பிற

ஈழமும் . . . . . . சாதியும் . . . . . . !

தமிழ் தேசியம் பேசுவோரும் தனித்தமிழை முன்மொழிவோரும் சாதியத்தை கட்டிக்காப்பவர்களாவே இருக்கிறார்கள். அக்காலத்து ஆறுமுக நாவலர் தொடங்கி இக்காலத்து சீமான் வகையறாக்கள் வரை பலரை இதற்கு உதாரணங்களாக காட்டமுடியும். தமிழுணர்வு என்பது ஒருமைப்பாடு கொண்டது, அதில் சாதி வேற்றுமைகளுக்கு இடமில்லை. எல்லோரும் ஓர் குலம், இங்கு எல்லோரும் ஓர் நிரை என அடுக்கடுக்கான கட்டவிழ்ப்புகளை நூற்றாண்டுகளாக தமிழுணர்வு வெளிப்படுத்தி இருந்தாலும், தமிழுணர்ச்சி சைவ சித்தாந்தமாக மறுகட்டமைப்பு செய்யப்பட்ட காலம் முதல் இன்றைக்கு வரைக்கும் ‘தமிழுக்கும் சாதிஒருமைப்பாட்டிற்கும்’ எவ்வித தொடர்புமில்லை என்பதும், அது அடிப்படையில் சனாதன பாகுபாடுகளை கற்பிக்கும் இருமைக் கோட்பாடாகவே இயங்கி வருகிறது என்பது தான் இதுவரை நிரூபணமாகி இருக்கிறது.

ஈழம் குறித்த தமிழக அரசியல் புரிதலில், இங்கு வகைவகையான கதையளப்புகள் திராவிட மற்றும் தமிழ்தேசிய உணர்வாளர்களாலும் களசெயற்பாட்டாளர்களாலும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம். ஈழத்தில் சாதி இல்லை, அங்கு எல்லோரும் ஒற்றுமையாகவே இருந்துவருகிறார்கள் என்பதை இன்றைக்கும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் உள்ளூர் அரசியல்வாதிகள் தொடங்கி அடிக்கடி ஜெனீவா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வரக்கூடிய அரசியலாளர்கள் வரை அடக்கம். ஆனால் ஈழத்தின் நிலையோ நேர்முரணானது. தமிழகத்தோடு இணைத்துப் பார்க்கையில் ஈழத்தின் சாதியப் பாகுபாடு எந்தவகையிலும் குறைந்ததில்லை என்பதைத்தான் காணமுடிகிறது. அதைத்தான் இந்தப் பிரதியும் நிரூபித்திருக்கிறது.

இத்தொகுப்பிற்கு மிகச்சிறப்பானதொரு முன்னுரையை அளித்திருக்கும் பேரா.அ.மார்க்ஸ், வரலாற்று காலவரிசைப்படி ஏறக்குறைய 1920 களில் தொடங்கி…. 1924ல் யாழ்ப்பான வாலிபர் காங்கிரஸ் நிறைவேற்றிய தீண்டாமைக்கெதிரான தீர்மானம், 1927ல் ஒடுக்கப்பட்டோர் தமிழ் ஊழியர் சங்கம், 1930ல் சம ஆசனம்-சம போசனம் சட்டமாக்கப்பட்டபோது 12 பள்ளிகள் சாதிவெறியர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், 1930களின் துவக்கத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சி வர்க்க பிரச்சனையோடு தீண்டாமையிலும் கவணம் செலுத்திவந்தது, 1943ல் இலங்கை சிறுபாண்மை(தலித்) தமிழ் மகா சபையின் உதயம் மற்றும் 1966, 67 களில் ‘நிச்சாமத்தில்’ நடத்தப்பட்ட தீவிரமான தீண்டாமை எதிர்ப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு என நீளும் ஈழத்தின் சாதி எதிர்ப்பு போராட்ட பாரம்பரியம் இதன் மூலம் புலனாகிறது. நேற்றோ அல்லது இன்றோ புதிதாக தோன்றியதல்ல ஈழத்தின் சாதிய கலாச்சாரம் என்பதை இதன்வழி தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய சாதியப் பாகுபாடு வாழ்வு அர்த்தமற்றதாகிக் கொண்டிருந்த கடுமையான போர்காலங்களிலும் சரி புலம்பெயர் இடங்களிலும் சரி இன்னும் அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இப்பிரதியின் வழியேவும் மற்ற பிரதிகளின் மூலமும் வாசித்துணரலாம்.

