அரசியல்

முதலாளித்துவம் இல்லாத உலகைக் கற்பனை செய்தல் – யானிஸ் வருஃபாகிஸ்.

முதலாளித்துவ எதிர்ப்பாளர்களுக்கு கடந்த ஆண்டு மோசமாக அமைந்தது. ஆனால், முதலாளித்துவத்துக்கும்தான்.

இந்த மாதம் பிரிட்டனில் ஜெரிமி கார்பினின் தொழிலாளர் கட்சியின் தோல்வி தீவிர இடதுசாரிகளின் போக்கை அச்சுறுத்தினாலும், அதுவும் குறிப்பாக சனாதிபதி தேர்தல்களின் முதற்கட்டத்தை எதிர்கொள்ளவிருக்கும் அமெரிக்காவில், முதலாளித்துவம் சில எதிர்பாராத இடங்களிலிருந்து தாக்குதலுக்கு ஆளானது.

கோடீஸ்வரர்கள், கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்கள், ஏன் நிதிச் செய்திகள் கூட அறிவுஜீவிகள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் கந்துவட்டி முதலீட்டியத்தின் (Rentier capitalism) கொடூரம், தடித்தன்மை, நிலையாமை போன்றவற்றைப் பற்றிய துயர்ப்பாடல்களில் இணைந்துகொண்டனர். மிகுந்த சக்திவாய்ந்த கார்ப்பரேட்டுகளின் செயல்திட்ட அறைகளில் கூட “இப்போதிருப்பதைப் போலவே தொடர்ந்து தொழில் நடத்த முடியாது” என்பது எதிரொலிக்கிறது போலிருக்கிறது.

மேலும் மேலும் அழுத்தத்துக்கு உள்ளாகி, நியாயப்படி குற்றவுணர்ச்சியில் குமுறும் இந்த படு பணக்காரர்களும் – அல்லது அவர்களில் அறிவுள்ளர்கள் மாத்திரமாவது – பெரும்பான்மையின் இந்த வீழ்ச்சியைக் கண்டு அச்சமுற்று இருக்கின்றனர். மார்க்ஸ் முன்னரே கூறியது போல, சொத்தில்லாதவர்களுக்கு மதிப்பான வாழ்க்கையை உறுதிசெய்ய முடியாத, பிளவுபட்டச் சமூகங்களை மேற்பார்வையிட தகுதியற்றவர்கள் என நிரூபிக்கும் ஒரு மிக அதிகாரம் வாய்ந்த சிறுபான்மையாக ஆகியிருக்கின்றனர்.

தங்களது பூட்டப்பட்டச் சமூகங்களில் இருந்து, இந்த படு பணக்காரர்களிடையே புத்திசாலிகள் ஒரு புதிய “பங்குதாரர் முதலாளித்துவத்தை”க் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றனர். தங்கள் வர்க்கத்தின் மீது அதிக வரிகள் போடச்சொல்லியும் கேட்கிறாஅர்கள். சனநாயகத்திலும் மறுபகிர்ந்தளிக்கும் அரசிலும் மிகச் சிறந்த காப்பீட்டுத் திட்டத்தைக் கண்டுகொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேநேரம், ஒரு எப்போதும் காப்பீட்டுத் தொகை செலுத்துவது தங்கள் வர்க்கத்தின் இயல்பிலேயே இல்லை என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

அலட்சியமானவை தொடங்கி அர்த்தமில்லாதவை வர பல தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. பங்குதாரர்கள்தான் நிறுவன இயக்குநர்களின் சம்பளத்தையும் வேலையில் இருப்பதையும் தீர்மானிக்கிறார்கள் என்ற உறுத்தலான விசயத்தை மட்டும் விட்டுவிட்டால், பங்குதாரர் மதிப்பைத் தாண்டி இயக்குநர் குழுக்களை பார்க்கச் சொல்லும் கோரிக்கைகள் அற்புதமானவைதான். அதேபோல, பல கார்ப்பரேட்டுகள் தங்கள் பெரும்பான்மை பங்குகளைக் கையில் வைத்திருக்கும் நிதி நிறுவனங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை விட்டுவிட்டால், நிதியின் அத்துமீறிய அதிகாரத்தை மட்டுப்படுத்தச் சொல்லும் கோரிக்கைகளும் சிறப்பானவைதான்.

