும், ரஸ்ய யூத வழித்தோன்றல் ஒருவரின் சுயசரிதை சார்ந்த அனுபவங்களின் தொகுதியாகவும் ஒருவர் வாசிக்க முடியும்.

பிறிதொரு பரிமாணத்தில், தொடர் கொலைகளின் மர்மத்தைத் துப்புத் துலக்க அலைந்து திரியும் ஒரு துப்பறியும் அதிகாரியின் சாகசங்களாகவும்; புரிந்துகொள்ள முடியும்.

இன்னொரு பரிமாணத்தில், அன்றைய ஜெர்மானிய அரசியல் போலீஸாக இயங்கிய ‘பொல்போ’ எனும் அமைப்புக்கும், குற்றப் புலனாய்வு போலீஸாக இயங்கிய ‘கிரிப்போ’ எனும்  அமைப்புக்கும் இடையிலான போட்டி பொறாமைகள் மற்றும்; முறுகல் நிலைமைகள் போன்றவற்றின் இடையில் அகப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரியின் பதிவாகவும் புரிந்துகொள்ள முடியும்.

குற்றப் புலனாய்வு எனும்; துப்பறியும் வகையிலான தத்துவார்த்த மற்றும் அரசியல் தோய்வுகள் கொண்ட நாவல்களுக்கு உலக இலக்கியத்தில் முன்னோடிகள் உண்டு. அம்பர்தோ எக்கோவின் ‘நேம் ஆப் த ரோஸ’;, தாஸ்தயாவ்ஸ்க்கியின் ‘குற்றமும் தண்டனையும’எனும் இரு நாவல்களோடு, ஒரு ஜனரஞ்ஜக நாவலாக நாம் டான் பிரவுனின் ‘த டாவின்சி கோட்’ நாவலையும் இவ்வகையில் குறிப்பிட முடியும்.

ஒரு நாட்டின் துப்பறியும் துறையின் இரு வேறு பிரிவுகளுக்கு இடையிலான முறுகல் நிலையைச் சித்தரித்த திரைப்படங்களை, அமெரிக்காவில் ‘சிபிஐ-சிஐஏ’ எனவும், இந்தியாவில் ‘காவல்துறை-சிபிஐ’ எனவும் நம்மால் பட்டியலிட முடியும். நாவலாயினும் திரைப்படமாயினும் இத்தகையை படைப்புகள் என்றுமே சுவாரஸ்மான படைப்புக்களாகவே இருக்கும்.

‘ரோஸா’ நாவலும் இவ்வகையில், பெர்லின் நகரில் வேறு வேறு இடங்களில் வீசப்பட்டுக் கிடக்கும், உருக்குலைந்த பெண்களின் உடல்கள் பற்றிய துப்பறியும் ஒரு கதையாகவே துவங்குகிறது. ஆறு உடல்களை அடுத்தடுத்துக் கண்ணுறும் குற்றப் பலனாய்வு போலீஸ் அதிகாரியான நிகோலாய் ஹாப்னர், ஆறாவது உடலாக ரோஸா லக்ஸம்பர்க்கின்; உடலைக் கண்ணுறுகிறார். பிற உடல்களை பெர்லின் நகரத்தின் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கும் அவர், ரோஸாவின் உடலை மட்டும் பிற உடல்களுடன் சவக்கிடங்கில்தான் முதன் முதலாகக் கண்ணுறுகிறார்.

ரோஸாவின் உடலை அரசியல் போலீஸ் கைப்பற்றி, தம் வசம் அதனைக் கடத்திக் கொண்டு போகும் சந்தர்ப்பத்தில்தான் அதனைக் கண்டுபிடிக்கிறார் ஹாப்னர்.

ரோஸாவின் உடலை, அரசியல் போலீஸ் குற்றப் புலனாய்வு போலீசிடமிருந்து கடத்த வேண்டிய அவசியம் என்ன?

இரண்டு காரணங்கள். முதலாவது காரணம் : ரோஸாவின் உடலை அழுகிவிடாமல் திரவத்தில் பதப்படுத்தி வைத்து ‘திட்டமிட்ட நாளில்’ அவப்பெயருக்கு ஆளான பெண்ணாக அவளை வீசி விடுவது அல்லது அவரது உடலை முற்றிலும் உருக்குலைத்து அழித்து விடுவது.