இப்பிரதி கவிஞர் சுகன் அவர்களால் 2007-ல் தொகுக்கப்பட்டு நிச்சாமம் வெளியீடாக வந்தது. (1966, 67களில் தீண்டாமை எதிர்ப்பு போராட்டம் கம்யூனிஸ்டுகளில் தலைமையில் வலுவாக நடைபெற்ற “நிச்சாமம்” பகுதியின் பெயரையே ஒரு சிறப்பு குறியீடாய் உருமாற்றி அதை வெளியீட்டின் அடையாளமாக்கி இருப்பது சிறப்பு).பின்பு காலத்தின் தேவை கருதி 2015 மே மாதம் விருதுநகரில் நடைபெற்ற  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில மாநாட்டில் பாரதி புத்தகாலயம் சார்பில் மறுவெளியீடு கண்டது. ஈழ எழுத்தாளர்கள் கே.டானியல், என்.கே.ரகுநாதன், எஸ்.பொ,தெணியான், டொமனிக் ஜீவா, யோ.பெனடிக்ற் பாலன், நந்தினி சேவியர், மா.பாலசிங்கம், அ.தேவதாசன், அருந்ததி மற்றும் தேவா உள்ளிட்ட 11 பேரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை முறையே 1951 இருந்து 2006 வரை வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்ட கதைகளாகும். இத்தொகுப்பின் சிறப்பம்சமாக ஈழ தலித் இலக்கியத்தின் முன்னோடிகளாக கருதப்படும் கே.டானியலின் ‘பஞ்சமர்’ மற்றும் என்.கே.ரகுநாதனின் ‘ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் கதை’ ஆகிய நாவல்களில் இருந்து ஒரு பகுதியை இத்தொகுப்போடு சேர்த்திருப்பது அந்நாவலை நோக்கி வாசகர்களை நகர்த்தும் புதியதொரு முயற்சியாக அமைந்திருக்கிறது.

ஈழ நிலத்தின் சமூக பண்பாட்டு வெளியிலும், போர்ச் சூழல்களினால் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த இடங்களிலும் ஈழத் தமிழர்களுக்கிடையே நிலவிய, நிகழ்ந்துகொண்டிருக்கிற தீண்டாமையின் பல்வேறு வடிவங்களை இக்கதைகள் வேறு வேறு கோணத்தில் பதிவுசெய்திருக்கிறது.இனி கதைகளைப் பார்ப்போம்.