கந்துவட்டி முதலீட்டியத்தை எதிர்கொள்ளவும் சமூகப் பொறுப்பை வெறுமனே விற்பனை உத்தியாக மட்டும் கருதாத நிறுவனங்களை உருவாக்கவும் பெருநிறுவன சட்டங்களை திருத்தி எழுதினால் மட்டுமே முடியும். இந்தச் செயல்பாட்டின் நீள அகலங்களைப் புரிந்துகொள்ள, வரலாற்றில் விற்பனைக்குரிய பங்குகள் முதலாளித்துவத்தை ஆயுதமாக்கிய கணத்துக்குத் திரும்பிச் செல்வது உதவும். அப்போது நம்மைக் கேட்டுக்கொள்ளலாம்: அந்த “தவறை” சரிசெய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?

அந்த கணம் 1599ஆம் ஆண்டு செப்டம்பர் 24இல் நடந்தது. மூர்கேட் ஃபீல்ட்ஸில் ஒரு மரக் கட்டடத்தில், ஷேக்ஸ்பியர் தன் ஹாம்லெட்டை முடிக்க பாடுபட்டுக் கொண்டிருந்த இடத்தின் அருகாமையில், ஒரு புது மாதிரியான நிறுவனம் உருவாக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனி என்று அழைக்கப்பட்ட அந்த நிறுவனத்தின் உரிமை பல சிறிய துண்டுகளாக பங்குபோடப்பட்டு எந்த கட்டுப்பாடும் இன்றி விற்கவும் வாங்கவும் பட்டது.

அரசாங்களைவிட தனியார் நிறுவனங்கள் பெரிதாகவும் அதிகாரமிக்கதாகவும் மாற விற்பனைக்குரிய பங்குகளே உதவின. கண்ணியமான உள்ளூர் கறிக்கடைக் காரர்கள், அடுமனைக் காரர்கள், குடிபானங்கள் தயாரிப்போரைக் கொண்டாடுவதன் வழியாக கட்டற்ற சந்தைகளின் மோசமான எதிரிகளைப் பாதுகாத்ததுதான் தாராளவாதத்தின் படுமோசமான கபடநாடகம்: எந்த சமூக உணர்வுமற்ற, தார்மீக உணர்வுகளை மதியாத கிழக்கிந்திய கம்பெனி விலை நிர்ணயித்தது, போட்டியாளர்களை விழுங்கியது, அரசாங்கங்களை ஊழல்மயமாக்கி, சுதந்திரம் என்பதையே கேலிக்குள்ளாக்கியது.

பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வலைத்தொடர்புகளுடைய பெருநிறுவனங்கள் தொடங்கப்பட்டன – எடிசன், ஜெனரல் எலக்ட்ரிக், பெல் போன்றவை. விற்பனைக்குரிய பங்குகளில் இருந்து வெளியான பூதம் இன்னுமொரு அடி முன்சென்றது. அவற்றை எதிர்கொள்ளத் தேவையான பணம் வங்கிகளிடமோ முதலீட்டாளர்களிடமோ இல்லாததால், உலகளாவிய வங்கிகளின் கூட்டமைப்பு என்ற வடிவில் பெருவங்கியும் வெளிப்படைத் தன்மையன்ற நிதிகளும் உருவாகின, அவற்றுக்கென்று பங்குதாரர்கள் உருவானார்கள்.

எதிர்காலத்துக்கு திருப்பி அளிக்கும் அளவு போதுமான இலாபம் கூட்டும் நம்பிக்கையில், சமகாலத்துக்கு மதிப்பை மாற்ற அதுவரைக் கண்டிராதபடி புது கடன் உருவானது. பெரு-நிதி, பெரும்-பங்குகள், பெரும்-ஓய்வு நிதிகள், பெரும்-நிதிப் பிரச்சினைகள் என தர்க்கப்படி வரிசையாக வந்தன. 1929 மற்றும் 2008இன் பிரச்சினைகள், பெரு-தொழில்நுட்பத்தின் தடுக்கமுடியாத வளர்ச்சி, இன்று முதலாளித்துவத்தின் மீதான அதிருப்தியின் பிற காரணங்கள் எல்லாமே தவிர்க்க முடியாததாக ஆகின.