இரண்டாவது காரணம் : மனநோயாளி ஒருவனின் படுகொலைகளுக்கு ஆட்பட்ட ஒரு பெண்ணாக ரோஸாவின் உடலை நம்பகத் தன்மையுடன் ஆக்கி விடுவது. இந்த நம்பகத் தன்மையை எவ்வாறு உருவாக்குவது? மனநோயாளியால் கொல்லப்பட்ட எல்லாப் பெண்களதும் உடல்கள் ஒரு பொது அடையாளத்துடன் கண்டெடுக்கப்படுகிறது. அந்தப் பெண்கள் அனைவரதும் முதுகில் மிக நேர்த்தியுடன் குறிப்பிட்ட பூ வேலைப்பாடுகள் இடம் பெற்றிருக்கிறது. அதே வகையிலான பூ வேலைப்பாட்டுடன் கூடிய கீறல்களை அரசியல் போலீசைச் சேரந்தவர்கள் இறந்த ரோஸாவின் உடலில் கத்தியால் கீறுகிறார்கள்.

ஏன் இந்தப் பூ வேலைப்பாடுகளில் அரசியல் போலீஸ் இவ்வளவு அக்கறை செலுத்துகிறது? இத்தகைய நுட்பமான வேலைப்பாடுகளை அன்றைய நாளில் பெர்லினில் செய்யக் கூடிய திறமை படைத்தவர்கள் யூதர்கள் மட்டும்தான். இவ்வகையில் அரசியல் போலீஸ் ‘ஒரே கல்லில் இரு மாங்காய்களை’ அடிக்க விரும்பியது. முதலாவதாக, ரோஸா லக்ஸம்பர்க் ஒரு ஒழுக்கங்கெட்ட பெண் என நீரூபித்துவிடுவது. இரண்டாவதாக, ரோஸா லக்ஸம்பர்க் ஒரு யூத மனநோயாளியால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறாள் என நிரூபித்துவிடுவது.

நிக்கோலாய் ஹாப்னர் ஒரு பொறுப்புள்ள, நேர்மையான குற்றப் புலனாய்வு அதிகாரியாக இந்த இரண்டு அவமானகரமான திட்டங்களையும் முறியடிக்கிறார். ரோஸாவின் உடலுக்குத் தரவேண்டிய மரியாதையுடன், லியோ ஜோகித்ஸேயின் உதவியுடன், அவரது உடலை அரசியல் போலீசிடமிருந்து மீட்டு, ரோஸாவை அவரது மரணநாளில் விசியெறிந்ததாகச் சொல்லப்பட்ட அதே லான்ட்வாயர் கால்வாயில் மிதக்கவிடுகிறார்.

ரோஸாவின் உடல் மெல்ல மெல்ல லான்ட்வாயர் கால்வாயின் நீரில் மூழ்குவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது.

ரோஸாவையும் அவரது தோழர்களான லீப்னெக்ட்டையும் ஜோகித்ஸேவையும் அறிந்தவர்களுக்கு, பாசிசத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு, இந்த நாவலை அணுகுவதென்பது மிகவும் துக்ககரமான ஒரு நிகழ்வாகவே இருக்கும்.

ஆனால், வரலாறு எதுவும் அறியாத நிலையிலும் நாவலை அணுகும் வாசகனுக்கு, சுவாரசியமான துப்பறியும் அதிகாரியாகவே நிக்கோலாய் ஹாப்னர் இருப்பார். நிக்கோலாய் ஹாப்னர் தனது மனைவிக்கு துரோகம் செய்கிறவர். ஸ்திரீ லோலன். குடிகாரன். விபச்சார விடுதிகளுக்கு விஜயம் செய்பவன். தனது சக அதிகாரியும் இளைஞனுமான பிக்ட்டின் காதலியுடன் கலவி செய்;பவன். அதே வேளை ஸ்பாரட்டசிஸ்ட்டுகளின் எழுச்சியில் அனுதாபம் தெரிவிப்பவன். பாசிசத்தின் வேர்கள் தோற்றம் பெறுவதை கவலையுடன் வெறுப்பவன். ரோஸாவின் காதல் கடிதங்களில் மனம் பறிகொடுப்பவன். தனது குற்றப் புலனாய்வுத் துறையின் தனித்தன்மைக்காக அரசியல் போலீசுடன் சளையாத போராட்டத்தினை நடத்துபவன். தனது மனைவியையும்; இந்தப் போராட்டத்தில் அவன் பறிகொடுக்கிறான். அவனது மனைவி அரசியல் போலீசினால் கொலை செய்யப்படுகிறாள்.

பெண்களின் கொலைகளை ஒவ்வொன்றாகத் துப்புத் துலக்குவது, கொலையாளியை தேடி தூர நகரங்களுக்குப் பயணம் செய்வது, இறுதியில் ரோஸாவின் உடலில் கத்தியால் பூ வேலைப்பாடு செய்த அரசியல் போலீஸ் அதிகாரியின நெஞ்சில் குறுவாளைப் பாய்ச்சி அவனை குத்திக் கிளறி நிதானமாகக் கொல்வது என, ஒரு சாகசவாதியின் கதையைப் படிக்கிற சுவாரஸ்யத்துடன் நிக்கோலாய் ஹாப்னரின் கதையை ஒருவர் வாசிக்க முடியும்.