 • வெளியிலே நல்ல நிலவு அங்கே போய் பேசிக்கொள்ளலாம்…. என கள்ளிறக்கும்  தொழிலாளர்களை வீட்டு வாசலில் இருந்து தூரக் கூட்டிக்கொண்டுபோய் பேசும் சிவப்பிரகாசம் என்கிற அரசியல்வாதியின் மகோன்னதமான உணர்வை சொல்லும் என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம்’.
 • நிலச்சுவாந்தார் (விதானையார்) வீட்டில் சிறுவயதில் கொத்தடிமையாய் விடப்பட்ட வேலன் பலகாலம் கழித்து அங்கிருந்து தப்பித்து வரும்வழியில், சட்டை அனிந்து வருவதை பார்த்து அப்போதும் சரியாக அடையாளம் கண்டு ஆதிக்க சாதியினர் அவனை தாக்குவதும் பின்னாளில் அதை எதிர்த்து திருப்பித்தாக்க துவங்குவதுமான கே.டானியலின் ‘ஆற்றல் மிகு கரத்தில்’.
 • ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதையாக தேநீர் கடைகளில் கடைபிடிக்கப்படும் இரட்டை குவளை முறை எனும் தீண்டாமை வடிவத்தை எதிர்த்து போராடும் இளைஞர்களின் வீரத்தை பறைசாற்றும் எஸ்.பொவின் ‘களம்’.
 • சப்இன்ஸ்பெக்டர் வேலை கிடைத்தும் சாதி துவேஷத்தால் உள்ளூர் பெரியமனிதரான மயில்வாகனத்தின் சிபாரிசு நேரெதிராக அமைந்ததினால் வேலை கிடைக்காமல் போகும் பொன்னுத்துரை, ஒரு சந்தர்பத்தில் கிணற்றில் விழுந்த அவரின் பெண்ணைக் காப்பாற்றிய பிறகு கிணற்றுத் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படும் டொமினிக் ஜீவாவின் ‘காலத்தால் சாகாதது’.
 • ஆசிரியர் தப்பாக கணக்கை போட அதை திருத்த முயலும் மாணவனை “போயும் போயும் சிரைக்கப்போற உங்களுக்குப் படிப்பென்னத்துக்கடா?” என வார்த்தைகளின் வழியே கீழ்சாதி மனங்களில் கட்டமைக்கப்படும் ஒருவிதமான தாழ்வுணர்ச்சி உளவியலை மிகக் கச்சிதமாக கூறும் ‘தப்புக்கணக்கு’.
 • சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட தன் மகளை கொல்ல ஆள் அனுப்பும் தந்தையின் ஆதிக்கசாதி வெறியை சொல்லும் யோ.பெனடிக்ற் பாலனின் ‘கவரிமான்கள்’.
 • சாதிவேற்றுமையின் மனநிலையினால் பாதிப்புரும் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் பகுதியிலேயே கிருத்துவ மிஷனரியின் உதவியால் துவங்கப்படும் புதிய பள்ளியின் கதையான நந்தினி சேவியரின் ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’.
 • வெளிநாடு சென்று பணம் சேர்த்து தாயகம் திரும்பிய பிறகு, இருக்கும் குடிசை வீட்டை விஸ்தரிக்கும் எண்ணத்தில் அருகில் இருக்கும் நிலத்தை வாங்க செல்லுபவர்களை தீண்டப்படாதவர்கள் என்பதால் விலை ஏற்றி கூறியதோடு உங்களுக்கு கட்டுபடியாகுமா என யோசித்துக்கொண்டு வாருங்கள்.அப்படி திரும்பவரும் போது “நீங்கள் வந்து படலையிலேயே நிண்டு கூப்பிடுங்கோ, நான் வருவன்” என குறிப்பிட்டு சொல்லிச்செல்லும் தெணியானின் ‘வெளியில் எல்லாம் பேசலாம்’.
 • “எங்களை தாழ்த்துகிறவையைத்தான் நெடுக லைற் அடிச்சுப் பாக்கிறம் ஆனால் நாங்களும் சிலரை தாழ்த்திறது தெரியாமலிருக்கு….” என ஒடுக்கப்பட்ட சாதிகளுக்குள்ளேயே தொடரும் தீண்டாமையை குறிப்புணர்த்தும் மா.பாலசிங்கத்தின் ‘கோடாரிக்காம்பு’.
 • ஒழுங்காக தன் பணியை செய்துவந்தபோதும் கீழ்சாதி என்று தெரிந்ததும் அவரை வேலையை விட்டு வெளியேற்ற எத்தனிக்கும் தமிழ் முதலாளி என புலம் பெயர்ந்த இடமான பிரான்சிலும் தொடரும் தீண்டாமை எண்ணத்தை பிரதிபலிக்கும் அ.தேவதாசனின் ‘அசல்’.
 • பிரான்சின் லாசப்பால் வீதியின் புத்தக கடையொன்றில் வலியவந்து பேசுவர் ஈழத்தில் நீங்கள் எங்கே என தொடங்கி…. துருவித்துருவி குறிப்பிட்ட இடத்தை அறிந்த பிறகு அதிர்ச்சிக்குள்ளாகுபவர் “தம்பி இப்பதான் ஞாபகம் வந்தது,நாங்கள் நாளையோடை வீடு மாறுறம்.அதால இப்ப தந்த ரெலிபோன் நம்பர் வேலை செய்யாது.பிறகு உம்மை சந்தித்துப் புது நம்பர் தாறன்” என கிளம்பிச்செல்லும் அருந்ததியின் ‘கேள்விகள்’.
 • ஜெர்மனியில் புலம்பெயர்ந்த இடத்தில் அகதிகளுக்கான கூடாரத்தில் வசிக்கும் சககூட்டாளிகளாளேயே தாக்கப்பட்ட இளைஞன், நீதிமன்ற விசாரனையின் போது சாதி குறித்து நீதிபதிக்கு விளக்க முயற்சிக்கும் தேவாவின் ‘ஊசி இருக்கும் இடங்கூட’.
 • போருக்கு பின்பான மீள் குடியேற்றத்தின் போது சீர்கெட்டுபோன தன் வீட்டை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடும் சிந்தாமணி என்கிற வயது முதிர்ந்த பெண், தனக்கு நன்கு பழக்கமான ஆதிக்கசாதியினரின் வீட்டு கிணற்றில் தண்ணீர் எடுக்க செல்கிறபோது, போரின் துயரத்தையும் இழப்புகளை கண்ணீர் மல்க பகிர்ந்துகொண்ட மேல்சாதி பெண் “கண்ணைக் கசக்கிக் கொண்டே வேகமாக ஓடிவந்து பொறு சிந்தாமணி என்று சொல்லிவிட்டு தண்ணீர் அள்ளி சிந்தாமணியின் பானையிலோ சிந்தாமணியிலோ தண்ணி வாளி படாதவாறு மிகக் கவனமாக நுட்பமாக முட்டாமல் ஊற்றும்” அ.தேவதாசனின் ‘கண்ணி’ கதையாகட்டும் அத்துனையுமே தீண்டாமையெனும் கோர முகத்தின் பல்வேறு வடிவங்களை தன் தனித்தன்மைகளோடு எடுத்துரைப்பதாகவே அமைந்திருக்கிறது.