இந்த அமைப்பில், மென்மையான முதலாளித்துவத்தை கோருவது எல்லாமே வெறும் ஏமாற்று வேலைகள்தான் – அதுவும் 2008க்கு பின்னான நம் உலகில், பெருநிறுவனங்களும் பெருவங்கிகளும் சமூகத்தின் மீதான முழுக் கட்டுப்பாட்டை உறுதிசெய்திருக்கும் சூழலில். 1599இல் அறிமுகப்படுத்தப்பட்ட விற்பனைக்குரிய பங்குகளைத் தடைசெய்ய நாம் தயாராக இல்லாதவரை, இன்று வளங்களும் அதிகாரமும் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கும் விதத்தில் எந்த உருப்படியான மாற்றத்தையும் நம்மால் ஏற்படுத்த முடியாது. நடைமுறையில் முதலாளித்துவத்தைக் கடந்துபோவது குறித்து யோசிக்க, நாம் பெருநிறுவனங்கள் யாருக்கு சொந்தமென மாற்றி யோசிக்கவேண்டும்.

பங்குகள் தேர்தல் வாக்குகளைப் போல என்று யோசித்துப் பாருங்கள், அப்போது அவற்றை வாங்கவோ விற்கவோ முடியாது. பதிவுசெய்யும் போது நூலக அட்டை பெறும் மாணவர்களைப் போல, புதிய தொழிலாளர்களுக்கு ஒரு பங்கு கொடுக்கப்படும், நிறுவனத்தின் எல்லா விசயங்களைக் குறித்துத் தீர்மானிக்கும், அனைத்துப் பங்குதாரர் வாக்களிப்பிலும் அவர்களுக்கு ஒரு வாக்கு கிடைக்கும் – நிர்வாகம் தொடங்கி திட்டமிடல், மொத்த வருமானத்தையும் போனஸ்களையும் பங்கிடுதல் வரை எல்லா விசயங்களிலும்.

இலாபம்-சம்பளம் வித்தியாசத்துக்கு அதன்பின் மதிப்பு இருக்காது, பெருநிறுவங்களின் அளவு மட்டுப்படுத்தப்பட்டு, சந்தையில் போட்டி ஊக்குவிக்கப் படும். ஒரு குழந்தை பிறக்கும்போது, மத்திய வங்கியானது அதற்கு தானாக ஒரு அறக்கட்டளை நிதியை (அல்லது தனிப்பட்ட முதலீட்டுக் கணக்கை) அளிக்கும். அதில் உலகளாவிய அடிப்படை பங்குஇலாபம் குறிப்பிட்ட இடைவெளிகளில் செலுத்தப்படும். அந்தக் குழந்தை பதின்பருவத்தை எட்டியதும், மத்திய வங்கியானது நிர்வாகக் கட்டணங்களற்ற கணக்கு ஒன்றை அளிக்கும்.

தொழிலாளர்கள் தடையின்றி ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொன்றுக்குச் செல்வார்கள். தங்களோடு தங்கள் அறக்கட்டளை நிதி முதலீட்டையும் கொண்டு செல்வார்கள், அதைக்கொண்டு தங்கள் நிறுவனத்துக்கோ பிறருக்கோ கடனளிக்கலாம். மாபெரும் கற்பனை முதலீடுகளை பெருக்கும் முதலீட்டுப் பங்குகள் ஏதும் இல்லாதபோது, நிதி மகிழ்ச்சிக்குரிய வகையில்க் படு அலுப்பூட்டும், நிலையான ஒன்றாக மாறும். அரசாங்கங்கள் தனிநபர் மற்றும் விற்பனை வரிகள் எல்லாவற்றையும் தள்ளுபடி செய்யும். பதிலாக பெருநிறுவன வருமானங்கள், நிலம் மற்றும் பொதுமக்களுக்கு ஊறுவிளைக்கும் செயல்பாடுகளுக்கு மட்டுமே வரிவிதிக்கப்படும்.

சரி பகற்கனவுகள் போதும். சொல்லவரும் விசயம் என்னவென்றால், இந்தப் புத்தாண்டில், உண்மையிலேயே தாராளவாத மயமான, முதலாளித்துவத்தைக் கடந்த, தொழில்நுட்பரீதியாக முன்னேறிய சமூகத்துக்கான அற்புதமான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன. அதைக் கற்பனை செய்ய மறுப்பவர்கள், என் நண்பர் ஸ்லாவோஜ் சிசெக் குறிப்பிட்ட அபத்தத்துக்குதான் இரையாவார்கள்: முதலாளித்துவத்தைக் கடந்த வாழ்க்கையைக் கற்பனை செய்வதைவிட உலகம் அழிவதை ஏற்றுக்கொள்ள அதிகம் தயாராக இருப்பது.

யானிஸ் வருஃபாகிஸ் கிரேக்கத்தின் முன்னாள் நிதியமைச்சர், MeRA25 கட்சியின் தலைவர், ஏதென்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறைப் பேராசிரியர்.

தமிழில்: வயலட்

Related Posts