பிற

அசுத்த முதலாளித்துவமும் பரிசுத்த முதலாளித்துவமும்

சுவாமிநாதன் அங்கலேஷவர் ஐயர் அவர்களின் எழுத்துக்களை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் முன்னுரிமை கொடுத்துப் படிப்பவன் நான். முதலாளித்துவ உலகில் உண்மையிலேயே கொஞ்சம் சரக்குடன் கூடிய நபரிடம் பொருளாதார விஷயங்களை விவாதிக்க வேண்டுமானல் என்னை பொருத்தவரை சுவாமிநாதன் முக்கியமானவர். இவர்தான் அனைத்தையும் கோட்பாட்டு ரீதியாக அணுகுபவர். இன்று இருக்கும் நிலையில் பெரும்பாலானவர்கள் சப்பை பார்ட்டிகள்தான். இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய “புரட்சிகரப் பாதை : புதிய செல்வத்தை படைக்க பயன்படும் பழைய செல்வத்தின் மறு சுழற்சி“ என்ற தலைப்பில் எழுதிய சமீபத்திய கட்டுரையின் மீதான என்னுடைய விமர்சனம்தான் இது. அசல் கட்டுரையை படிக்க
http://blogs.timesofindia.indiatimes.com/Swaminomics/revolutionary-road-recycle-assets-to-create-new-ones/ என்ற இணைப்பை சொடுக்கவும்.
இந்தக் கட்டுரையில் அவர் முன்வைத்திருக்கும் விஷயம் இதுதான். அரசின் பட்ஜெட் குப்பையிலிருந்து மிகச் சரியாக ஒரு கோட்பாட்டு விஷயத்தை எடுத்து எழுதியிருக்கிறார். நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதலாளித்துவப் பாதையில் தன்னுடைய பொருளாதார வளர்ச்சியை கொண்டு செல்வது என்று தீர்மானித்திருக்கிறது. எனினும் மூலதனம் இங்கு வளர்ச்சியடையவில்லை. மூலதனத்தை வளர்க்கும் பொறுப்பு அரசிடம் வருகிறது. அது சோசலிசம் பேசி பொதுமக்கள் வரிப்பணத்தில் மூலதனத் திரட்டலுக்கு உதவுகிறது. இதை நேருவியன் சோசலிச கட்டம் என்று இன்றைய தாராளமயமாக்கல் வாதிகள் வரையறுக்கிறார்கள். நாம் வேண்டுமானால் இதை “அசுத்த முதலாளித்துவம்“ என்று கூறலாம் காரணம் அரசு தலையீடு உள்ள மூலதனம் அவர்கள் பார்வையில் அசுத்தமானதே. மூலதனம் ஓரளவு திரட்டப்பட்ட பின் சமூக மூலதன இயக்கத்தில் அரசு பங்கெடுக்கக் கூடாது என்கின்ற பரிசுத்த முதலாளித்துவ கோட்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன. மூலதனத்தை அது இஷ்டத்திற்கு இயங்கவிட வேண்டும். மூலதனம் தன்னுடைய பயணத்தை தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டுமே தவிர அதன் ஒரு பகுதிக்கு அரசு உரிமை கோரி அதன் நடவடிக்கைகைகளை திட்டமிடுவது என்பது மூலதனத்திற்கு பிடிக்காத சமாச்சாரம். மூலதனத்தின் “விடுதலை“க் கோரிக்கையை அமல்படுத்தி வரும் கட்டமே தற்போதைய கட்டம். இது வலுவந்தமாக திணிக்கப்பட்டிருக்கிறது. இது உலகமயமாக்கல் கட்டத்துடன் Synchronize செய்யப்பட்டிருக்கிறது.
 