மேற்கண்ட ஒட்டுமொத்த கதைகளும் தீண்டாமையின் பாதிப்பை மிகவும் நுட்பமாக கூறுவாதாக இருப்பினும் அதிலிருந்து ஒரேயொரு உதாரணத்தை இங்குள்ள தமிழ் தேசியர்களுக்கு எடுத்துக்காட்டுவது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். “நம்மவர்களாக நம் மத்தியிலே வாழும் தமிழர்களிலே ஒரு பகுதியினரை உரிமை அற்றவர்களாகவும் அடிமைகளாகவும் வைத்துக்கொண்டு தமிழ் தேசிய இனத்திற்கான உரிமைகள் என்று முழங்குவது மகா கேவலமானது. பழமைத்தளைகள் அனைத்தையும் உடைத்தெறியும் பொழுதுதான் தேசிய இனத்தின் கௌரவத்திற்காகப் போராடக்கூடிய உண்மையான போராட்ட வீரர்கள் உருவாகுவார்கள். இன்று ஜாதியத்திற்கு எதிராகப் போராடும் பஞ்சைகளும் பாமரரும் பஞ்சமருமே நாளைய தேசிய விடுதலைப் போராட்டங்களின் முன்னணித் தானை வீரர்களாகத் திகழ்வார்கள்” என கொம்யூனிஸ்ட் மணியம் இளங் கம்யூனிஸ்டுகளுக்கு ‘களம்’ கதையின் வாயிலாக எஸ்.பொ சொல்லும் சேதி, சாதியத்தை கவனத்தில் கொள்ளாத, ஈழத்தில் போராடி மடிந்த அத்துனை விடுதலை இயக்கங்களுக்கும், தமிழகத் தமிழ் தேசியவாதிகளுக்கும் அப்படியே பொருந்தும். ஆனால் இதையெல்லாம் அவர்கள் சட்டை செய்யமாட்டார்கள் என்பதும் தமிழுணர்ச்சி என்கிற பெரும்போர்வையில் மீண்டும் மீண்டும் சாதிய பிரச்சனைகளை மூடிமறைத்து அதை திசைதிருப்பவே முயலுவார்கள் என்பது, நீட் தேர்வு தொடர்பான விசயத்தில் மத்திய-மாநில அரசுகளின் நிலையற்ற தன்மையின் செயல்பாடின்மை காரணமாக மரணமடைந்த அனிதாவுக்கு இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் இயக்குனர்கள் ‘அமீர்-ரஞ்சித்’ ஆகியோருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் வழி அதை மீண்டும் கண்கூடாக காணமுடிந்தது. தமிழுணர்ச்சி என்பது எல்லாக் காலங்களிலும் சாதியை மூடிமறைத்து வெளிவேஷம் தான் போட்டுவந்திருக்கிறது என்பதை இதுபோன்ற நடைமுறை எதார்த்தங்களோடும் இப்பிரதியின் கதைகளோடும் ஒருசேர உரசிப்பார்க்க முடிகிறது.

தலித் இலக்கியம் என்கிற சொல்லாடலில் தீர்க்கமுடியாத ஒரு கோட்பாட்டு பிரச்சனை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.அத்தகைய சொல்லாடல் சரிதானா? சரியென்றால் பிறசாதி சார் எழுத்தாளர்களின் இலக்கியங்களையும் அச்சாதி பெயர்களில் அடையாளப்படுத்துவது சரியாகுமா? என்கிற சர்ச்சை தீர்க்கப்படாதது எனினும் இத்தகைய வகைப்படுத்தல்களை இனவரைவியல் கோட்பாட்டிற்க்குள் பொருந்திப்போகுமா என்பதும் தொடரும் சர்ச்சையாகத் தான் இருக்கிறது.