என்னளவில், பாசிசத்திற்கு எதிரான அதனது அரசியல் பரிமாணத்திற்கும் அப்பால், ‘எல்.ஏ.கான்பிடன்சியல்’ எனும் அமெரிக்க போலீஸ் துறையின் ஊழல்கள் பற்றி வந்த அற்புதமான ஹாலிவுட் திரைப்படத்தின் சுவாரஸ்யத்தின் அளவில் வாசிப்பின்பம் தருவதாக ஜொனாதன் ராப்பின் ‘ரோஸா’ நாவல் இருந்தது என்பதனையும் நான்;; சொல்லியே ஆக வேண்டும்.

ரோஸா லக்ஸம்பர்க்கின் கொலையாளிகளில் ஒருவனான ஓட்டோ ரஞ்ஜ், தான் நீதிக்குப் புறம்பாகச் சிறையில் அடைக்கப்பட்டதற்காகவும், நாசி ஜெர்மனியின் இலட்சியத்திற்கான தனது ஆரம்பகாலப் பங்களிப்பிற்காகவும், நீதி அமைச்சகத்திடம் நஷ்டஈட கோரி, 1933 ஆம் ஆண்டில் இட்லர் ஆட்சியின் கீழ் விண்ணப்பித்தான். அவனது சிறைக் காலத்திற்கும் அவனது இலட்சிய உறுதிக்கும் சேர்த்து, அவனுக்கு ஆறாயிரம் மார்க்குகளைப் பரிசளித்துக் கௌரவித்தான் இட்லர்.

ரோஸா லக்ஸம்பர்க்கை நெற்றியில் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்று, அவரது உடலை வீசவென லான்ட்வாயர் கால்வாய்க்கு எடுத்துச்சென்ற வோகல், தன்னிடமிருந்த ரோஸாவின் உடல்தொடர்பாக தவறான முதல் தகவலறிக்கையைப் பதிவு செய்தான் எனும் பெயரில் மிதமான தண்டனையுடன் அவன் தப்பித்தான். ரோஸாவின் காதலரான லியோ ஸோகித்ஸேவைச் சுட்டுக் கொன்ற எர்னஸ்ட் தாம்சிக் என்பவன் எந்தத் தண்டனையும் இன்றித் தப்பித்தான்.

1919 ஜனவரி புரட்சி எழுச்சியின் போது ரோஸா லக்ஸம்பர்க்கையும் கார்ல் லீப்னெக்ட்டையும்; யூதர்களையும்  கம்யூனிஸ்ட்டுகளையும் வேட்டையாடிய சமூக ஜனநாயகவாதிகளின் ‘ஜெர்மன் தொழிலாளர் கட்சி’ பின்னாளில் இட்லரது தலைமையின் கீழ் ஜெர்மன் தேசிய சோசலிஸ்ட் கட்சியாக ஆனது. சமூக ஜனநாயகவாதிகளின் ‘நேஷனல் அப்சர்வர்’ பத்திரிக்கை பின்னாளில் நாசிக் கட்சியின் அதிகாரப்பூர்வப் பத்திரிக்கையாக ஆகியது.

1919 புரட்சியை ஒடுக்கப் பயன்படுத்தபட்ட படைப்பிரிவு இட்லரின் கீழ் ‘பழுப்புச் சட்டைப் படையாகவும்’ பின்னாளில் அனைத்து மக்களையும் கொன்றொழித்துக் கொலைவெறியாட்டம் ஆடிய இட்லரது தனிப் படைப்(எஸ்ஏ)பிரிவாகவும் ஆகியது.

ரோஸா லக்ஸம்பர்க் ஒரு பெண்மணியாக, பின்னாளில் பரிமாணம் பெற்ற இனத்துவ அடிப்படையிலான தேசிய பாசிசம் குறித்த விவாதங்களில் தூரதரிசனம் மிக்க கருத்தியலாளராக அடையாளம் காணப்பட்டார். புரட்சிகர அமைப்பில் ஜனநாயகம் குறித்த அவாக்களும், ஒற்றைக் கட்சி ஆட்சியமைப்பின் எதேச்சதிகாரம் குறித்த அவரது எச்சரிக்கைகளும் இன்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

தேசியத்திற்கும் பாசிசத்திற்கும் இருக்கும் தர்க்கபூர்வமான காரண காரிய உறவின் சாட்சியமாக நமக்கு நாசிக் கட்சியின் கொடுங்கோன்மை இருக்கிறது. இனத்துவ தேசியங்களின் மனித உரிமை மீறல்களை மிகச் சரியாக இனம் கண்டவர் ரோஸா லக்ஸம்பர்க். ஏகாதிபத்தியத்தின்; தேசிய எல்லைகள் கடந்து, புதிய பிரதேசங்களை மூலதனம் தேடிச்செல்லும் எனும் அவரது தரிசனம் உலகவயமாதலாக நம்முன் இன்று இருந்து கொண்டிருக்கிறது.