நேருவியன் சோசலிச கட்டத்திலிருந்து உலகமயமாக்கல் கட்டத்திற்கு செல்கையில் அது நாசூக்கான பாதையை தெரிவு செய்ய வேண்டியதிருக்கிறது காரணம் “அசுத்த“ முதலாளித்துவத்திலிருந்து “பரிசுத்த“ முதலாளித்துவத்திற்கு மாறும் பொழுது அசுத்த முதலாளித்துவத்தில் மூலதனத் திரட்டல் நடைபெற்றதில் பங்களித்தவர்களின் கருத்தானது “பரிசுத்த“ முதலாளித்துவ கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பதே. எனவேதான் இது வலுவந்தமாக திணிக்கப்பட்டது என்கிறேன். இந்த நாசூக்கான பாதையில் ஒன்றுதான் சுவாமிநாதன் விவாதிக்கும் PPP அதாவது Public-Private Partnership. PPP என்றால்அரசு இதுவரை செய்து வந்த தொழில்களில் தனியார்கள் முதலீடு செய்து குறிப்பிட்ட காலம் இயக்கி லாபமடைந்து பிறகு அரசிடம் ஒப்படைப்பது. இறுதியில் தொழில் அரசின் வசமே வருகிறது. என்ன கொஞ்சம் காலதாமதமகிறது. அரசிடம் பணம் இல்லை என்பதால் இப்படிப்பட்ட ஏற்பாடாம். இதுபோல் பணம் உள்ளவர்களை ஊக்குவித்து நமக்கு வேண்டியதை நடத்திக் கொண்டு சொத்துக்களை கொஞ்ச காலம் கழித்து கைமாற்றுவதில் என்ன தவறு இருக்கிறது என்ற வாதத்தை வைத்தால், எதிர்ப்பவர்களின் வாய் அடைக்கப்பட்டு விடுகிறது. குறிப்பாக கட்டமைப்புத் திட்டங்களில் இது 15 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை PPP உடன்பாட்டின் படி தனியார் வசமிருக்கும். அரசிடம் தொழில் வந்தால் அந்த தொழிலுக்குரிய மூலதன இயக்கத்தில் தலையிடும் உரிமை அரசிடம் வருவதால் இது “அசுத்த“ முதலாளித்துவமே. இந்த “அசுத்த“ முதலாளிததுவ கோட்பாடுகளுக்கு மரண அடி கொடுப்பதே இப்பொழுது வெளிவந்திருக்கும் பட்ஜெட்டில் “சொத்துக்களின் மறுசுழற்சி“ (Asset Recycling) என்ற கோட்பாடு. இது “புத்திசாலி“ அருண் ஜெய்ட்லியின் கண்டுபிடிப்பல்ல. இது அரசு அமைத்த கேல்கர் கமிட்டியின் பரிந்துரைதான். PPP செயல்பாடு பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கமிட்டிதான் கேல்கர் கமிட்டி. பொதுவாக இம்மாதிரி “புரட்சிகர“ கோட்பாடுகளை இது போன்ற கமிட்டிகள்தான் முன்வைக்கும். எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இறுதியில் இக்கமிட்டிகளின் பரிந்துரைகளே முன்னுக்கு வந்து நிற்கும்.
சொத்துக்களின் மறுசுழற்சி கோட்பாட்டு PPP  கோட்பாட்டிற்கு நேர் எதிரானது. ஆம் முதலில் அரசு முதலீடு செய்யும், அதுவே சிறிதுகாலம் இயக்கும் பிறகு தனியார் வசம் விற்றுவிடும். இப்பொழுது புரிகிறதா இது எப்படி அசுத்த முதலாளித்துவத்திலிருந்து பரிசுத்த முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்கிறது என்பது. அதாவது அரசானது முலதனத் திரட்டலுக்கு உதவ வேண்டுமே தவிர மூலதன இயக்கத்தில் பங்கெடுக்கக் கூடாது என்ற பரிசுத்த முதலாளித்துவ கோட்பாடு இதற்குள் தென் படுகிறதா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மிகச் சிறியதுதான் (Subtle Difference). உதாரணமாக இன்றைக்கு நெடுஞசாலைகளை அமைப்பதற்கு தனியார்களிடம் PPP போடப்பட்டு அவர்கள் சாலைகள் அமைத்து கட்டணச் சாலைகள் ஆக்கினார்கள். அவர்கள் வசூலிக்கும் அநியாயக் கட்டணத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்புக் குரல் கிளம்பும் பொழுது. அவ்ன்தான் முதலீடு செய்திருக்கிறானே எனவே கட்டணம் வசூலிக்கட்டும். சிறிதுகாலம் பொருத்துக் கொள் அவன் அரசிடம் ஒப்படைப்பான் அதன் பிறகு கட்டணம் இருக்காது என்ற சமாதானம் சொல்லப்பட்டது. இப்பொழுது பாருங்கள் ஏற்கனவே அரசிடம் இருக்கும் சாலைகள் தனியாரிடம் விற்கப்படும் தனியார்கள் அதை கட்டணச் சாலையாக்குவார்கள். விற்ற பணத்தை வைத்து புதிய சாலைகள் போடுவார்களாம். அதுவும் சில காலம் கழித்து தனியாருக்கு மாற்றப்படுமாம் அந்தப் பணத்தை வைத்து இன்னொரு புதிய சாலை போடுவார்களாம். ஆக உரிமை என்பது தனியார்களுக்கு. அவர்களிடம் பணம் இல்லாததால் அரசு செய்து கொடுக்கிறது. இதுவும் ஒருவகை PPPதான்  முன்னது Public-Private Partnership என்றால் பின்னது Private-Public Partnership. புதிய மொந்தையில் பழைய கள். ஆனால் இந்தக் கள்ளானது “ஓற்றைப் பனைக் கள்“ என்றும் “உடலுக்கு நல்லது“ என்றும் கூறுவதே சுவாமிநாதனின் கட்டுரையின் நோக்கம்.
விஜயன்

Related Posts