தமிழகத்தை பொருத்தவரை அறிவாசான் அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு, அதாவது தொண்ணூறுகளுக்கு பிறகுதான் பல தலித் அமைப்புகளும், தலித் இலக்கிய வகைபாடுகளும் வடக்கில் இருந்து இங்கு அறிமுகமானதாக அ.மார்க்சின் முன்னுரையில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆகவே தமிழகத்தை பொருத்தவரை தலித் இலக்கியம் என்பது வடக்கின் கொடையாக இருக்கிறது.ஆனால் ஈழத்தை பொருத்தவரை அது 1950களுக்கு முன்பிருந்தே தீண்டாமையை இலக்கிய கருப்பொருளாக்கி இருக்கிறது என்பதை இத்தொகுப்பின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தின் துவக்கத்தில் அதாவது  1813களில் சமர்பிக்கப்பட்ட ஹன்டர் கமிஷனின் கல்விக்கொள்கை இந்திய சமூகத்தின் சனாதன பாகுபாட்டை உறுதிபடுத்துவதாய் அமைந்திருக்கிறது, அதில் சீர்திருத்தம் வேண்டும் என்று பின்னாளில் அதாவது 1920களில் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களிடம் பல முறை முறையிட்டும் வழிகிடைக்காத காரணத்தால் 1924ல் ‘பஹிஷ்க்ரித் ஹத்காரினி சபா’ என்கிற அமைப்பை மும்பையில் நண்பர்களின் நிதி உதவியுடன் தொடங்கினார் அம்பேத்கர். அது ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கான கல்விக்கூடங்கள், நூலகம், வாசகர்வட்டம், விடுதிகள் போன்ற பல்வேறு விசயங்களில் அக்கறை செலுத்தியதோடு ‘வித்யவிலாஸ்’ என்கிற மாத இதழை மாணவர்களுக்காக நடத்தியது.அதுவே பின்னாளில் அதாவது 1928ல் ஒடுக்கப்பட்டோர் கல்விக் கழகம் என புத்தொளி பெற்று 1945ல் பிரிட்டிஸ் அரசின் சீர்திருத்தப்பட்ட கல்விக்கொள்கையின் துணை கொண்டு அரசாங்கத்தின் நிதியுடன் கூடிய நண்பர்களின் நிதி (6+9=15லட்சம்) உதவியுடன் பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் என விசாலமடைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி தொடர்பான போராட்டக்களத்தில் மிகமுக்கியமான பக்கங்களாய் அம்பேத்கரின் இத்தகைய செயல்பாடுகள் தவிர்க்க முடியாததாய் அமைந்திருக்கிறது. இதைப்போலவே  ஈழத்தில் 1945களில் ‘சிறுபான்மைத் தமிழர் மாசபை’ யின் மூன்றாவது மாநாட்டில் நிறைவேற்ற பெற்ற நான்கு முக்கிய தீர்மானங்களை இப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் இடம்பெற செய்து வாசகர்களுக்கு அன்றைய ஈழச்சமூகத்தின் சூழலை காட்சிபடுத்த உதவி இருக்கிறது. மேலும் 1927களில் இருந்தே ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கத்தில் தொடங்கி 1943வரை பல்வேறு தலித் அமைப்புகள், தலித்துகளின் சமூக பொருளாதார வாழ்வியல் மேம்பாட்டுக்கும் அவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை போராடிப் பெறுவதற்கும் பல அமைப்புகளை கண்டிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. சாதிக்கெதிரான மனநிலையும் அதற்கான போராட்டங்களும் நலவியல் எல்லைகளை கடந்தும் ஒன்றுபோலவே தான் அமைந்திருக்கிறது என்பதை இத்தகைய பொருத்தப்பாடுகளின் வழி புரிந்துகொள்ள முடிகிறது.

எதார்த்தத்தின் சுவடுகள் இவ்வாறாக தொடர….. இங்கோ இன்னும் வகை வகையான சித்தரிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது இனத்தின் பிழையா? அல்லது மனிதமனங்களின் பிழையா என்பதை காலவோட்டத்தின் காட்சிகள் மிகத்தெளிவாக நமக்கு அறிவுருத்தி இருந்த போதிலும் மொழியுணர்வை சாதியழிப்பின் கூர்வாளாய் தூக்கிக்கொண்டு திரிவதை என்னவென்று சொல்வது

தோழமையுடன்….
ச.மதுசுதன்.

 

Related Posts