அரசியல்

நடந்தாய் வாழி காவேரி . . . . . . . . !

ஆங்கிலேயர் காலம் தொட்டு நூற்றாண்டு பிரச்சனையாக இருக்கும் காவிரி நீர் பங்கீடு பிரச்சனைக்கு உகந்த தீர்வாக உச்ச நீதி மன்றம் காவிரி மேலாண்மை மையம் அமைக்க மத்திய அரசை பணித்தும் மத்திய அரசு வழக்கம்போல தமிழகத்தை ஏமாற்றியுள்ளது.

ஏற்கனவே 1998லிருந்து  மத்திய அரசால் அமைக்பட்ட காவிரி நதிநீர் கண்காணிப்பு குழு ஒன்று இயங்கிவந்தாலும் அது அணையின் நீரை பங்கிட்டு கொடுக்கும் அதிகாரம் இல்லாமலே இருக்கின்றது. இதனால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான தண்ணீர் கிடைக்காமல் ஓட்டரசியலால் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கபட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் தமிழகத்திற்கு காவிரியிலிருந்து  396 டிஎம்சி தண்ணீர் கிடைத்துவந்தது.1975க்கு பிறகு அது படிப்படியாக குறைந்து வந்தது. தமிழகத்தின் தண்ணீர் தேவையையொட்டி தமிழகம் நீதிமன்றத்தை அனுகவே 1991ல் 205 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கியது இது போதுமானதல்ல என்று தமிழகம் மேல்முறையீடு செய்தபோது நீதிமன்றம் மேலும் 192 டிஎம்சியாக குறைத்து 2007ல் தீர்ப்பு வழங்கியது.  கர்நாடகம் தமிழகம் இரண்டுமே இதற்கு மேல்முறையீடு செய்த போது மீண்டும் மீண்டும் தமிழகத்தை வஞ்சிக்கும் விதமாகவே நீதிமன்ற தீர்ப்பு அமைந்தது கடைசியாக 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலொழிய இதற்கு வேறு தீர்வே இல்லை என்ற நிலைக்கு தமிழகம் இன்று தள்ளபட்டுள்ளது

ஏற்கனவே காவிரி ஆணையம் அமைக்க பட்டிருந்தாலும் அதற்கு அணைகளை கட்டுபடுத்தும் அதிகாரம் இல்லை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கபட்டால் காவிரியில் கட்டப்பட்டுள்ள  தமிழக கர்நாடக அணைகள் அனைத்துமே அந்த குழுவின் கட்டுபாட்டின் கீழ் வந்துவிடும்.தண்ணீர் வழங்குவதும் நிறுத்துவதும் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படியே நடக்கும். அரசியல்க்கு இடமில்லாமல் போகும்.

இதை அமல்படுத்த மத்திய அரசு ஏன் மெத்தனம் காட்டுகின்றது என ஆராய்ந்தால் அது தனது வாக்கரசியலை தக்கவைக்க அரசியல் லீலைகளை செய்கின்றது என தெளிவாகின்றது. 2013-ல் எதை காரணம் காட்டி அப்போதைய மத்திய அரசான காங்கிரஸ் மேலாண்மை வாரியம் அமைக்காமல் போனதோ அதையே காரணம் காட்டி தற்போதைய மத்திய அரசான பாஜகவும் மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கின்றது.

மத்திய அரசின்மீது தமிழகம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீர்த்துபோகச்செய்ய அவர்கள் குறிப்பிட்ட ஒரே காரணம் கர்நாடகாவில் நடைபெற இருக்கும் தேர்தல்தான். இந்த நேரத்தில் மேலாண்மை வாரியம் அமைத்தால் பூசல்கள் ஏற்பட்டு தேர்தல் பாதிக்கும் என குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீர்த்து போக செய்கின்றனர். தேர்தல் பாதிக்குமா அல்லது  தேர்தலில் வாக்குவங்கி பாதிக்குமா என்பதை நாம் கூர்ந்து கவனித்தால் மத்திய அரசின் அரசியல் சூழ்ச்சி புரியும்.

தேர்தலும் வாக்குவங்கியும் மட்டுமே பாதிப்பதாக இருந்தால் தேர்தல் நடக்காத காலகட்டத்தில் ஏன் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தயங்குகின்றது என பார்த்தோமேயானால் மத்தியரசு கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்து காவிரி டெல்டா பகுதிகளை தரிசாக்கி அங்குள்ள மக்களை பிழைக்க வழியின்றி வேறு தொழிலை நோக்கி நகர்த்தி அங்கிருக்கும் நிலங்களை ஆக்கிரமித்து ஷேல்கேஸ் என்ற பெயரில் நியூட்ரினோ ஹைட்ரோகார்பன் மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை சூறையாட திட்டத்தை அறங்கேற்றிக்கொண்டுள்ளன.

இது போதாதென்று தமிழக அரசியல்வாதிகளும் இங்குள்ள கனிமவளக் கொள்ளையர்களும் சேர்ந்து காவிரி நீர்வரத்தை தடுக்க மறைமுகமாக உதவுகின்றனரோ என்ற ஐயமும் எழுகின்றது .அதை உறுதி செய்யும் விதமாக தமிழகத்தில்  கரூரில் 8குவாரி நாகையில் 4குவாரி என தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட் மணல் குவாரிகள் அமைக்கபோவதாக அரசே அரிவித்திருந்தது ஆற்றில் நீர் புரண்டால் மணல் எப்படி எடுக்கமுடியும் என்பதால் கூட இங்கிருக்கும் முதலாளித்துவ அரசியல்வாதிகளும் கணிமகொள்ளையர்களும் மேலாண்மை வாரியத்திற்கு எதிராக மறைமுகமாக செயல்படக்கூடும் என தோன்றுகிறது

மொத்தத்தில் மத்திய அரசு கார்ப்பரேட் பெருமுதலாளித்துவம் உள்ளூர் கணிமகொள்ளையர்கள் நீர்நிலை ஆக்கிரமிப்பு பெருமுதலைகள் சேர்ந்து தமிழகத்திற்கு எதிராக செய்யும் கூட்டுசதிதான் இந்த காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் இருப்பதற்கான காரணம் .

இந்தப்பிரச்சனையை இரு மாநில விவசாயிகளையும் விவசாய பாசன நீர் பங்கீடாக அணுக வைக்காமல் இனப்பிரச்சனையாக மாற்றி வைத்துள்ளனர் அரசியல்வாதிகள்.இதனாலேயே காவிரி பிரச்சனையில் 1991ல் தமிழர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அடித்து துரத்தப்பட்டனர். கபினி அணையில் விழுந்து கர்நாடக விவசாயி ஒருவர் தற்கொலை செய்தார்.தமிழகத்திலும் தற்கொலைகள் தொடர்ந்தன. இரு மாநிலங்களிலும் தற்கொலை செய்வது விவசாயிகளாக இருக்கும் நிலையில் இதனையும் கவனத்தில் நிறுத்த கடமைப்பட்டுள்ளோம்.

இவர்களின் கூட்டு சதியை உணர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக மக்கள் வலுவான தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவில்லையெனில் உணவளித்த  காவிரி டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எலிக்கறி உணவும் நான்கு முழ கயிறையும் பரிசளித்த பாவம் நம்மைத்தான் சேரும்.

 

– சுபாஸ் சந்திர போஸ்

சென்னை

 

Related Posts