புரட்சிகரக் கட்சியமைப்பில் ஆண்களின் மொத்தத்துவ அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தவராக ரோஸா இருந்தார். தனிமனித வாழ்வையும் அரசியல் வாழ்வையும் இணக்கமுற வைப்பதில் சவால்களை எதிர்கொண்ட அவர், பாலுறவு தொடர்பான சனாதன மதிப்பீடுகள் அனைத்தையும் மீறிய தனித்துவ ஆளுமை கொண்ட பெண்மணியாக இருந்தார்.

தனது ஆஸ்த்துமா எலும்புக் கூட்டைச் சுமந்து கொண்டு உலகப் புரட்சிக்காக நாடு நாடாக அலைந்த சே குவேரா போலவே, தனது இளம்பிராயத்தில் தனது இடுப்பில் சயரோகம் பீடித்தவர் எனத் தவறாக மருத்துவ பகுப்பாய்வுக்கு உட்பட்டதால், மாதக் கணக்கில் பிணைத்துக் கட்டப்பட்ட கால்களுடன் அவர் இருந்த காரணத்தினால், அவர் தனது மரணம் வரையிலும் முடமான பெண்ணாக, கால்களை இழுத்துக் கொண்டு விந்தி விந்தி போராட்டக் களங்களில் நடந்து அலைந்து திரிந்தவாராக ஆகினார்.

சேகுவேராவுக்கும் ரோஸா லக்ஸம்பர்க்குக்கும் நிறையப் பொதுத்தன்மைகள் உண்டு. அவர்களது வாழ்வைப் போலவே அவர்களது தீர மரணமும் மகத்தானது. புதிர்களும் மாயங்களும் நிறைந்தது இவர்கள் இருவரதும் கடைசி மரணநொடிகள். இருவரும் உலகின் மகத்தான கலைஞர்களை ஆகரஷித்தவர்கள். தனிநபர்களாக புரட்சிகர அறவியலுக்கு தமது வாழ்வின் வழி மகத்தான பங்களிப்பை வழங்கியவர்கள் அவர்கள்.

இருவரும் ஐம்பது வயதுகளை எட்டு;ம் முன்பாகவே எதிரிகளால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்டவரகள். அவர்களது உடல்களுக்கு நேர்ந்த சித்திரவதைகளும், ‘காணாமல் போன’ காலம் குறித்த மாயத் தன்மைகளும் மர்மங்களும் நிறைந்தது இருவரதும் மரணங்கள்.

இருவரும் கலைப் படைப்புக்களின் வழி மறுபடியும் உயிர்தெழுந்திருக்கிறார்கள். ’நீ வாழ்ந்ததைப் போல வாழ்வதற்கு, நீ மரித்ததைப் போல மரிப்பதற்கு, நாங்கள் வருகிறோம்’ என சே குவேராவுக்கான தனது அஞ்சலிக் கவிதையில் எழுதினான் கியூபாவின் போராளிக் கவிஞன் நிக்கலஸ் கில்லன்.

போலந்திலிருந்து வந்த யூதப் பெண்மணி இவள், ஜெர்மானிய தொழிலாளர்களுக்காகப் போராடிய வீரப்பெண்மணி இவள், ஒடுக்கப்பட்டவர்களே, உங்களது மாறுபாடுகளைக் குழி தோண்டிப் புதையுங்கள்’என ரோஸாவின் கல்லறைக் கவிதையில்; எழுதுகிறான் பெர்ட்டோல்ட் பிரெக்ட்.

இந்த இரண்டு மகத்தான கவிகளினதும் அஞ்சலி வரிகளே, புதிய உலகின் புதல்வர்கள் இன்று கடைபிடிக்க வேண்டிய அறிவியல் மரபுகளாக இருக்கும். சிலரது மரணம் மறுபடி மறுபடி உயிர்ப்புள்ள ஞாபகமூட்டல்களைத் பின்வரும் தலைமுறைக்குத் தருவதாக இருந்து கொண்டேயிருக்கிறது. அவர்தம் தீர வாழ்வைப் போலவே, சே குவேராவினதும் ரோஸா லக்ஸம்பர்க்கினதும் மரணமும் அத்தகைய நிரந்தர உன்னதத்தையும் செய்திகளையும் கொண்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

யமுனா ராஜேந்திரன்.

Related Posts